ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31ஆம் நாள், ஹாலோவீன் நாளாக அமெரிக்கா கொண்டாடுகிறது.

இன்று ஹாலோவீன் நாள். இந்த நாள், விடுமுறை நாளாகக் கடைபிடிக்கப்படுவதாகப் பல வலைத்தளங்களும் சொல்கின்றன. ஆனால், உண்மை அது அல்ல. இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் விடுமுறையே தவிர, பொதுவிடுமுறை ஒன்றும் கிடையாது.

வரலாற்று ரீதியாக, இந்த நாள் சமயம் தொடர்புடையதாகவே இருந்திருக்கிறது. இந்தியாவில், ஹாலோவீன் நாளின் மறுநாள் அதாவது நவம்பர் முதல் நாள், அனைத்துப் புனிதர்களின் நாளாகவும், நவம்பர் இரண்டாம் நாள் அனைத்து இறந்தோர் நாளாகவும் (கல்லறைத் திருவிழா), கத்தோலிக்கர்கள் கொண்டாடுவது வழக்கம். அதேபோலத் தான், ஹாலோவீன் பேய்களுக்கான நாளாக இங்கு கொண்டாடப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று அவ்வாறு கொண்டாடப் படுவதில்லை. சமய விழாக்கள் பள்ளிகளில் கொண்டாடப்படுவதில்லை. ஆனால், ஹாலோவீன் பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. அதனால் இதைச் சமய விழாவாக எடுத்துக்கொள்ள முடியாது. கத்தோலிக்க ஆலயங்களிலும் இது தொடர்பான வழிபாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை.

ஹாலோவீன் நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே, ஹாலோவீன் வணிகம் களைகட்டத் தொடங்கிவிடும். கடைகளின் வாசலில் மிகப்பெரிய அட்டைப் பெட்டிகளில் விதவிதமான பூசணிக்காய்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். ஏனென்றால், ஹாலோவீன் அலங்காரத்தில் முதன்மையான பொருளாக இருப்பது பூசணிக்காய், குறிப்பாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் பூசணிக்காய் தான்.

வீடுகளை அலங்கரிக்க, அலங்காரப் பொருட்கள் விற்கப்படும். எலும்புக்கூடுகள், சூனியக்காரர்கள், மம்மி, வெளவால்கள், பேய்கள், மண்டை ஓடுகள், கறுப்பு பூனைகள், சிலந்திகள் பாம்புகள் போன்ற பயமுறுத்தும் பிரமாண்டமான உருவங்கள் விற்கப்படும். தீபாவளிக்கு மட்டும் பட்டாசு கடை திறப்பது போல, ஆங்காங்கே ஹாலோவீன் கடைகள் முளைக்கும்.

பல இடங்களிலும், திறந்த வெளியில் Pumpkin Patch வைத்திருப்பார்கள். அதில், குழந்தைகள் விளையாட சறுக்குகள் (slides), pumpkin jumpy house போன்றவை இருக்கும். உணவு, ஹாலோவீன் பொருட்கள் விற்பனை செய்வார்கள். ஏறக்குறைய நமது சிறிய பொருட்காட்சி போல இருக்கும். மக்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வர். பெரியவர்களும் விரும்பிச் செல்வதுண்டு.

வீட்டு வாசலில் பூசணிக்காயை அழகாக வெட்டி வடிவமைத்து உள்ளே விளக்கு / மெழுகுவர்த்தி வைத்திருப்பார்கள். இரவு நேரத்தில் ஆரஞ்சு பூசணிக்காயின் உள்ளே இருந்து வரும் வெளிச்சம், தீப்பிழம்பு போல இருக்கும். இவ்வாறு பூசணிக்காய் வெட்டி வடிவமைப்பதற்கென தனித்துவமான கத்தி போன்ற பொருட்கள் கடைகளில் விற்கும்.

பலர், தங்கள் வீடுகளை, திரைப்படங்களில் வரும் பேய்வீடு போல அலங்கரித்து இருப்பார்கள். பயமுறுத்தும் பிரமாண்டமான உருவங்களைக் கொண்டு அவர்கள் வீடுகளை அலங்கரிக்கிறார்கள். வீட்டைச் சுற்றி நிற்கும் மரம், செடி, கொடிகளில்கூட சிலந்தி வலை போன்று சுற்றி வைத்திருப்பார்கள். சில வீடுகளில் அருகில் சென்றதும், சத்தம் போடுவதும், விளக்கு எரிவதுமாக, பொம்மைகள் நம்மை பயமுறுத்தும்.

