தலிபான்களின் தோற்றம் ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து அவதானிப்பவர்களையும் அல்லாதவர்களையும் கவரும் ஒரு காட்சி. இந்தக் குழு திடீரென தெற்கிலிருந்து மேலே செல்லத் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள சில மக்கள் மட்டுமே அதிகம் கேள்விப்பட்டிருந்தார்கள். ஆப்கானிஸ்தானில் முந்தைய பதினெட்டு வருடப் போரில் வேறெந்த ராணுவப் படையாலும் சாதிக்க முடியாத வெற்றியைத் தலிபான்கள் உடனடியாகவும் விரைவாகவும் அடைந்து கந்தஹாரையும் அதைச் சுற்றியுள்ள காபூலின் புறநகர்ப் பகுதிகளுக்கும் விரிவுவடைந்தார்கள்.

ஹெக்மத்யார் Pic: aa.com

தலிபான்களின் முதல் தோற்றத்திற்குப் பிறகிருந்த மிகவும் பொதுவான விளக்கம் என்னவென்றால், அவர்கள் ஹெக்மத்யாரின் ஹிஸ்ப் போன்ற முஜாஹிதீன் இயக்கத்தின் உருவாக்கத்திற்கு உதவிய அதே பாகிஸ்தான் பாதுகாப்புப் படை இன்டர்-சர்வீஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) உருவாக்கம். அதிகாரத்தை ஒருங்கிணைப்பதில் ஹெக்மத்யார் தோல்வியடைந்ததால், ஐஎஸ்ஐ தலைவர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கினர். அதன் விளைவுதான் தலிபான் போராளிகள் என்பது ஒரு கருத்து. தலிபான்களை ஒழுங்கமைத்தல், ஆயுதங்கள் தயாரித்தல், பயிற்சி அளித்தல், நிதியளித்தல் என்பவற்றில் பாகிஸ்தான் கணிசமான பங்கைக் கொண்டிருந்தாலும், மனித சக்தியும் இயக்கத்தின் உந்துதலும் பாகிஸ்தானின் ஒரு புனைவு என முழுமையாக விவரிக்க முடியாது.

தலிபான்களின் தோற்றம் பற்றிய விரிவான கலந்துரையாடல் தற்போதைய இந்தத் தொடரின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், முந்தைய அத்தியாயங்களில் விவாதங்களின் பின்னணியில் குறிப்பாக தலிபானுக்கும் இஸ்லாமிய அரசியலுக்கும் இடையேயான தொடர்பு குறித்து குறிப்பாக, போரில் வென்ற ஜிஹாதிகள், கட்சிகள் அவற்றின் அரசியல் கலாசாரம் தொடர்பில் தலிபான்களின் தாக்கங்களிலிருந்து தலிபானின் அர்த்தத்தைக் கருத்திக்கொள்ள வேண்டியதிருக்கிறது.


