ஆப்கானிஸ்தான் போர் பரந்த வெளிப்புற சக்திகளின் ஈடுபாட்டிற்கு வெளிக்கதவுகளைத் திறந்துவிட்டது. பின்னர் பல தேசிய அரசுகள் தங்கள் சொந்த தேசிய நலன்களுக்காக வெற்றிகரமாகச் சுரண்டின. ஒவ்வொரு வெளிச்சக்தியும் ஆப்கானிஸ்தானில் அரசியல் விளையாடத் தொடங்கி, உள்நாட்டு சக்திகளைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பச் சுரண்டினார்கள். இந்த வெளிப்புற ஈடுபாடு ஆப்கானிஸ்தானில் நீடித்த பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது இன்னும் அந்தப் பேரழிவிலிருந்து வெளியே வரவில்லை.

பாகிஸ்தான்

1979இல் ஆப்கானிஸ்தான் மோதலில் பிப்ரவரி 1989இல் திரும்பப் பெறும் வரை சோவியத் யூனியனைத் தவிர ஆப்கானிஸ்தானில் பல முனைகளில் ஆக்ரோஷமாக ஈடுபட்ட ஒரே வெளிப்புற நிகழ்த்துநர் பாகிஸ்தான் மட்டுமே. அனைத்து வெளிப்புற சக்திகளிடையேயும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் ஒரு மூலோபாய நிலையைக் கொண்டுள்ளது. சோவியத்-ஆப்கான் போரின் போது, அமெரிக்கா ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்களுக்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் பாகிஸ்தான் வழியாக மட்டுமே வழங்கியது. நீண்ட காலமாக குல்புதீன் ஹேக்மத்யாருக்கு மட்டுமே தங்கள் விருப்பமானவர்களைத் தீர்மானிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. முன்னர் குறிப்பிட்டபடி 1994க்குள் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தலிபான் என்ற புதிய குழுவிற்கு உதவத் தொடங்கியது. 1996இல் பாகிஸ்தானின் ஆசியுடன் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது மே 25, 1997 அன்று ‘அதிகாரப்பூர்வ’ அரசாங்கமாகத் தலிபான்களை அங்கீகரித்தது. அதன் பிறகு மே 26ஆம் திகதி சவுதி அரேபியாவும், மே 27ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸூம் தலிபான்கள் ஆட்சியை முறையே அங்கீகரித்தன.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீதான பைத்தியகாரத்தனமான அவசர முடிவுகள் கொள்கைகள் அனைத்தும் சொந்த நாட்டின் பாதுகாப்பு நலன்களின் பின்னணியிலேயே எடுக்கப்பட்டன. குறிப்பாக மத்திய ஆசிய நாடுகளில் பாக்கிஸ்தான் நாட்டின் ஸ்திரம். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் மிக முக்கியமான ‘மூலோபாய ஆழம்’ இரு நாடுகளுக்கிடையிலான டூராண்ட் லைன் என்று அழைக்கப்படும், சர்ச்சைக்குரிய ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லை முழுவதையும் கட்டுப்படுத்துவதும் பஷ்டூன் தேசியவாதத்தைக் கட்டுப்படுத்துவதும். இந்தக் காரணங்கள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் ஈடுபட பாகிஸ்தானை ஆழமாக ஊக்குவித்தன. 1979இல் ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்பின் மூலம் பாகிஸ்தானுக்கான வாய்ப்பு திறக்கப்பட்டது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபோது ​​பாகிஸ்தான் அரசு ஒரு சாதகமான பாகிஸ்தானிய அரசாங்கத்தைக் கொண்டிருப்பதைப் பற்றிய ஒரு வெற்றிக் களிப்பில் இருந்தது. உண்மையில் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி மறைமுகம பாகிஸ்தான் அரசின் பினாமியாகவே இருந்தது.

