தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும் பகுதி – 14  

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்! தீதும் நன்றும் பிறர்தர வாரா!’ 

எல்லா ஊரும் நமது ஊரே. எல்லா மக்களும் நம் உறவினரே என்ற கணியன் பூங்குன்றனார் வரிகளை பிடிக்காதோர் யாரேனும் உண்டா? அண்ணாந்து பாக்குற கட்டிடங்கள் மட்டும் துபாயின் அழகு இல்லை. அதைத் தாண்டிய, கலாச்சாரங்களை ஊக்குவிக்கும் அழகும் இங்கே கொட்டிக்கிடக்கு.

உலகம் சுற்றுவது எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இப்போ கூட நம்மூரு எக்ஜுபிஷன்ல தாஜ்மகால்ல இருந்து ஈஃபில் டவர் வரைக்கும் காட்சிப்படுத்தி வெச்சிருப்பாங்க. வாழ்க்கையின் ஏதாவதொரு கட்டத்தில உலகம் சுத்தணும்னு எல்லாருக்குள்ளயும் ஒரு கனவு இருக்கும். உலகத்தைச் சுற்றி வரணும்னு ஆசைப்படாத ஆள் உலகத்துல இருப்பாங்களான்னு எனக்குத் தெரியல. கொலம்பஸ், மார்க்கோ போலோ, இபன் பதூதா என்று பல உலகம் சுற்றும் வாலிபர்களை (வார்னிங்: வேறு யாராவது ஞாபகம் வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல) நம் வரலாறு பார்த்திருக்கிறது. அப்படி உலகம் சுற்றியவர்கள் யாரும் பையில் மூட்டையாகப் பணத்தைக் கட்டிக் கொண்டு உல்லாசப் பயணம் போகவில்லை. அறிவுத் தேடலாகவும், இறைத் தேடலாகவும் பயணம் சென்றவர்களே அதிகம்.

இப்போதெல்லாம் ஃபாரின் டூர் என்பது சாதாரணமாகப் போய்விட்டது. அதற்கென பல ஏஜென்ஸிகள் நாடெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. நம் வேலை பணம் கொடுத்து புக் செய்வது மட்டுமே. ‘நீங்க வந்தா மட்டும் போதும்’, என்று ஏர்போர்ட் பிக்கப் முதல் ஹோட்டல், சைட் சீயிங், ரிட்டன் என்று நம்மை ‘பத்திரமாய்’ வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். ஆனால் பயணங்கள் வாழ்வின் தேடலாகவும், சவாலாகவும் இருந்த காலத்தில் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததை, ஸாரி அமெரிக்காவை சென்றடைந்ததை நாம் கொண்டாடித் தீர்க்கத்தான் வேணும். 

இப்போதெல்லாம் அதுபோல வாய்ப்புகள் இருக்குமான்னு தெரியலை. அண்டார்டிக்காவுக்கே போனாலும் அங்க ஒரு டூரிஸ்ட்டு கைடு வந்து ‘மே ஐ ஹெல்ப் யூ’ ன்னு கேப்பாங்களோன்னு தோணுது. உலகம் நம் கைக்குள் வந்து பல காலம் ஆகிவிட்டது. பல்வேறு நாடுகளின் உணவு, உடை, கலாச்சாரம் மூன்றையும் ஒரு சேர பார்க்கும் வசதி அரை மணி தொலைவில் இருந்தால் அதை மிஸ் பண்ணணுமா என்ன? திருவிளையாடல் படத்துல விநாயகரும், முருகனும் ஒரு ஞானப் பழத்துக்காக போட்டி போடுவாங்க. ‘இந்த உலகத்த முதல்ல சுத்தி வர்றவங்களுக்குத் தான் ஞானப்பழம் கிடைக்கும்’ன்னு ஒரு சீன் இருக்கும்.  ஞானத் தகப்பன் முருகன் மாதிரி, ‘நாம ஏன் உலகத்த சுத்தி வரணும், உலகத்தையே நம்ம பக்கத்துல கொண்டு வந்துட்டா என்ன’ன்னு ஒரு ஸ்மார்ட் ஐடியாவில் விளைந்தது தான் க்ளோபல் வில்லேஜ் (Global Village).  இந்த வாரம் ‘உலக கிராம’த்திற்கு உங்களை அழைச்சுட்டு போறேன்.    