தலிபான்கள் Pic: cfr.org

தலிபானின் வெற்றியைப் பகுப்பாய்வு செய்வதில் இயக்கத்தின் வெளிப்படையான புதுமை இருந்தபோதிலும், அரசியல் நிகழ்வுகளில் மதக்கல்வி மாணவர்கள் (தலிபான்) முக்கிய பங்கு வகிப்பது இது முதல் முறை அல்ல என்பதை அங்கீகரிப்பது முக்கியம். மாறாக, பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் பல்வேறு அரசியல் இயக்கங்களுக்கான முக்கிய ஆதாரங்களாக மதரஸா மாணவர்கள் இருந்தனர். பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகளால் அவர்கள் குறிப்பாக ஆபத்தானவர்களாகக் கருதப்பட்டனர். ஏனெனில் அவர்களை அடையாளம் காண்பது அல்லது பொறுப்புக்கூறுவது மிகவும் கடினம். பழங்குடியினர் எப்போதாவது ராஜ் மீது கொண்டு வந்த அனைத்து பிரச்னைகளுக்கும் இவர்களே வரைபடத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். தேவைப்பட்டால் அழிக்கப்படும் கிராமங்கள் அவர்களிடம் இருந்தன; அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், வாக்குறுதிகளைப் பெறவும் தலைவர்கள் இருந்தனர்; மேலும் அவர்கள் நடைமுறை சார்ந்த, பொருள் சார்ந்த ஆர்வங்களைக் கொண்டிருந்தனர். இது எந்தத் தருணத்தின் உற்சாகத்தையும் கடந்து சென்றவுடன் பழகுவதற்கான அடிப்படையை வழங்கியது. இருப்பினும், மதரஸா மாணவர்கள் எல்லா இடங்களிலிருந்தும் வந்தவர்கள்; அவர்கள் பெரும்பாலும் ஆதரவற்றவர்களாக இருந்ததுடன், பொதுவாக ஒரு மோதலை இறக்க அனுமதிப்பதைவிட மக்களைக் கிளர்ச்சியடைந்த நிலையில் வைத்திருந்தனர்.சமகால நிலை வேறு. ஆனால், பொதுவான ஓர் அம்சம் என்னவென்றால் மதக் கல்வி மீண்டும் சமூக இயக்கத்தின் ஒரு முக்கிய இடமாக மாறியது. குறிப்பாக இளம் ஆண் ஆப்கான் அகதிகளுக்கு.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு தனிநபர் தனது வாழ்க்கை அதிர்ஷ்டத்தை மேம்படுத்தவும், சமூக மரியாதையைப் பெறவும், சிலருக்குக் குறிப்பாக கிராமத்தின் பழங்குடி உலகத்திலிருந்த எல்லை சில வழிகளில் ஒரு கதையாக மாறியது. போருக்கு முன் ஆப்கானிஸ்தானில் பழங்குடியினர் உறைவிடப் பள்ளிகளுக்கு அரசாங்கம் நிதியுதவி அளித்ததுடன் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த பல பிரகாசமான, லட்சியவாதி இளைஞர்கள் பட்டப்படிப்புக்குப் பிறகு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பள்ளிகளில் படித்தனர். எனினும், போர் தொடங்கிய போது பெரும்பாலான ஆப்கானியர்களுக்கு இந்த வாய்ப்பு நின்றுபோனது. மூன்று முதல் நான்கு மில்லியன் மக்கள் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றனர். மேலும் பெரும்பான்மையானவர்கள் அகதிகள் முகாம்களிலும் எல்லைகளிலும் சிதறடிக்கப்பட்டனர். பெரும்பாலான முகாம்களில் ஆரம்பப் பள்ளிகள் இருந்தன. ஒரு சில மேல்நிலைப் பள்ளிகள் குறிப்பாக ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக அமைக்கப்பட்டன. ஆனால், இந்தப் பள்ளிகள் கல்வியைவிட சமூகக் கட்டுப்பாட்டோடு தொடர்புடையனவாக இருந்தன. அவற்றில் பயின்ற சிலருக்கு மட்டுமே வாழ்க்கை வாய்ப்புகள் விரிவடைந்தன. மதரஸாக்களில் கலந்துகொண்டவர்கள் நிலை வேறு. பத்தொன்பதாம் நூற்றாண்டைப் போலவே, ஒரு மதக் கல்வி மீண்டும் சமூக முன்னேற்றத்திற்கான உறுதியான வழியாக இருந்தது. போருக்கு முந்தைய ஆண்டுகளில் மதரஸா பட்டதாரிகள் பொதுவாக குழந்தைகளுக்கு கற்பித்தல், கிராம மசூதிகளைக் கவனித்துக்கொள்வது போன்ற மோசமான நிலைகளில் முடிவடைந்தனர். ஆனால், பாகிஸ்தானில் மதத் தலைவர்களின் கைகளில் எதிர்ப்புக் கட்சிகளுடன், மதராசா பட்டதாரிகளுக்கு முன்பைவிட அதிகமான, லாபகரமான விருப்பங்கள் இருந்தன. மதரஸாக்களும் மதச்சார்பற்ற பள்ளிகளைப்போலத் துடிப்பானவையாகவும் கலகலப்பானவையாகவும் வெளியுலகத்துடன் அதிகம் இணைக்கப்பட்டவையாகவும் இருந்தன. ஏனென்றால் மக்களின் வாழ்க்கையை வரையறுக்கும் போர் ஒரு மதப் போராட்டமாக பார்க்கப்பட்டது. அத்துடன், மதரஸாவில் பட்டம் பெற்றவர்கள் அந்த மதப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை வகிக்கும் வாய்ப்பையும் பெறக்கூடியதாக இருந்தது.

