கேளடா மானிடவா – 9

ஒரு வெற்றியை எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதைவிட, தோல்வியை எப்படிப் பக்குவமாகக் கையாள்கிறோம் என்பதில்தான் வாழ்வின் தத்துவம் இருக்கிறது.

இரண்டு செயல்கள் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும். குற்றம் செய்பவர்களின், செய்ய யோசிப்பவர்களின் குற்றமனப்பான்மை மாற வேண்டும்; அதே சமயம், குற்றம் செய்பவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையும் மாற வேண்டும். 

குற்றம் செய்த அவனுக்கு/ அவர்களுக்கு அது ஒன்றுமில்லை எனில், இவர்களுக்கும் ஒன்றுமில்லை என்று கடந்து வர வேண்டும். இது சுலபமில்லை.

ஃபயர் பிராண்ட் என்று ஒரு மராத்தி படம். ஒரு வக்கீல். திறமையான வக்கீல். பெண்களுக்காக திறம்பட வாதாடி, அவர்களுக்கான நீதியைப் பெற்றுத் தரும் சிறந்த வக்கீல். தனது நண்பனையே மணந்த இனிமையான மணவாழ்க்கை. அருமையான கணவர். வேண்டி விரும்பிப் படித்த படிப்பு. வெற்றிகரமான வக்கீல். இதை விட வாழ்வில் வேறென்ன வேண்டும் எனும்படியான வாழ்க்கை அவருடையது.

 ஆனால், அவருக்கு அந்த மண வாழ்வில் ஒரே ஒரு பிரச்சினை. தன் இள வயதில், குடிகாரன் ஒருவனால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தவிப்பார். அந்த நினைவின் வலியும் வேதனையும் காரணமாக, எத்தனையோ முறை முயன்றும் கணவருடன் சேர்ந்து வாழ முடியாமல் தவிப்பார். அவர் மேல் கொண்ட அன்பின் காரணமாக கணவரும் எல்லா முறையும் பொறுமை காப்பார். பிறகு கணவரின் பரிந்துரையின் பேரில் மனநல மருத்துவரிடம் செல்வார்.

சிறுவயதின் வலி நிரம்பிய சம்பவங்கள், வளர வளர இன்னும் எந்தளவு பாதிப்பைத் தருகின்றன; எப்படி எல்லாம் வெளிப்படுகின்றன; முடங்கிப் போக வைக்கின்றன; அதனால், அதிலிருந்து விடுபடுவதும் விடுபட முயல்வதும் எத்தனை முக்கியம்; குழந்தைகளுக்குச் சிறுவயது பாதிப்புகளே நிகழாமல் குழந்தைகளின் குழந்தைமைகளைப் பாதுகாப்பதில் பெரியவர்களுக்கும் இந்தச் சமூகத்திற்கும் எத்தகைய பொறுப்பு இருக்கிறது என்பதெல்லாம் மனநல மருத்துவரைச் சந்திக்கும் காட்சிகள் வழியாக பார்வையாளருக்கு உணர்த்துவார்கள்.

முக்கியமாக, பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் கோபம், தன் வெறுப்பு, கையறுநிலைக்குத் தன்னையே பொறுப்பாக்கிக் கொள்ளும் குற்றவுணர்வு, அந்த குற்றவுணர்வை உருவாக்குவதில் சமூகம் தரும் அழுத்தம் எல்லாமே அந்தக் காட்சிகளின் வழியாகச் சொல்லி இருப்பார்கள்.

படத்தில் மூன்று அதி முக்கியமான, கத்தி மேல் நிற்பது போன்ற, பேசக் கடினமான, இதுவரை யாரும் பேசியிராத சிக்கலான விசயத்தை, எந்தப் பக்கம் இருந்து எப்படித் தொட்டாலும் சுடுகிற விசயத்தை வெகு அனாயாசமாகச் சொல்லிச் சென்றிருப்பார்கள்.

ஒன்று – பசி, தாகம், தூக்கம் போல காமம் எவ்வளவு இயல்பான தேவையான அடிப்படை விசயம் என்பதை, இரண்டு – உடல் நெருக்கம் மட்டுமே மனநெருக்கத்தைத் தந்து விடாது என்பதை, மூன்று – காதலுக்கும் காமத்திற்குமான வேறுபாட்டை.

படத்தின் கதை, அதைக் கொண்டு சென்ற விதம், கரணம் தப்பினால் மரணம் என்கிற காட்சியைக் கூட, எளிமையாக – நமது இத்தனை நூற்றாண்டுகால தூசி படிந்த மனதும் – ஏற்றுக் கொள்ளும் படியாக  எடுத்திருக்கிறார்கள். துக்கம் நிறைந்த இறந்த காலத்தைத் தூக்க முடியாமல் சுமந்து கொண்டு, நிகழ்காலத்தை எதிர்கொள்ளும் மனப் போராட்டத்தை கதை நாயகி வழி அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.

PC: netflix

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே, கதை நாயகி வக்கீல் தமது வேலைப் பளு காரணமாக மன அழுத்தத்திற்குப் போகும்போது, அவரது தோள்கள் இறுகி வலி தாங்காமல், தோளில் குத்திக் கொள்வார். அவரது கணவர் லேசாகப் பிடித்துவிட தூங்கிப் போவார். இறுதிக் காட்சியில், அந்த வலி இனி அவருக்கு என்றைக்கும் இல்லை என்பதாக ஆகும்.