க்ளோபல் வில்லேஜ்க்குள் நுழையும் போதே ரஷ்யாவின் செயின்ட் பேசில் கத்தீட்ரல் (Saint Basil Cathedral) மாடலில் இருக்கும் அலங்கார வளைவு பிரம்மாண்டமாய் பரந்து விரிந்து இரு கையை நீட்டி நம்மை  வரவேற்பது போல் இருக்கும்.

க்ளோபல் வில்லேஜுக்குள் நுழைய டிக்கெட்டின் விலை பதினைந்து திர்ஹாம் (முன்னூறு ரூபாய்) மட்டுமே. துபாயில இவ்ளோ கம்மியான நுழைவு டிக்கெட் இங்க தான்.

வேடிக்கை மட்டும் பார்க்க வருபவர்களுக்கு இது நிச்சயம் நல்ல இடம். என்னைப் போன்ற ஷாப்பிங் ஃப்ரீக்ஸுக்கு பர்ஸு வெயிட்டாக இருப்பது மிகவும் முக்கியம். இருபது அடி தொலைவு நடந்ததும் கண்ணுக்கு முன்னால ஒரு மினி உலகமே இருக்கும். சுதந்திரதேவி சிலை, பைசா சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், எகிப்து பாரோ மன்னன் சிலை, ஆஸ்திரேலியா ஓபரா ஹவுஸ், துனிஷியா பீச் மாடல், ஜப்பானின் ஒசாகா காசெல், அமெரிக்காவோட கோல்டன் கேட், ஹாலிவுட் சைன், கொலம்பஸ் ஜர்னி என்று உலக வரைபடம் மொத்தமும் அலங்கார வளைவுகளா வெச்சிருக்குறத பார்த்தா அது குட்டி உலகம்ன்னு தோணுவது இயல்பு தானே?

அணில் முதுகுல மூணு கோடுங்குற மாதிரி, மூணே விசயம் தான் ஒவ்வொரு நாட்டிலும் பெரும்பாலும் நாம தேடிப் போறது. உணவு, உடை, கலாச்சாரம். இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் அந்த நாட்டோட பாரம்பரியம், உணவு, கலாச்சாரத்தை வெளிப்படுத்த வசதியா ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனி பெவிலியன் (Pavilion)  அமைச்சிருக்காங்க.

ஒவ்வொரு பெவிலியன் முன்னாடியும் பிரம்மாண்டமான கட்டிடக்கலைய காட்டுற விதமா அலங்கார வளைவு வெச்சிருக்காங்க. இப்படி ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல தொண்ணூறுக்கும் மேலான நாடுகளின் கலாச்சாரத்தை  இருபத்தைஞ்சுக்கும் அதிகமான பெவிலியன்கள் வழியா காட்சிப்படுத்தியிருக்காங்க. எங்க… எங்க… எங்க… என் நாடுன்னு உள்ளே நுழையுற எல்லாருக்குமே ஆட்டோமேடிக்கா அவங்க கண்ணு அவங்க நாட்ட நோக்கித்தான் முதல்ல போகும். மெல்ல மெல்லமா நடந்து ஒவ்வொரு பெவிலியனுக்கும் ஒரு விசிட் அடிக்கலாம். 

க்ளோபல் வில்லேஜ பொருத்தவரைக்கும் நடக்கணும், நடக்கணும், நடந்துகிட்டே இருக்கணும். ஒவ்வொரு நாளுக்கும் ஐம்பதாயிரம் பேர்க்கும் மேல இங்க வந்து குவியுறாங்க. இங்க ஒரு செல்பி தனியா நாம மட்டும் ஃப்ரேம்ல வர்ற மாதிரி எடுத்துட்டா, அது ஒரு உலக சாதனை தான். அவ்வளவு விலாசமான இடமாக இருந்தாலுமே எங்க பார்த்தாலும் மக்கள், மக்கள், மக்கள் கூட்டம் தான்.

