நாம் வாசிக்கிற நூல்கள், திரைப்படங்களில் காண்கிற கதைகள் , என எல்லாவற்றிலும் நாம் ஒரு நுணுக்கமான அரசியலைக் காணமுடியும். இந்தச்சமூகத்தின் மைய விசை ஆண்களால் ஆனது. அவர்களின் வலிமையாலேயே இவ்வுலகம் தளர்ச்சியின்றி இயங்குகிறது என்பதே அது. மாறாக விட்டுக்கொடுக்கும் தன்மை, தியாகம், அன்பு , பரிவு, காத்திருப்பு போன்ற மன உணர்வின் மென்மையான தன்மைகள் யாவும் பெரும்பாலும் பெண்களுக்கு உரியனவாக கற்பிக்கப்பட்டிருக்கும். உண்மையில் ஆண், பெண் உடலியற்கூறு ரீதியான வேறுபாடுகளுக்கு உட்பட்டு அவர்கள் வாழ்கிற சூழலும், வாழ்க்கை முறையும் மாறுபட்டிருந்தாலும் ஆண்களை விடவும் இந்தச்சமூக ஆக்கத்தில் பெண்களின் பங்கே கூடுதலானது.

குறிப்பாக, தாயே இச்சமூகத்தின் மையமாக இருக்கிறாள். என்றபோதும் இச்சமூகத்தில் புறச்சூழலில் ஒரு பெண்ணின் தனித்த செயல்பாடு ஆண்கள் பலரையும் எரிச்சலூட்டும் விதமாகவும் அச்சமூட்டும் விதமாகவுமே இன்றுமிருக்கிறது. இந்தத்தடைகளை நேர்கொள்ளும் பெண்கள் , அவற்றைக் கடந்துவந்த பாதையை நானறிந்த வகையில் பகிர்ந்து கொள்கிறேன்.

அனிதா, என்னுடைய பள்ளித்தோழி. நடுவில் பல வருடங்களாக தொடர்பு இல்லாமல் இருந்தது, சமீபத்தில் முகநூல் வழியாக நட்பை புதுப்பித்துக் கொண்டோம். மீண்டும் பேசவும் சந்தித்துக்கொள்ளவும் முடிந்தது. பள்ளிப்பருவத்தில் நெருக்கமாக இருந்த தோழிகள் இருவர், பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும்போது, பள்ளிக்காலத்தின் கதைகளுக்குள் மட்டுமல்லாமல், மனதளவிலும் அவர்கள் இயல்பாகவே தங்களுடைய வளரிளம் பருவத்துக்கு நகர்ந்திருப்பார்கள். பழைய நினைவுகள் பலவற்றையும் பேசிக் களைத்தவர்களாக நிகழ்காலத்தின் எதார்த்தற்குத் திரும்பும்போது இருவருமே நட்பின் கனிவை உணர்ந்தவர்களாக சற்றே மெளனித்திருப்பார்கள். அவ்வாறே நாங்களும் இடைப்பட்ட காலத்தை கடந்திருந்தோம்.

அன்றைக்கே வாழ்நாள் முடிந்துவிடும் என்பதைப்போல, நாங்கள் சந்தித்துக்கொண்ட முதல் நாளிலேயே பலவருடக் கதைகளைப் பேசினோம். பெரும்பாலும் பள்ளிக்காலத்து நண்பர்களிடையே பதின்பருவத்தில் உருவாகும் இணக்கம் அலாதியானது. கல்லூரிக்கால தோழமையோ வேறு வகையானது. படிப்பு முடிந்து வேலை, திருமணமெனப் பிரிய நேரும்போது நட்பு வட்டம் மெல்லமெல்லச் சுருங்கி காரண காரியங்களுக்கு உட்பட்டதாகக்கூட மாறிவிட வாய்ப்புண்டு. ஆனால் பால்யகாலத்தில் நட்பாக இருந்தவர்கள் மீண்டும் சந்தித்துக்கொள்ளும்போது வாழ்வின் ஏற்ற இறக்கம் சார்ந்த வெற்றி தோல்விகளை எந்தவிதமான ஒளிவுமறைவின்றி பகிர்ந்துகொள்வர்கள்.

