சாதனை படைத்தவர்களாக அல்லது முதன்மையானவர்களாக பல்வேறு துறைகளிலும் அடையாளப்படுத்தப்படுகிற பெண்கள் பலரும் தொடக்கத்தில் எல்லோரையும்போல சமூகம் வகுத்து தந்த எல்லைக்குள் சாமானியமானவர்களாக இருந்த பெண்கள்தான். மாறாக ஒரு பெண் எப்போது சாதனையாளராக அறியப்படுகிறாள் என்று நோக்கினால் , தன் துறையில் முன்னேற ஒரு பெண் எதிர் கொள்கிற பிரச்சனைகளும் கடந்து வருகிற தடைகளுமே அவளை உள்ளூர வலிமையாக்குகிறது. வலிகளைத் தாங்கிக்கொண்டு தன் வழியில் அயராது முன் நடக்கிற பெண்தான் சமூகத்தில் சாதனை செய்தவளாக தனித்து ஒளிர்கிறாள்.

சாதித்த பெண்கள் பற்றிய ஒரு பொதுவான பார்வை இது. உண்மையில் சாதாரணப்பெண் ஒருத்தி, அவள் வாழ்கிற சூழல் வழியாக எதிர்கொள்கிற சவால்களைக் கண்டு திகைத்து , திணறி தடுமாறி, ஒரு கட்டத்தில் அவற்றை முழுமையாக எதிர்கொண்டு தன்னைத் தானே செதுக்கிக்கொள்ளத் தொடங்குகிறாள். அவ்வாறாக அவள் தாங்கிக்கொள்கிற அந்த வலிதான் அவளை சாதனைப்பெண்ணாக அடையாளப்படுத்துகிறது. வெற்றிபெற்ற அனைத்துப் பெண்களின் மென்மையான புன்னகைக்குள்ளும் ஆயிரமாயிரம் துயரக் கதைகள் மறைந்திருக்கிறது.

இந்தச்சமூகம் முன்னேறிவிட்டதாக, பெண்கள் எல்லோரும் கல்வியில் தேர்ந்தவர்களாகவும் பொதுவெளியில் தங்கள் அறிவையும் ஆற்றலையும் தடையேதுமின்றி வெளிப்படுத்துகிற சூழல் நிலவுவதாகவும் நாம் சொல்லிக்கொண்டிருந்தாலும், உண்மை நிலை வேறாகத்தான் இருக்கிறது. பெண்கள் பலரும் பாலின அடிப்படையில் தாங்கள் திறமையற்றவர்களாக மதிப்பிடப்படுகிற அவமதிப்பை பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

Photo by Luis Galvez on Unsplash

அலுவலக மேசையில் அமர்ந்தபடி கண்ணில் தூசி விழுந்துவிட்டதாக கண்ணீரை மறைத்துக்கொள்கிற பெண்களைப் பார்த்திருப்போம். ஒரு பெண்ணின் கண்ணீரைப் காணாத அடுப்படியோ குளியலறையோ இருக்காது என்று சொல்வதுபோலவே எல்லா அலுவலத்திலும் ஒதுங்கிய மூலையில் அமைந்திருக்கும் கழிவறையும் பெண்களின் கண்ணீரை அறிந்தே இருக்கிறது. பெண்களின் கைப்பையில் தவறாமல் இடம்பெறுகிற கண்ணாடியும் முகப்பவுடரும் அவர்களின் அழகை மெருகூட்டிக்கொள்வதற்காக மட்டுமல்ல என்பதை பெண்கள் மட்டுமே அறிவார்கள். பெண்களின் கண்ணீர்க்கு எப்போதும் ஒரேயொரு அர்த்தம் இல்லை. எல்லோரிடமும் அவள் அழுவதும் இல்லை. பெரும்பாலான பெண்கள் கோபத்தில், ஆத்திரத்தில் அல்ல இயலாமையில்தான் அழவே செய்வார்கள்.

ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிற ஆண் கவனமின்மையினால் ஏதேனும் தவறு செய்தால் அதனை அவன் கையாளுகிற விதத்திற்கும் அதே தவறை ஒரு பெண் செய்யும்போது அவள் கையாளுகிற விதத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. ஒரேவிதமான தவறை செய்தவர்களை ஆண், பெண் பாலின இடைவெளியுடன்தான் அந்த அலுவலகத்தின் மேலதிகாரிகளும், சமூகமும்கூட அணுகுகிறது.