மதரஸா Pic: asianage.com

இனி மதப் பள்ளிகள் எந்த வகையிலும் ’எளிய’ கற்பித்தல் மையங்களாக இல்லை. அவை அதிகாரம் பெற்ற அமைப்புகளின் தோற்றத்தைப் பெற்றன. பல பள்ளிகள் அரசியலின் சுற்றுப்பாதைக்கு வெளியே இந்தன என்றாலும், பெரும்பாலான மதரஸாக்கள் கட்சி ஆதரவு, கட்சி வரிசையில் முனைந்திருந்தன. தங்கள் சொந்த நிதி ஆதரவாளர்களைக் கண்டுபிடித்து கட்சிகளிடமிருந்து தங்கள் சுதந்திரத்தைப் பராமரித்தன. இதன் விளைவாக 1980களிலும் 1990களின் முற்பகுதியிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களின் நற்பெயரும் தொடர்ந்து குறையத் தொடங்கியது. ஆனால், ஆப்கானிஸ்தான் மதரஸாக்கள் இன்னும் ஒரு சிறந்த இஸ்லாமிய அரசியலாக மாறக்கூடும் என்ற கருத்தை உயிரோடு வைத்திருந்தன. இந்தச் செய்தியானது சண்டையில் வீரர்களுக்கு ஒரு சிறப்பு ஆற்றலைக் கொடுத்தது. அத்துடன் முகாம்களில் வளர்ந்த இளம் அகதி இளைஞர்கள் கட்சிகளால் நடத்தப்படும் ஜிஹாத்தில் ஊழல் நிறைந்த நிர்வாகம், ஒழுக்க சீர்கேடு என்பவற்றை நேரில் பார்த்து ஏமாற்றமடைந்தனர்.

தலிபான்களை பாகிஸ்தான் அரசின் உருவாக்கம் என்று குறிப்பிடுபவர்கள், தலிபான்கள் ஓர் அடிப்படை வழியில் பாகிஸ்தானியர்கள் அல்லது குறைந்தபட்சம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இரண்டினதும் கலப்பினமாக இருப்பதைக் கவனிக்கவில்லை. கிராமங்கள், பழங்குடியினருடன் பிணைக்கப்பட்ட முந்தைய தலைமுறைகளைப் போலல்லாமல் தலிபான் தலைமுறையினர் பாகிஸ்தானில் உள்ள அகதி முகாம்களில் பல்வேறு பின்னணியிலான மக்களுடன் வளர்ந்தனர். மேலும் அவர்களில் பலர் போரில் ஒன்று அல்லது இரு பெற்றோரை இழந்த ஆதரவற்றவர்கள். இத்தகைய சூழலில், வம்சாவளி குழு, பழங்குடி மூதாதையர், குடும்பத்தில்கூட விசுவாசம் வைப்பது அதன் முந்தைய முக்கியத்துவத்தை இழந்தது.

அறக்கட்டளைகளால் கட்டப்பட்ட மதப் பள்ளிகள் பல்வேறு பின்னணியிலிருந்து வந்த இளைஞர்களை ஒன்றிணைத்தது. அவர்களில் பலர் ஆப்கானிஸ்தானில் காலடி எடுத்து வைக்கவில்லை. எனவே போருக்கு முன்பு ஆப்கானிஸ்தான் எப்படி இருந்தது என்பது பற்றிய தெளிவற்ற கருத்துகளை மட்டுமே கொண்டிருந்தனர். தங்கள் ஆசிரியர்களைப் போலவே பெரும்பாலான மதரஸா மாணவர்களும் கட்சிகளின் சச்சரவுகளிலும் ஊழலிலும் ஏமாற்றமடைந்தனர். ஆனால், பார்வையில் இன்னும் சிறந்தவர்களாயிருந்தனர். அரை-மடாலய சமூகங்களில் மாதங்களை அல்லது வருடங்களைக் கழித்ததால் இணைந்த இந்த ஆட்சேர்ப்பாளர்கள் உலகத்தைப் பற்றிய புரிதலில் அப்பாவியாக இருந்தனர். மேலும் பழங்குடி, பிராந்திய, இன, கட்சி விசுவாசங்களால் ஒப்பீட்டளவில் கறைபடாதவர்கள். இது புகலிட பிரபஞ்சத்தில் பலரின் மதிப்புகளை நிபந்தனை செய்து சமரசம் செய்தது. சந்தேகத்திற்கு இடமின்றி அவர்கள் கோட்பாட்டில் விவாதித்ததை நடைமுறைப்படுத்த ஆர்வமாக இருந்தனர். மேலும் தலிபான் இயக்கத்தின் தோற்றம் அந்த வாய்ப்பை வழங்கியது.

