அமெரிக்கா கம்யூனிச ஆட்சியை விரும்பாதது போலவே இஸ்லாமியக் குடியரசுகளையும் விரும்பவில்லை. மார்க்சிய சித்தாந்தங்களுடன் பொருந்தாத மந்திரவாதிகள் இஸ்லாமிய மதத்திலிருந்து வெளிப்பட்டது அமெரிக்காவுக்கு இன்னும் உபயோகமாகிவிட்டது.

9 மார்ச் 1957 அன்று, அமெரிக்க காங்கிரஸ் ஒரு ஜனாதிபதித் தீர்மானத்தை அங்கீகரித்தது. இது ஐசனோவர் கோட்பாடு (Eisenhower Doctrine) என்று அழைக்கப்பட்டது. அமெரிக்கா வகுத்த ட்ரூமன் கோட்பாடு, அதற்கு முன்பான மன்ரோ கோட்பாடு போன்ற ஒரு காகிதத் துண்டு. இதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் மற்ற நாடுகளில் ராணுவ ரீதியாக தலையிடுவதற்கான குறிப்பிடத்தக்க, பொறாமைமிக்க உரிமையை அங்கீகரித்தது. மேற்குலகின் அரைக்கோளத்தில் ஐரோப்பாவுடன் மத்திய கிழக்கையும் தனது விளையாட்டு மைதானமாகச் சேர்த்துக்கொள்ளும் வேலையை ஒரு பேனாவால் செய்தது.

அந்தத் தீர்மானம் இதுதான்.

“உலக அமைதிக்கு, மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் தேசிய நலன்களையும் பாதுகாப்பதை அமெரிக்கா முக்கியமானதாகக் கருதுகிறது.”

கம்யூனிசத்தால் கட்டுப்படுத்தப்படும் எந்த நாட்டிலிருந்தும் ஆயுத ஆக்கிரமிப்புக்கு எதிராக உதவி கோரும் ’எந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கும்’ உதவ ’ஆயுதப்படைகளைப் பயன்படுத்த அமெரிக்கா தயாராக உள்ளது’ என்பதும் சுருக்கமான அந்தப் பிரகடனத்தின் ஒரு பகுதி. உலக அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய கம்யூனிசம் அல்லாத அல்லது எதிர்-விரோத ஆக்கிரமிப்புக்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்புக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே தான் தயாரித்து வைத்திருந்த மாயவலைகளுடன் மத்திய கிழக்கு நாடுகள் எங்கிலும் அக்காலப் பகுதியில் இடம்பெற்ற கலகங்கள், புரட்சிகளில் அமெரிக்காவின் ராணுவ ரீதியான தலையீடுகள் இருந்துவந்தன. சோவியத்தை எதிர்த்துப் போராடும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஏகபோக உரிமை எடுத்துக்கொள்வதற்கு வேறு காரணங்கள் தேவையில்லை.

ஆப்கானிஸ்தானில் அமீனைக் கொன்ற பின்னர், ஆக்கிரமிப்பு போர் தந்திரோபாயங்களில் சோவியத் மாற்றங்களைக் கொண்டு வந்தது. மிகத் துல்லியமான திட்டமிடல்கள் சூழ்ச்சிகளால் சோவியத் படைகள் அமீனைக் கொன்றனர். மேலும் பர்ச்சம் (Parcham) கட்சியைச் சேர்ந்த சோவியத்தின் தயாரிப்பு என்று சொல்லப்படுபவரான பாப்ராக் கர்மலை, கொல்லப்பட்ட அமீனுக்குப் பதிலாகக் கொண்டுவந்தனர். கட்சிக்கான ஆதரவைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த சோவியத் அரசு புத்திஜீவிகள், மதத் தலைவர்கள் படுகொலையை முடித்தனர். பதிலாக உளவு சேகரிப்பிலும் அடக்குமுறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள் ஆகியவற்றிற்கான முறையான வழிமுறைகளை ஏற்றுக்கொண்டனர். ரகசிய போலீஸ், கிதமாதி இத்திலாத்-ஐ டவ்லதி (மாநிலத் தகவல் சேவைகள்), அல்லது கேஏடி, சோவியத் கேஜிபி மாதிரியாக இருந்தது. மரணதண்டனை, முஜாஹிதீன் ஆதரவாளர்களைக் கைது செய்தல், சித்திரவதைச் செய்தல் பரவரலாக இடம்பெற்றன. கிராமப்புறங்கள் வரையிலும் குண்டுவெடிப்பு வழக்கமானதாகவும் கண்மூடித்தனமாகவும் ஆனது. எண்ணற்ற பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1980களின் முற்பகுதியில் பாகிஸ்தானுக்கு வந்த பெரும்பாலான அகதிகள் குண்டுவெடிப்பு காரணமாகத் தப்பி ஓடியவர்களாயிருந்தனர். கண்மூடித்தனமான குண்டுவெடிப்பு, கிராமப்புறங்கள் அழிப்பு போன்ற சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறல்கள் இந்தக் காலத்தில் இடம்பெற்றன.