என் நினைவிலிருக்கும் அனிதா அந்த வயதுக்கே உரிய குழந்தைத்தனத்துடன் இருக்கிறவள். ஆனால் நான் சந்தித்த அனிதாவோ குடும்பத்தலைவியாக மட்டுமன்றி வெற்றிகரமானதொரு தொழில் முனைவராகவும் இருந்தாள். கடல் கடந்து பொருள்தேடிச் செல்லும் கணவனோடு மனைவியும் பயணம் செய்யும் வழக்கம் பண்டையத் தமிழ் நிலத்தில் இருந்ததில்லை. “முந்நீர் வழக்கம் மகடூவோடு இல்லை” யென தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்நூற்றாண்டில்தான் பெண்கள் கணவரோடு கடல் கடந்து செல்கிற வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இந்த மாற்றம் நிகழ்ந்தபிறகு பெண்கள் தங்களுடைய கல்விக்காகவும், பணி நிமித்தமாகவும் சுயமாக அயல் தேசங்களுக்கு பயணிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

அனிதாவின் கணவர், இந்தோனேசியாவில் நெசவு ஆலைகளுக்கான உபகரணங்களை பழுது நீக்கும் தொழிற்சாலை வைத்திருப்பவர். திருமணமானவுடன் கணவரோடு உடன் சென்ற அனிதா, ஓய்வு நேரத்தில் இந்தியக் குழந்தைகளுக்கான ஆரம்பப்பள்ளிக்கூடத்தினைத் தொடங்கியிருக்கிறாள். சில வருடங்களில் அவளுடைய கணவர் தொழிலில் மேலும் சில புதிய முயற்சிகளுக்காக, புதிய இடத்திற்கு மாறும் போது. அவருக்காக வேண்டி தன்னுடைய விருப்பமான பள்ளிக்கூடத்தினை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, கணவரின் தொழிலுக்கு உதவியாகச் செயல்பட்டிருக்கிறாள். இந்தச்சூழலில் தொழில் முனைவோராகச் செயல்படுவதின் நுட்பங்கள் அவளுக்குப் புரிபட, மீண்டும் தன்னுடைய விருப்பத்திற்காக வீட்டு அலங்கார மரசாமான்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறாள். மேசை, நாற்காலிகள் செய்வதற்கான மரங்களைத் தேடி வாங்குவதில் தொடங்கி, தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வடிவமைப்பும் செய்திருக்கிறாள்.

குடும்பத்துடன் அனிதா

அவளுக்கு இந்தத்தொழிலில் மிகுந்த ஈர்ப்பு ஏற்படவும், தேவையான மரங்கள் மற்றும் அலங்காரத்துணிகள் போன்றவற்றை வாங்குவதற்காக, தானே பல இடங்களுக்கும் தனியே அலைந்திருக்கிறாள். பல சந்தர்ப்பங்களில் அதிகாலையில் அவளுடைய குழந்தை விழிப்பதற்கு முன்பே இவள் கிளம்பவேண்டியிருக்கும். நள்ளிரவில் வீடு திரும்பும்போதும் குழந்தை தூங்கிக்கொண்டிருக்கும். பல நாட்கள் தன்னுடைய குழந்தை கண் விழித்து விளையாடுவதை, படிப்பதை அருகிலிருந்து பார்க்கவியலாமல் இருந்திருக்கிறாள். இவ்வாறாக இவள் வெளியே அலைந்துதிரியும் நாட்களில் கணவர் குழந்தைக்குப் பாதுகாப்பாக இருந்துகொண்டு தன்னுடைய வேலைகளைத் தள்ளி வைத்துக் கொள்வார். இவ்வாறாக இருவரும் ஒருவர் தொழிலுக்கு இன்னொருவர் எனக் கைகொடுத்து தங்களை வளர்த்துக்கொண்டனர்.

