Better not be a Parent… then be a bad parent (Sarah’s Movie)

சாரா என்ற மலையாளப் படத்தில் வருகிற வரிகள் இவை. மோசமான பெற்றோராய் இருப்பதைவிட, பெற்றோராக ஆகாமல் இருப்பது சிறந்தது. ஆம்; பெற்றோராக ஆவது என்பது மிகவும் பொறுப்புமிக்க செயல். அது ஆண், பெண் இரு பாலருக்குமானது. இன்னும் சரியாகச் சொன்னால், மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சமூகத்தின் அனைத்து குழந்தைகளையும் வளர்ப்பதில் பொறுப்பு உள்ளது; அந்த பொறுப்பைச் சரிவர செய்யும்போதுதான், ஒரு சமூகம் சிறந்த சமூகம் ஆகிறது.

குழந்தைப் பருவம்:

குழந்தை வளர்ப்பில், முதல் சுற்று குழந்தைப் பருவம் மிக முக்கியமானது; ஏனெனில், அதன் நீட்சியாகவே அடுத்தடுத்த சுற்றுகள் அமைகின்றன. பிள்ளைகள் சிறந்த மனிதர்களாக வளர, இந்தச் சுற்றில் கற்ற பழக்க வழக்கங்கள் துணை புரிகின்றன.

பிறந்ததிலிருந்து ஒரு மாத, நான்கு மாத, ஒரு வருட கைக்குழந்தைகளுக்கான உணவு முறைகளை மருத்துவர்களிடமும், நமது வீட்டில் வயதான பாரம்பரியமிக்க பல குழந்தைகளை வளர்த்து அனுபவப்பட்ட முதியவர்களிடமும் கேட்டு அறிவது நல்லது. இவை தனி.

ஒரு கூட்டுக் குடும்பம்; அந்த வீட்டிற்கு மருமகள் புதிதாக வருகிறார். பிள்ளை பெறுகிறார் என்று வைப்போம். அந்த வீட்டின் சூழலுக்கேற்ப, பிள்ளை வளர்ப்பின் நியதிகளும் மாறும். மாமியார் ஆதிக்க மனோபாவம் கொண்டவர் எனில், பிற்போக்குக் கருத்துகளில் நம்பிக்கை கொண்டவர் எனில், அந்த வீடு மொத்தமுமே அப்படித்தான் செல்லும்; அதுவரை எந்தச் சண்டைகளுமில்லாது சுமூகமாகச் செல்லும் குடும்பங்களில்கூட, சண்டை தொடங்குவது பிள்ளைகள் வந்த பிறகுதான்.

//அய்ய, அவன் குழந்தையே தூக்கினதில்லை; அவனுக்குக் குழந்தையைத் தூக்கவே தெரியாது// என்று, தன் மகன் தன் குழந்தையைத் தூக்கி உச்சி முகரும் இன்பத்தைத் தடுப்பார். அப்போது மருமகளே அத்தனை முறையும் குழந்தையைத் தூக்க வேண்டும் என்கிற மறைமுக வற்புறுத்தல் அதிலிருக்கும். ஏற்கெனவே, பிள்ளை பெற்ற களைப்பில், கர்ப்பமானதிலிருந்தே எடுக்க முடியாத ஓய்வின் சலிப்பில் இருக்கும் மருமகளுக்கு இது அயர்ச்சியை உண்டு பண்ணும். ஒரு பெண் பத்து மாதத்தில் ஒரு நிமிடம்கூட இறக்கி வைக்க முடியாத குழந்தை வெளியே வந்த பிறகு, வீட்டினரும் இந்தச் சமூகமும் இன்முகத்துடன் கையில் வாங்கிக் கொள்வதுதானே நியாயம்?

//அவன் என்னையவே வெளிய கூட்டிப் போனதில்லை; உன்னைய எப்படிக் கூட்டிப் போவான்?// உங்களின் இளவயதில், உங்களை உங்கள் கணவர் வெளியே அழைத்துப் போனாரா இல்லையா? அழைத்துப் போகாவிட்டாலும்கூட அதேபோல மருமகளையும் வாழ நிர்ப்பந்திப்பது சரியா? எதிர்பார்ப்புகளிலும் வாழ்க்கை முறையிலும் அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுகள் உண்டு. மேலும், மகன் இப்போது மருமகளின் கணவன்; எப்படி உங்கள் மகனையும் இன்னொருவரின் கணவரையும் ஒப்புமைபடுத்திக் கூறுகிறீர்கள்?

