கேளடா, மானிடவா – 19

கடந்த ஓரிரு அத்தியாயங்கள் முன்பு கேட்கப்பட்ட கேள்வி:

உங்களின் பதின் பருவ மகளோ மகனோ ‘செக்ஸ்’ வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன செய்வீர்கள்? எப்படி எதிர்கொள்வீர்கள்?

இந்த வயதில் எதிர்பாலரிடம் ஈர்ப்பு ஏற்படுவது என்பது இயல்பு. தன்னுடலின் பாகங்களை, அதன் காரண காரியங்களை அறிய முற்படுவதும் இயல்பு. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் – தான் யார் எனக் கண்டடைய விரும்புவதும் வெகு இயல்பானது.

நமது இந்தியத் திருநாட்டில் – வெளிநாடுகளில் போல, டேட்டிங் போவதோ, பள்ளிப் பருவத்திலிருந்தே ‘அவுட்டிங்’ கூட்டிச் செல்வதோ இல்லை. அங்கு ஆசிரியர்கள் பள்ளிகள் வழியாகவும், பெற்றோர் வழியாகவும், பதின்பருவ தொடக்கத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு, பாலியல் கல்வி கற்றுத்தருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக கர்ப்பத் தடைக்கான அவரவருக்கான வழி முறைகளைச் சொல்லித் தருவார்கள். எந்தெந்த ‘வெப்சைட்’ பார்த்துக் கற்றுக் கொள்ளலாம் என்பதையும் வழி நடத்துவார்கள்.

இங்கு அப்படி இல்லை எனும்போது, பிள்ளைகள் தாமாக வீடியோக்கள் பார்த்து அறிய விழைவது எப்படி, ஏன் தவறாகிறது? பிள்ளைகள் அந்த வீடியோக்கள் பார்ப்பதைப் பார்த்து பெற்றோர் ஏன் ‘கொலைக் குற்றம்’ போலப் பதறுகிறார்கள் என்பதையும் பிள்ளைகளிடம் விரிவாகவும் எளிமையாகவும் பொறுமையாகவும் விளக்க வேண்டும்.

இரண்டு விசயங்கள் உள்ளன. ஒன்று: எல்லாவற்றையும் அம்மா அப்பாவிடம் பகிரும் பிள்ளைகள் இதை மட்டும் ஏன் மறைத்துச் செய்கிறார்கள்? அதைக் குற்றம் என உணருகிறார்களா? அல்லது அம்மா அப்பா தெரிந்தால் திட்டுவார்கள் கத்துவார்கள் என்பதைத் தவிர்க்க மறைத்துச் செய்கிறார்களா? அது குற்றம் தான் எனில், ஏன் அவர்களுக்குச் செய்யத் தோன்றுகிறது? குற்றமில்லை, அத்தியாவசியமான ஒன்றுதான் என்றால், பின் எப்படித்தான் அதைத் தெரிந்து கொள்வார்கள்?

இரண்டு: இது தவறு; இதைப் பார்க்காமல் பிள்ளைகள் வளர்வதுதான் சரி என்று கருதும் பெற்றோர், இதை எப்படித் தவிர்க்கிறார்கள்? ‘சைல்ட் லாக்’ போன்ற இணையத்தை தடை செய்து பார்க்க விடாமல் தடுக்கிறார்களா? இதை இப்போது பார்க்கக்கூடாது என்று ஏன் கருதுகிறார்கள்? சரி, பிறகு எப்போது பார்க்கலாம்? இப்போது சரியாக இல்லாதது அப்போது எப்படி சரியானதாக ஆகிறது? பெற்றோர்கள் எப்படி பிள்ளைகள் பெற்றார்கள்? வானத்திலிருந்தா?  

Photo by Dainis Graveris on Unsplash

செக்ஸ் என்பதை ‘கெட்ட வார்த்தை’ என்பது போலவும் ‘பாவ காரியம்’ என்பது போலவும் ‘பெற்றோரே’ இந்த விசயத்தைப் பதற்றப்படுத்தி, கடுமையாக எதிர்த்தால், பிள்ளைகள் மனதில் அப்படித்தானே பதியும்? ஒன்றைப் பதறித் தடுத்து, பெரிய ‘ட்ராமா’வாக்கி மனதில் என்றென்றும் வடுவாகப் பதிய வைத்து, பின் திருமணத்திற்குப் பிறகு சிறப்பான தம்பதிகளாகத் தம் பிள்ளைகள் வலம் வர வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர், என்னதான் விரும்புகிறார்கள்? ஏன் இவ்வளவு முரண்?

பெற்றோர்களுக்கு பிள்ளை வளர்ப்பில், தெளிவும் சரியான நோக்கமும் இருக்க வேண்டும். பிறகு, பிள்ளைகளிடம் அதை எளிமையாக வெளிப்படுத்த முடியும். ஆனால் அதைக் கேட்பது அல்லது மறுப்பது என்பதில் பிள்ளைகளுக்கான முழுமையான சுதந்திரம் இருக்க வேண்டும். ஏனெனில், தான் விரும்பிய ஒன்றைச் செய்யத்தான் மனிதமனம் விரும்பும்; தடுக்கத் தடுக்க ஆவல் அதிகமாகும்.