காபூலை முற்றுகையிடும் வரை அவர்கள் எவ்வளவு சிறிய எதிர்ப்பை எதிர்கொண்டார்கள் என்பது தலிபான்களின் அதிகாரத்திற்கான உந்துதலின் மிக குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும். ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக ஓர் ஒருங்கிணைந்த இயக்கத்தை நிறுவுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன. இதுவே தலிபான்கள் ஏன் வெற்றி பெற்றார்கள் என்று எழும் கேள்விக்கான முதல் பதிலாக இருக்கக்கூடியது. மேலும், இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதில் ஆரம்பகால தாலிபான்களின் எளிதான வெற்றிகள் அனைத்தும் பஷ்டூன் பகுதிகளில் இருந்தன என்ற உண்மையை ஒருவர் கருத்தில் கொள்ளவும் வேண்டும். காபூலுக்கு வடக்கே உள்ள தாஜிக் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக மசூத்துடன் அவர்கள் நீண்டகாலமாகப் போராடியதற்குச் சான்றாக தலிபான்கள் பஷ்டூன் அல்லாத பகுதிகளில் முன்னெடுத்த முயற்சிகள் எதுவும் ரத்தக்களரி இல்லாமல் குறிப்பிடத்தக்க ஊடுருவல்களைச் செய்யவில்லை. இருப்பினும், இந்த எச்சரிக்கையுடன்கூட தலிபான்களின் சாதனை இன்னும் கணிசமாக உள்ளது. ஏனெனில் பஷ்டூன்கள் ஆப்கானிஸ்தானின் போருக்கு முந்தைய மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவானவர்களாக இருந்தனர். அத்துடன், நீண்ட காலமாக நாட்டின் மிக சக்திவாய்ந்த இனமாக இருந்தனர். மேலும் அவர்கள் மிகவும் பிரபலமானவர்கள். முக்கியமாக, இந்தப் பெரிய- வேறுபட்ட மக்கள்தொகையை எந்தக் கட்சியும் இயக்கமும் ஒருபோதும் ஓர் அரசியல் குடையின் கீழ் கொண்டு வர முடியவில்லை.

மதரஸாவிலிருந்து ராணுவ இயக்கத்திற்குள் நுழைந்த தலிபான்களின் வெற்றி அவர்களுக்கு முன்னால் இருந்த ஊழலில் இருந்து முதலில் தோன்றியது. தலிபான் புராணத்தின் ஒரு பகுதி என்னவென்றால் முல்லா உமர் ஒரு நாள் தலிபான்களை உருவாக்கத் தன்னை அர்ப்பணித்தார். இவர் முன்னைய முஜாஹிதீன்களின் தளபதியாக இருந்தார். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள தாருல் உலூம் ஹக்கானியாவில் பட்டம் பெற்ற இவர், தலிபான்களை வழிநடத்தி 1996இல் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டை (Islamic Emirate of Afghanistan ) நிறுவினார். சோவியத் திரும்பப் பெற்ற பிறகும் முஜாஹிதீன் ஆட்சியில் கொள்ளை, கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற அராஜகங்களிலிருந்து மக்களை விடுவிப்பதற்காகத் தலிபான்கள் வந்தார்கள் என்பது சராசரி ஆப்கானியர்களின் அனுபவத்திற்குள் நம்பத்தகுந்த கதை.

Islamic Emirate of Afghanistan Pic: bussinessinsider.com

தலிபான்கள் யார் அல்லது அவர்கள் எதை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை மக்கள் அறிவதற்கு முன்பே மக்களின் சந்தேகத்திற்கான பதிலை விரைவில் அளித்தனர்.

தலிபான்கள் ’கிராம அடையாளம்’ என்று அழைக்கப்படும் பழங்குடி அல்லது பிராந்திய அடையாளங்களைத் தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டனர். தலிபான் செய்தித்தொடர்பாளர் மௌலவி ரபியூல்லா முஆசின் மேற்கத்திய நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 40 அல்லது 50 ஆண்டுகளில், குறிப்பாக காபூலில் நமது கலாச்சாரம் பெரிதும் மாற்றப்பட்டுள்ளது. கிராமங்களில் கலாச்சாரம் பெரிதாக மாறவில்லை. நாங்கள் நமது கலாச்சாரத்தைத் தூய்மைப்படுத்த முயற்சிக்கின்றோம். நாங்கள் ஒரு தூய்மையான இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மீண்டும் நிறுவ முயற்சிக்கிறோம். (ராய்ட்டர், மார்ச் 29, 1997)

