என்னுடைய தோழி ஒருவர் மிகவும் அழகாக இருப்பார். பணிக்குச் செல்கிறார். பணிபுரியும் இடத்தில் இருக்கும் ஒருவர் ஒருமுறை, “நீங்க அழகா டிரஸ் பண்றீங்க மேடம்..” என்றிருக்கிறார். இன்னொரு நாள், “நீங்க தினமும் ஸ்பெஷலா மேக்கப் போட்டு தான் வருவீங்களா?..” என்க, “இல்லை சார்.. மேக்கப்லாம் இல்லை..” என்றாளாம். உடனே, ” வாவ் நேச்சுரல் ப்யூட்டி மேடம் நீங்க..” என்று வழிந்திருக்கிறார்.

இன்னொருவர் அவளிடம் விழா தொடர்பாகப் பேசிய அரைமணி நேரத்திலேயே, அவளது பெர்சனல் நம்பரைக் கேட்டுத் தலையைச்
சொறிந்திருக்கிறார். “வேலை சம்பந்தமாக என்றால் ஆஃபீஸ் நம்பருக்கே அழையுங்கள்..”, என்று அவள் பேச்சைத் துண்டித்து விட்டாள்.

wikihow

மற்றொருவரிடம் அவள் ப்ராஜெக்ட் சம்பந்தமான உதவியைக் கோர, நல்லமுறையில், “எப்போது வேண்டுமானாலும் அழையுங்கள்..உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்”, என்று பதில் சொல்லியிருக்கிறார். கூடவே வாட்ஸ் அப்பில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தை அனுப்பி, “இதற்கு சம்மதமென்றால் ப்ராஜெக்ட்டுக்கு எல்லா உதவிகளும் செய்யப்படும்”, என்று மறைமுகத் தூண்டில் போட்டிருக்கிறார். இவள் அந்தத் திசைக்கே கும்பிடு போட்டுவிட்டாள்.

இன்னும்.. இன்னும்.. நிறைய அனுபவங்கள். இவற்றையெல்லாம் என்னிடம் பகிர்ந்த போது எனக்குத் தோன்றியது ஒன்றுதான். போகும் வழிகள் தான் பலவிதம். ஆனால் போய்ச் சேரும் இடம் ஒன்றுதானென்று. அடுத்த பெண்களிடம் இப்படி வழிபவர்கள் தன் மனைவியும் வேலைக்குப் போகிறாள்; அவளிடமும் ஒருவன் இப்படிப் பேசக் கூடும் என்பதைச் சுலபமாக மறந்து விடுகிறார்கள். அப்படிப் பேசினாலும் தன் மனைவி வழி தவறிப் போக மாட்டாள் என்பதில் அசாத்தியமான நம்பிக்கை! இருக்கட்டும்.. தவறில்லை..

பார்க்கும் பெண்களை எல்லாம் தன் படுக்கைக்குக் கொண்டு வரவேண்டும் என்பதும், ஒரு பெண்ணுக்கு உதவினால் அவள் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் என்ன மாதிரியான மனப்பிறழ்வு?

எத்தனையோ நூற்றாண்டுகளாகப் போராடி பெண்கள் இன்று வேலைக்குச் செல்லவும், வெளியே நடமாடவும் ஓரளவு சுதந்திரம் பெற்றிருக்கிறார்கள். அதிலும் மண்ணைப் போட்டு, பெண்ணை மூலையில் முடக்க ஆணாதிக்க சமுதாயம் செய்யும் அப்பட்டமான சூழ்ச்சி இது. வீட்டுக்குள் இருக்கும்வரை அவர்களுக்கு உடமை. வெளியே வீதியில் கால் வைத்து விட்டால் பொதுவுடமை என்றுதானே பெண்களை எல்லோரும் துச்சமாக எண்ணுகிறார்கள்?

படியாத பெண்களின் நடத்தையைக் குறை சொல்லுவதும், படியும் பெண்களையும் கேவலமாகப் பேசுவதுமாக ஆக மொத்தம் பெண்கள் என்றாலே கேவலப் பிறவிகள் என்று இன்னும் அழுத்தமாக இந்த ஆணாதிக்க சமூகத்தில் பதிய வைப்பதும்தான் இவர்கள் போன்ற புல்லுருவிகளின் நோக்கம்.

வீட்டில் மனைவி இருக்கும் போதே, இப்படி வேலி தாண்டும் வெள்ளாடுகளாய் இவர்கள் இருப்பதன் உளவியல் காரணங்கள் என்ன? பொருந்தாத திருமணங்கள் தான் இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ‘அப்பா சொன்னாரு’, என்றும், ‘நண்பர் குடும்ப சம்பந்தம்’ என்றும், ‘வயசான காரணத்தால் வரன் கிடைக்கவில்லை’, என்றும் இந்தியத் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. பெரும்பாலான பெண்கள் சகித்துக் கொண்டு வாழப் பழகிவிடுகிறார்கள்.

