மாலை நேர டீ கப்போடு ஜன்னல் பக்கம் நின்னுட்டிருந்த எனக்குள்ள ஒரு வினோதமான கற்பனை தோணுச்சு. சின்னதா ஓட்டு வீட்டுல ஆரம்பிச்ச என்னோட லைஃப், இப்போ திரும்பின பக்கமெல்லாம் வளர்ந்து நிக்குற கான்கிரீட் காட்டுல வந்து நின்னுருக்கு. வீடுன்னா நமக்கு என்ன மாதிரியான பிம்பம் நியாபகம் வரும்? நாலு சுவரு, ஒரு கதவு, ரெண்டு ஜன்னல், அப்புறம் வசதிக்கேத்த மாதிரி ஓலையோ (இன்னும் ஓலை வேய்ந்த வீடுகள் எல்லாம் இருக்குன்னு பதிவு பண்ணிக்குறேன்), ஓடோ, கான்கிரீட்டோ போட்ட விதவிதமான வீடுகள். எந்த மாதிரி வீடா இருந்தாலும் குறைஞ்சபட்சம் ஒரு ஜன்னலாச்சும் வெச்சு தான் வீடு கட்டுவோம். ஜன்னல் இல்லாம வீடு இருந்தா எப்படி இருக்கும்ன்னு என்னிக்காச்சும் கற்பனை பண்ணிருக்கீங்களா? எனக்குத் தெரிஞ்சு எஸ்கிமோக்களோட இக்குலூ (igloo) வீடுகளைத் தவிர நான் பார்த்த அனைத்து விதமான வீடுகள்லயும் ஜன்னல் வெச்சுதான் இருக்கு. சரி, வீட்டுக்கு ஏன் ஜன்னல் வெக்குறாங்க? சுத்தமான காத்தும் (அது எங்க கிடைக்குது நெக்ஸ்ட்), நல்ல சூரிய வெளிச்சமும் (அபார்ட்மெண்ட் வாசிகளே நீங்கள் இதில் விலக்கு) கிடைக்கும்ன்னு நம்பி ஜன்னல் வைக்குறோம். ஆனா, பாருங்க ஜன்னலுக்கு அது மட்டும் வேலை இல்லை. ஜன்னலோட இன்ன பிற வேலையெல்லாம் தெரிஞ்சா இனிமே வீடு கட்டும் போது நாலு ஜன்னல் சேர்த்து கட்டுவீங்க. சொல்றேன் குறிப்பெடுத்துக்கங்க!

நம்ம வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்து காலிங்பெல் அடிச்சா கதவ தொறந்து பாக்கமலேயே ஜன்னல் ஸ்கிரீன மட்டும் விலக்கிப் பாத்து, அவங்க யாரு என்னன்னு பாத்துட்டு உடனே தொறக்கலாமா இல்ல கொஞ்சம் நிதானமா தொறக்கலாமான்னு முடிவு பண்ணலாம். ராத்திரி நேரம் கிச்சன்ல காய் நறுக்கிட்டே பக்கத்து வீட்டுல நடக்குற சண்டைய நம்ம வீட்டுல இருந்தே கேட்டுக்கலாம். ஆனா, என்ன மறுநாள் காலைல அதே பக்கத்து வீட்டு ஆன்ட்டி வந்து, ‘நேத்து எங்க வீட்டுல செம சண்டை தெரியுமா’ன்னு சொல்லும்போது என்னமோ புதுசா கேக்குற மாதிரி மறுபடியும் கேக்கணும். புள்ளைங்களோட ஸ்கூல் ஐடி கார்டு, முந்தா நாள் போட்ட பழைய சாக்ஸ், பூட்டுச் சாவி, காலண்டர்ன்னு கைல கிடைக்குற எல்லாத்தையும் அதுல சொருகி வெச்சுடலாம். முக்கியமா மழை காலத்துல மாடில துணி காயப்போட முடியாததால வீட்டுக்குள்ளயே ரெண்டு மூலைலயும் இருக்குற ஜன்னல சேர்த்து ஒரு கொடி கட்டி துணி காய வெக்குறோம்ங்குற பேர்ல தொவைச்ச துணி எல்லாத்தையும் தூக்கிட்டு மாடிக்கும் ஹாலுக்கும் கபடி விளையாடலாம்.

