மறைந்து நிற்கும் மாயாவியுடன்
காற்றில்
வாள்வீசிக் கொண்டிருக்கும்
கடினமாகிறது
மரண பயத்தால்
இறுக கட்டப்பட்ட
காலத்தின் பொழுதுகள்.
அணையாது எரியும் மயானத்தீ
புனித நதியில்
இறந்த உடல்களின் ஊர்வலமென
பீதி பரப்புப் பணியில்
ஒன்றையொன்று
முந்திக்கொண்டிருக்கும்
ஊடகங்களின்
ஓயாத இரைச்சல்கள்
தப்பு கொட்டு பூமாலைகளுடன்
அழுது ஆறுதல் கூறி
வஞ்சக வாழ்வையும்
நெஞ்சாரப் புகழ்ந்தனுப்பும்
வாழ்விறுதிச் சடங்குகள்
மரியாதைப் பெருமிதங்களெல்லாம்
பாடைவழிச் சிதறும் பூக்களை
அச்சத்தால் வழியில் உள்ளோர்
தள்ளுதல் போல
தள்ளிவிட்ட வருத்தங்கள்.
வந்துகொண்டேயிருக்கும்
தெரிந்தவர்களின்
சாவுச் செய்திகள்
எதிலும் ஒன்றாத வெறுமை
மன இறுக்கம்
கண்ணீரின் வெதுவெதுப்பு
என்ன அதிசயமோ
வருத்தம் எதற்கென்று
சுழன்றடித்து
வந்து வீசிக்கொண்டிருக்கிறது
ஈரத்துளிகளோடு
குளிர்ந்த காற்று
ஜன்னலின் வெளிப்பக்கம்
நனைந்த பறவையொன்று
வந்தமர்ந்து
இறகுகளின் ஈரம்
உதறிக்கொண்டிருக்க
எண்ண முடியாத
நரம்புகளின் வீணையாக
எல்லோருக்கும் ஆறுதலாக
இசைத்துக் கொண்டிருக்கிறது
இப்போது வான்.
- இளம்பிறை
கவிஞர்
ப.இளம்பிறை
நாகப்பட்டினம் மாவட்டம், சாட்டியக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ப.இளம்பிறை, 2000ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசித்து வருகிறார். முதுகலை தமிழ் இலக்கியமும், இளங்கலை கல்வியியலும் பயின்றுள்ள இவர், அரசுப் பள்ளியொன்றில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இளம்பருவத்திலிருந்தே தொடர்ந்து எழுதிவரும் இளம்பிறை, தனது கவிதைகளுக்காக தமிழக அரசின் முதல் பரிசு, காலச்சுவடு பெண் படைப்பாளிகள் பரிசு, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, களம் இலக்கிய விருது, யாளி அறக்கட்டளை விருது, கவிஞர்கள் தின விருது, சேலம் தமிழ்ச்சங்க விருது, பாவலர் விருது, சிற்பி விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவரது கவிதைகள் சென்னைப் பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களிலும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. தவிர, தமிழக அரசின் தொடக்கக்கல்வி தமிழ் பாடப்பொருள் உருவாக்கப் பணியிலும் தொடர்ந்து பங்களிப்பு செய்துவருகிறார். கிராமியக் கவிதை மொழியுடன் நவீனக் கவிதை மொழியும் கைவரப்பெற்றவை இளம்பிறையின் கவிதைகள்.
இளம்பிறையின் பிற படைப்புகள்