அதிகாலை சூரிய உதயத்தின் ஒளிக்கதிர்களிடையே தன் பொன் வண்ணச் சிறகுகளை விரித்து மலர்களின் மேல் தவழ்ந்து கொண்டிருந்தது. பலரால் ரசிக்கப்படும் அந்த வண்ணத்துப்பூச்சியின் கடந்த கால கசப்பான நிகழ்வுகளை எத்தனை பேர் அறிவர்?

இங்கே பலரும் வெற்றி பெற்றவரின் சாதனையைப் போற்றுகின்றனர். அதற்காக அவர் பட்ட வடுக்களை எவரும் பார்க்கவில்லை.

அது பலரால் அற்பமாக நினைக்கப்பட்டது; அருவறுப்பு கொண்டு ஒதுக்கப்பட்டது. இருப்பினும் தனக்கான பணியைச் செய்து கொண்டிருந்தது, தன் வாழ்வின் அர்த்தத்தை அறியும் பொருட்டு.

முயற்சி என்பது அனைவருக்குமான ஒன்று. அதன் மூலம் பலரது வாழ்வின் விதி மாற்றி - இல்லை திருத்தி எழுதப்படும் என்பதே உண்மை.

அவ்வாறே அதுவும் முழு நேரமும் இலைகளைத் தின்று தீர்ப்பதில் மும்முரம் காட்டியது. அதனைப் பார்த்துப் பலரும் எக்களித்தனர். அதுவோ கேலிகளைப் பொறுத்துக்கொண்டது. காது கேளாதவள்போலவே இருந்தது. இறுதியில் ஒரு சமாதியை உருவாக்கி அதனுள் நீள்தவம் செய்தது.பார்த்தவர் அனைவரும் அது அழிந்து விட்டதென்றே நினைத்தனர். திடீரென அச்சமாதி உடைந்தது உள்ளிருந்து வண்ணமயமான சிறகுகள் வெளிப்பட்டன. பார்த்தவர் உறையும் வண்ணம் அழகிய சிறகுகளை விரித்து, தன் வாழ்வின் பயனை அடையும் மகிழ்ச்சியோடு நீல வானில் உயர உயரப் பறந்தது. கேலி செய்தவர்களையும் அண்ணாந்து பார்க்கும்படி செய்து விட்டது. ஆம்… அதன் தவத்தின் பயனை அடைந்து விட்டது. கம்பளிப்பூச்சியாகக் கால்களில் மிதிபடவிருந்த வாழ்வின் விதியை விடாமுயற்சியில் வென்று வண்ணத்துப்பூச்சியாக இன்று விண்ணில் சிறகடித்துப் பறக்கிறது.

தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்ற ஒன்று என்றும் இல்லை. தாழ்ந்தவர் என்று முத்திரை குத்தப்படுபவர் என்று வேண்டுமானாலும் உயர்ந்த நிலையை அடையலாம். அதுபோல உயர்ந்தவர் எனும் பொய்யான போர்வைக்குள் ஒய்யாரமாக ஒளிந்திருப்பவரும் கீழே விழக்கூடும். இந்நியதியை அறியாமல் உலகில் இன்றும் கிணற்றுத் தவளையாகவே வாழ்வை கழித்தவரும் உண்டு. உரிமையை நிலைநாட்ட மௌனமாகப் போராடியவர்களும் உண்டு.
இறுதியில் மௌனம் கலைந்து எழுச்சி குரல்கள் எழும். சமத்துவம் எனும் சிறகுகள் பெறுவதே குறிக்கோள். பிறப்பால், சமூகத்தால், நிறத்தால், அந்தஸ்தால்… சமத்துவமின்மை பலர் வாழ்வை சிதைத்துக் கொண்டிருக்கிறது. அவர்களில் பலர் வண்ணத்துப்பூச்சிபோல விண்ணில் பறக்க முயற்சிக்கவில்லை. சிலர் முயற்சி செய்தும், பெற்ற சிறகுகள்கூட வெட்டப்பட்டு மண்ணில் வீழ்கின்றன நம் கண் முன்னே.
இனியாவது ஒற்றுமை உணர்வோடு சிறகுகள் விரியட்டும்!

படைப்பாளர்

மஹா

தமிழ்ச்செல்வி என்கிற மஹா அரியலூரைச் சேர்ந்தவர். இரண்டாம் ஆண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் பயில்கிறார்.