பண்டைய கால விளையாட்டுக்கள் – 2

சுட்டிக்கல் / தட்டாங்கல் ஆட்டம் 

சிறு கற்களைக் கையால் தூக்கிப் போட்டு பிடிக்கும் விளையாட்டு, தட்டாங்கல்; எங்கள் பகுதியில் சுட்டிக்கல். ஒரே மாதிரியான சிறு சல்லிக்கற்களைக் கொண்டு விளையாடும் இந்த விளையாட்டின்  சங்ககாலப் பெயர் தெற்றி. 

சாலை ஓரங்களில் சாலையில் இருந்து பெயர்ந்து கிடைக்கும் கற்களைத்,  தண்ணீர் இறைக்கப் பயன்படுத்தும், டப்பா ஓட்டை விழுந்து விட்டால் அதில் கற்களை சேகரித்து வைப்போம். விளையாடி விளையாடி, சொர சொரனு இருந்த சல்லிக்கல் அழகாக கூழாங்கல் போல ஆகிடும்.

இந்த விளையாட்டில் பல முறைகள் உண்டு. முதலில் விளையாட்டு பழகும் போது ஏழு கல் விளையாட்டு விளையாடுவார்கள். அதெற்கென பாடல் கூட உண்டு. எனக்கு முழுதாக நினைவில்லை. ஆட்டம் தொடங்கும் போது 

ஒன்றான்: அலுங்காத அலுங்காத அன்னக் கழஞ்சு குலுங்காத        

                      குலுங்காத குப்ப கழஞ்சு சேராத சேராத செல்வக் கழஞ்சு.

இரண்டான்: ஈரிப்பு செண்டுப்பூ எங்கம்மா தாழம்பூ 

மூன்றான்: மூவன்னா ராவன்னா சாதிப்பூ  ராவணா 

நான்கான்: நாலு சில் ஆடவே ரயில் ஏறி பாடவே 

ஐந்தான்:அஞ்சலம் குஞ்சலம் தம்பி சிதம்பரம் 

ஆறான்:

ஏழான் 

எட்டான் 

ஒன்பதான்:

பத்தான்: பத்தேபதியம்மைக்கு பார்வதி அம்மைக்கும் வீர பத்திர காளிக்கும்                                                                                 

கட்டை: கட்டே கட்டே எனக்கொரு கட்டே புளியன்கொட்டெ 

என பாடல் வரும்.

ஆட்டத்தின் முதல் சுற்றில் ஏழு கல்லையும் கையில் எடுத்து ஒரு கல்லை மட்டும் கையில் வைத்துக் கொண்டு மீதி ஆறையும் தரையில் பரப்பி வீச வேண்டும். கையில் இருக்கும் கல்லை, மேலே தூக்கிப்போட்டு அந்த கல் கீழே வருவதற்கு முன், கீழே இருக்கும் கற்களை அந்தந்த எண்ணிற்குத் தகுந்தாற் போல அலுங்காமல் (அடுத்த கல்லைத் தொடாமல்) எடுக்க வேண்டும்; அதே நேரம் மேலிருந்து வரும் கல்லையும், கீழே விழாமல் கைக்குள் பிடிக்க வேண்டும். விளையாட்டின் விதிகளை இந்தக் காணொலி காட்சியில் காணலாம்.

ஒன்று – ஆறு கற்களையும் தனித்தனியாக எடுக்க வேண்டும். 

இரண்டு –  ஆறு கற்களையும் இரண்டு இரண்டாக எடுக்க வேண்டும். 

மூன்று / ஆறு- ஆறு கற்களையும் மூன்று மூன்றாக எடுக்க வேண்டும். 

நான்கு / எட்டு- ஆறு கற்களையும் இரண்டு மற்றும் நான்காக எடுக்க வேண்டும்.

ஐந்து / ஒன்பது – ஆறு கற்களையும் ஒன்று மற்றும் ஐந்தாக எடுக்க                      வேண்டும். 

பத்து- அனைத்து கற்களையும் ஒன்றாக எடுக்க வேண்டும்.

கட்டைக்கு அனைத்து கற்களையும் உள்ளங்கைகளில் வைத்து, ஒரு கையை அணையாக வைத்து மறுகையில் பின் பகுதியில் போட்டு, திரும்பவும் உள்ளங்கைகளுக்குள் ஒரு கல் கூட கீழே விழாமல், கொண்டு வர வேண்டும். 

நாம் இந்த வழிமுறைகளில், எப்போது தவற விடுகிறோமோ, அப்போது ஆட்டம் கை மாறும். மீண்டும் நம் கைக்கு ஆட்டம் வரும் போது முன்பு நாம் எந்த எண்ணில் விட்டோமோ அதிலிருந்து ஆட வேண்டும். 

ஓரளவு ஏழு கல் விளையாட்டு விளையாடி பழகிய பின் பல கல் ஆட்டம் ஆடுவோம்.