ஆண் பிள்ளைகளுக்குத் தெரியாது என்பதைப் பெருமையாகவும் அதே விஷயங்கள் தெரியாத பெண் பிள்ளைகளைச் சிறுமையாகவும் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்? எப்படி மகன் குழந்தையைத் தூக்கத் தெரியாமல் வளர்ந்தானோ, அப்படித்தானே மருமகளும் வளர்ந்திருப்பார்? பிள்ளையைப் பெற்றதாலேயே பெண்ணுக்கு எல்லா வித்தைகளும் கைவரப் பெறுமா? எனில், பிள்ளையைத் தரத் தெரிந்த ஆணுக்கும் அது வர வேண்டும்தானே?

அப்புறம், ‘எங்க மகனுக்கு எதுவுமே தெரியாது; அவன் குழந்தை மாதிரி’ என்பார்கள். தாலி, கல்யாணம், குழந்தை வளர்ப்பு எதுவுமே தெரியாத ‘சின்னத்தம்பி’ பிரபுவாகத்தான் பிள்ளைகளை வளர்த்து வைத்திருக்கிறீர்கள் என்றால் அது ஆரோக்கியமா?

அடுத்து, குழந்தைகள் கண்ணில் காதில் மூக்கில் விதவிதமான எண்ணெய்கள் ஊற்றுவது, குளிக்க வைக்கிறேன் என்கிற பெயரில் செய்யும் வன்முறைகள், குழந்தைகள் கதறக் கதற அழுத்தித் தேய்த்தால்தான் அழுக்கு போகும் – அந்தப் பிள்ளைகள் எந்தப் புழுதியில் புரண்டு விளையாடி வந்ததுகள் (?), நன்றாகப் பசி எடுக்கும் – அது கையையும் காலையும் ஆட்டும் வேகத்துக்குத் தானாகவே பசியெடுக்கும். ஆனால், இவர்கள் அழுத்திப் பிழிந்து குளிக்க வைப்பதால்தான் பசியெடுப்பதுபோல் நினைப்பில், குழந்தைகளைப் போட்டு சப்பாத்தி மாவு பிசைந்தெடுப்பார்கள்.

அதற்குப் பிறகு, அந்தக் குட்டியூண்டு குழந்தையின் தலை முடியைக் காய வைக்க, வீடே சினிமாக்களில் காட்டப்படும் சொர்க்கலோகம் போல, எந்தெந்தப் பெயரிலோ விற்கப்படும் சாம்பிராணியைப் போட்டு வீட்டையே பூலோக சொர்க்க புகை மண்டலமாக்கி, அந்தப் புகைக்கு, நன்றாக நுரையீரல் வளர்ந்த பெரியவர்களுக்கே ஆஸ்துமா வந்துவிடும், பிள்ளைகள் என்னாகும்? பிரசவத்தின்போது பிள்ளைகள் ஒருமுறை செத்துப் பிழைத்து இந்த உலகத்தைப் பார்க்க கண் விழித்து வருவது போதாது என, தினம் தினம் இந்த வகையிலான செத்துப் பிழைத்தல்கள் வேறு.