அனிதாவின் மகன் வளர்ந்து பதினொன்றாம் வகுப்பு படிப்பதற்காக சிங்கப்பூரைத் தேர்வு செய்தபோது மீண்டும் அனிதாவுக்கு சோதனை வந்தது. குழந்தையின் விருப்பத்தை மதித்து அவனோடு உடன் சென்றால், எப்போதும்போல தன்னுடைய நிறுவனத்தைப் பார்த்துக் கொள்ளவியலாது போய்விடுமேயென யோசித்திருக்கிறாள். இதற்கிடையே அவள் வகையில் வடிவமைத்த மரச்சாமான்களை தமிழ்நாட்டுக்கும் ஏற்றுமதி செய்து தன்னுடைய தம்பியின் பராமரிப்பில் விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறாள். இப்போது மகனோடு சிங்கப்பூர் சென்றால் இதுவரையிலான தன்னுடைய முயற்சியை என்ன செய்வது என்று குழம்பியிருக்கிறாள்.

இறுதியாக மகனுடைய விருப்பத்திற்கே மதிப்புக் கொடுத்து தான் தொடங்கிய நிறுவனத்தை தன்னுடைய தம்பியிடமே ஒப்படைத்துவிட்டு மெல்லமெல்ல தன்னை அப்பொறுப்பினின்றும் விடுவித்துக்கொண்டாள். அனிதாவின் தம்பியும் இந்த நிறுவனத்தை சிறப்பாகவே நடத்தி வருகிறார். மகனின் இரண்டு வருட கல்வி முடிந்து மீண்டும் இந்தோனேசியா சென்ற அனிதா கணவரின் தொழிலில் தானும் இணைந்துகொண்டு செயல்படுகிறாள்.

இவற்றையெல்லாம் என்னோடு பகிர்ந்துகொண்ட அனிதா, “என்னோட விருப்பமாகத் தொடங்கிய பள்ளிகூடத்தை கணவருக்காகவும், அலங்கார மரச்சாமான்கள் செய்கிற நிறுவனத்தை மகனுக்காவும் விட்டுவிட்டேன். ஆனால் அவற்றிலிருந்து கிடைத்த அனுபவத்தை இப்போது மீண்டும் கணவரின் தொழில் விருத்திக்காக பயன்படுத்திக் கொள்கிறேன்” என்று கூறினாள். அனிதாவின் கணவர் நடத்துகிற நிறுவனம் முந்தைய சில ஆண்டுகளில் தொழில் சார்ந்து சில சரிவுகளையும், போட்டிகளையும் சந்தித்திருந்தாலும் இன்றைக்கு உலக நாடுகள் சிலவற்றுள் தனது கிளைகளுடன் செயல்படுகிறது. அனிதாவின் கணவர் அவளிடம், “உன்னால தான் இன்றைக்கு நான் மூன்று தொழில்களை நான்கைந்து நாடுகளில் செயல்படுத்த முடிகிறது அனிதா” என்று சொல்வாராம்.

“ உனக்குக்குன்னு அடையாளமாக இருந்த சில விஷயங்களை , குடும்பத்திற்காக வேண்டி விட்டுக்கொடுத்திருப்பதைப் பற்றி என்ன நினைக்கிற அனிதா?” என்று அவளிடம் கேட்டேன். “ என்னோட நிறுவனம் எனக்கு என் குழந்தை மாதிரித்தான். அதை விட்டுக் கொடுக்கும் போது கஷ்டமாதான் இருந்தது. ஆனா அதைவிட குடும்பத்தினரின் விருப்பம்தான் ரொம்ப முக்கியம்ன்னு எங்க அம்மாகிட்டயிருந்துதான் கத்துகிட்டேன். நான் பத்தாவது படிக்குபோது எங்க அப்பா இறந்துட்டார். அது முழுப்பரிட்சை நேரம். பரீட்சைக்கு நான் வந்ததே பெரிய விஷயம். உங்க எல்லோருடைய ஊக்கப்படுத்துதலால்தான் நான் பரீட்சையில் தேர்ச்சி பெறவே முடிந்தது. இதெல்லாம் உனக்கு நினைவிருக்குமான்னு எனக்குத் தெரியல. ஆனா எனக்கு மறக்காதில்லையா?”