சரி, பிள்ளைகள் செக்ஸ் வீடியோக்கள் பார்ப்பதை எப்படித்தான் எதிர்கொள்வது? ஏன் எதிர்க்கிறோம் என்பதை தெளிவுற யோசிக்க வேண்டும்.

அவற்றில் இருப்பவை பெரும்பாலும் உண்மை இல்லை; அவை கற்றலுக்காக நிகழ்த்தப்பட்ட வீடியோக்கள் இல்லை; உண்மை அல்லாத ஒன்றை, தன்னுடல் பற்றிய அறிதல் இல்லாமல் வேறு யாருடைய கற்பனை சாத்தியங்களையோ, தான் அறிந்து கொள்வதுதான் மனித உறவுகளின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணமாக அமைகிறது.

தான் யார், தனக்கு என்ன வேண்டும், தனது திறன் என்ன என்பதை அறியாமல், யாருடைய கற்பனையையோ தன் வாழ்வில் முயல்வதாக ஆகும்போது – அவை எல்லாமே யதார்த்தத்தை மீறியதாக இருக்கின்றன. அவற்றை யதார்த்தத்தில் சோதிக்க தோல்விதான் ஏற்படுகிறது. தன் சக்திக்குள்ளதாக முயலும்போதுதானே வெற்றி பெற முடியும்? அந்தத் தோல்வியின் வெதும்பலையும் அவர்கள் எதிராளியிடம் தான் காட்டுகிறார்கள். (இது முந்தைய அத்தியாயங்களிலேயே சொல்லப்பட்ட ஒன்று).

இதுதான் இப்போது இதை அறிந்து கொள்ள எதிர்க்கக் காரணம் என்ன என்று சொல்வதோடு அல்லாமல், இப்போது எதை எதை அறிந்திருக்க வேண்டும், அதற்கு எந்த வீடியோக்கள் பயனுள்ள வகையில் உள்ளனவோ, அவற்றை அறிவியல் ரீதியாக அணுகக் கற்றுத் தர வேண்டும். இந்தத் தளத்திலுள்ள வீடியோக்கள் உங்களுக்கு உதவலாம்.

இப்படியாக எதிர் பாலினத்தவரை வன்முறையாகக் காண்பிக்கும் வீடியோக்களைப் பார்ப்பது சரிதானா என்பதை அவர்களிடமே கேட்க வேண்டும். இப்போது அவர்கள் செய்ய உள்ள கடமைகளையும் பொறுப்புகளையும் யோசிக்கச் செய்ய வேண்டும். பொறுப்பை அவர்கள் கையிலேயே ஒப்படைக்கும்போது, அவர்களே சிந்தித்துச் செயல்படும் உணர்வு வளரும்.

மின்சாரம், நெருப்பு போன்ற அத்தியாவசிய ஆனால் ஆபத்தான விசயங்களை பிள்ளைகளுக்கு எவ்வாறு கற்றுத் தருகிறோம், அதைப் போலவேதான் இதுவும். பயமுறுத்தலும் பதற்றமும் இல்லாமல் இந்த விசயங்களைப் பேசினாலே, பேச முடிந்தாலே போதுமானது.

மேலும் இப்போது நாற்பது ப்ளஸ்களில் இருக்கும் அம்மாக்கள் அப்பாக்கள், ரேடியோ டிவியில் ஆரம்பித்து, வாக்மேன், சிடி 90,60 கேஸட்டுகள் தொடங்கி, வீடியோ டெக், சிடி ப்ளேயர், கம்ப்யூட்டர், இண்டெர்நெட், இப்போதுள்ள ஸ்மார்ட் ஃபோன் வரை – தொழில்நுட்ப புரட்சி காலத்தின் சாட்சியாக இருப்பவர்கள். எல்லாவற்றையும் அதிசயமாகவும் புதுமையாகவும் அதே சமயம் சந்தேகமாகவும் எப்போதும் பயத்துடனும் அணுக ஆரம்பித்தவர்கள்.

ஆனால் இன்றைய பிள்ளைகள் பிறக்கும்போதே ஸ்மார்ட் ஃபோனை அறிந்தவர்கள். அதை பெற்றோரை விட சுலபமாக உபயோகிக்கத தெரிந்தவர்கள்.

கார் கற்றுத் தரும்வரைதான் பெற்றோர் பொறுப்பு. ஒவ்வொரு நாளும், பிள்ளைகளின் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு முறை பிள்ளைகள் கார் எடுக்கும்போதும் கூடவே பயணித்துக் கொண்டிருப்பது என்பது – கண்காணிப்பிற்கு ஒப்பானதாகும். அது நோய்மை.

இது புரிந்தால், பிள்ளைகளுடன் பரஸ்பர நம்பிக்கையுடன் உரையாடும் சூழலை உருவாக்கி, இயல்பான நேசமான பகிர்தலுள்ள உறவை வளர்க்க முடியும்.

  • எதையும் கேள்வி கேள்

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.