இதுவும் ஆறு மாதம் உள்ளே , ஆறு மாதம் வெளியே தான். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை மட்டும் திறந்திருக்கும். சூப்பர் சிங்கர் மாதிரி பல சீசன்களைக் கடந்து இப்போ 26 வது சீசன் ஆரம்பிக்கப் போகுது. உலகிலேயே அதிகமான மக்கள் கூட்டம் வரும் கேளிக்கை பொழுதுபோக்கு அம்சங்களில் டிஸ்னிலேன்டுக்கு (Disney Land) அடுத்த இடத்தை க்ளோபல் வில்லேஜ் தான் பிடிச்சிருக்கு. ஒவ்வொரு வருசமும் தொடங்கும் புது சீசனில் புதுமையான பல விசயங்களை புகுத்துறதால நமக்கும் போர் அடிப்பதில்லை. சரி அந்த பெவிலியனுக்குள்ல என்ன தான் இருக்குன்னு உள்ளே போய் பார்க்கலாம்.   

ஒரு எக்சிபிஷன் மாதிரியான தோற்றம் தான் க்ளோபல் வில்லேஜ் முழுமைக்கும்னாலும் கூட ஏதோ ஒரு தனித்துவம் என்னன்னா பல்வேறுபட்ட கலாச்சாரத்தை ஒரே இடத்தில பார்க்கலாம். பொருட்காட்சிக்குப் போய் ஒவ்வொரு ஸ்டாலுக்கும் விசிட் அடித்து வேடிக்கை பார்ப்போம்ல. அதே கதை தான்.

ஒரு இந்தியனாய் பெருமை கொண்டு நரம்பு புடைக்க என் கால்கள் முதலில் இந்தியாவுக்குள் தான் அடியெடுத்து வைத்தது. நாம பாக்காத இந்தியாவான்னு ஒரு கேஷுவலான விசிட் அடிச்சா, அது நிஜமாவே நாம பாக்காத இந்தியா தான். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைன்னு சொல்றோம். ஆனா அங்க உண்மையாவே காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை நம் நாட்டின் அனைத்து பாரம்பரியமான பொருளையும் வரிசை கட்டி வெச்சிருக்காங்க. காஷ்மீரின் பட்டு ஷால், நம்மூரு காஞ்சிவரம் சேலை, அழகான தோடு, கம்மல், கூடவே கேரளாவின் தேங்காய் வகைகள்….  அய்யோ நிறைய ஸ்டேட்டு இருக்கே? மணிப்பூர், மிசோரம், குஜராத், மஹாராஷ்டிரான்னு கிட்டத்தட்ட எல்லா ஸ்டேட்டுமே அங்க இடம் பிடிச்சிருக்கும். நம்ம நாட்டின் கலாச்சாரத்துக்கே இன்னோர் க்ளோபல் இண்டியா (Global India) வேணும் போலன்னு தோணும். 

இங்க சுத்தி பார்க்குறப்போ மிக முக்கியமான விசயம் ஒரு பெவிலியனுக்குள்ளேயே மனம் லயித்து நின்னுடக் கூடாது. ‘போதும் போதும் அடுத்தது பார்க்கலாம்’ன்னு மனசை அப்பப்போ அலர்ட் பண்ணிட்டே இருக்கணும். ஏன்னா அதோட பிரம்மாண்டம் அப்படி.

அங்க உள்ள பெவிலியன்கள்லயே ரொம்ப பெரியது ஆப்பிரிக்கா தான். உள்ளே நுழைஞ்சோம்ன்னா ஆப்பிரிக்கா கண்டமே ‘இந்தா பாருங்க எங்க அழகை’ன்னு சொல்லுற மாதிரி அம்சமா இருக்கும். ஆப்பிரிக்கா ஸ்டால்களில் இருக்கும் பெண்கள் ஆறடிக்கு மேல இருப்பாங்க. ‘அடி கருப்பு நிறத்தழகி, உதட்டுச் சிரிப்பழகி’ பாட்ட அவங்களுக்காகவே பாடின மாதிரி வாய் நிறைய புன்னகையோடவே தான் இருப்பாங்க.