எங்கள் அருகில் ஒரு வீடு முழுவதையும் அனைத்து அறைகளையும் அலங்கரித்து இருப்பார்கள். அவர்கள் பயன்படுத்தும் கட்டில், சோபா போன்ற பொருட்களை ஓர் ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, அலங்கரித்து இருப்பார்கள். யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று பார்க்கலாம். பார்க்க பிரமிப்பாக இருக்கும். இன்று இரவு சென்றால் பார்க்கலாம்.

பள்ளிகளில் ஹாலோவீன் முன்னோட்டமாக மாணவர்களைப் பூசணிக்காய் தோட்டங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். நான் ஒருமுறை மாணவர்கள் சுற்றுலா செல்லும் போது தன்னார்வப் பணியாளராகச் சென்றேன். அதன் அனுபவத்தில் சொல்கிறேன்.

சுற்றுலாவில் டிராக்டர் பயணம் போன்றவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். வைக்கோலைச் சதுர இருக்கை போன்று செய்து அதில் உட்கார்ந்து பயணிக்க வைக்கிறார்கள்.

சில பண்ணைகாரர்கள், போட்டிக்காக மிகப் பெரிய பூசணிக்காய்களை விளைவிக்கிறார்கள். காய், பிஞ்சுப் பருவத்தில் இருக்கும் போதே பெரிய சதுர அட்டைப் பெட்டியில் வைத்து வளர்த்து சதுர பூசணிக்காய் விளைவிக்கிறார்கள். சில பண்ணைகளில் பழங்குடி மக்கள் வாழ்ந்த வீடுகளின் மாதிரியை வைத்திருக்கிறார்கள். சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்ப வரும்போது ஒரு சிறு பூசணிக்காயும் கொடுத்து அனுப்புகிறார்கள். இதற்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டுமா? எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஏனென்றால் இங்கு பள்ளிச் சுற்றுலாவிற்குப் பெற்றோர் பணம் கொடுக்க வேண்டியதில்லை. பெற்றோர்கள், தன்னார்வலர்கள் தங்கள் வாகனங்களில் மாணவர்களை அழைத்துச் செல்வார்கள். பெற்றோர் ஆசிரியர் சங்கம் வேறு செலவுகளைப் பார்த்துக்கொள்ளும்.

பள்ளிகளில் ஹாலோவீன் அன்று காலையில், ஒவ்வொரு வகுப்பும் அணிவகுப்பு நடத்தும். ஆசிரியர், மாணவர் என அனைவரும் பல்வேறு வேடங்கள் போட்டுக் கொண்டு செல்வார்கள். கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்கள்; அவை பொய் ஆயுதமானாலும் பள்ளியில் அனுமதி இல்லை.

பின் வகுப்பில் ஆசிரியர்கள் மிட்டாய் கொடுப்பார்கள். சில ஆசிரியர்கள், கேக், குக்கி எல்லாம் கொடுப்பார்கள். அவை கறுப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் செய்யப்பட்டிருக்கும். சில வகுப்புகளில் pizzaகூட இருக்கும்.

மாணவர்கள் சக மாணவர்களுக்குச் சிறு சிறு பரிசுப் பொருட்கள் கொடுப்பார்கள். பெரும்பாலும் எழுது பொருட்கள், bubble soap, clay போன்ற விளையாட்டுப் பொருட்களைப் பரிசாகக் கொடுப்பர். சிலர் அவரவர் பெயர் எழுத்து கொண்ட சாக்லேட் (S என்றால் sneakers, K என்றால், kitkat …) வாங்கி வருவதும் உண்டு. காகிதத்தால் முழுவதுமாக மூடப்படாத மிட்டாய்களைக் கொடுக்கக்கூடாது என்பது விதிமுறை.

பள்ளியில் இருந்தே கண்டதையும் தின்று பசியில்லாமல் தான் குழந்தைகள் வரும். பின் ஏதாவது ஒரு வீட்டில் இருந்து அலங்காரம் செய்வார்கள். இதனால் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளலாம். ஒரே பொருளைப் பலரும் பகிர்ந்து பயன்படுத்தலாம். எப்போது இருட்டும் என ஆவலாகக் காத்திருப்பார்கள்.