காதலிக்குற பொண்ணுங்களுக்கு ஜன்னல் தான் பெரிய தூது மரம், அங்க வந்து நின்னு ஒளிஞ்சு இருந்து காதலனைப் பாக்குறதும், எப்பவாச்சும் சண்டை போட்டா ஜன்னல் பக்கமா மறைவா நின்னு எதிர்வீட்டுல இருக்குற காதலனை நோட்டம் விடுறதும், ஜன்னல் வழியா காத்துலயே முத்தச் செய்தி அனுப்புறதும் எல்லா காலத்துலயும் நடந்துட்டேதான் இருக்கு. இதெல்லாம் பத்தாதுன்னு நம்ம ஊரு டெய்லர்கள் அவங்க டெய்லரிங் கத்துக்க விதவிதமா ஜாக்கெட்ல ஜன்னல் விடறேன் ராக்கெட் விடறேன்னு புதுசா தைப்பாங்க. அத பாத்த நம்மூரு கவிஞர்கள் பாட்டு எழுத வார்த்தை கிடைக்கலேன்னா உடனே ‘உன் ஜாக்கெட் ஜன்னலாக ஆசை, பாவாடை நாடாவாக ஆசை’ன்னு எழுதி தள்ளுவாங்க.

சும்மா இருப்பாங்களா நம்ம சினிமா இயக்குநர்கள் ஹீரோயின கூப்பிட்டு ’அம்மா, அந்த ஜன்னல புடிச்சுட்டு கொஞ்சம் அங்க திரும்பும்மா , இங்க திரும்பும்மா’ன்னு கிளிஷே (cliché) ஷாட்ஸா எடுத்து அவங்களை ஜன்னல் நாயகிகளா மாத்திட்டு இருப்பாரு. ஊருக்குள்ள புதுசா முளைச்ச ரவிவர்மாவும் ஜன்னலோரமா ஒரு பொண்ண உக்கார வெச்சு வண்ணம் தீட்ட ஆரம்பிச்சிருவாரு. எழுத்தாளர்கள் எல்லாம் ’ஜன்னல்’ன்னு கதை, கவிதை சிறுகதை, தொடர்கதைன்னு… இந்த ஜன்னலோட வாழ்க்கையே ஒரு தொடர்கதை தான். இந்த ஜன்னலுக்கு உயிர் கொடுக்குற பொண்ணுங்க வாழ்க்கையும் சேர்ந்து ஒரு தொடர்கதை தான். மனித குலத்துக்கு இத்தனை உதவியா இருக்குற ஜன்னலுக்கு நாம ஒரு கைமாறுமே செஞ்சதில்லை. நிலைக்கால் போடுறதுல ஆரம்பிச்சு, வீடு கிரகப்பிரவேசம் ஆகும்போது மாலை போடுறது வரைக்கும் எல்லா மரியாதையும் நம்ம வீட்டுக் கதவுக்கே போயிடுது. இனிமேலாச்சும் ஜன்னல பாத்தா கொஞ்சம் மரியாதை கொடுக்கலாமா? சரி சரி இதுக்கே டென்சன் ஆகாதீங்க. ’நான் தான் டூத்பிரஸ் பேசுறேன்னு’“ இன்னோர் அயிட்டம் அடுத்த எபிசோட்ல சொல்றேன்.

என்னோட ஜன்னல் ஆராய்ச்சி எப்படி ஆரம்பிச்சதுன்னா துபாய்ல எந்த அபார்ட்மெண்ட் ஜன்னல்லயுமே கிரில் கம்பிங்க இல்ல. கிரில் இல்லாத ஜன்னல்கள் நம் ஊரில் கிடையாது. கிரில் இல்லாம ஜன்னல் இருந்தா எவ்வளவு கஷ்டம்ன்னு யோசிச்சுட்டு இருந்தப்போதான் என் மண்டைக்குள்ள இந்த ஆராய்ச்சியெல்லாம் உதயமாச்சு.

பால்கனி வழியா தெருவை வேடிக்கை பார்ப்பது என்னுடைய மாலை நேரப் பொழுதுபோக்கு. என் ஜன்னலோரம் வந்து நின்னு வலதுபக்கமா ஒரு ஐம்பது அடி தொலைவுல இருக்குற பில்டிங்கைப் பார்த்துட்டே இருப்பேன். மாலை நெருங்கும் போது முழுக்க முழுக்க விளக்கு ஒளியில பில்டிங் மொத்தமும் தகதன்னு மின்னும். இயற்கை மீது அதிக காதல் வெச்சிருந்த எனக்கு இந்த இயந்திர வாழ்க்கையும் கான்கிரீட் காடுகளும் ஒரு புது அனுபவத்தைத் தர ஆரம்பித்திருந்தது. என் ஜன்னல் எனக்குப் புடிச்ச இடமாகவும் மாறிடுச்சு. ஆனா, இப்படி எதிர்வீட்டு ஜன்னல பாக்குறதுக்கா ஐயாயிரம் மைல் தாண்டி ஆகாசத்துல பறந்து வந்தேன்னு யோசிச்சுட்டே மீதி இருந்த டீய குடிச்சு முடிச்சேன்.