” அப்போ என்னோட தம்பிகள் மூன்றாம் வகுப்பும், ஐந்தாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு வசதியிருந்தாலும் இந்தச்சமூகத்தில் ஒரு பொண்ணு தனியா குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது மிகக்கஷ்டம்ன்னு அம்மாகிட்டதான் தெரிஞ்சிகிட்டேன். கணவன் இல்லாமப்போனாலோ, கைவிடப்பட்டாலோ, மணமுறிவு ஏற்பட்டாலோ தனித்து தன் குழந்தைகளை வளர்த்தெடுப்பது இன்றைக்கும் பெண்களுக்குக் மிகக்கடினமான காரியம்தான். ஆயிரத்தெட்டு கெட்டபேர் வரும். இதற்காக அவர்கள் அணிந்துகொள்ளும் முகமூடிதான் கோபக்காரி. தனியா இருந்த அம்மா சொந்தக்கார்கள் மத்தியில் கோபமும், பிடிவாதமும் நிரம்பியவள் என்று பெயரெடுத்தாள், ஆனால் எங்கள் மூன்று பேரையும் ஒருவருக்கொருவர் பிரியமுடன் வாழ்வதற்குப் பழக்கியிருந்தாள்.”

” மூத்தவள் நான், என் இரு தம்பிகளுக்கும் இன்னொரு அம்மாவாகவே மாறியிருந்தேன். இப்ப அம்மாவும் இல்லை, பெரிய தம்பியும் இல்லை. என்னோட குடும்பத்துல எனக்குன்னு இருக்கிறது என் சின்னத்தம்பி மட்டும்தான். முதல்ல என் தம்பிகளுக்கு அம்மாவா இருக்க முடிஞ்சது. இப்ப என்னுடைய மகனுக்கு மட்டுமல்ல என்னோட கணவருக்கும் நான்தான் அம்மா, அவர்களுடைய வெற்றிக்காக என்னோட அறிவையும் அனுபவத்தையும் முழுமையாகக் கொடுக்க நினைக்கிறேன்”, என்று சொன்னாள்.

வருடத்தில் சில தினங்கள் நோக்கமெதுமில்லாமல் திரைப்படங்கள் பார்ப்பததென்பது பத்தாண்டுகளுக்கும் மேலாக என்னுடைய வழக்கமாக இருக்கிறது. என்னுடைய விருப்பமாக சிலபடங்கள் , அவை தவிர மகனோ மகளோ அல்லது நண்பர்களோ பரிந்துரைக்கும் திரைப்படங்களையும் தேடிப்பார்ப்பதுண்டு. அப்படியாக மகளின் பரிந்துரையில் சமீபத்தில் நான் பார்த்த ஒரு திரைப்படம் “அக்வா மேன்”. இந்தத் திரைப்படம் ‘ஜேம்ஸ் வான்’ என்பவர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியானது.

அக்வா மேன், IMDb

ஆனால் இந்தத் திரைப்படத்தின் கதையானது 1959 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த “டீசி காமிக்ஸ்” நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனமானது கற்பனை, அறிவியல், மாயாஜாலம் எல்லாமும் கலந்த குழந்தைகளுக்கான பொழுதுபோக்குப் படக்கதைகளை உருவாக்கும் விதமாக 1937 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுகிறது. துப்பறியும் படக்கதைகளில் தொடங்கி சூப்பர் மேன், பேட் மேன், ஒன்டர் வுமன், ஷஷாம் என குழந்தைகளுக்கான சூப்பர் ஹீரோ கதைகளை இவர்கள் உருவாக்கினார்கள். இந்த நிறுவனத்தின் படக் கதைகள் பலவும் பிறகு திரைப்படங்களாகவும் உருவாகியுள்ளன. இந்த வரிசையில்தான் இவர்களது புகழ்பெற்ற படக்கதைகளில் ஒன்றான ‘கடல் மனிதன்’ அல்லது ‘நீர் மனிதன்’ எனப்படுகிற இப் படம் நவீனத் தொழில்நுட்பங்களுடன் கடலின் பிரம்மாண்டத்தையும், நிலத்தின் விரிவையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

