சதிருக்கு மகுடம் சூட்டப்பட்டுள்ளது. விராலிமலை முத்துக்கண்ணம்மாள் கலைக்குத் தந்த பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு இவ்வாண்டு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடைசி தேவரடியாரான முத்துக்கண்ணம்மாள், தேர்ந்த சதிர்க்கலைஞர்.

1930களுக்கு முன்புவரை மேடைகளிலும் கோயில்களிலும் ஆடப்பட்டு வந்த நடனம் ‘சதிரே’. பரதநாட்டியம் பரத முனிடமிருந்து வந்தது என்பதெல்லாம் கட்டுக்கதையே அன்றி வேறில்லை. பார்ப்பனியம் முழுவதுமாக விழுங்கி ஏப்பம்விட்ட கலை சதிர். இந்தக் கலையை இன்றளவும் கட்டிக்காப்பாற்றிவரும் மிகச் சில நடனக் கலைஞர்களில் விராலிமலை முருகன் கோயிலின் 32 தேவரடியார்களில் இறுதி தேவரடியாரான முத்துக்கண்ணம்மாள், ஏழாம் தலைமுறை சதிர்க்கலைஞர் ஆவார்.

ஏழு வயதில் அரங்கேற்றம்; தினமும் அதிகாலை 3.30 மணிமுதல் பயிற்சி என தந்தையால் செதுக்கப்பட்டவர். 12 வயதில் இக்குடும்பத்தை ஆதரித்து வந்த புதுக்கோட்டை மன்னரின் தனியுரிமைப் பணப்பை நீக்கப்பட, ஆதரவின்றி திருமண வீடுகளின் மேடைகளில் ஆடும் சூழலுக்கு தள்ளப்பட்டார். திருமணம் முடித்துக்கொள்ள வந்த இளைஞரிடம், திருமணத்துக்குப் பின்னும் சதிர் ஆட அனுமதித்தால் மட்டுமே திருமணம் என்று இவர் சொல்ல, அதற்கு அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். மூன்று குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, அதனிடையேயும் ஊர் ஊராகப் பயணித்து ஆடிவந்தவர் முத்துக்கண்ணம்மாள்.

1930களில் சதிர் பரதநாட்டியமாக புது முகம் கண்டுவிட்டது. தங்கள் வீட்டுப் பெண்களை சமூகம் இழிவு செய்ததன் காரணமாக அவர்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து, நட்டுவனார்கள் சதிரை பணம் படைத்த பார்ப்பன வீட்டுப் பெண்களுக்கு சொல்லித்தந்தனர். சதிர் கைமாறியது. முத்துக்கண்ணம்மாள் போன்ற ஒன்றிருவர் மட்டுமே இசைவேளாளராகத் தொடர்ந்து சதிராடி வந்தனர். சதிரின் நாடித்துடிப்பான சிருங்கார ரசத்தை பரதத்தில் இருந்து விலக்கியே ருக்மிணி தேவி போன்றோர் ஆடிவந்தனர். பாலசரசுவதி, முத்துக்கண்ணம்மாள், சரசாம்மாள் போன்ற ஒன்றிருவர் இந்த நிறுவனமாக்கப்பட்ட பரதத்துக்கு எதிராகப் போராடி வந்தவர்கள்.

ஒரு கட்டத்தில் ஒடுக்கமும், புழுக்கமும் தாளாமல் பாலசரசுவதி அமெரிக்கா சென்றுவிட, இங்கு சதிரை ஆடியவர்களும் ஒடுங்கிப் போயினர். கல்வியை முன்னெடுத்த இசைவேளாளர் சமூகம், படித்து, அரசாங்க வேலைகளில் தன்னை இறுத்திக் கொண்டது. 80 வயதான முத்துக்கண்ணம்மாள் இன்றும் தன்னைத் தேடி வருபவர்களுக்கு சதிர் கற்றுத்தருகிறார். வாழ்க்கை முழுக்க சதிருக்கு ஒப்புக்கொடுத்த தலைசிறந்த கலைஞருக்குத் தரப்பட்டதால் பத்ம விருது பெருமை பெறுகிறது. சில தலைமுறைப் பெண்களின் கண்ணீரும் போராட்டமும் வலியும் வெற்றி பெற்றிருக்கிறது. அன்பான வாழ்த்துகள், முத்துக்கண்ணம்மாள். நீடு வாழ்க!

அம்மையாரின் பேட்டியை இங்கு காணலாம்.