கர்நாடகாவில் நேற்று நடந்ததை ஒற்றை சம்பவம் என மனிதம் மேல் அக்கறை கொண்ட எவரும் எளிதில் கடந்து போய்விட முடியாது. நடந்த சம்பவம் வெறும் மத ரீதியான ‘புல்லியிங்’ என்பது தொடங்கி, அங்கே எப்படி கேமராக்கள் வந்தன, அந்தப் பெண் ஏன் அல்லாஹு அக்பர் என்று முழங்கினார் என முற்போக்கு பேசும் பலரும் சம்பவம் குறித்து தங்கள் ‘நடுநிலையை’ பறைசாற்ற கேள்வி கேட்கிறார்கள்.

நண்பர் ஒருவர், ‘என் வீட்டில் மதச்சார்பின்மை பற்றி என் குழந்தைகளுக்கு இன்று சொல்லித்தந்தேன்’ என பதிவு எழுதியிருந்தார். இங்கே சிறுபான்மை சமூகக் குழந்தைகள் விபரம் தெரியும்போதே தான் ‘வேறு மாதிரி’ என்பதை பல்வேறு அலகுகளாக உணரவைக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. சிறுபான்மை மதத்தினரால் வளர்க்கப்படும் குழந்தை மூன்று நான்கு வயது முதலே தன் அடையாளம் காரணமாக எதிர்கொள்ளும் ஒடுக்கத்தை பெரும்பான்மை மத நண்பரின் குழந்தை தன் பதின்மவயதில் கேட்டுத் தெரிந்துகொள்வதுதான் பிரிவிலேஜ்!

நேற்றைய சம்பவத்தை முன்னிட்டு ‘சீருடை பள்ளிகளுக்கு ஒரே மாதிரி தானே இருக்கவேண்டும்’ என கேள்வி கேட்பவர்கள், இதே கேள்வியை இந்திய அரசை நோக்கி முன்வைக்கட்டுமே? நாடாளுமன்றத்துக்குள் வரும் பிரக்யா தாகூர், உத்திரப்பிரதேச சட்டமன்றத்துக்குள் வரும் அதன் முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் அணிந்துவரும் காவி உடையை உங்களால் கேள்விக்கு உட்படுத்த முடியுமா? பெண், அதிலும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த எளிய பெண் என்றால் அவளுக்கு ஒரு சட்டம் இங்கே, அதிகாரம் படைத்த பெரும்பான்மை இந்து மதத்தைச் சேர்ந்த பெண் என்றால் அவருக்கு வேறு சட்டமா?

தன்னை நட்ட நடுநிலை வலதுசாரியாகக் காட்டிக்கொண்டிருக்கும் சிலரது பதிவுகள், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்குத் தரப்படும் உரிமையை பெரும்பான்மை மதத்தினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கவேண்டும் என்கிற ஆபத்தான வாதத்தை முன்வைக்கின்றன. இந்தியா மதச்சார்பற்ற நாடு, அதை ஆள்வது அதன் அரசியலமைப்புச் சட்டம். 73 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும், எந்த விதத்திலும் தன் அடிப்படையான ‘சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை’யை விட்டு இம்மியளவும் அது நகரவில்லை.

சிறுபான்மையினருக்கு அது தரும் உரிமையை பெரும்பான்மை மத நிறுவனங்களுக்கு தரவேண்டும் என இப்போது கேட்கத் தொடங்கியிருப்பதற்கும், ‘இந்தியாவில் இந்துக்களுக்கு ஆபத்து’ எனும் வாதத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். பாதுகாப்பு காரணமாகவே சிறுபான்மையினருக்கு இங்கே அதிக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் பாதுகாப்பே ஒரு மதச்சார்பற்ற நாட்டின் தலையாய கடமை!