பாமியன் புத்தர் Pic: geospatial world

தலிபான்கள் 6வது நூற்றாண்டின் சிறப்பு வாய்ந்த பாமியன் புத்தர் சிலைகளை அழித்ததனாலும், பெண்களுக்கு எதிரான கொள்கைகளாலும் சர்வதேச கண்டனங்களைப் பெற்றனர். அல்கொய்தா இயக்கங்களுடன் உறவு வைத்திருப்பதற்காகவும், ஆப்கானிஸ்தானில் அவர்களுக்குத் தங்குமிடமும் பாதுகாப்பான இடத்தை வழங்குவதற்காகவும் இது இன்னும் ஓரங்கட்டப்பட்டது. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நாட்டினது ஈடுபாட்டின் முழு ஈடுபாடும் 9/11 க்குப் பிறகு மாறியது. மேலும் தலிபான் அரசாங்கத்தை அகற்றும் அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ஒரு புதிய பாத்திரத்தை வகிக்கத் தொடங்கியது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தலையீட்டால் ஒரு புதிய பாத்திரத்தில் நடிப்பதற்கான ஒப்பனைகளுடன் பாகிஸ்தான் வேடம் கட்டத் தொடங்கியது.

ஈரான்

பாகிஸ்தானைப் போலவே ஈரானும் ஆப்கானிஸ்தான் தொடர்பில் ஒரு பிராந்திய இணைப்பு நாடாக உள்ளது. 20ஆம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்த உள்நாட்டு மோதலில் ஈரான் ஒரு மூலோபாய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. ஆப்கானிஸ்தான் மோதலை சர்வதேசமயப்படுத்துவதில் பாகிஸ்தானுடன் ஈரானும் பொறுப்பாக இருந்தது. இருப்பினும் பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிற்கு. ஆப்கானிஸ்தான் மோதலின் தீவிரத்தைப் பாகிஸ்தான் அரசு ஆதரிக்கும் குழுக்களின் எதிரி குழுக்களை ஆதரிக்கும் பொறுப்பை ஈரான் எடுத்துக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் கிளர்ச்சிக் குழுக்களில் வடக்கு கூட்டணி என்ற குழுவுடன் ஈரான் தொடர்புகளைக் கொண்டுள்ளது. மேலும் குறிப்பாக ஷியா உறுப்பு கட்சிகளுக்கு ஆதரவாக இருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான சர்வதேச தனிமைப்படுத்தல் முயற்சிகளை எதிர்கொள்வதற்கு ஆப்கானிஸ்தானில் ஈடுபட ஈரானுக்கு ஓர் அடிப்படைக் காரணம் இருந்தது. பெஷாவர் அடிப்படையிலான சுன்னி முஜாஹிதீன் குழுக்கள் தோன்றிய பிறகு இஸ்லாமியவாதக் கட்டுப்பாட்டு அரசியல் முயற்சிகள் முதன்மையாகப் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படுவதையும் அது அமெரிக்காவின் உதவிகளைப் பெறுவதையும் ஈரான் மோப்பம் கண்டது. இதனைச் சமநிலைப்படுத்த, 1990களில் ஆப்கானிஸ்தான் மோதலில் பாகிஸ்தானைப் போலவே ஈரானும் ஒரு சிறப்புப் பாத்திரத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஷியா எதிர்ப்பு தாலிபான்கள் ஈரானிய எல்லைகளை உள்ளடக்கிய பெரும்பாலான ஆப்கானிஸ்தான் மாகாணங்களைக் கைப்பற்றியபோது, ஈரான் பெரும்பாலும் ஹசாரா இனத்திலிருந்து வந்த ஷியா தலைமையிலான கட்சிகளுக்கு தனது ஆதரவை தீவிரப்படுத்த வேண்டியிருந்தது. காபூலில் அரசாங்கத்தை நோக்கி தலிபான்கள் முன்னேறியதால் ஈரானிய அதிகாரிகள் வடக்கு கூட்டணியின் மற்ற கட்சிகளுக்கும் தங்கள் ஆதரவை விரிவுபடுத்தினர். தலிபான்களின் வருகைக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் ஈரானின் முதன்மை நோக்கம் அவர்களின் கட்டுப்பாடாக இருந்தது. மேலும் ஈரானிய நிலப்பரப்பிற்குள் ‘மத தீவிர சித்தாந்தம்’ பரவுவதைத் தடுக்கவும் அது விரும்பியது.

