மூன்று தலைமுறைப் பெண்களின் கதை- 1

தாய் சந்தோஷக்கனியைப் பற்றி மகள் மாலதி ரத்தினசாமி, அம்மா மாலதி பற்றி மகள் ரமாதேவி ரத்தினசாமி, அம்மா ரமா பற்றி மகள் பூஷிதா என மூன்று தலைமுறைப் பெண்கள் தங்கள் வாழ்க்கைப் பயணம் குறித்து எழுதும் குட்டித் தொடர் இது.

தாயிற் சிறந்த கோவிலில்லை. ஆம் அந்தக் கோவிலும் என் தாய் தான், அதில் வீற்றிருக்கும் தெய்வமும் என் தாய் தான். அந்த தாய் பற்றி எழுதுவதில் பெருமை கொள்கிறேன். என் அம்மா குட்டி ஜப்பான் என்று அழைக்கப்பட்ட சிவகாசியில் 1930ம் வருட வாக்கில் பிறந்திருக்கலாம். எங்களுக்கு வருடம் சரியாகத் தெரியவில்லை. தனது திருமணத்திற்குப் பிறகு தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாகக் கூறுகிறார். எங்கள் பாட்டியின் திருமணம் முடிந்து 15 வருடங்களுக்குப் பிறகு பிறந்தார்களாம்.

குழந்தை இல்லையே என் ஏங்கிக் கிடந்தவர்கள், மிக மகிழ்ச்சியடைந்து “எங்கள் சந்தோஷக்கனி பிறந்து விட்டாள்” என்று மகிழ்ந்து சந்தோஷக்கனி என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் சந்தோஷம் பெயரளவில் நின்று விட்டது. வாழ்க்கை அப்படி இல்லை. மிக ஏழ்மையான குடும்பம். வறுமை வாட்டி எடுத்தது. எப்போதும் கஷ்டம் தான். ஆறாம் வயதில் பள்ளியில் சேர்த்து விட்டிருக்கிறார்கள். போனது சில மாதங்கள் தான். போகும் வழியில் நாய் கடித்ததால் பள்ளிப் படிப்பு தடைப்பட்டது. அடுத்த வருடம் இரண்டாம் வகுப்பில் சேர்த்து விட்டிருக்கிறார்கள். என்ன சோதனை…. மீண்டும் சில மாதங்களில் மீண்டும்  நாய் கடிக்க, இந்த முறை பள்ளிப் படிப்பிற்கு ஒரேயடியாய் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. 

பெண்கல்விக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காத காலம் அது. வறுமையில் தவித்த குடும்பதிற்கு ஏழு வயது குழந்தையின் உழைப்பும் தேவைப்பட்டது. அந்த வயதில் வீட்டில் இருந்தே தீப்பெட்டி ஒட்டும் வேலை பார்க்க ஆரம்பித்தார். இன்றைக்கும் சிவகாசிக் குழந்தைகளுக்கு தீப்பெட்டித் தொழிலின் அத்தனை நுணுக்கங்களும் அத்துப்படியாகத்தான் இருக்கும். பத்து வயதாகும் போது தீப்பெட்டி தொழிற்சாலையில் போய் வேலை பார்க்கும் அளவுக்கு தேர்ந்து விட்டார். அதற்குள் இரண்டு தங்கையும், ஒரு தம்பியுமாக குடும்பம் வளர்ந்திருந்தது.

குடும்பமே சேர்ந்து  கடினமாக  உழைக்க வேண்டியிருந்தது. தீப்பெட்டி தொழிற்சாலையே உலகமானது. இவர் வேலை  பார்த்த அதே அலுவலகத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார் என் தந்தை. என் அம்மாவின் வேலை செய்யும் பாங்கையும், சுறுசுறுப்பையும் பார்த்து, ‘இந்தப் பொண்ணு தான் எனக்கு மனைவியாக வேண்டும்’, என தன் தந்தையிடம் கூற, என் அம்மாவின் பதினாறாம் வயதில்  இரு வீட்டுப் பெற்றோரும் இணைந்து திருமணம் நடத்தி வைத்தனர்.