அவங்களோட என்ர்ஜியும், பழகுற விதமும் வேற எந்த ஸ்டால்லயுமே நான் பார்க்கல. அங்க கிடைக்குற கலைப் பொருட்கள், ஜூவல்லரி எல்லாமே அடி தூள். எனக்குப் பொருந்துதோ இல்லயோ நிச்சயம் ஒரு ஆப்பிரிக்க காதணி வாங்கி விடுவேன். பொதுவாகவே ஆப்பிரிக்க பழங்குடி மக்களின் நடனம் முதல், அவர்களின் கைவினைப் பொருட்கள் வரை எல்லாமே மனதை கவரும். எத எடுக்கலாம், எத விடலாம்னே தெரியாது. ஷோ பீஸ்ல இருந்து அன்றாடம் புழங்கும் வீட்டு உபயோகப்பொருள் வரை ஒரு ஆப்பிரிக்கக் கடலே உள்ளே கிடக்கும். மிஸ் பண்ணிடாம பாக்குறதுன்னா ஆப்பிரிக்க பெவிலியன் தான் என்னோட சாய்ஸ். 

குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு மணி நெரம் அசால்ட்டாக செலவு பண்ணக்கூடிய இடத்தில் நம்மோட அடுத்த இலக்கு உணவு தானே. ஒவ்வொரு பெவிலியன்லயுமே பல வகையான உணவு வகைகள் வெச்சிருப்பாங்க. அது போக உள்ளே சின்னச் சின்ன ரெஸ்ட்டாரண்ட்டுகளும் இருக்கு.

ரெஸ்ட்டாரண்ட்டுகளின் பணியாளர்கள் அந்தந்த நாட்டின் பாரம்பரிய உடையில் இருப்பது கண்ணுக்கு விருந்தா இருக்கும். அதுல என் மனம் கவர்ந்தது போஸ்னியா ரெஸ்ட்டார்ன்ட். உள்ள போய் சாப்பிடலேன்னாக்கூட அவங்க ட்ரெடிஷனல் ட்ரெஸ் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். கூடவே ஸ்ட்ரீட் ஃபுட் வகையறாக்களும் அதிகம். சின்னச் சின்னதா கியாஸ்க்(kisoks) வெச்சு ஐஸ்கிரீம், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், ஃபலாஃபெல், நம்மூரு கரக் சாயா, பாவ் பாஜின்னு ஃபுட் கோர்ட் மணமணக்கும். 

ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கான ஒரு பெவிலியன்னா அது துருக்கி தான். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை இன்னுமே அழகா கட்டிக் காத்துட்டு இருக்குற துருக்கிக்குள்ள நுழைஞ்சாலே ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும். டர்கிஷ் ஐஸ்கிரீம், டர்கிஷ் காஃபின்னு ஒரு பாரம்பரிய மணம் வீசுறத கண்டிப்பா ஃபீல் பண்ண முடியும்.

ஒரு ரவுண்டு சுத்தி வர்ற மாதிரி அமைச்சிருக்குற பெவிலியன்களுக்கு நடுவில ஒரு சின்ன கால்வாய் அமைச்சு அதுல போட்டிங் வெச்சிருப்பாங்க. அது வெனிஸ் நகரத்தின் மாடல் செட்டப். அது தான் எனக்கு ரொம்ப பிடிச்ச விசயமும் கூட. உள்ள படகு சவாரியும் இருக்கு. கூடவே தாய்லாந்து, பாங்காக் மாதிரியான கிழக்காசிய நாடுகளின் ஃப்ளோட்டிங் மார்க்கெட்(Floating Market), ஃப்ளோட்டிங் ரெஸ்ட்டாரண்ட் (Floating Restaurant) எல்லாம் இருக்கு. தாய் (அம்மா இல்லங்க. தாய்லாந்து! ) ஃபுட்ஸ் சாப்பிட ஆசைப்படுறவங்க அந்த போட்டில் ஏறி சவாரி செய்துட்டே சாப்பிடலாம். 