ஒடுக்கப்படுபவன் தன்னை ஒடுக்குபவனுக்கு எதிராக பயன்படுத்தும் எந்த ஆயுதத்தையும், ஒடுக்குபவன் குறைசொல்ல உரிமையில்லை. ஒடுக்கப்படுபவனின் வலி அவனுக்கானது, அவன் ஏன் இதைச் செய்யவில்லை, அவர் ஏன் ‘வந்தே மாதரம்’ என கத்தவில்லை, அவர் ஏன் ‘அல்லாஹு அக்பர்’ என கத்தினார் என மீண்டும் ஒடுக்கப்படுபவர் மேல் விமர்சனம் வைப்பது மனிதத்தன்மையே அல்ல. காணொலி காட்சியை மீண்டும் ஒருமுறை பாருங்கள், அந்தப் பெண் தன் பைக்கை நிறுத்துகிறார், இறங்கி நடக்கத் தொடங்குகிறார். சுற்றி ஓநாய் போல நிற்கும் ஆண்கள் கூட்டம், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிடுகிறது. அங்கு எழுப்பப்பட்ட கோஷம் ராமனைப் போற்றுவதற்கா அல்லது ஒற்றைப் பெண்ணை ஒடுக்க எடுக்கப்பட்ட காட்டுக்கூச்சலா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த சூழலில் தனக்கு பாதுகாப்பே இல்லை எனத் தெரிந்துகொள்ளும் பெண், தன் ஆயுதமாக தன்னை ஒடுக்க பயன்படுத்தப்படும் மதத்தையே எடுத்துக்கொள்கிறார். ‘அல்லாஹு அக்பர்’ என அவர் கோஷமிடுவது ஜெய் ஸ்ரீ ராம் என்ற ஒடுக்கும் குரலுக்கு எதிரான விடுதலைக் குரலாக நமக்குத் தோன்ற வேண்டுமேயன்றி, தன் மதத்தை முன்னிறுத்துவதற்காக அப்பெண் கோஷமிடுவதாக நாம் பொருள் கொண்டால், நம் சிந்தனை ஓட்டத்தில் எங்கோ தவறு இருக்கிறது என பொருள். ஒரு பெண்ணை ஒடுக்கிக்கொண்டே இருந்து மூலையில் முடக்கினால், எங்கோ, எப்படியோ அவள் திமிறி எழத்தான் செய்வாள். அப்படி எழும்போது அவள் இன்குலாப் சிந்தாபாத் எனச் சொன்னாலும், அல்லாஹு அக்பர் எனச் சொன்னாலும், அவளது குரலாக ஒலிப்பது, ‘எனக்கு நீதி வேண்டும்’, ‘எனக்குக் கல்வி உரிமை வேண்டும்’ என்பதே.

இன்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் நடந்த சம்பவத்தில் கைதாகியிருக்கும் ‘மாணவர்கள்’ யாரும் மாணவர்களே அல்ல என பேட்டி தந்திருக்கிறார். அப்படியென்றால் இவர்கள் யார், எதற்காக கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டார்கள், ஒற்றைப் பெண்ணை சூழ்ந்துகொண்டு கோஷமிட்டார்கள் என்ற கேள்வியை பொது சமூகம் எழுப்பவேண்டும்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

தேசிய ஸ்டாடிஸ்டிகல் அலுவலகம் அளித்துள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் இஸ்லாமியப் பெண்கள் நாட்டில் ஒடுக்கப்பட்ட பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினப் பெண்களை விட கல்வியில் பின்தங்கியிருக்கிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்நிலைப்பள்ளிக் கல்வியில் இஸ்லாமியப் பெண்களின் GAR (Gross Attendance Ratio) 48.3% மாக உள்ளது. இது தலித்துகளை (52.8%) விடவும் குறைவானதே. ஏற்கனவே சொந்த மதத்தால் ஒடுக்கப்பட்டு, கல்வி ஒன்றே முன்னேற வழி என போராடி பள்ளி, கல்லூரிக்கு வரும் இஸ்லாமியப் பெண்களை, அவர்களின் கல்வியை ஹிஜாப் என்ற ஒற்றை காரணம் காட்டி நாடும் அரசியலும் பறிக்கப் பார்ப்பது எவ்வளவு பெரிய அநியாயம்?

முற்போக்கு, இடதுசாரி அமைப்புகள் இந்தப் போரட்டம் இஸ்லாமியப் பெண்களின் கல்விக்கான போராட்டம் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். இது எதுவும் சீருடை பற்றியது அல்ல. இஸ்லாமியப் பெண்களுக்கு நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் தரும் உரிமையை தட்டிப் பறிக்க நாம் யார்? அதை இப்போது விமர்சனம் செய்துகொண்டிருக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது? இதை ஆண்கள் தங்களின் போராட்டமாக ‘ஹைஜேக்’ செய்துகொண்டு போவது எவ்வளவு மோசமானது? உரக்கச் சொல்வோம். அல்லாஹு அக்பர்!