எல்லாவற்றிற்கும் மேல், சாப்பிட வைப்பது என்பதன் பெயரில் நடைபெறும் வன்முறைகள் ‘ஆப்பிளை வேக வச்சு நசிச்சுக் குடு; எங்க மகனுக்கு அதுதான் பிடிக்கும்’ (எத்தனை வருசமா ஞாபகமாக மறக்காமல் இருக்கிறார்களாம்; இன்று ஓர் உணவுப் பண்டம் சாப்பிட்ட பிள்ளைகளுக்கே, நாளைக்கு அதைச் சாப்பிடப் பிடிக்க மாட்டேன் என்கிறது; இதில் அப்பா காலத்தில்தான் அப்பா’வுக்கு ஆப்பிள் அதிசயம் என்றால் பிள்ளைக்குமா?); ‘வசம்பை வாயில வச்சுத் தேச்சா, பிள்ள தேன் மாதிரிக் குரல்ல பேசும்’ (ஐயாமாரே, அம்மாமாரே அதுக்கு முதல்ல குழந்தை இதை எல்லாம் தின்னும் உசுரோட இருக்கணும்); குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் வரை அம்மா நன்றாக விதவிதமான சத்துள்ள உணவுகளை உட்கொண்டு, பிள்ளைக்குத் தரும் தாய்ப்பாலே போதுமானது என்று மருத்துவர் அறிவுறுத்தியிருப்பார். இங்கு கதையே வேறுமாதிரி இருக்கும். ‘சின்னப் பையன் மாதிரியிருக்கான் அந்த டாக்டர், அந்தாளுக்கு என்ன தெரியும்? எங்களுக்குத் தெரியாத குழந்தை வளர்ப்பா?’ என்று தான்தான் இந்த வீட்டின் மாமியார் என்பதை சகல விஷயத்திலும் காண்பிப்பார். மாமியார் என்றால், அவருக்கு உலகின் அனைத்து விஷயங்களிலும் அறிவுண்டு; பத்து என்ஜினியர், 100 டாக்டர்களுக்குச் சமானம். இந்த மாமனார், மகன் ஆகியோர் இதில் தலையிட்டார்கள் என்றால், கதை இன்னும் வேறு மாதிரிச் செல்லும்; தனிக்குடித்தனத்தில் போய் முடியலாம். தலையிடவில்லை என்றால், மகனுக்கும் மருமகளுக்குமான உறவு விரிசல்விடத் தொடங்கும்.

தனிக்குடித்தன அலம்பல்கள் வேறு மாதிரி. அதில் பெரும்பாலும் அம்மாக்கள் பிரசவ காலங்களில் மட்டும் துணைபுரிய வருவார்கள். அம்மா என்ற பெயரில் இருக்கும் மாமியார்கள்; அவ்வளவுதான் வித்தியாசம்; மாமியாருக்கும் மருமகளுக்கும் இருக்கும் அதே தலைமுறை இடைவெளிப் பிரச்னைகள்தாம். சில அம்மாக்கள் மருமகன் எதிரில் புதுப் பெண்ணாகி விடுவார்கள். அப்பவும் மகள்தான் வேலை செய்வதாக அமையும்; அவர்களுக்கு மகள்கள் எப்போதும் ஒரு சிறுமி.

மாமியாரும் இல்லை; அம்மாவும் உதவிக்கு இல்லை என்கிற ஜோடிகளின் பிரச்னைகள் வேறு மாதிரி. அதிலும் ஆண், பெண் பிரச்னை, ஆண் வேலை, பெண் வேலை பிரச்னைகள் இருக்கும்.

இந்தப் பிழைகள் எல்லாம் எங்கிருந்து தொடங்குகின்றன? ஓர் ஆணுக்குச் சிறு வயதிலிருந்தே தரும் மரியாதையை, பெண்ணுக்குத் தரத் தவறுவதில்தான் தொடங்குகிறது. அது ஆணோ அல்லது பெண்ணோ அடிப்படை மரியாதையை எந்தவொரு குழந்தைக்கும் தர வேண்டும். பிறகு, மரியாதையைத் தொடர்ந்த அன்பு என்றிருந்தால் பிரச்னைகள் குறைவு.

வீடு என்பது அங்கு வாழ்பவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று. அங்கு குழந்தை வளர்ப்பையும் வீட்டுப் பொறுப்புகளையும் அதன் உறுப்பினர்கள் அனைவருமே பகிர்ந்து செய்வதுதான் நல்லது. அதைப் பார்த்து வளர்கிற குழந்தைகள் சிறப்பாக வளர்வார்கள்.

தன் வேலைகளைத் தானே செய்து பழகுதல் என்பது இழிவு அல்ல. அது தன்னம்பிக்கை; அதுதான் பொறுப்புணர்வு. வீட்டில் கற்றுக்கொள்ளும் அந்தப் பொறுப்புணர்வுதான், பொதுவிலும் வரும்.