ஸ்ட்ரீட் ஷோக்கள், இரவில் வாண வேடிக்கை, உலகப் புகழ் வாய்ந்த ரிப்லேஸ் பிலீவ் இட் ஆர் நாட் ( Ripley’s Believe it or Not) , ஸ்டன்ட் ஷோ, மேஜிக் ஷோன்னு கொஞ்சமும் கேப் விடாம அங்கங்க ஏதாச்சும் ஒரு நிகழ்வு நடந்துட்டே தான் இருக்கும். குழந்தைகளுக்கான சின்ன சின்ன விளையாட்டுகள்ல ஆரம்பிச்சு, பெரியவர்களுக்கான த்ரில்லிங் விளையாட்டுகள் வரை ப்ளே ஏரியா (Play Area) தனியா இருக்கும்.   

பெவிலியன்களுக்கு நடுவில் ஒரு பிரம்மாண்டமான மேடை அமைச்சிருப்பாங்க. இப்படி மைல் கணக்குல சுத்துற அளவுக்கு என்ர்ஜி வற்றிப் போயிருச்சுன்னா அங்க இருக்குற புல் தரையில் வந்து உக்காந்து மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். பல நாடுகளின் கலாச்சாரத்தை உணர்த்தும் விதமான ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்ன்னு அந்த இடம் முழுசுமே களை கட்டும். இங்குள்ள பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்கும் பல நடன நிகழ்ச்சிகள் அங்கே அரங்கேறும்.

அதுபோக ஒவ்வொரு பெவிலியன்லயுமே அவங்க நாட்டோட கலாச்சார நடனம் ஆடுறது பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும். ஏமன் நாட்டின் அல் பாரா(Al Bara), கொரியாவின் சம்கோமு (Samkomu), ஆப்கனின் அட்டன் (Attn) எல்லாம் அந்தந்த பெவிலியன்கள விசிட் அடிச்சப்போ பார்த்தாச்சு. ஆண்கள் கையில் ஒரு சிலம்பு வைத்துக் கொண்டு ஆடிய ஏமனி டான்ஸ் அதி அற்புதமாக இருந்தது. ஏமன் ஆண்கள் கொள்ளை அழகு!

சிரியா நாட்டின் பெவிலியனுக்குள்ள என்டர் ஆகும்போது ஒரு மாதிரி கனத்த இதயமா இருந்துச்சு. அங்கே போர் மற்றும் உள் நாட்டுக் குழப்பங்கள்ன்னு மக்கள் எவ்ளோ கஷ்டப்படுறாங்க? அவங்க வாழ்க்கை முறை எப்படி இருக்கும்ன்னு பார்க்க ஆசையா இருந்துச்சு. உள்ளே நுழையும் போதே ஒரு டான்ஸ் ஷோ நடந்துட்டு இருந்துச்சு. அங்கே பாரம்பரிய உடையில் சிரிய ஆண், பெண் நடனம் மற்ற எல்லாவற்றையும் மறக்கச் செய்தது. கூடவே ஒலித்த அவர்களின் இசையும் ஒரு நிமிடம் உலகம் மறந்து அந்த நடனத்தில் மனம் லேசானது. மனதை நெகிழச் செய்யும் வித்தை கலைக்கு உண்டு என்று உணர்ந்த தருணம் அது.   

இதோ பக்கத்துலயே இருக்குற பாகிஸ்தான். ஆனா லேசுல அங்க போக முடியுமா? ஆனா இங்க இருக்குற பாகிஸ்தான் ஸ்டால நல்லா விசிட் அடிக்கலாமே. பாகிஸ்தானுக்குள்ள போய் பக்கோடா சாப்பிடலாம்ன்னு நினைச்ச மனசிடம் கூல் என்று சொல்லிவிட்டு உள்ளே போக தயாரானேன். என்னமோ பாகிஸ்தான் பார்டர்ல கால் வைக்குற மாதிரி ஒரு படபடப்போடு பயந்து பயந்துதான் உள்ள போனேன்.