இவ்விரண்டு நாடுகள் தவிர, ஆப்கானிஸ்தானின் விரிவாக்கப்பட்ட அண்டை நாடுகளாக சவுதி அரேபியா, துருக்கி, இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. ஆப்கானிஸ்தானின் இந்த விரிவான அண்டை நாடுகளும் பிராந்திய மோதல் கட்சிகளாகவும் செயல்பட்டன. அவர்களின் நெருங்கிய ஈடுபாடுகளின் அடிப்படையில் அவதானித்தால் பின்வரும் முடிவுகளுக்கு வர முடிகின்றது.

அ) தலிபான் தரப்பில்: சவுதி அரேபியாவும் மற்றைய அதன் அரபு மாநிலங்களும், பாகிஸ்தானுடன் நெருக்கமாக இணைந்திருப்பதன் மூலம் உண்மையான பிராந்திய நிகழ்த்துநர்களாகின்றன.

ஆ) வடக்கு கூட்டணி பக்கத்தில்: ரஷ்யாவும் ஈரானும் ஒத்துழைக்கின்றன. பின்னராக துருக்கி, இந்தியா ஆகிய நாடுகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

சவூதி அரேபியாவின் தலிபான்களுக்கான பாரிய நிதியும் அரசியல் உதவிகளும் பின்வரும் மூன்று உந்துதல்களின் அடிப்படையிலானது.

a) மத்திய ஆசியாவில் வஹாபியிசத்தின் மத சித்தாந்த விளக்கத்தைப் பரப்புவது.

b) சவூதியின் செல்வாக்கு மண்டலத்தைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ அரசியல் நலன்களை விரிவாக்க நன்கு நிறுவப்பட்ட ரகசிய சேவை தொடர்புகளை வைத்திருத்தல்.

c) பொருளாதார பூகோள நலன்கள். அதாவது சவுதி எண்ணெய் நிறுவனமான டெல்டாவைப் பாதுகாப்பது. டெல்டா எரிவாயு குழாயில் ஒரு பாதை ஒரு பகுதி தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி வழியாகச் செல்கிறது.

துருக்கி ஆப்கானிஸ்தானில் தனது அதிகாரத்தை நேரடியாக முன்னிறுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. தலிபான்களால் உடனடியான அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் அது உணரவில்லை என்பதால் வடக்குக் கூட்டணிக்கான ஆதரவுடன் தனது தலையீட்டை மட்டுப்படுத்துகிறது.

இந்த அரசியல் ஆதரவு இரண்டு உந்துதல்களை அடிப்படையாகக் கொண்டது:

a) ஓர் இஸ்லாமிய மத அடக்குமுறை ஆட்சியை அடக்கும் ஆர்வம்.

b) துருக்கிய மதச்சார்பற்ற சமூக மாதிரியைப் பரப்புவதில் ஆர்வம்.

இந்தியாவின் ஆப்கானிஸ்தான் கொள்கை வெளி அதிகாரங்களைச் சார்ந்தது.

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் லலித் மான்சிங், (1999-2000) ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார்:

“தலிபான் காலத்தில் நாங்கள் பாதுகாப்புப் பாத்திரமொன்றை வகிக்க முடியும் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். ரஷ்யாவும் ஈரானும் ஒரே பக்கத்தில் இருந்ததால் ராணுவ உதவியை வழங்குவதில் மிகவும் வசதியாக இருந்தோம். ஆனால், ஈரானியர்களின் தீவிர ஆதரவு எங்களுக்கு இருந்ததால் நாங்கள் வழிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. எனவே வடக்கு கூட்டணிக்கு ராணுவப் பொருட்களைப் பெறுவது பெரிய பிரச்னையாக இல்லை. ஆனால், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு சூழ்நிலையில் இந்தியா தனியாக வேலை செய்ய முடியாது” என்பதையும் அது ஒப்புக்கொள்கிறது.

ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் தலையிடுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அமெரிக்கா மத்தியப் புலனாய்வு துறை ஆப்கானிஸ்தானில் முன்னணிப் பங்கு வகித்தது என்று அறிஞர்களின் சில பிரிவுகளில் நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கை பின்னர் வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களின் வெளிப்பாடுகளால் உறுதிப்படுத்தப்பட்டது. ஜூலை 3, 1979 அன்று சிஐஏவுக்கு $ 500,000 செலவிட ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டது. இந்தச் செலவிடப்பட்ட நிதி பற்றிய ’கண்டுபிடிப்பு’ ஆவணங்களிலிருந்து இந்த நிதியுதவியில் உதவி பெற்ற மூன்றாவது நாடு பாகிஸ்தான். பாகிஸ்தானின் புலனாய்வுத் துறை (ஐஎஸ்ஐ) மூலம் ஆப்கான் கெரில்லாக்களுக்கு விநியோகிக்க மருத்துவ உபகரணங்களும் ரேடியோக்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன. இந்த நோக்கம் சில காங்கிரஸ் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் செல்வாக்கை உலகம் முழுவதும் அச்சுறுத்தலாகக் கருதிய அமெரிக்கா, இப்பிராந்தியத்தில் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக மிக முக்கியமான நட்பு நாடுகளில் ஒன்றாகப் பாகிஸ்தானை உருவாக்கியது. இந்தப் பிராந்தியத்தில் செயல்படுவதற்கு அமெரிக்கா எளிதாக அணுகுவது பாகிஸ்தானால் தான்.

ஆப்கானிஸ்தானில் சோவியத் தலையீடு வளைகுடா பகுதியில் குறிப்பாக ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நேரடி அச்சுறுத்தலாகக் கருதப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக நேரடி சோவியத் தலையீடு நடந்தது ஆப்கானிஸ்தானில். ஆப்கானிஸ்தானில் சோவியத் தலையீட்டுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க முஜாஹிதீன்களுக்கு நேரடி உதவியை வழங்கியதுடன், வளைகுடாவில் எதிர்கால சோவியத் விரிவாக்கத்தைத் தடுப்பதற்கான அடித்தளமாக பாரசீக வளைகுடாவில் தனது இருப்பை ஸ்திரப்படுத்தவும் அமெரிக்காவுக்கு வாய்ப்பு அமைந்தது.

மேலும் , வளைகுடா பிராந்தியத்தில் சோவியத் ஒன்றியத்தின் விரிவாக்கக் கொள்கைக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி கார்ட்டர் கடுமையான மொழியில் கூறிய எச்சரிக்கையிலிருந்தும் அமெரிக்காவின் நோக்கம் தெளிவுபடுகின்றது.

ஜிம்மி கார்டர் Pic: wikipedia

எங்கள் நிலைப்பாடு முற்றிலும் தெளிவாக இருக்கட்டும். பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் கட்டுப்பாட்டைப் பெற எந்த வெளிப்புற சக்தியின் முயற்சியும் அமெரிக்காவின் முக்கிய நலன்களின் மீதான தாக்குதலாகக் கருதப்படும், மேலும் அத்தகைய தாக்குதல் தேவையான எந்த வகையிலும் தடுக்கப்படும். ராணுவப் படை உட்பட. “

அமெரிக்க ரகசிய நடவடிக்கையின் முதன்மை குறிக்கோள் ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் யூனியனை வெளியேற்றுவதே.

”இலக்கை விரைவாக அடைய முடியாவிட்டாலும், அது சோவியத்துகளுக்கு விலை உயர்ந்ததாக இருக்கும்.”

“இதை அடைய முடியாவிட்டாலும், நாம் சோவியத் ஈடுபாட்டை முடிந்தவரை விலை உயர்ந்ததாக மாற்ற வேண்டும்” போன்ற ரகசியக் குறிப்புகளால் ராஜதந்திரிகள் உரையாடிக் கொண்டனர்.

ரொனால்ட் ரீகன் Pic: wikipedia

சிஐஏவின் ரகசிய நடவடிக்கை ஜனாதிபதி கார்டரால் டிசம்பர் 1979 பிற்பகுதியில் அங்கீகரிக்கப்பட்டது. 1981இல் சோவியத் தலையீட்டின் செலவுகளை உயர்த்தும் கோரிக்கை ஜனாதிபதி ரீகனால் அங்கீகரிக்கப்பட்டது.