பொதுவாக ஆண்பிள்ளைகள் பெரும்பாலான வீடுகளில் ஒரு நோயாளியைப் போல நடத்தப்படுகிறார்கள். உட்கார்ந்த இடத்தில் அவர்களுக்கு எல்லாம் நடக்கிறது. ஒரு குரலில் ஓடி ஓடிச் செய்து தருகிறார்கள். இது அவர்களைப் பலவீனமாக்கும். சுதந்திரமானவர்களாக மன ஆரோக்கியமுள்ளவர்களாக ஆக்காமல், சார்ந்திருப்பவர்களாக, மற்றவர்களை எப்போதும் அண்டிப் பிழைப்பவர்களாக வாழச் செய்யும்.

ஆண் பிள்ளைகளைச் சமையலிலும், குழந்தை வளர்ப்புப் பணிகளிலும் ஈடுபடச் செய்தலே, அவர்களைப் பிற்காலத்தில், குழந்தையை நேசிக்கும் மனிதர்களாக, மென்மையும் மேன்மையும் அருங்குணங்களும் நிரம்பியவர்களாக வளரச் செய்யும். ஆஃப்டர் ரிடையர்ட்மெண்ட் ஆண்கள் வீட்டோடு தன்னை இணைத்துக் கொள்ள முடியாமல் போவது இவற்றைச் செய்யாததால்தான்.

ஆண் பிள்ளைகளுக்கு வீட்டு நடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும், போலவே பொது நடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்; கூடுதல் பலம் என்பது, கூடுதல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது எனப் புரிய வைக்க வேண்டும்; வரிசையில் நிற்பது, யாரிடமும் நேராகக் கண்களைப் பார்த்துப் பேசுவது, பெண்களைக் கண்ணியமாக நடத்துவது, யாரென்று அறியாதவர்களுக்கும் முடியாதவர்களுக்கும் உதவுவது என எதிலும் ஒரு நிதானமான நடத்தையைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

தன் வேலைகளைத் தானே செய்வது என்பது குழந்தைப் பருவத்திலிருந்தே பழக்கப்படுத்தப்பட வேண்டும்.

கழிவறைப் பழக்கம்:

இது வாழ்விலேயே மிக முக்கியமானது. குழந்தை உட்காரத் தொடங்கும் ஆறு மாதங்களிலேயே, குழந்தைக்குச் சிறுநீர் அல்லது மலம் கழிப்பதற்கான உந்துதலின்போதே கழிவறைக்குத் தூக்கிச் சென்று பழக்கப்படுத்த வேண்டும். நடு இரவில் ஒரு முறை கொண்டு விட்டுப் பழக்க வேண்டும். இது நாளடைவில் அவர்கள் வளர வளர இதுதான் கழிப்பவற்றுக்கான இடம் என நன்கு மூளையில் பதியும்.

பிள்ளைகள் அழுவது:

பிள்ளைகள் அழுவது எல்லாம் பசிக்காக அல்ல. அவற்றுக்கு மொழியில்லை, தன் உணர்வுகளைச் சொல்லத் தெரியவில்லை. அழுகை மற்றும் சிரிப்பிலேயேதான் சொல்வார்கள். பூச்சி, கொசு, எறும்புக்கடியா அல்லது வேறேதேனும் வசதிக் குறைவா என பெரியவர்கள்தாம் கண்டுபிடித்து அறிய வேண்டும்.

அடம் பிடிப்பது:

வளர்ந்து ஓரிரு வருடங்கள் ஆனதும் அழுவதன் கூடவே, அடம் பிடிப்பதும் சேர்ந்துகொள்ளும். ஏன் அடம் பிடிக்கிறார்கள்? நன்றாக யோசித்துப் பார்த்தால், அவர்களுக்கு ஒவ்வாத ஏதோ ஒன்றை அறிவிக்கத்தான் அப்படிச் செய்கிறார்கள். நாம் நமது பிரச்னைகளின் அழுத்தத்தில் இருந்து இவற்றைப் பார்க்காமல், பிள்ளைகளின் இடத்தில் நம்மை வைத்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். நம் உயரம் வளர்த்தியிலிருந்து பிரச்னைகளை அணுகாமல், பிள்ளைகளின் உயரத்திற்குக் கண்ணோடு கண் நோக்கி, பிரச்னைகளைப் பேசி, உரையாடித் தீர்க்க வேண்டும்.