மூன்று கல் ஆட்டம் 

இருக்கும் கற்களை மொத்தமாக பரப்பி, மூன்று மூன்றாக அல்லது மூன்றின் மடங்காக எடுக்க வேண்டும். எப்போது தவற விடுகிறோமோ அப்போது, எடுத்தவற்றில் மூன்றில் இரண்டு பாகத்தை திரும்ப ஆட்டத்திற்குள் போட்டுவிட வேண்டும். ஒரு பங்கு நமக்கு. இவ்வாறாக விளையாடி ஒரு ஆட்டம் முடிந்த பின், இருப்பதில் யாரிடம் குறைவாக இருக்கிறதோ அந்த எண்ணிக்கையில் அனைவரும் தங்களது சேமிப்பில் இருந்து ஆட்டத்திற்குப் போட்டு அடுத்த ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். கல் ஒன்று கூட இல்லாதவர்கள், ஆட்டத்தில் இருந்து வெளியேறுவர். இவ்வாறு கடைசி ஆள் வரை ஆட்டம் தொடரும்.

Wikipedia

பரசி / வாரி விளையாடும் ஆட்டம் 

இதில் இருக்கும் கற்களை மொத்தமாக பரப்ப வேண்டும். அதிலிருந்து நமது கைகள் கொள்ளுமளவுக்கு கற்களை எடுத்துக் கொண்டு ஒரு கையை திருப்பி அதில் கொள்ளுமளவுக்கு கற்களை வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கல் கூட கீழே விழாமல் அனைத்தையும் உள்ளங்கையில் ஏந்திப் பிடிக்க வேண்டும். ஒரு கல்லைத் தூக்கிப் போட்டு கீழே இருந்து ஒரு கல்லை மட்டும் எடுக்க வேண்டும். இப்போது அனைத்து கற்களும் நமக்கானவை. இவை தாய் கற்கள்.

இந்த கற்களைப் பயன்படுத்தி, கீழிருந்து நம்மால் எத்தனை எத்தனையாக பரசி எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளலாம். எப்பொழுது தவற விடுகிறோமோ அப்போது ஆட்டம் அடுத்தவர் கைக்குப் போகும். மீதமிருக்கும்  தாய் கற்களை நாம் எடுத்துக் கொள்ளலாம். அல்லது தாய் கற்கள் முடியும்போது ஆட்டம் அடுத்தவர் கைக்குப் போகும். 

இந்த விளையாட்டு தாய்ச்சி கூட்டியும் விளையாடப் படும். தாய்ச்சி கூட்டி என்பது பலர் ஒரே குழுவில் இருப்பது. சிலர் கையில் நன்றாக தாய் கற்கள் சேகரிப்பார்கள். சிலர் நன்றாக பரசி சேகரிப்பார்கள். பரசி எடுக்கும் போது, தவற விட்டால், மீதி தாய் கற்களை வைத்து அடுத்தவர் ஆட்டத்தை தொடரலாம். இதனால் சரியாக விளையாடத் தெரியாதவர்களும் இணைந்து விளையாடலாம். 

டப்பா டப்பாவாக கற்களைக் கொட்டி தெருவையே அடைத்து 10-20 பேர் வட்டமாக உட்கார்ந்து ஆடிய ஆட்டங்களும் போட்ட சண்டைகளும் இன்னமும் கண் முன் வருகிறது.

மிச்சம் ஆட்டம் 

இதில் மிச்சம் என்பது ஐந்து கற்கள். இருக்கும் கற்களை மொத்தமாக பரப்ப வேண்டும். அதிலிருந்து நமது கைகள் கொள்ளுமளவுக்கு கற்களை எடுத்துக் கொண்டு ஒரு கையை திருப்பி அதில் கொள்ளுமளவுக்கு கற்களை வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கல் கூட கீழே விழாமல் அனைத்தையும் உள்ளங்கையில் ஏந்திப் பிடிக்க வேண்டும். ஐந்துக்கும் மேல் இருந்தால், ஐந்து கற்களை கீழே வைத்து விடலாம். அது நமக்கான மிச்சம்.

மீதமிருக்கும் கற்களை மொத்தமாக தூக்கிப் போட்டு கீழே இருந்து ஒரு கல்லை மட்டும் எடுக்க வேண்டும். பின் எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்றுக்கும் மேல் கற்களை மேலே தூக்கிப் போட்டு ஒரு கல் எடுப்பதே சிரமம். கையில் ஆறு கற்கள் வந்ததும், ஐந்தை நமக்கென வைத்து விட்டு ஒன்றை வைத்து மீண்டும் ஆட வேண்டும். எப்போது தவற விடுகிறோமோ அல்லது அடுத்த கல்லை தொட்டு (அலுக்கி) விடுகிறோமோ அப்போது நமது கல் மற்றும் நாம் அலுக்கிய கற்களை அடுத்து விளையாடுபவரிடம் கொடுக்க வேண்டும். அதில் ஐந்திற்கும் மேல் கற்கள் இருந்தால், அந்த மிச்சம் அவர்களுக்கானது. சரியாக விளையாடத் தெரியாதவர்கள் பல நேரங்களில் இவ்வாறான மிச்சங்கள் மூலம் தான் ஆட்டத்தைத் தொடருவார்கள்.

விளையாடுவோம்..

குறுந்தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.