ஒரு ஜன்னலுக்கே இவ்வளவு கதை இருக்கே. இந்த ஊருக்கே ஒரு ஜன்னல் இருந்தா எப்படி இருக்கும்? கார்ல துபாய் ரோட்டுல போகும்போது எதிர்ப்படும் உலகின் பெரிய போட்டோ ஃப்ரேமை (Dubai Frame) பார்க்கும் போதெல்லாம் இந்த ஊருக்கே சேர்த்து ஒரு ஜன்னல் வைத்ததைப்போல தான் தோணும். புது வருசம்னா நாம எப்படிக் கொண்டாடுவோம். ஃப்ரண்ட்ஸ்க்கு பொக்கே கொடுத்தோ, குடும்பத்தோட கேக் கட் பண்ணியோ இல்ல வீதி முழுக்க பட்டாசு வெடிச்சோ தான கொண்டாடுவோம். இவங்க என்னடான்னா ஐநூறு அடி உயரத்துல தங்கத்தாலேயே இழைச்சு பண்ணிய ஒரு பெரிய சட்டத்தைக் கொண்டு வந்து ஊருக்கு நடுவுல நிப்பாட்டி வெச்சு ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்றாங்க. அது சரி, பல்லு இருக்குறவன் பக்கோடா திங்கறான்.

ஒரு சாதாரண போட்டோ ஃப்ரேம் மாதிரியான தோற்றம் அளிக்கும் இந்த துபாய் ஃப்ரேமுக்குப் பின்னாடி ஒரு பெரிய்ய கதை இருக்கு. 2008வது வருசம் இன்டெர்னேஷனல் யூனியன் ஆஃப் ஆர்க்கிடெக்ட்ஸ்ங்கற (UIA) அமைப்பு, யுனெஸ்க்கோ மூலம் பாரீஸ்லயும் சிட்னி ஓபரா ஹவுசிலயும் ஒரு போட்டி வெக்குறாங்க. அதுல ஃபெர்னாண்டோ டோனிஸ்ங்கற (Fernando Donis) மெக்சிகன் ஆர்க்கிடெக்ட்டும் கலந்துக்கறார். நியூ ஃபேஸ் ஆஃப் துபாய் (New Face of Dubai) என்ற தீம்ல துபாயில ஒரு ஐகானிக் ஸ்டக்ர்சர் டிசைன் பண்ணணும்ங்கறது தான் அதன் நோக்கம். ஆல்ரெடி உலக வரலாற்றிலேயே முதல் முறைன்னு இடம்பிடிக்கக்கூடிய ஸ்கைஸ்கிராப்பர்களால் துபாய் நகரமே நிரம்பி வழியும்போது இன்னோரு ஐகானிக் ப்ளேஸ் டிசைன் பண்றது ரொம்பக் கஷ்டமான காரியமா எல்லாருக்குமே இருந்திருக்கு. அழகா இருக்கணும்… உயரமா இருக்கணும்… ஐகானிக்கா இருக்கணும்… புதுசா இருக்கணும்னு கண்டிசன்ஸ் மேல கண்டிஷன்ஸ் போட்டுட்டே இருந்திருக்காங்க. எப்படி முட்டி மோதினாலும், அது உயரமான புர்ஜ் கலிஃபாவையோ, செவென் ஸ்டார் ஹோட்டலான புர்ஜ் அல் அராபையோ இல்ல இன்னும் பல விதமான ஐகானிக் கட்டுமானங்களை விஞ்சும் விதமா அமையல.