என் அப்பாவுடன் பிறந்தோர் ஆறு பேர். பெரிய கூட்டுக் குடும்பத்தில் சில காலம் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது. அடுத்தடுத்து இரண்டு வருட இடைவெளியில் நான்கு குழந்தைகள். குடும்பம் பெரிதாகியது. அந்தச் சமயத்தில் என் அப்பா வேலை செய்த தொழிற்சாலையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசியில் அன்று முதல் இன்றுவரை தீ விபத்து ரொம்ப சகஜம். இதற்கிடையில் அப்பாவுடன் பிறந்த சித்தப்பாமார்களில் நான்கு பேருக்கு திருமணமாகி குடும்பம் மிகவும் பெரிதானது. ஒரே வீட்டில் இருபத்தெட்டு உறுப்பினர்கள் இருந்தோம். தொழிற்சாலையில் ஏற்பட்ட  தீ விபத்திற்குப் பிறகு என் தாத்தாவும், பாட்டியும் எனது தந்தையையும், ஒரு சித்தப்பாவையும் தேனிக்கு அனுப்பிவிட்டார்கள்.

திக்குத் தெரியாமல் பிழைப்பதற்காக தேனி வந்த என் தந்தை  சிறியதாக இரும்புக்  கடை வைத்தார். அவரது கடின உழைப்பில் சிறிது காலத்திலேயே தேனியின் மிகப் பெரிய செல்வந்தனானார். ஆனால் சோதனையாக சில நண்பர்களின் சதியால், கடையை மூடும் சூழல். மிகப் பெரிய இடத்தை அடைந்தவர், மீண்டும் தொடங்கிய இடத்தில். குடும்பத்தில் இப்போது அடுத்து நான்கு குழந்தைகள். மொத்தம் ஆறு பெண்கள், இரண்டு ஆண்கள் என எட்டு பேர். அதில் மூன்று பெண்கள் திருமணத்திற்கு தயாராக இருந்தனர்.

 பெறுமவற்றுள் யாமறிவது இல்லை, அறவறிந்த 

மக்கள் பேறு அல்ல பிற.

ஒருவர் அடைய வேண்டிய பேறுகளில் தலை சிறந்தது நல்லறிவுடைய மக்களைப் பெறுவதாகும். அதுபோல எல்லாப் பிள்ளைகளுமே மிக அறிவுடையவர்களாகவும், முக்கியமாக குடும்ப சூழலை உணர்ந்து நடந்து கொள்ளும் பிள்ளைகளாகவும் வளர்ந்தனர். மூத்த தம்பி வீட்டின் சூழ்நிலை உணர்ந்து பக்கத்து கிராமங்களில் இருந்து சிறிது முட்டைகளை வாங்கி வந்து பிளாட்பாரத்தில் வைத்து விற்று குடும்பத்திற்கு உதவினான். அப்பா கேரளா சென்று மலைக்கரி ( அடுப்புக் கரி)  வாங்கி வந்து விற்றார்கள். வீட்டிலிருந்த பெண்கள் அனைவரும் தீப்பெட்டி ஒட்டத் தொடங்கினர். கஷ்டத்தோடு கஷ்டமாக  அம்மாவின் சிக்கனத்தால் மூன்று பெண்களுக்கு திருமணம் முடிந்திருந்தது.  இப்படியே சில காலம் சென்ற போது தம்பி அகாலமாய் மரணமடைய, குடும்பமே மனம்  உடைந்தது.

ஆனால் குடும்ப சூழல் அறிந்து அதிலிருந்து முதலில் மீண்டெழுந்தவர் என் அம்மா தான். என் தம்பி ஆரம்பித்த முட்டை தொழிலைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். அவரே பல கிராமங்களுக்கும், கேரளாவிற்கும் சென்று முட்டை வாங்கி வருவார்கள். என் அப்பா அதை விற்பார்கள். பிறந்ததிலிருந்தே வறுமையை வாழ்க்கையாகக் கொண்டதாலோ என்னவோ, அந்த வறுமையை வெல்ல வேண்டும் என் உறுதி எடுத்தார் போல. அது மட்டுமல்ல, என் தம்பி இறந்ததிற்கு வறுமையும் ஒரு காரணம் என நினைத்ததால் வெறி கொண்டவர் போல உழைக்கத் தொடங்கினார்.