கடலுக்கடியில் வாழ்கிற அட்லாண்டீஸ் இனத்தின் மன்னனான ‘நேரியஸ்’, ‘கடலுக்கு மேலே உள்ளவர்களிடம் இயல்பாகவே ஒரு வன்முறை இருக்கிறது, அதனால் அவர்களே அவர்களை அழித்துக்கொள்வார்கள்’ என்று சொல்வதும் அதனையும் மீறி, இளவரசனான ‘ஓர்ம்’ நிலத்தில் வாழ்கிற மனிதர்களை அழிப்பதற்காக கடற்பரப்பில் போர் செய்ய விரும்புவதுமென இக்கதை தொடர்கிறது.

இந்தத் திரைப்படத்தின் கதையை அல்ல, கதையின் நாயகன் அவனுடைய அம்மா மற்றும் காதலி ஆகிய கதாப்பாத்திர உருவாக்கம் பற்றிதான் இங்கே பேச விரும்புகிறேன். கடலடி தேசமான ‘அட்லாண்டீஸ்’ நாட்டின் அரசி ‘அட்லாண்டா’விற்கும் நிலத்தில் வாழும் எளிய மனிதனுக்கும் பிறந்தவனாக கதையின் நாயகன் ‘ஆர்தர்’ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ‘ஆர்தர்’ என்கிற ‘நீர் மனிதன்’தான் நிலத்தையும் நீரையும் இணைக்கும் விதமான குறியீடு. இவன், சகல வல்லமை படைத்தவனாக அல்ல, தன்னுடைய மக்களை நேசிக்கும், தன்னுடைய மக்களைப் பாதுகாக்கும் மனிதனாக அடையாளம் காட்டப்படுகிறான்.

திரைப்படத்தின் தொடக்கத்தில் கடற்கொள்ளையர்களிடம் “கருணையை என்னிடமல்ல, கடலிடம் கேள்” என்றும், ‘திரிசூலம்’ எடுப்பதற்கான பதிலில், “நான் தலைவன் அல்ல, என்னுடைய மக்களை நான் நேசிக்கிறேன், என்னுடைய மக்களை நான் காக்க நினைக்கிறேன், எனக்கு வேறு வழி இல்லை, அதனாலேயே வந்தேன்” என்று ‘ஆர்தர்’ பேசுகிற வசனங்கள்தான் அந்தக் கதாப்பாத்திரத்தின் தன்மை. மகுடத்திற்கான இரத்தச்சரித்திரத்தைக் கொண்டுள்ள இவ்வுலகில், அவ்வப்போது தோன்றுகிற இப்படியான தன்னலமற்ற ஒருவனாலேயே நாடும் மக்களும் பாதுகாக்கப்படுகிறது என்பதாக இந்தக்கதாப்பாத்திரத்தைப் புரிந்துகொள்ளலாம்.