ஒரு நாளில், நாம் குழந்தைகளோடு பேசும் வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும்; முழுக்கக் கட்டளைச் சொற்களாகவே இருந்தால், அது முதலாளி தொழிலாளி உறவு அல்லது ஆண்டான் அடிமை உறவு போலத்தான். நாம் நமது வார்த்தைகளில் கனிவுடன் இருக்க வேண்டும். குழந்தைகளிடம் மட்டுமல்ல, குழந்தைகளின் எதிரில் மற்றவர்களோடு பேசும் வார்த்தைகளிலும் உணர்வுகளிலும் மிகுந்த கவனம் வேண்டும்.

‘இந்தா இதை எடு, அதைக் கொண்டா, இதை வாங்கிட்டு வா’ என்று பிள்ளைகளை எடுபிடியாக வளர்க்கிறோமா அல்லது தானே தன் விஷயங்களை முடிவு செய்யும் தகுதியுடன் வளர்க்கிறோமா என்பது மிக முக்கியம்.

நாம் எல்லாருமே தவறு செய்து செய்து அதிலிருந்து கற்று வளர்ந்தவர்கள்தாம். குழந்தைகளைச் சிறு சிறு வேலைகள் செய்யப் பழக்கும்போது தவறுகள் நிகழும்தான். கத்துவதோ கோபப்படுவதோ குழந்தைகளிடம் பயத்தைத்தான் உருவாக்கும். பயம்தான் குற்றவாளி மனப்பான்மைக்கு முதன்மையான காரணம். கத்துவது, கோபப்படுவது, திட்டுவது, தகாத வார்த்தைகள் உபயோகிப்பது, அடிப்பது, தண்டனைகள் தருவது, பல்லைக் கடிப்பது, கிள்ளுவது எல்லாமே வன்முறைதான்.

ஏற்கெனவே, பிள்ளைகளை அடிக்கும் பழக்கத்தில் இருக்கும் பெற்றோர் அதைவிட விரும்புகிறீர்கள் எனில், நீங்கள் கோபப்பட்டால், பிள்ளைகளை உங்கள் அருகில் நிற்காமல் ஓடிவிடச் சொல்லி, நிதானமாக இருக்கும்போது சொல்லி வையுங்கள். தொடர்ந்து இப்படிச் செய்யச் செய்ய கோபத்தில் அடிப்பது குறைய ஆரம்பிக்கும்; மெள்ள மறைந்தே போய்விடும். மீறி கோப்பட்டுவிட்டால், தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள்.

‘குற்றவாளிகளைத்தாங்க திருத்தணும்; குழந்தைகளை வளர்த்தணும்’ என்று குற்றங்கடிதல் படத்தில் ஒரு வசனம் வரும். குழந்தைகள் வளர வளர சரியாவார்கள். கற்றுக்கொள்ளும்போது அவர்கள் செய்யும் தவறுகள் மட்டுமே அவர்கள் அல்ல.

ஒரு தவறைச் சரிசெய்ய முயல வேண்டுமே தவிர, அதற்கான தண்டனை என்பது அதைவிடப் பெரிய தவறாகப் போய்விடக் கூடாது. அப்புறம் ஒரு தவறு நினைவுக்கு வரும்போதெல்லாம், குழந்தை அந்தச் செயலைச் செய்யப் போகும்போதெல்லாம் கண்டிப்பார்கள் சிலர். இது குழந்தைகளின் ஆற்றலை மட்டுப்படுத்தும். குழந்தைகளின் ஆற்றலை முறைப்படுத்தும்படியாகத்தான் நமது எதிர்வினைகள் இருக்க வேண்டும்.