ஹாலோவீன் அன்று இருட்டியதும் பல்வேறு வேடங்கள் போட்டுக் கொண்டு, அவர்கள் வீடு வீடாகச் செல்வார்கள். எல்லோரும் சென்றாலும் குறிப்பாகச் சிறுவர்கள் மிக அதிகம் செல்வார்கள். அதற்கு Trick or Treat பெயர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் பயந்ததாக நடித்து, மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பொருள் கொடுத்து அனுப்புவார்கள். குறிப்பாக வயதானவர்கள் மிகப் பெரிய மிட்டாய்கள், பரிசுப் பொருட்கள் எல்லாம் கொடுப்பார்கள். பல வயதானவர்கள், அவர்களும் ஆர்வமுடன் அலங்காரம் செய்து கொண்டு காத்திருப்பார்கள். நல்ல முறையில் அலங்காரம் செய்திருப்போரை மனம் திறந்து பாராட்டுவார்கள். கிடைக்கும் பரிசுப் பொருட்களைச் சேகரிக்க எனப் பூசணிக்காய் வடிவம் கொண்ட பைகள், கூடைகள் போன்றவற்றைச் சிறுவர்கள் தங்கள் கைகளில் வைத்திருப்பார்கள்.

சிறுவர்கள் பெரும்பாலும் தேவதைகள், சிண்ட்ரெல்லா, டோரா, ஸ்பைடர் மேன், அப்போதைய Disney கதாபாத்திரங்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சிலர் காவலர், போர் வீரர், விமானி, தீயணைப்பு வீரர் …போன்ற தோற்றத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனால், இளைஞர்கள் பேய்களின் முகமூடியை அணிந்தும், மிகக் கொடூரமான வேடங்களைப் போட்டுக் கொண்டும், Trick or Treat செய்வார்கள். திரைப்படக் கதாபாத்திரங்கள் வேடம் போடுபவர்களும் உண்டு. பல்வேறு இடங்களுக்கும் செல்லும் இளைஞர்கள், எளிதாக ஐந்தாறு கிலோ மிட்டாய்கள் / பரிசுப் பொருட்கள் சேர்த்து விடுவார்கள். அவர்கள், கைகளில் பை கொண்டு போவதற்குப் பதிலாக தலையணை உரை கொண்டு போவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Spooky Halloween background with pumpkins and bats

வீடுகளில் எந்த அலங்காரமும் இல்லை என்றால் அந்த வீடுகளில் போய் Trick or Treat பண்ணக் கூடாது; அவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது எழுதாத நடைமுறை.

சிலர் தங்கள் வீட்டு வாசலில் மிட்டாய்களை வைத்து விட்டு Trick or Treat சென்று விடுவார்கள். நாம் எடுத்துக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு கொரானா உச்சத்தில் இருந்ததால், வீடுகளின் முன்னால் இருக்கும் சுவற்றில், துணி காய வைக்க நாம் பயன்படுத்தும் கிளிப்புகளில் மிட்டாய்களைத் தொங்க விட்டிருந்தார்கள். இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

சில வீடுகளில் விருந்து/ கேளிக்கைகளும் நடைபெறும். அதற்கென்ற தனித்துவமான நிறங்களில் வடிவங்களில் உணவுப் பொருட்கள் கடைகளில் வாங்கலாம். இசையும் ஆடலும் பாடலுமாக அமர்க்களமாக இருக்கும்.

Trick or Treat முடிந்து வீடு வந்ததும், சிறுவர்கள் அவரவர் பொருட்களை, இனிப்புகளைப் பரப்பி வைத்துப் பார்த்து மகிழ்வர். நண்பர்களிடம், அவரவருக்குப் பிடித்தவற்றைப் பண்டமாற்று முறையில் மாற்றிக் கொள்வர்.

மறுநாள் கடைகளில் ஹாலோவீன் பொருட்கள் பாதி விலைக்குக் கிடைக்கும். அதன்பிறகு ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் விலை குறையும். 90% தள்ளுபடிகூட வரும். மறு ஆண்டு பயன்படுத்த வீட்டு அலங்காரப் பொருட்கள் பெரும்பாலோர் வாங்குவார்கள்.

பொங்கல் வாரத்தில் நம் வீடுகளில் கரும்பு இருப்பதைப் போல, ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு எங்கு சென்றாலும் சாக்லேட் நீக்கமற நிறைந்து இருக்கும்.

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.