இஸ்லாத்துடன் தூய்மையான கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தை அடையாளம் காண்பதில் தலிபான்கள் கட்சிகளின் இஸ்லாத்தைக் கண்டனம் செய்தனர். ஏனெனில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் காபூல் பல்கலைக்கழகத்தின் தயாரிப்புகளாக இருந்தனர் அல்லது அரசு ஆதரவு நிறுவனங்களுக்காக வேலை செய்தார்கள். அவர்களுடைய இயக்கம் வெற்றிபெற வேண்டுமானால் தங்களின் ஆதரவைப் பெற வேண்டிய மக்களுக்கு இணையாக அவர்கள் தங்களை வைத்துக்கொண்டனர். உண்மை என்னவென்றால், தலிபான்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை அகதி முகாம்களிலும் ஆயுதம் ஏந்திய முஜாஹிதீன் குழுக்களிலும் மதக்கல்வி மதரஸாக்களிலும் கழித்தவர்கள். கிராமங்களைப் பற்றிய சிறிய அனுபவத்தைக் கொண்டிருந்தனர்.

தலிபான்கள் பற்றிய தகவல்களில் கவனிக்கத்தக்க ஒரு கூடுதல் அம்சம் அவர்களின் தலைமையுடனான உறவு கண்ணுக்குத் தெரியாதது. தலிபான்கள் பெயரளவில் முல்லா உமரால் தலைமை தாங்கப்பட்டாலும் பெரும்பாலான முடிவுகள் கந்தஹாரைத் தலைமையிடமாகக் கொண்ட இஸ்லாமிய மதகுருக்கள் குழுவிலிருந்து வெளிவந்தன. இந்த மனிதர்களைப் பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது. மேலும் அவர்கள் ஒரு குறைந்த சுயவிவரத்தை வைத்திருப்பது கொள்கையாக இருந்தது. இந்த மூலோபாயத்தின் பின்னணியில் உள்ள உந்துதலை மட்டுமே ஒருவர் ஊகிக்க முடியும்.

முல்லா உமர் Pic: dunya news

தலிபான்களின் தொடக்க கால வெற்றிக்கு மிக முக்கியமாக இருந்த காரணம், மதரசாவிலிருந்து அரசியலுக்கு வந்து ஆயுதம் ஏந்திய வெகு சீக்கிரத்தில் அவர்கள் மக்களின் அபிமானத்தை வென்றனர். தலிபான் இயக்கம் 1995இல் நீராவி எடுக்கத் தொடங்கியபோது, ​​ஒவ்வொரு புதிய பகுதியையும் பாதுகாப்பாக வைத்திருப்பதில் அவர்களின் நற்பெயர் இருந்தது. சோவியத் படைகளாலும் நஜிபுல்லா அரசினாலும் சோர்வடைந்திருந்த மக்கள் இவர்களை ஆதரிக்கத் தொடங்கினர். உள்ளூர் மக்கள் ஒரே பழங்குடியினர் அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும் உள்ளூர் தளபதிகளை ஆதரிக்கத் தவறினர். ஆனால், தலிபான்கள் நிறுவப்பட்ட வழக்கத்திலிருந்து விலகிய சில சிக்கனங்களும் தூய்மையான கோட்பாடுகளின் வாக்குறுதிகள் இருந்தபோதிலும், மக்கள் தற்போதைய நிலையில் புதிய தலைமையை ஏற்கத் தயாராக இருந்தனர்.

தலிபான்கள் முழு நாட்டிலும் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், அவர்கள் கட்டுப்படுத்தும் பகுதிகளில் உள்ள சாலைகள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானவையாக மாறின. மக்கள் பல வருடங்களாகச் செய்ய முடியாதிருந்த சாலைத் தடுப்புகளில் பயமின்றி பேருந்துகளில் பயணம் செய்ய முடிந்தது. மேலும் லாரிகள் அதிக சாலை வரி செலுத்தாமல் பொருட்களை எடுத்துச் சென்றன. இது ஒரு பெரிய சாதனையாகத் தோன்றாது. பொதுவாக மேற்கத்தியக் கணக்குகளில் இது புறக்கணிக்கப்படுகிறது. ஆனால், ஒரு தசாப்த கால சோவியத் ஆட்சியும் முன்னாள் முஜாஹிதீன் தளபதிகளின் பல வருட வேட்டையாடலுக்குப் பிறகு அடிப்படை பாதுகாப்பு என்பது நீண்ட கால ஆடம்பரமாக மட்டுமல்ல பலருக்குப் புதிய ஆட்சிக்கான ஆதரவை வழங்குவதற்குப் போதுமான காரணமாகவும் இருந்தது.

(தொடரும்)

கட்டுரையாளர்

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.