உதாரணமாக, காலையில் அவர்களது பானத்தைக் குடிக்கும்போது கீழே கை தவறிக் கொட்டி விட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். நாம் அவர்களுக்கு ஓரிரு முறை அதை எப்படிச் சுத்தப்படுத்துவது என்று கற்றுக் கொடுக்க வேண்டும். அடுத்தடுத்த தடவைகளில் அவர்களையே சுத்தப்படுத்தவிட வேண்டும்.

எந்தத் தண்டனைகளுமின்றி, குத்தல் பேச்சுக்களுமின்றி எதையும் மகிழ்வுடன் கற்றுக்கொள்ளும்போது குழந்தைகள், அருமையாக வளர்வார்கள்.

வீட்டில் நல்ல பழக்க வழக்கங்களைப் பற்றிய போஸ்டர்ஸை ஒட்டி வைப்பது இன்னொரு வகை. காலையில் சீக்கிரம் எழுவது, பல் தேய்ப்பது, நன்றி சொல்வது, தவறு செய்தால் மன்னிப்பு கேட்பது, தான் செய்த செயலின் விளைவுக்குப் பொறுப்பேற்பது இப்படி.

பிள்ளைகள் நல்ல காரியம் ஒன்று செய்தால், உதாரணமாக விருந்தாளிகள் வீட்டிற்கு வந்தபோது, சேட்டைகள் எதுவும் செய்யாமல், அவர்களைக் கனிவுடன் கவனித்துக் கொண்டார்கள் எனில், அன்றைய தினத்தின் வீட்டுப் பாடத்தை முடித்து விட்டார்கள் எனில் ‘குட் டே காய்ன்’ என்று ஒரு ரூபாய் கொடுத்து உண்டியலில் போடச் சொல்லுங்கள். மாதக் கடைசியில், தான் எந்தளவு நல்ல குழந்தையாக நடந்து கொண்டோம் என்று குழந்தைகளுக்கே தெரியவரும்.

குழந்தைகளைக் காலையில் எப்படி எழுப்புவீர்கள்?

இரவு எப்படித் தூங்க வைப்பீர்கள்?

பூவிழி வாசலிலே என்ற படத்தில், தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைக் கண்களில் நீர் தடவி எழுப்புவார் அதன் நாயகி. சிலர் பிள்ளைகளுக்குப் பிடித்த பாடலை ஒலிக்க விட்டு எழுப்புவார்கள். அது ஓர் இனிமையான அலாரம். அந்த நாளையே அது இனிமையாக்கித் தரும்.

சிலர் கத்துவார்கள் ‘மணி ஏழாச்சு. பரீட்சைக்குப் படிக்கணும்னியே’ என்று பதைபதைக்க வைத்து எழுப்புவார்கள்.

இன்னும் சில வீடுகளில் பிள்ளைகள் விழித்தெழுவதே அம்மா அப்பா சண்டையில் அல்லது மாமியார் மருமகள் வாக்குவாதங்களில் என்பதாக இருக்கும்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், தன் மகனை ஓங்கி ஓர் உதைவிட்டு ‘எந்திரி சனியனே’ என்றுதான் எழுப்புவார்.

ஒரு நாளின் தொடக்கத்தையும் இரவு தூங்கப் போகும்போது நாளின் முடிவையும் அழகாக்கித் தந்தால் அதுதானே கனவுகளை வளர்ப்பதாக இருக்கும்?

ஐன்ஸ்டீனின் பிரபலமான வாக்கியம் ஒன்றுண்டு.

If you want your children to be intelligent, read them fairy tales. If you want them to be more intelligent, read them more fairy tales.

Albert Einstein

கதைகள் சொல்லித் தூங்க வைப்பது ஒரு சிறந்த முறை. இப்போதெல்லாம், சிடிஸ் கதைகள் உள்ளன; இனிமையான பாடல்களை ஒலிக்கச் செய்து தூங்க வைக்கலாம். இனிமையான சொற்களைச் சொல்லியும்

குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களைப் பேசித் தூங்கச் செய்யலாம்.