குடும்பப் பொறுப்புகளை என் அப்பா பார்த்துக் கொள்ள என் அம்மா வியாபாரத்தில் மூழ்கினார். ஆரம்பத்தில் கூடையில் வைத்து தெரு தெருவாக முட்டைகளைக் கொண்டு சென்று விற்று வந்தவர், பின் பிளாட்பாரக் கடை போட்டார். சில்லறை வியாபாரம் பிறகு மொத்த வியாபாரக் கடையாக மாறியது. என் அப்பா கடையை கவனித்துக் கொள்ள, அம்மா முட்டைகளை லாரியில் ஏற்றி தேனி மாவட்டத்தின் அத்தனை கிராமங்களுக்கும், பட்டி தொட்டிகளுக்கும் சென்று  கடைகளுக்கு மொத்தமாக கொடுத்து விட்டு வருவார்கள். 

ஒரு பெண் படிக்காமல் வியாபாரம் செய்து, கணக்கு வழக்கு பார்த்து இலட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் வாழ்கிறார்கள்.

தனது உழைப்பினால், குடும்ப கஷ்டத்தைப் போக்கி, அத்தனை பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்து, என் இளைய தம்பி முட்டை கடையை கவனிக்க வந்த போதும் அவானுக்குத் துணையாய் கடையை கவனித்து, எனது தந்தை இறந்த பிறகும், வயதான காலத்திலும், தன் உழைப்பை விடவில்லை.

தனது தொண்ணூறாவது வயது வரை தேனி ‘சிவக்குமார் முட்டை நிலையத்தில்’ அமர்ந்து கறாராய் வியாபாரம் செய்து    “முட்டைக்காரம்மா” என்றால் தேனிக்குள் மட்டுமல்ல, பக்கத்து கிராமங்களிலும் தெரிந்து கொள்ளுமளவிற்கு பெயர் பெற்றார். 

சில வருடங்களுக்கு முன் கீழே விழுவதற்கு முதல் நாள் வரை, காலை ஏழு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை கடையில் கல்லாவில் கம்பீரமாக வீற்றிருப்பார்.  90 வயதில் மூன்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்த 92  வயதில் வாக்கரின் உதவியுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார். இப்போதும், தன் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், பெருக்குதல், தன் துணிகளை தானே துவைத்தல் , டி.வி பார்த்தல், முட்டை கடைக்கு தேவைப்படும் பேப்பர் கவர் தயாரித்தல் என தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறார். ஆனாலும் கடைக்கு செல்ல முடியவில்லையெ என ஏக்கம் மட்டும் இருக்கிறது.

“இந்தக் கைகளால் வாழ்நாள் முழுக்க எத்தனை கோடி ரூபாய்களை எண்ணியிருப்பேன்” என ஏக்கமுடன் கேட்கிறார். அதனால், என் தம்பி மாதம் ஒரு முறை கடைக்குக் கூட்டிச் சென்று கல்லாவில் அமர வைப்பார். அன்று முழுவதும் மிகுந்த சந்தோஷமுடன் இருப்பார்.

தன் வாழ்நாள் முழுவதும் தன் கடின உழைப்பால் வறுமையை ஒழித்து, வாழ்வை வெற்றி கொண்டவருக்கு இப்போதும் இந்த வாழ்வின் மீது எந்த புகார்களுமில்லை. விரக்தியடைதல், தனிமையை நினைத்து கவலை கொள்ளுதல், புலம்புதல், பயம் என முதியவர்களுக்குரிய எந்த சிந்தனைகளுமில்லை.  பெயரன், பெயர்த்திகள், கொள்ளுப் பெயரன், கொள்ளுப் பெயர்த்திகள் என 56  பேர் கொண்ட மிகப் பெரிய குடும்பத்தின் தலைவியாக, தன் பெயருக்கேற்ப சந்தோஷமாக  எங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். 

மனைத்தக்க மாண்புடையன் ஆகித் தற்கொண்டான்

வனத்தக்காள் வாழ்க்கைத்துணை.

என்ற குறளுக்கேற்ப ஒரு நல்ல மருமகளாய், நல்ல மனைவியாய், நல்ல தாயாய் தன் வாழ்வை அமைத்துக் கொண்ட எங்கள் அம்மா, இன்னும் சில காலம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறோம். 

படைப்பு:

மாலதி இரத்தினசாமி