அப்போதான் டோனிஸ் மண்டைக்குள்ள பல்பு எரிஞ்சு ஒரு புது ஐடியா உருவாகியிருக்கு. துபாயைச் சுற்றிலும் பல உயரங்கள்ல நிறைய ஐகானிக் ப்ளேஸ் இருக்கே. புதுசா ஒண்ணு ஏன் உருவாக்கணும்? ஒண்ணுமே இல்லாம ஒண்ண உருவாக்கி இந்த ஐகானிக் ப்ளேஸ் எல்லாம் பாக்கலாமேன்னு தோணிருக்கு. இருக்கு ஆனா இல்ல. என்ன புரியலயா? ‘எங்க ஊரு எத்தனை அழகுன்னு பாருங்க’ன்னு காட்டுற மாதிரி ஒரு வாய்டு (Void) ஸ்ட்ரக்ச்சர் ஐடியாவில் உருவானது தான் துபாய் ஃப்ரேம். மெகா சைஸ்ல ஒரு ஃப்ரேம் ஸ்ட்ரக்ச்சர் (Frame Structure) செஞ்சு ஊருக்கு நடுவால நிப்பாட்டி ‘துபாய்…புயூட்டிஃபுல் துபாய்’ன்னு பாட்டுப் பாடலாம்ன்னு டோனிஸ் ஒரு மாடல் டிசைன் பண்ணிக் கொடுக்கிறார். அவரின் டிசைனில் மனம் மகிழ்ந்த குழுவும், ‘நீரே ஆர்க்கிடெக்ட்… உமக்கே மொத்த பரிசில்… இதோ பொற்கிழி வாங்கிக் கொள்ளும்’ன்னு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுடன் பரிசெல்லாம் கொடுத்து நல்லாத்தான் போயிருக்கு.

துபாய் நகரமே ஓல்ட் துபாய் , நியூ துபாய் என்று ரெண்டாப் பிரிஞ்சு கிடக்கு. பல்வேறான பொருளாதாரம், கலாச்சார பின்னணி கொண்ட துபாயில், பர் துபாய் (Bur Dubai), டெய்ரா (Deira), கராமா (karama), அல்நாதா (Al Nadha) உள்ளிட்ட பகுதிகள் கலாச்சாரம், பழமை வாய்ந்த வீடுகளுடன் ஓல்ட் ஈஸ் கோல்ட்ன்னும், துபாய் மரினா (Dubai Marina), டவுன்டவுன் (Downtown), ஜூமைரா வில்லேஜ் (Jumaira Village) உள்ளிட்ட பகுதிகள் அழகும், பொலிவும் கூடி மார்டன் துபாய்ன்னும் இருக்கு. மிகப்பெரும் சுற்றுலாத் தலமாக மாறிப்போயிருக்கும் துபாயில் டூரிஸ்ட் அட்ராக்ஷனுக்கு ஓல்ட் துபாய், நியூ துபாய் என்ற பாகுபாடு எதுவும் இல்லை. துபாய் கிரீக் (Dubai Creek) படகுச்சவாரி, டெய்ரா கிளாக் டவர் (Deira Clock Tower), அமீரகத்தின் முதல் பழமையான துறைமுகம் என்று ஓல்ட் துபாய் ‘வாழ்க்கையென்னும் ஓடம்’ எஸ்.எஸ்.ஆர் ரகமாகவும், நியூ துபாயில் புர்ஜ்கலிஃபா (Burj khalifa), வாட்டர் ஃபவுன்டென், புர்ஜ் அல் அராப் (Burj Al Arab), பாம் ஐலேண்ட் (Palm Island) எல்லாம் ‘பளபளக்குற பகலா நீ அனலடிக்குற துகளா நீ’ சூர்யா ரகமாகவும் ஒரு ஃபீல் கொடுக்கும். இப்படித் துபாயின் இரண்டு முகங்களையும் ஒரு சேரப் பார்க்கும் ஒரு கண்ணாடி தான் துபாய் ஃப்ரேம்.