ஆனால் ஆண்கள் தங்களுக்கு அறிவுப்பூர்வமான(?) துணை வேண்டும் என்று வெளியே பார்வையைப் படர விடுகிறார்கள். தன் மனைவிக்கு எதுவும் தெரியாது என்பதே அவர்களுக்கு பெரிய ஆசுவாசமாக இருக்கும். ஆனால் அடுத்த பெண்களைச் சுட்டி, “பார்த்தாயா?..” என்று புருவம் உயர்த்தி சிலாகிப்பார்கள். மனைவி ஏதேனும் அறிவார்ந்த பேச்சில் ஈடுபடும் போது உள்ளே போய் வேலையைப் பார்க்க அனுப்பி விடுவார்கள். இவர்களை எளிதில் புரிந்து கொள்ளலாம். அதாவது ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்.. பூசாத மாதிரியும் இருக்கணும்.. என்கிற மனோபாவம்.

ஆண்டுகள் எத்தனை கோடியைக் கடந்தாலும் பெண்ணுடலை போகப்பொருளாகப் பார்க்கும் ஆணின் ஆதி மனப்பான்மை மட்டும் இன்னும் மாறவேயில்லை. அதனால்தான் போகிற போக்கில் கல்லை எறிந்து பார்க்கும் மனோபாவம் விரவியிருக்கிறது. ‘ஆண்கள் என்றாலே அப்படித்தான்’, என்று சப்பைக்கட்டு கட்டும் சிலரால்தான் எல்லாமே குட்டிச் சுவராய்ப் போய்க்கொண்டிருக்கிறது.

wikihow

இப்படிப் பட்ட ஆண்களிடம் மடங்கும் பெண்ணின் மனோபாவம் எப்படி இருக்கிறது? ஆதி காலத்தில் இருந்தே அன்புக்கும், பாதுகாப்புக்கும் ஏங்குவதே பெண்ணின் குணம். அது அபரிமிதமாகவோ, தடையின்றியோ கிடைக்கும் இடத்தில்தான் பெண்மனம் ஒட்டிக் கொள்ளும். அப்படித்தான் இந்த ஆண்கள் பேசிப் பேசியே பெண்களை மயக்குகிறார்கள்.

உடனே, “அவன் பேசினா இவளுக்கு அறிவில்லையா?..” என்று கம்பு சுத்தாதீர்கள். அன்பை மட்டுமே தேடும் மனம், அது தனக்கு விரிக்கப்பட்ட வலை, மேலே பூக்களும் கீழே புதைமணலும் நிரம்பிய குழி என்பதை மறந்து சுலபமாக விழுந்து விடுகிறது.

இவற்றுக்கெல்லாம் ‘தண்ணி காட்டும்’ பெண்களும் உண்டு. அவர்கள் எண்ணிக்கையில் குறைவே.

ஒரு ஆண்குழந்தையிடம், “உனக்கு எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்?”, என்ற கேள்வி சர்வ சாதாரணமாக முன்வைக்கப்படுகிறது. அதனால் நிறைய பெண்களுடன் பழகுவதுதான் ஆண்மை என்ற விஷ வித்து சிறு வயதிலேயே அவனின் மரபணுக்களில் ஊன்றப்படுகிறது. இதன் பின் மறைந்துள்ள ஆபத்து, சமூகத்தால் உணரப்படுவதில்லை. இவர்கள் வளர்கையில் பெண்களுடன் பழகுவதன் கோணம் மாறுபடுகிறது.

இன்று திருமணம் தாண்டிய உறவில் நிறையப் பேர் சர்வ சாதாரணமாக ஈடுபடுகின்றனர். அது சரியா தவறா என்பது அவரவர் கோணத்தில் தான் முடிவு செய்யப்பட வேண்டும். தனது மனைவி/கணவர் தனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதில்லை என்பதுதான் பெரும்பாலானவர்கள் கருத்து. அப்படியே நடந்து கொண்டாலும், வேறொன்றால் கவரப்பட்டும் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

ஆங்கிலத்தில் “செவன் இயர்ஸ் இட்ச்” என்று சொல்லுவார்கள். அதாவது ஏழாம் வருட அலுப்பு. ஒரே துணையுடன் ஏழு வருடங்கள் குடும்பம் நடத்தும் போது இயற்கையாகவே ஒரு அலுப்பு உருவாகி விடும். அப்போது ஒரு மெல்லிய விரிசல் ஏற்படும். அந்த நேரத்தில் விழித்துக் கொண்டு அந்த விரிசலைச் சரிசெய்து விட வேண்டும். இல்லையெனில் அது பள்ளமாகி விடும் அபாயம் உண்டு. அந்த விரிசலை இட்டு நிரப்ப வேறொருவர் வந்து விடும் பேரபாயமும் உண்டு.