சோவியத் படைகள் வெளியேற்றம் Pic: thediplomat.com

இந்தக் காலகட்டத்தில் நடந்த கொடூரங்களின் அளவு பாரதூரமாக இருந்தபோதிலும் பல சம்பவங்களின் மிகக் குறைந்த ஆவணங்களே உள்ளன. தன்னிச்சையான கைது செய்தல், சித்திரவதை செய்தல், சுருக்கமாகத் தூக்கிலிடப்பட்ட பல சம்பவங்கள் குறித்து ஆப்கானிஸ்தான் நீதி திட்டம் சுயாதீனமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. பல கட்டாய ’காணாமல் போதல்’கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 1978க்கும் டிசம்பர் 1979க்கும் இடையில் நடந்த காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால், பல்லாயிரக்கணக்கானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அடக்குமுறைகள் இந்தக் காலத்தில் பல்வேறு வடிவங்களை எடுத்தது. அரசப் படைகள் எதிர்ப்பு பகுதிகளில் குண்டு வீசிப் பொதுமக்களைக் கொன்றது. லோகர், பமியான், நங்கர்ஹார் ஆகியவற்றில் இதுபோல நடத்தப்பட்ட குண்டுவீச்சுகளில் கிராமங்கள் பல முற்றிலும் அழிக்கப்பட்டன.

சில வெளிநாட்டு நிருபர்களுக்கு மாத்திரமே நாட்டிற்குள் அணுகல் இருந்த காரணத்தினால் ஆப்கானிஸ்தான் உலகின் பெரும்பகுதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது. 1984 வரை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கவும் அறிக்கையிடவும் ஒரு சிறப்பு அறிக்கையாளரை ஆப்கானிஸ்தானில் நியமித்திருக்கவில்லை. இதனால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தில்கூட தரவுகள் இல்லை. (1986இல் ஆஸ்திரிய பேராசிரியர் ஃபெலிக்ஸ் எர்மகோரா நியமிக்கப்பட்டார்). காபூலுக்கு வெளியே நடந்த சம்பவங்கள் பற்றிய செய்திகள் நாட்டிலிருந்து மெதுவாக வடிகட்டப்பட்டன. பெரும்பாலான தகவல்கள் இறுதியில் நாட்டைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான அகதிகளுடன் பயணித்தன. கற்ற சமூத்தவர்களில் பெரும்பகுதியினர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் குடியேறினர். மற்றவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தானிலும் ஈரானிலும் குடியேறினர்.

ஏப்ரல் 14, 1988இல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற சோவியத் ஒப்புக்கொண்டது. சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சர்ச்சைக்குரிய சோவியத் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆப்கானிஸ்தான் சோவியத் எதிர்ப்புப் பிரிவினருக்கான ஆயுத ஆதரவை நிறுத்துவதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டது. ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் பரஸ்பர விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று ஒப்புக்கொண்டன.