உண்மையில் பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவின் உதவிகள் கிடைக்காது போயிருந்தால் சோவியத் படைகளை எதிர்த்து முஜாஹிதீன்கள் ஒரு தசாப்தகாலம் போராடியிருக்க முடியாது. ஆனால், இங்கே திரைமறைவில் நடந்த போர் இரு பெரும் வல்லரசுகளுக்கிடையேயானது.

இடைத்தரகராகச் செயற்பட்ட பாகிஸ்தான் சில விதிமுறைகளுடன் தான் இந்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டது. அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளோ அல்லது வேறு அமெரிக்க ராஜதந்திரிகளோ ஆப்கானிஸ்தானுக்குச் செல்லக் கூடாது என்று பாகிஸ்தான் விதிமுறை வகுத்தது. ஆயுதங்களின் ஒவ்வோர் அசைவும் விநியோகமும் பாகிஸ்தான் புலனாய்வு ஐஎஸ்ஐ மூலம் மட்டுமே கையாளப்படும். முஜாஹிதீன்களுக்கான பயிற்சிகளையும் ஐஎஸ்ஐ வழங்கும்.

இந்த உடன்பாடுகளின் பின்பு ஐஎஸ்ஐ புதிய ஆயுதங்களை வாங்கத் தொடங்கியது. ஆர்பிஜி – 7 கள், 60 மில்லிமீட்டர் சீன மோட்டர்கள் முதல் 12.7 கனரக இயந்திரத் துப்பாக்கிகள் வரையிலும் பெருந்தொகையான ஆயுதங்களை சிஐஏ வாங்கியது. எகிப்திலிருந்து பழைய ஆயுதங்களை வாங்கியதாகவும் தகவல்கள் உள்ளன. துருக்கியில் இருந்தும்கூட, அறுபதாயிரம் துப்பாக்கிகள், எட்டாயிரம் லகுரக இயந்திரத் துப்பாக்கிகள், பத்தாயிரம் கைத்துப்பாக்கிகள் மற்றும் நூறு மில்லியன் ரவைகள் வாங்கப்பட்டன. சீன அரசாங்கத்துடன் ஆயுத ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. சோவியத் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைச் சீனர்கள் விற்பனை செய்வதை பற்றிய ஒரு சீஐஏ அதிகாரி இப்படிச் சொல்கிறார்.

”ரஷ்யர்களைச் சுட சீனர்களிடமிருந்து தோட்டாக்களை வாங்குவதைவிடச் சிறந்த வேறொன்று இருக்க முடியுமா?”

ஆப்கானிஸ்தான் போரின் முதல் கட்டத்தில் சொந்த நோக்கங்களை அடைவதற்காக அமெரிக்கா ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்ததை இந்தத் தொடரில் பல இடங்களில் கவனித்தோம். ஆனால், சோவியத் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியபோது முஜாஹிதீன்கள் கடுமையான போரை நடத்தும் அளவுக்கு வலிமையானவர்களாக இருந்தனர். வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட வலிமையான ஆயுதங்களைக் கைகளில் வைத்திருந்தனர். இது உண்மையில் உள்நாட்டுப் போரின் தீவிரத்தை அதிகரித்தது. ஆப்கானிஸ்தான் போரியல் வரலாற்றில் முதல் பாகமே இரண்டாம் பாகத்தை நோக்கி நகர்த்தியது.

பல தேசிய அரசுகளும் சக்திகளும் தங்கள் சொந்த தேசிய நலன்களுக்காக வெற்றிகரமாக சுரண்டி விளையாடிய ஒரு நாடாகவும், ஒவ்வொரு வெளிச் சக்தியும் ஆப்கானிஸ்தான் உள்நாட்டு சக்திகளைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பச் சுரண்டியதன் விளைவாகவும் ஆப்கானிஸ்தான் இன்றைக்குள்ள நிலையை அடைந்தது.

(தொடரும்)

கட்டுரையாளர்

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.