அங்க ரொம்ப ஃபேமஸ் தோல் பொருட்கள் தான். ரெயின் கோட் விக்குற கடைக்கு வெளியில ஒரு பாகிஸ்தான் அன்பர், ‘உள்ள வாங்க…. உள்ள வாங்க….’ன்னு இந்தியில் கூப்பிட்டுட்டே இருந்தார். நம்ம மூஞ்சிய பாத்தாலே நாம இந்தியன்னு தெரிஞ்சிருமேன்னு ஒரு நிமிஷத்துல எழுவது முறை துடித்த இதயத்தை அமைதிப்படுத்தி கடைக்குள்ள நுழைஞ்சேன். இங்க அடிக்குற வெயிலுக்கு கோட்டா போட முடியும். எதுக்குடா இங்க வந்தோம்ன்னு ஒரே வருத்தமாகிருச்சு. ஆனாலும் கூட விலை ரொம்ப சீப்பா கிடைக்குதுன்னு ரெண்டு ரெயின் கோட் வாங்கி வெச்சு ஊருக்கு வந்து நண்பர்களுக்கு ப்ரசண்ட் பண்ணியாச்சு. 

இந்த மாதிரியான ஷாப்பிங் பண்ண ஏத்த இடம் க்ளோபல் வில்லேஜ். வெகேஷன்ல இந்தியாவுக்கு வர்றதுக்கு முன்னாடி இங்க ஒரு விசிட் அடிச்சோம்னா உலகம் முழுவதும் இருக்குற பல நல்ல பொருட்களை சீப்பா வாங்கிட்டு வரலாம். துபாயில இருந்துட்டு இப்படி பல அயல்நாட்டுப் பொருட்களை கம்மி விலையில் அள்ளறதுக்கு நல்ல இடம் இது. சீனாவுல இருந்து டீ செட், தாய்லாந்துல இருந்து பிரம்புக் கூடை, மெக்சிகோல இருந்து தொப்பி, ஓமன்ல இருந்து தேனுன்னு போகாத ஊருக்குப் போய் அவங்களோட பொருள்களை அள்ளுறது எவ்வளவு மகிழ்ச்சியான விசயம்ல. இன்னோரு முக்கியமான விசயம் இந்த பொருட்கள் எல்லாமே ஒரிஜினல் ப்ராடக்ட் தான்.

அந்த நாட்டுக்குப் போனால் எப்படி தரமானது கிடைக்குமோ அதே தரத்தில் கிடைப்பது தான் கூடுதல் சிறப்பு. ஏமன் தேன் அத்தனை டேஸ்ட்டா இருக்கும். தேனில் மட்டுமே நூற்றுக்கும் மேல் வகைகள அடுக்கி வெச்சிருப்பாங்க. செடர் ஹனி, மவுண்டன் ஹனி, வொயிட் ஹனி, நட்ஸ் போட்டது, பட்டை போட்டது, கிராம்பு போட்டதுன்னு …… இப்படி பல வகை இருக்கும். குழந்தை பொறக்குறதுக்குக் கூட தேன் வகைகள் வெச்சிருக்காங்கன்னா பாத்துக்கங்க. க்ளோபல் வில்லேஜ் ஷாப்பிங்ல முக்கியமான விசயம் ப்ளானிங். ஏதாவது ஒரு பொருளைப் பார்த்த உடனே ஐ! அழகா இருக்குன்னு அள்ளிப் போட்டுக்கக் கூடாது.

க்ளோபல் வில்லேஜ ஒரே முறையில் முழுசும் சுத்தின வரலாறு யாருக்குமே இருக்காதுன்னு நினைக்குறேன். அம்மாம் பெரிய இடம் இது. அதுனால முதல் விசிட்ல எங்கெங்க என்னென்ன பொருட்கள் கிடைக்குதுன்னு பாய்ஸ் படத்துல வர்ற அன்னவெறி கன்னையன் (செந்தில்) மாதிரி ஒரு டேட்டாபேஸ் ரெடி பண்ணிக்கணும். அடுத்த முறை வந்து பக்காவா ஷாப்பிங் பண்ணலாம். ஆனால் சில ஸ்டால்கள்ல முன்னாடி ஒரு ஆஃபர் கொடுத்திருப்பான். அது ரெண்டாவது முறை கிடைக்கலேன்னா கம்பெனி பொறுப்பாகாது. ஆனாலும் கூட சீசன் முடியும் நேரத்தில் பல அட்ராக்ட்டிவ் சலுகைகள் கிடைக்கும் என்பது மூன்று நான்கு முறை விசிட் அடித்த அடியேனின் கருத்து. 