பெண்கள் என்றால் வீட்டு வேலை செய்யவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும், குழந்தைகளின் வீட்டுப்பாடத்தைச் செய்து கொடுப்பதற்கும் மட்டுமே ஆனவள் என்கிற கருத்து இன்னமும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இதனைக் கடந்து பெண்கள் செய்யக்கூடிய வேலைகள் என்று கல்வி, மருத்துவம் மற்றும் சில துறைகளைச் சொன்னாலும் பொதுவில் ஒன்றாக ஒரு பெண் இருக்கும்வரை அவளுக்கு எந்தச்சிக்கலும் இல்லை. ஆனால் ஒரு முக்கியமான பொறுப்பைக் கையில் எடுக்கும்போதும், சவாலான ஒரு புதிய வேலையை ஏற்றுக்கொள்ளும்போதும், அவள் சந்திக்கிற விமர்சனங்கள்தான் இந்தச் சமூகத்தின் ஒட்டு மொத்த மனோபாவமாக வெளிப்படுகிறது. ஒரு பெண்ணின் வெற்றி சமூகத்தின் பார்வையில் இன்னமும் மதிப்புக்குறைவானதாகவே இருக்கிறது. உண்மையில் இதனை எதிர்கொள்வதுதான் இன்றைய பெண்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

இத்தனையும் கடந்து தொழில், நிர்வாகம், கலை மட்டுமன்றி சமூகம், அரசியல் உட்பட பல்வேறு செயல்பாடுகளில் பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இச்சமூகத்தின் ஒட்டுமொத்தக் கூட்டத்திலிருந்து தனித்து ஒளிர்கிற பெண்கள்தான் சிறகு முளைத்த பெண்களாக பறக்கத் தொடங்கியவர்கள். இவ்வாறான பெண்கள்தான் இச்சமூக வரலாற்றின் கடந்த காலப் பக்கங்களில் இருந்து பெயரற்றுப் போய்விடாமல், சிறகு முளைத்த பறவைகளென நம்பிக்கையின் விதைகளை நிலமெங்கும் விதைத்தபடியே செல்கிறார்கள். ஒவ்வொரு விதையும் விருட்சமாக மாறி இன்னும் பல பறவைகளுக்கு அடைக்கலம் தந்து கானகமாக உருவாக வழி செய்கிறது. விரிந்தவானமும் பெருநிலமும் தனதெனத் தேர்ந்து கொண்டிருக்கும் பறவைகளைப் போன்ற பெண்கள் பலரையும் இந்தத்தொடரில் சந்திப்போம்.

கட்டுரையாளர்:

சக்தி ஜோதி

தமிழில் முதுகலை முடித்து ‘சங்ககாலப் பெண்களின் நிலை’ என்ற தலைப்பில் இளநிலை ஆய்வுப் பட்டமும், சங்க இலக்கியத்தில் ‘ஆண் மைய கருத்துருவாக்கம்’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். இதனடிப்படியில் சங்கப்பெண் கவிஞர்கள், இன்றைய வாழ்க்கையோடு தொடர்புபடுகிற அல்லது வேறுபடுகிற இடங்களை மூன்று ஆண்டுகள் குங்குமம் தோழி இதழில் தொடராக எழுதியுள்ளார். இந்தத் தொடர் கட்டுரைகள் ‘சங்கப் பெண் கவிதைகள்’ என்கிற தலைப்பில் சந்தியா பதிப்பக வெளியீடாக நூலாக வந்துள்ளது.

தமிழ் இந்து- காமதேனு இணைய இதழில் ‘ஆண் நன்று பெண் இனிது’ என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதியுள்ளார். ஆண் பெண் உறவு பற்றிய புரிதலை உணர்த்தும் விதமாக தன்னுடைய அன்றாடத்தில் சந்திக்கிற மனிதர்களை முன்வைத்த கட்டுரைகள் அவை. சமூக செயற்பாட்டாளரான இவர், ஸ்ரீ சக்தி நிறுவனம் என்ற பெயரில் 18 ஆண்டுகளாக பெண் கல்வி, மகளிர் மேம்பாடு, விவசாயம், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சமூகப்பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

அமெரிக்கா, இஸ்ரேல், சீனா, போர்ச்சுகல், தாய்லாந்து, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பணி நிமித்தமாக சென்று வந்துள்ளார். விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் மாநில அளவில் சமூகப்பணிக்காக சிறந்த இளைஞர் விருது பெற்றவர். இதனடிப்படையில் இந்திய சீன நல்லுறவுக்கான நல்லெண்ண தூதுக்குழுவில் தமிழகம் சார்பாக சீனாவிற்கு சென்று வந்தவர்.