சமீப காலமாக தனியார் பள்ளிகள் பலவற்றின் மாணவ மாணவிகள் ‘இந்தியா ரெக்கார்ட்ஸ்’ சாதனை, ‘லிம்கா புக் சாதனை’ என பல சாதனைகளை செய்து செய்திகளில் இடம்பெறுவதைக் காணமுடிகிறது. உலகின் அனைத்து நாடுகளின் கொடிகளை மனப்பாடம் செய்து அடையாளம் காட்டுவது, நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களைக் கிளிப்பிள்ளை போல ஒப்பிப்பது, திருக்குறளை பொருளறியாமலே மனனம் செய்து ஒப்பிப்பது என இந்த ‘சாதனைகள்’ நீள்கின்றன.

மன்னிக்கவும், இவை சாதனைகளே அல்ல. சின்னஞ்சிறுசுகளுக்கு நாம் தரும் சோதனைகள். ஆராய்ச்சிக் கூடங்களின் எலிகள் போல குழந்தைகளுக்குப் புரியாதவற்றை மனனம் செய்து ஒப்பிக்க வைப்பதை சாதனை எனச் சொல்லமுடியுமா என்ன? அந்தக் குழந்தை அதில் அறிவியல்பூர்வமாக என்ன சிந்தித்தது, என்ன ‘செய்தது’ என்பதைக் கேட்டால், மிஞ்சுவது எதுவுமில்லை. அத்தனை நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டுவதாலும் தலைநகரங்களின் பெயர்களை ஒப்பிப்பதாலும் என்ன பலன்?

குடியரசு நாளை முன்னிட்டு நேற்று இந்திய அரசு இளம் சிறாருக்கு ‘ராஷ்டிரிய பால புரஸ்கார்’ விருதுகளை வழங்கி கவுரவித்தது. விருது பெற்றவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி அசுவதா பிஜு மற்றும் 7 வயது சிறுமி விஷாலினி இருவரும் என் கவனம் கவர்ந்தவர்கள். நாம் அதிகம் பேசவேண்டிய சிறுமிகள், ரோல் மாடல்கள். அசுவதாவை கடந்த சில ஆண்டுகளாகக் கவனித்து வருகிறேன்.

‘தொல்லுயிரியியல்’ (paleontology) துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட அசுவதா, தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்று அங்கு கண்டெடுத்த தொல்லுயிர் எச்சங்களைத் தன் வீட்டின் அறை ஒன்றில் காட்சிப்படுத்தி இருக்கிறார். எப்பேற்பட்ட தொல்லுயிர் எச்சம் என்றாலும், அதைக் குறித்து தெளிவாகவும், புரிதலுடனும் விளக்கக் கூடியவர்; துறையின்பால் மிகுந்த ஆர்வமும் தேடலும் கொண்டவர். சிறு வயது முதலே இந்தத் துறையில் ஆர்வம் கொண்டவரை, பெற்றோர் அழகாகச் செதுக்கியிருக்கிறார்கள்.

துறையில் வல்லுனர்களிடம் விவாதிப்பது, வாசிப்பது, களப்பணி என இந்த இளம்வயதில் கலக்கும் அசுவதா, சிறந்த முன்னோடி. தொல்லுயிரியல் மீதான இளம் தலைமுறையின் ஆர்வத்தை அசுவதா தூண்டியிருக்கிறார். இன்று ஆர்கியாலஜி, பாலியன்டாலஜி உள்ளிட்ட ‘புதிய’ படிப்புகளை இளம் சமூகம் தெரிந்துவைத்துள்ளது, அதில் ஆய்வு செய்யக் களமிறங்கவும் இந்த குட்டிப் பெண்கள் அஞ்சுவதில்லை.

https://mobile.twitter.com/mygovindia/status/1485643094335057923

6 வயதில் ‘பலூன் வீடு’ ஒன்றை வடிவமைத்து, அதற்குக் காப்புரிமையும் பெற்றவர் விஷாலினி. வெள்ளத்தால் வீடுகள் அடித்துச் செல்லப்பட, மக்கள் பரிதவித்ததை சிறுவயதில் பார்த்த விஷாலினி, வீடுகள் வெள்ள நீரில் மிதப்பது போல வடிவமைத்தால் என்ன என சிந்தித்து, பெற்றோர் வழிகாட்டலில் இந்த வீட்டை வடிவமைத்துள்ளார். இந்தியாவிலேயே மிக இளம் வயதில் காப்புரிமை பெற்றவர் என்ற பெருமையும் பெற்றவர்; உலகிலேயே இளம் வயதில் காப்புரிமை பெற்றவர்களில் இரண்டாமிடம் பிடித்தவர்.

பிறர் துன்பம் பொறுக்கமாட்டாமல், ஆய்வு செய்து, அவர்களுக்கு உதவ கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்யும் ஆய்வாளர்களே இன்றைய உலகின் முக்கிய தேவை. விஷாலினி போன்ற குட்டிப் பெண்கள் அதைச் செய்வது பாராட்டவேண்டியதே. அறிவியலை முன்னெடுக்கும் இளைய சமுதாயத்தை, குறிப்பாக சிறுமிகளைப் பாராட்டுவோம், நம் வீட்டுப் பெண் குழந்தைகளையும் சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் அறிவை ஆய்வுப்பூர்வமாகப் பயன்படுத்தவும் வழிகாட்டுவோம்.