ஐம்பது மாடிகள் கொண்டிருக்கும் இந்த ஆர்க்கிடெக்சர் தூரத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு பெரிய பிக்சர் ஃப்ரேம் போல இருக்கும். ஜபீல் பார்க்கில் (Jabeel Park) உள்ளே நுழைந்து ஐம்பது திர்ஹாம் கொடுத்து ஒரு என்ட்ரி அட்டெண்டன்ஸ் போட்டுக்கலாம். உள்ளே நுழையும் போது ஓல்ட் துபாய் வழியாகவும் வெளியே வரும்போது நியூ துபாய் வழியாகவும் வர்ற மாதிரி ஒரு செட்டிங்க்ஸ் உள்ளே வெச்சிருக்காங்க. ஓல்டு துபாயில் ஒரு சின்ன மியூசியம் மாதிரி முத்து வாணிபம், மீன் பிடித்தல், அரேபியர்களோட பழைய வாழ்க்கை முறைன்னு பல பொக்கிஷங்களைப் பார்வைக்கு வெச்சிருக்காங்க. அதைத் தாண்டி வந்து புர்ஜ் கலிஃபாக்குள்ள போன மாதிரியே திக்கு… திக்கு… பக்கு…ன்னு ஒரு பெரிய எலிவேட்டர் பயணம் முடித்து மேல் டெக்கில் போய் ஹய்யான்னு முழு சிட்டியும் 360 டிகிரி வியூ பாக்கலாம். வராண்டாவில் வேக வேகமா நடந்த நான் ‘என்ன நாம மட்டும் தனியா போய்க்கிட்டிருக்கோம்’ன்னு சுதாரிச்சு கீழ குனிஞ்சு பார்த்தா ஒரு நிமிசம் தலை சுத்திருச்சு. வராண்டா நடுவில் கண்ணாடி பதித்து கீழே ட்ரேன்ஸ்பரண்ட்டா தெரியுற மாதிரி வெச்சிருக்காங்க. என் காலுக்குக் கீழே காரெல்லாம் எறும்பு மாதிரி குட்டி குட்டியா ஊர்ந்துட்டு இருக்கு. திருதிருன்னு முழிச்சுட்டே கீழ பாக்காம அப்படியே ஒரு ஜம்ப்… எதுவுமே நடக்காத மாதிரி திரும்பி நடந்த எனக்கு எதிரும் புதிருமாகப் பழைய துபாயின் கட்டிடங்களும் புதிய துபாயின் கட்டிடங்களும் கண்ணுக்கு விருந்தானது. அப்சர்வேசன் லென்ஸ் வழியா தூரத்துல இருக்குற கட்டிடத்தையும் அங்க இருந்தே பாத்துக்கலாம். அப்படியே இறங்கும் லிப்ட்ல வந்தா ஆர்ட்டிபிஷியல் இன்ட்டிலிஜென்ஸ் துறை மூலமா நியூ துபாய் இன்னும் ஐம்பது வருசம் கழிச்சு எப்படி இருக்கும்ன்னு ஒரு விளக்கப்படத்த ஓட்டுறாங்க. ஐம்பது வருசம் கழிச்சு துபாய் ரோடெல்லாம் கார் பறந்துதான் போகுமாம். மனிதர்களே இல்லாத ரோபோட் தான் முழு சிட்டியையும் ஆக்கிரமித்து இருக்குமாம். இப்போவே இங்க மனுசங்கள பார்க்குறது அதிசயமாத்தான் இருக்கு என்பது தனிக்கதை. இப்படி ஒரு ஆர்ட்டிபிஷியல் இன்ட்டிலிஜென்ஸ் வழியா உள்ள போய் ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டடி வழியா வெளியே வந்து ஃப்ரேம் விட்டு வெளியே வந்திடலாம். என்ன ஐகானிக் ப்ளேஸ்ன்னு சொல்றீங்க, வேற சிறப்பு ஏதும் இல்லையான்னு கேக்குறீங்களா.

இந்த பில்டிங் வெளிப்புறம் முழுசும் ஜொலிக்கும் தங்கத்தட்டுல அலங்கரிச்சிருக்காங்க. பில்டிங்க் ஃபேகேட் (Façade) முழுசும் ஒரிஜினல் தங்கம்ங்க தங்கம்… (தமிழ்ப் பொண்ணுக்கு அடையாளமாகப் பக்கத்தில் போய் உரசிப் பார்த்தாச்சு!) நைட் லைட்ல ஜொலிக்குற ஃப்ரேம் முழுசும் ‘ஜொலிக்குது ஜொலி ஜொலிக்குது’ன்னு பாடுவதற்கு ஏற்ற பொன் அலங்காரம் செய்யப்பட்டிருக்கு. இவங்க டாலர் செயின்ல இருந்து டாய்லெட் வரைக்கும் தங்கத்தைப் பூட்டி அழகு பாக்குறவங்க. இதெல்லாம் இவங்களுக்கு ஜூஜூபி என்று தோணியது. இங்கே இருக்கும் பெரும்பாலான கட்டிடங்கள் ஒரு பொதுமையோட இருக்குங்கறது நான் தெரிந்துகொண்ட மற்றொரு விஷயம். கலாச்சாரம் முதல் அறிவியல் வரை எல்லாவற்றையும் பார்த்து முடித்ததும் வெளியே வந்து பார்க் பெஞ்சில் அமர்ந்து அதன் அழகை யுகம் யுகமா ரசிக்கலாம்.

படைப்பாளர்:

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.