கேளடா, மானிடவா – 18

18 வயது முடிவடைந்தவுடன் பிள்ளைகள் மேஜர். ஓட்டுப் போடும் வயதாகிவிட்டது. யாருக்கு ஓட்டுப் போட வேண்டும்? எதற்கு ஓட்டுப் போட வேண்டும்? ஓட்டுரிமையின் அவசியம் என்ன? பிள்ளைகளின் அரசியல் அறிவு என்ன…இதிலெல்லாம் எந்தளவும் சீர்படுத்தப்படாமல், 18 வந்தடைவது போலவேதான், எந்தவித பாலியல் அறிவும் போதிக்கப்படாமல் 18 வயதை அவர்கள் அடைவதும்.

இதை அவர்களாகத் தெரிந்து கொள்ளட்டும் என நினைக்கும் பெற்றோர், ஏன் மற்ற எல்லாவற்றிலும், பிள்ளைகள் வாழ்வில் தலையிட வேண்டும்? இவ்வளவு பெரிய நுண்மையான விசயத்தையே பிள்ளைகள் தானே தெரிந்து கொள்வார்கள் என நினைக்கும் பெற்றோர், ஏன் அற்ப விசயங்களில் ‘இதுதான் சரி’ என்று அப்படியே செய்ய வலியுறுத்த வேண்டும்?

கமல் தனது சின்ன வயது நினைவுகள் பற்றி வெகுகாலம் முன்பு பகிர்ந்தவை இவை. சக வயதுத் தோழர்கள் அளவு தனக்கு மீசை இன்னும் வளர வில்லையே எனக் கவலைப்பட்டது; ‘ஏ’ படம் பார்ப்பதற்காக, தீக்குச்சியைக் கருக்கி மீசை வரைந்துகொண்டு போனது; நெஞ்சில் முடி வளரவில்லை என்பதற்காக, ஷேவ் செய்தது இப்படி பலருக்கும் உண்டான பதின் பருவ செயல்கள் பற்றிக் குறிப்பிட்டிருப்பார்.

இப்படி, பதின் பருவப் பிள்ளைகளுக்கு இயல்பாகவே தன் உடல் பற்றிய கூச்சமும் குறுகுறுப்பும், அச்சமும், பரிதவிப்பும் இருக்கும். பதின் பருவ பிள்ளைகளுக்காக தனித் தனியான, வகை வகையான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவரவருக்கான புத்தகங்களுடன், எதிர் பாலருடைய புத்தகங்களையும் வாசிக்கத்தருவது நல்லது.

பெண்கள் ஏன் புருவம் மழித்துக் கொள்கிறார்கள் என்பது பையன்களின் பல யுகக் கேள்வி; போலவே, ஆண்கள் ஏன் முகச் சவரம் செய்து கொள்கிறார்கள்? தலை முடி வெட்டிக் கொள்கிறார்கள்? நெஞ்சு முடியை மழித்துக் கொள்கிறார்கள் என்பதும் பெண்கள் பக்கமிருந்து வரும் கேள்வி.

சகவுயிரை மதித்தலும் அன்பு செய்தலுமே – ஒருவர் மற்றவரை இயல்பாக ஏற்பதையும், அருவெறுப்பாகவோ, வித்தியாசமாகவோ கீழ்மையாகவோ நடத்தாமல், உணராமல் இருக்கவும் கற்றுத் தரும் மிக முக்கியமான பண்பு.

அவனுடையதை விட தனது குறி ஏன் பெரிதாக / சிறிதாக இருக்கிறது? ஏன் இப்படி முடி வளருகிறது? இத்தனை நாள் தனதான குரலாக உணர்ந்த ஒன்று தன்னை விட்டுப் போவது; சம்பந்தமே இல்லாத கனத்த ஒன்று தனது குரலாக வந்திருப்பது; எது தனது? இதுவும் தன்னை விட்டுப் போய் விடுமா? இவை ஆண் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பதின் பருவக் குழப்பங்கள்.

Photo by Clay Banks on Unsplash

பெண் பிள்ளைகளுக்கும் இதே போன்ற தனதேயான தனக்குள்ளானப் பிரச்சினைகளோடு, வெளியிலிருந்து மற்றவர்கள் அந்தப் பிள்ளைகளின் மார்பகங்களைப் பார்க்கும் பார்வைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருப்பதுதான் இரட்டைச் சுமை தருகிறது. அவர்களே இது ஏன் வளருகிறது எனப் புரியாமல் இருக்கும்போது, இந்தப் பார்வை தரும் அழுத்தங்கள் இன்னும் குற்றவுணர்வுக்கு உள்ளாகச் செய்கிறது.

வீட்டிலும் அவர்களுக்கு வசதியான, இத்தனை ஆண்டுகள் அணிந்த உடைகளை விட்டு, தாவணியைச் சுற்றச் சொல்லும்போது, பிறகும் பார்வைகளை எதிர்கொள்ளும்போது, இத்தனை நாள் விளையாட்டுகள் மறுக்கப்பட்டு, இயக்கம் சுருக்கப்படும்போது துன்பமாக இருக்கிறது.

மறந்தும் தன்னுடல் பற்றிய உணர்வைக் கைவிட்டு விடாமல், எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டியது எவ்வளவு சுமை?

உடல் என்பது பறவைக்குப் போல இறகாகத்தானே இருக்க வேண்டும்?

ஒவ்வொருவருக்கும் குதூகலமாகவும் கொண்டாட்டமுமாக இருக்க வேண்டிய இளமைப் பருவத்தை, ஒரு குழந்தைக்கு மட்டும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இன்னொரு குழந்தைக்கு வருத்தத்தைத் தருவதாகவும் ஏன் அமைக்கிறோம்? எனில், இது எவ்வாறான பாராபட்சமான ஒன்று.