தன்னிடம் விவாகரத்துக் கேட்டு வரும் பெண்ணின் கொடுமையான உண்மைத் தன்மையையும், அவளது கணவரின் நல்ல தன்மையையும் போகப் போக வக்கீல் புரிந்து கொள்வார். 

ஒருநாள் அவளின் கணவரோடு இவருக்கு கனிந்த உரையாடலோடு கூடிய உடல் சார்ந்த உறவு நிகழும்; இருவருக்குள்ளும் ஒருவருக்கொருவர் தத்தமது மனதில் தைத்து வதைபடும் முள்ளை எடுத்துப் போடுவதுபோலத்தான் அவர்களுக்குள் அந்த காமம் நிகழும்.

இவர், தமது வாழ்நாள் முழுவதும் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பத்தைச் சொன்னதும், ‘சோ வாட்?!’ ‘அதனாலென்ன?!’ என்கிற ஒற்றை வார்த்தையை இன்னொருவர் சொல்வார். இன்னொருவர் தம் வாழ்நாள் சுமக்க முடியாத துன்பத்தைச் சொல்ல, மற்றவர் ‘அதனாலென்ன’ என்பார். இப்படியாக மாற்றி மாற்றி நீளும் தொடர்ந்த உரையாடலில், அவரவர் துன்பம் பொடித்துப் போகும்.

அதில், பார்வையாளர்களின் மொத்த வாழ்நாள் துன்பங்களும் மெல்ல வலுவிழந்து எடையிழக்கத் துவங்கி, பறந்து போய்விடும்படி அந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

யானை, சிறுவயதில் தன்னைக் கட்டிப் போட்ட சங்கிலியை, வளர்ந்து பெரிதான பிறகும், அந்தச் சங்கிலியை ஒரு இழுப்பில் அறுத்துவிடக் கூடிய பலம் வந்த பின்பும், மனதால் சிறுவயது பயத்திலிருந்து மீள முடியாமல் – அந்தத் துக்கிளியூண்டு சங்கிலிக்குக் கட்டுப் பட்டு நிற்குமாம். அது போலத்தான் மனித வாழ்வில், கடக்க முடியாததாய் மனம் நம்புவதை உண்மை என்று நினைத்துக் கொள்கிறோம். ஒரு சிறு முயற்சி எடுத்தால் போதும் – எல்லாவற்றிலிருந்தும் விடுபட! ஆனால், அப்படி யோசிக்கக் கூடத் தயங்குகிறோம்.

Photo by ecemwashere on Unsplash

சார்லி சாப்ளின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. சார்லி சாப்ளின் தன் நண்பர்களிடம், ஒரு ஜோக் சொல்கிறார். நண்பர்கள் சிரிக்கிறார்கள். அதே ஜோக்கைத் திரும்பச் சொல்கிறார். அவர்கள் சிரிக்கிறார்கள். திரும்பவும் சொல்கிறார். அவர்கள் புன்னகைக்கிறார்கள். மறுபடியும் சொல்கிறார். யாருமே சிரிக்கவில்லை. சிரிப்பு வரவில்லை. யாருக்கும் சிரிக்கத் தோன்றவில்லை.

அப்போது சார்லி சாப்ளின் ‘ஒரே ஜோக்கிற்கு யாரும் திரும்பத்திரும்ப சிரிப்பதில்லை; ஆனால், வாழ்வில் ஒருமுறை நடந்து விட்ட துக்கத்திற்காக ஏன் திரும்பத் திரும்ப அழுது கொண்டே இருக்கிறோம்’ என்று கேட்பார்.

நாம் வாழ்வில் நமக்குப் பிடித்த, நாம் ரசித்த படங்களைத் திரும்பத் திரும்ப போட்டுப் பார்ப்போமா, பிடிக்காத படங்களையா? மனதில் மட்டும் ஏன் வேண்டாத, பிடிக்காத, விரும்பாத நிகழ்வுகளையே திரும்பத்திரும்ப நிகழ்த்திப் பார்த்துக் கொள்கிறோம்? நிகழ்வு ஒருமுறைதான் நிகழ்கிறது. மனமோ அதை பலமுறை நிகழ்த்துகிறது. ஒவ்வொரு முறையும் நம் உடல், மனதின் நினைவுகளுக்கேட்ப அதிர்வுறுகிறது. உடல், மனம் இரண்டுமே சோர்வடைந்து ‘டிப்ரஷ’னுக்குப் போகிறது.

இதையே மாற்றி நேர்மறையாக யோசிப்போம். மனம் மகிழ்ச்சியானவற்றைத் திரும்பத் திரும்ப நினைக்கிறது. உடலும் அதற்கேட்ப அதிர்வுறுகிறது. நம்மைச் சுற்றி மகிழ்வு பரவுகிறது. நாம் மகிழ்வை ஈர்க்கிறோம். அதுவே நமக்கு நடக்கத் தொடங்குகிறது.

ஒரு வருத்தமான நிகழ்விலிருந்து நம் மனதை விடுவிப்பதே, நாம் மகிழ்வை நோக்கிச் செல்வதற்கான முதல்படி.

-எதையும் கேள்வி கேள்-

இன்னும் கேட்போம்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.