அறிவியலின்படி, கர்ப்பச் சிசு வெளி உலகைக் கிரகிப்பதுபோலவேதான், தூங்கும் குழந்தைகள் ஆழுணர்வில், பிரபஞ்ச வெளியை உணர்வார்கள். ஜப்பானியர்களிடம் ஒரு பாரம்பரியப் பழக்கம் உண்டு; அவர்கள் தூங்கும் குழந்தைகளின் காதில் கனவுகளை விதைப்பார்கள். அதுதான் குழந்தைகளைத் தன்னம்பிக்கை உடையவர்களாகவும் சாதிப்பவர்களாகவும் ஆக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

பிள்ளைகள் ஏன் வேகமாகச் சாப்பிட வேண்டும்?

குழந்தையின் வயிறு குழந்தைக்குத் தெரியுமா, அவர்களைவிட நமக்குத் தெரியுமா?

ஒரு வீட்டிற்கு நாம் விருந்தாடச் சென்றால் அந்த வீட்டின் பிள்ளைகளிடம் என்ன கேட்கிறோம்?

அவர்களின் மனதிற்குகந்த உரையாடல் வெளியைத் தருகிறோமா?

ஒரு வீட்டிற்குப் பிள்ளைகளை அழைத்துச் செல்கிறோம். பிள்ளைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனக் கனிவாகப் பேசி அழைத்துச் செல்கிறோமா?

குழந்தைகளை எப்படி எங்கேஜ் செய்கிறோம்? செய்ய வேண்டும்?

பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் பிள்ளைகள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு வாசிக்க, வரைய புத்தகங்களோ, விளையாட அவர்களின் பிடித்த பொம்மையோ எடுத்துப் போகலாம்; விருந்திற்குச் செல்கிற இடத்தில் சாப்பிடச் சற்றுத் தாமதமாகலாம். வீட்டிலிருந்து கிளம்புகையிலேயே மிகச் சிறிய அளவு பிள்ளைகளைச் சாப்பிட வைத்து அழைத்துச் சென்றால், பிள்ளைகள் பசியால் அனத்துவதைத் தவிர்க்கலாம்.

குழந்தைகளின் ஆற்றலை முறைப்படுத்துவது:

இது மிக மிக முக்கியம். குழந்தைகளின் அபரிமிதமான ஆற்றலை, குறும்பாகவும் சேட்டைகளாகவும், மற்றவர்களைக் காயப்படுத்தும் குணமுள்ளவர்களாகவும் ஆக்கிவிடாமல், ஏதேனும் கலைகளைக் கற்பதில் முறைப்படுத்த வேண்டும். இசை, ஆடல், பாடல், நடனம், கராத்தே சிலம்பம் கால்பந்து, கூடைப்பந்து ஆகியவற்றைக் கற்கச் செய்யலாம். தற்காப்பு வகுப்புகளில் சேர்ந்தால் பிள்ளைகள் முரடாக ஆகிறார்கள் என்கிற கற்பிதம் உண்டு; உண்மையில் தற்காப்புக் கலைகள் கண்களைத் திறந்தபடி செய்யும் தியானத்தைப் போன்றவை; எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வைப்பவை. எந்த வகுப்பிலுமே சேர்க்க வசதி இல்லாதவர்கள்கூட, நடை, ஓட்டப் பயிற்சி ஆகியவற்றைச் செய்ய வைக்கலாம்.

ஸ்வீட் நத்திங்ஸ்: இது மிக மிக முக்கியமானது. எப்பவும் அறிவாளித்தனமாகவே இல்லாமல், குழந்தைகளோடு ஜாலியாக உணர்வுப்பூர்வமான முட்டாள்தனமான விளையாட்டுகள் விளையாட வேண்டும். எதாவது ‘கஷ்கா முஷ்கா’ ‘அஜிக்கா புஜிக்கா’ என்றுகூட இருக்கட்டும்; இல்லை போ கத்திரிக்கா, நீ போ வெண்டைக்காய் என்று கற்றலை வெளிப்படுத்தும் விளையாட்டாக இருக்கட்டும் அது நலம் தரும். ஓஷோவினது தியான வழிமுறைகளில் அர்த்தமற்ற கத்தல்களைக் கத்துவது மனதை எந்தளவு லேசாக்கும் என்பதும் ஒன்று. இதுவேதான் அதுவும்.

எதையும் கேள்வி கேள்.

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.