இந்த இடத்தை சரி செய்ய முயலும்போதே, இரு பாலருக்குமான குழந்தைப் பருவ, பதின் பருவ மகிழ்வை நாம் தந்துவிடத் தொடங்குகிறோம்.

ஞாநி சொல்வார், ‘பெண் குழந்தைகள் இப்போது வளர்த்தப்படுவது போல ஆண் குழந்தைகளும், ஆண் குழந்தைகள் இப்போது வளர்த்தப்படுவது போல பெண் குழந்தைகளும் வளர்த்தப்பட வேண்டும்’ என்று.

பிள்ளைகளை அவரவர் வேலையை அவரவரையே செய்ய விடுங்கள். வீட்டிலிருந்து இரண்டு கிமீ சுற்றளவுக்குள் இருக்கிற பள்ளிக்கு, வளர்ந்த பிள்ளையை நீங்கள்தான் கொண்டு போய் விட்டு, அழைத்து வருகிறீர்களா? பள்ளிப் பையை நீங்கள் வகுப்பறை வரை சுமந்து கொண்டு போய் விட்டு வருகிறீர்களா? மாஸ்க்கை ஒழுங்காகப் போட்டுவிடுவதில் தொடங்கி, தலை வாறிவிடுவது வரை நீங்களே செய்கிறீர்களா?

வீட்டில் தட்டு எடுத்து வைப்பது முதல் அனைத்து வேலையும் நீங்களே செய்கிறீர்களா? எனில், சந்தேகமே இல்லாமல், ஒரு சமூக நோயாளியை வீட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.

தன்னால் முடிந்த செயல்களைத் தானே செய்யவும், தன்னால் முடியாத செயல்களைச் செய்ய பெற்றோர் உற்றோரின் துணையை நாடவும் அறிவுறுத்த வேண்டும்.

கழிவறை சுத்தம் செய்வது:

இதுதான் ஒரு குழந்தையை, தான் செய்த செயலின் விளைவைத் தானே ஏற்கப் பழக்கும்; வாரம் ஒருமுறை வீட்டின் கழிவறைச் சுத்தம் செய்வது சுழற்சி முறையில் ஒவ்வொருவரின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

சமையல் எனும் கலை:

எது அத்தியாவசியமான ஒன்றோ, அதைக் கீழான ஒன்றாகக் காட்டியதில் காமம் காதல் உணர்ச்சிகளுக்குச் சரியான அதே விகிதத்தில் பங்கு வகிப்பது, சமையல் மற்றும் வீட்டு வேலைகள்தான்.

முதலாக ஆண் பிள்ளைகளுக்கு, ஒரு விருந்தாளி வந்தவுடன், கூச்சத்தில், முகத்திலறைந்து தன்னறைக் கதவைச் சாத்திக் கொள்ளாமல், வெளியே விளையாடப் போகாமல், வீட்டிற்கு வருபவர்களை வரவேற்று, உபசரிக்கக் கற்றுத் தர வேண்டும். அதை ஊக்கப்படுத்த வேண்டும்.

Photo by Aaron Thomas on Unsplash

தன் உணவைத் தானே சமைத்தல் என்பது அபரிமிதமான குதூகலத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கக் கூடியது. சமையல் என்பது அற்புதமான வேதியியல்; அருமையான மனோவியல்; உலகை எதிர்கொள்ளத் தேவையான மனிததத்தை, வீட்டிலேயே கற்றுத் தருவது.

உப்பு கூடி விட்டதா, சாம்பாரில் உருளைக் கிழங்கை வெட்டிப் போடுவது; ஒருவர் சப்பாத்தியைக் கூடுதலாகச் சாப்பிடுகிறாரா, பரிமாறும் அதே வேகத்தில் சப்பாத்தி மாவு பிசைவது; சட்டினி தீரப் போகிறதா இன்னொரு சட்டினி அரைப்பதா இருப்பதிலேயே நீர் விட்டு ‘அட்ஜெஸ்ட்’ செய்துவிடலாமா என யோசிப்பது;

வேறொன்றாக உருவாகி நிற்கும் பதார்த்தத்தை, இதை அதைச் செய்து, நாமே ஒரு பெயர் சூட்டி புதுப் பதார்த்தத்தை உருவாக்குவது; இத்தனை பேருக்கு வேண்டும், ஒவ்வொருவரின் வயிறும் ஒவ்வொரு விதம் என்பதைப் புரிந்து கொள்வது; தானே நிறையத் தின்று விட்டால், மற்றவருக்கு வேண்டுமே என பரிவாக உணர்ந்து கொள்வது; பரிமாறுவதின் அழகியலைப் புரிந்து செய்வது; உணவை வீணாக்காமல் இருக்கவும், அளவாகச் செய்யவும் கற்பது; சமையல் செய்பவர்கள் பாத்திரம் கழுவ முற்படும்போது, பாத்திரத்தை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்பதைத் தாமாகவே தெரிந்து கொள்ளலாம்.

இப்படி மொத்த வீட்டிற்கான சமையலுமே, தனி மனிதனின் கற்பனை ஆற்றலை வளர்ப்பதாக, படைப்பாற்றலை மிளிரச் செய்வதாக, தோல்வியை எதிர்கொள்ளப் பழக்குவதாக, வெற்றியை நிதானமாகப் பகிர்ந்து கொண்டாடுவதாக, முடிவெடுக்கும் திறனை அதிகரிப்பதாக, மனித நேயத்தை வளர்ப்பதாக, முழுமையான ஆளுமைத் திறன் உள்ள மனிதர்களை உருவாக்கித் தருகிறது.

  •  எதையும் கேள்வி கேள்

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.