‘அட்லாண்டீஸ்’ நாட்டு இளவரசன் ‘ஓர்ம்’, தன்னுடைய சகோதரனான ‘ஆர்தரை’ ஏற்றுகொள்ளவியலாமல் சண்டையிட்டு தோற்கடிக்கிறபோது, அட்லண்டீஸ் இளவரசி ‘மீரா’ தன்னுடைய அதீத பலத்தினால் அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறாள். நிலத்தையும் கடலையும் ஒருசேரக் காக்கும் நல்ல மனம் கொண்ட வலிமையானவனாக ‘ஆர்தர்’ ஒருநாள் வருவான் எனவும் அவன் கைகொள்ள வேண்டிய ‘திரிசூலம்’ இருக்கும் இடத்திற்குச் செல்கிற வழியில் அவனுடைய வருகைக்காக தாய் ‘அட்லாண்டா’ காத்திருக்கிறாள். மேலும், ‘ஆர்தர்’, ‘மீரா’ இருவருக்கும் நேர்கிற ஆபத்திலிருந்து அவர்களின் உயிரைக் காக்கிறாள். ‘திரிசூலத்தினை’ எடுத்துவந்து நடக்கவிருக்கும் போரினைத் தடுத்து, நிலம், நீர் இரண்டையும் பாதுகாப்பவனாக இருக்குமாறு ஆர்தரை அவனுடைய தாய் வழிப்படுத்துகிறாள்.

தாய், காதலியுடன் அக்வா மேன், Quirkybite

இறுதியில் தாய் மற்றும் காதலி ஆகிய இரண்டு பெண்களால் தனக்கு நேருகிற ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப்பட்டு, அவர்களின் உதவியுடனும் வழிகாட்டுதலுடனும் ஆர்தர் கடலையும் நிலத்தையும் காக்கும் மன்னனாக உயர்ந்து நிற்கிறான். நான் பேச விரும்புகிற விஷயமும் இதுதான்.

உலகம் முழுக்க உருவாகிற இதுபோன்ற பெரும்பாலனான சிறுவர் கதைகளில் தலைவனாக இருக்கும் ஆண் நல்லவனாக, வல்லவனாக, அவனே ஒரு குழுவினை வழிநடத்தத் தகுதியுள்ளவனாக உருவாக்கப்படுவான். அதேசமயம் நாயகனுக்கு ஆபத்து வரும்போதும், அவன் தோல்வியுற்று துன்பமடையும்போதும் அவனை ஆற்றுப்படுத்திக் காக்கும் விதமாக பெண்களே இருப்பார்கள்.

மேலும் அந்தப்பெண்கள் விட்டுக்கொடுப்பவர்களாகவும், அவர்கள் செய்கிற தியாகத்தின் அடிப்படையில் ஒரு ஆண் வெற்றியடைந்து தலைவன் ஆவதாகவும் கதைகள் உருவாக்கப்பட்டிருக்கும். இவ்வாறான கதைகளின்பின் அமைந்திருக்கும் உளவியலென்பது ஆண்கள், பெண்கள் ஆகியோரின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டுமென சிறுவர் கதைகளை வாசிக்கத் தொடங்கும் பருவத்திலேயே மெல்ல மெல்ல நம் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது.

நீரை, நிலத்தை, மனிதர்களைக் காப்பவனான ஆர்தரை அவனுடைய தாயும் காதலியுமே உருவாக்குகிறார்கள். அவர்களின் தியாகத்தில், வழிநடத்துதலில் ஒரு மன்னன் உருவாவதுபோலவே அனிதா கணவன், மகன், தம்பி ஆகியோரை வழிப்படுத்தியிருக்கிறாள். தானே வளர்த்துக்கொண்ட சிறகுகளை தன் உறவு வழிபட்ட மூன்று ஆண்களுக்கு அணிவித்திருப்பதன்மூலம் அவர்களை மட்டுமன்றி பலநூறு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக ஆகியிருக்கிறாள். பெண்களுக்கு குழந்தைப்பருவத்திலேயே பயிற்றுவிக்கப்படுகிற விட்டுக்கொடுப்பது, தியாகம் நற்குணங்களாலேயே இவ்வுலகம் சமநிலை குலையாமலிருக்கிறது. தொடர்ச்சியாக தன்னை இயங்குபவளாகவே வைத்துக்கொண்டிருக்கும் அனிதாவுக்கு இப்போது ஓராயிரம் சிறகுகள்.

சிறகுகள் விரியும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

சக்தி ஜோதி

எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர். சங்கப் பெண் கவிஞர்கள் நூலாசிரியர்.