ஆரம்பகால ஆதாயங்கள் இருந்தபோதிலும், அந்நிய நாட்டு நாத்திகர்களுக்கு எதிராக ஜிஹாத் அல்லது ’புனிதப் போர்’ நடத்திய முஸ்லிம் கெரில்லாக்களிடமிருந்து சோவியத் ராணுவம் எதிர்பாராத எதிர்ப்பைச் சந்தித்தது. அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற வலிய நாடுகளுடன் பல முஸ்லீம் நாடுகளின் துணையில் ஆயுதம் ஏந்திய முஹாஜதீன் வீரர்கள் ரஷ்யர்களுக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தினர்.

சோவியத் படைகள் Pic: foreignpolicy.com

சோவியத் ஒன்றியத்தின் நிதி நெருக்கடி ஒரு தீவிர அரசியலுடன் தொடர்புடையதாகியது. சோவியத் யூனியனின் வணிகத்துறை பலவீனமடைந்ததுடன் சுயாதீனக் குடியசுரடன் போரிடுவது தொடர்பான விவாதங்களால் சோவியத் யூனியன் பவீனமான பிரிவுகளாக உடையும் முரண்பாட்டை எட்டியது. ஆயுதப் பந்தயத்திற்கும் ராணுவப் படைகளுக்கும் பில்லியன் கணக்கான ரூபிள் செலவழித்து மிக மெதுவான சுயப் பொருளாதார அழிப்பை சோவியத் எதிர்கொண்டது. ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பில் சோவியத் யூனியனின் பொருளாதார இழப்பு 9 பில்லியன் ரூபிள் எனக் கணக்கிடப்படுகின்றது. பொருட்களின் பற்றாக்குறை அதிகரித்து வரும் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் போருக்காக நூற்றுக்கணக்கான பில்லியன் ரூபிள் வீணடிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் சோவியத் தோல்வி மற்ற சோவியத் கொடிகள் பறந்த வேறு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. கம்யூனிச சித்தாந்தத்துடன் பொருந்திக்கொண்டவர்கள்கூட சோவியத் படையெடுப்பைக் கேள்விக்குட்படுத்தினர். சர்வாதிகாரிகளுக்குக் கூட்டாளியாக இருக்க முடியாதென்று உறுதிபட அறிவித்தனர். இது சோவியத் சமூகத்தில் குறிப்பிட்டளவு முரண்பாட்டை ஏற்படுத்தியது. சோவியத் யூனியனுக்குள் இருந்த போலந்து, செச்சன்யா நாடுகள் பரவலான கைப்பற்றலில் இருந்து தப்பிப்பதற்காக சோவியத் அரசாங்கத்தைச் சார்ந்திராமல் தள்ளிவிட்டன.

மட்டுமல்லாமல், இது மேலும் முக்கியமான பிரச்னைகளிலிருந்து முன்முயற்சியைத் திசைதிருப்பியது. ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பினால் சீனா, ஈரான் நாடுகளுடன் உறவை மேம்படுத்துவது ஒரு தடையாக இருந்தது.

ஆப்கானிஸ்தான் போர் சோவியத் பொருளாதாரத்தில் பெரும் தொகையைச் செலவழித்துப் பலவீனமானது மட்டுமல்ல, ஏறக்குறைய 15,000 சோவியத் துருப்புகளைக் கொன்றது. ஆப்கானிஸ்தானின் படையெடுப்பினாலேயே சோவியத் சரிந்தது என்று சொல்ல முடியாது, என்றாலும் இதன் காரணமாக அரசியல், ராணுவ, பொருளாதார, உள் சரிவு வளர்ந்ததால் சோவியத் யூனியனின் சரிவு தவிர்க்க முடியாத முறிவுக்கு வழிவகுத்தது.

ஏப்ரல் 1988இல், சோவியத் தலைவர் மிகைல் கோர்பச்சேவ் ஆப்கானிஸ்தானுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பிப்ரவரி 1989இல், கடைசி சோவியத் சிப்பாய் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார்.

(தொடரும்)

கட்டுரையாளர்

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.