சுடச்சுட பஜ்ஜிங்கற மாதிரி அங்கேயே நம் கண் முன்னால் தயார் பண்ணும் கலைப் பொருட்களும் கிடைக்கும். ஆர்ட் வொர்க், சின்ன சின்ன மூங்கில் கூடைகள், சாக்பீஸ் ஆர்ட்ன்னு நாம விரும்புற மாதிரி கலைப் பொருட்கள செஞ்சு வாங்கிக்கலாம். இது மாதிரியான விசயங்களில் நம்ம நாட்டு மக்கள் அதிகம் ஈடுபாடு வெச்சிருக்குற மாதிரி தெரியல. ஆனால் பெரும்பாலான அமெரிக்கர்கள் ஆர்வம் காட்டுவாங்க.

ஆர்ட்டிசன் (Artisan) முன்னாடி குத்த வெச்சு உக்காந்திருக்குற ஒரு அமெரிக்கப் பெண்ணை கட்டாயம் பார்க்கலாம். உலக அரங்கில் சீனாவின் சிரிக்கும் புத்தரைப் (laughing buddha) பாக்கும் போதெல்லாம் எனக்கு தஞ்சாவூர் பொம்மை மறக்காமல் ஞாபகம் வந்து விடும். நாமே இன்னும் தஞ்சாவூர் பொம்மையை சிலாகித்து முடிக்கல போல. வெட்டிப் பெருமை பேசியே காலம் தள்ளியாச்சு. ஊர்ப்பெருமைகளை உலகம் அறியச் செய்யும் வித்தை நமக்கு ஏன் வாய்ப்பதே இல்லை? சரி விடுங்க…. காலிகிராபி (Calligraphy) , மர வேலைப்பாடுகள், ட்ரெடிஷனல் ஜுவல்லரி எல்லாம் பார்த்தால் சில திர்ஹாம்கள செலவு பண்ணாம நம்மால திரும்ப முடியாது என்பது நிதர்சனம். 

ஃப்ரான்ஸின் ருசிகரமான வைன், துருக்கியின் டீ, ஐஸ்கிரீம், மொசைக் லேம்ப் (Mosaic Lamp), மெக்ஸிகன் சோம்ப்ரேரோ தொப்பி (Sombrero), பாகிஸ்தான் லெதர் ஜாக்கெட் (Leather Jacket), ஏமனி தேன் வகைகள், தாய்லாந்தின் குழந்தைகள் ஆடை, ஜப்பான் டீ வகைகள், கொரியாவின் முக அழகுப் பொருட்கள், ஆப்பிரிக்காவின் கலைப் பொருட்கள், ரஷ்யாவின் மத்ரியோஷ்கா பொம்மை (Matryoshka Doll) , எகிப்தின் ஃபாரோ மன்னன் மினியேச்சர், இந்தியாவின் பட்டுத் துணிகள்,  காஷ்மீரின் குங்குமப் பூ, துபாயின் வாசனைத் திரவியங்கள், சிரியாவின் அலங்கார நாற்காலிகள், லெபனானின் ஆலிவ்கள், சீனாவின் விளையாட்டு பொம்மைகள், மொரோக்கோவின் இனிப்பு வகைகள், ஈராக்கின் கண்ணாடிக் குடுவைகள், பாலஸ்தீனத்தின் ஓவியங்கள், சவுதி அரேபியாவின் பேரீச்சம் பழங்கள், வியட்நாம் மற்றும் கம்போடியாவின் அழகிய தேனீர்க் கோப்பைகள்…. இப்போது சொல்லுங்கள் இது உலக கிராமம் தானே ! 

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்:

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.