அதற்காக எந்நேரமும் தனது துணையைக் கவர்ந்து தக்க வைத்துக் கொள்வதிலேயே பொழுதைக் கழிக்க முடியாது. தங்களுக்குள் ஏற்படும் விரிசலை அவ்வப்போது மனம் விட்டுப் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும். ‘அன்பு வேண்டும்’, என்று திருமணம் தாண்டிய உறவை ஏற்படுத்திக் கொள்பவர்கள் கடைசி வரை உண்மையான அன்பைக் கண்டடைவதே இல்லை. ஏனென்றால் ஒருவர் எப்போதும் அடுத்தவரிடம், உண்மையான சுயநலமில்லாத அன்பை வெளிப்படுத்தவே முடியாது. மனித மனம் மாறிக்கொண்டே இருக்கிறது. எப்போதும் ஒருவரைப் பற்றிய கருத்துக்கள் அப்படியே இருப்பதில்லை. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழுங்கள் என்று வாழ்த்திய தம்பதிகள் அவ்வாறே புரிந்து கொண்டு நடக்க முடிகிறதா? இல்லை. மாறாக, நாங்கள் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டோம் என்று சொல்பவர்கள் ஒன்று அவர்களிடம் நடிக்கிறார்கள்; அல்லது நம்மிடம் நடிக்கிறார்கள். கசப்பாக இருந்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை.

wikihow

அப்படியென்றால் சுயநலமில்லாத உண்மையான அன்பு எங்கு கிடைக்கும் என்று கேட்டால், ஒருவர் தன்மீது தானே செலுத்தும் அன்புதான் உண்மையென்று உரக்கச் சொல்லுவேன். நம்மை முதலில் நாம் காதலிக்க வேண்டும். அன்பு செலுத்த வேண்டும். பிறர் வந்து நம்மிடம் அன்பு செய்வார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. எவருடைய அன்பும் நிரந்தரம் இல்லை. யாரும் நம்முடன் அன்போடு கடைசிவரை இருப்பதில்லை. நம்மீது நாம் கொள்ளும் அன்பே இறுதி வரை நம்மோடு வரும்.

வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேட முயன்றால் வீணாவது நேரம் மட்டுமில்லை; நம் வாழ்க்கையும் தான். உலகில் எத்தனையோ விஷயங்கள் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அதை அந்தக் கணத்தோடு உதறிவிடக் கற்றுக் கொள்ள வேண்டும். விரும்பும் எல்லாமும் கைவர வேண்டும் என்று நினைப்பது பேராசை.

“என் மனைவி நோயாளி; அவள் கோபக்காரி; எனக்கு சமைத்துத் தரவே மாட்டாள்; பணத்தாசை பிடித்தவள்; அன்பு காட்டத் தெரியாதவள்; என்னை நெருங்க விடமாட்டாள்..” என்றெல்லாம் காரணம் சொல்லி இன்னொரு பெண்ணை நெருங்குபவர்களின் வீட்டில் சென்று பார்த்தால் நிலைமை பெரும்பாலும் தலைகீழாகத்தான் இருக்கும்.

அவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு அவளோடு குடும்பம் நடத்தும் கட்டாயம் தான் என்ன? அவளை விவாகரத்து செய்து விட்டு நன்கு அன்பு காட்டும் ஆரோக்கியமான பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதுதானே? செய்ய மாட்டார்கள். ஏனென்றால் சமுதாயத்தில் அவர்களுக்கு இருக்கும் நல்ல(?) பெயர் கெட்டுப் போய்விடும் என்று சொல்லுவார்கள். பிடிக்காத, ஒத்துவராத உறவை விக்ரமாதித்தனின் தோள் வேதாளமாகச் சுமப்பதை விட, கீழே போட்டுவிட்டுப் போவது எவ்வளவோ மேல் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆண்களுக்கு ‘கமிட்மென்ட்’ பிடிக்காது. அவர்களைப் பொறுத்தவரை மனைவி என்பவள் நச்சரிக்காமல் இருந்தால்கூட அவள் கமிட்மென்ட் தான். அதுவே ‘பெஸ்ட்டீ’ என்றால் சிறிது நேரத்தைக் கழித்துவிட்டு, மனைவியைக் காரணம் காட்டிக் கம்பி நீட்டி விடலாம். அவளுக்கு சமுதாய அறிமுகம் தேவையில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவள் அவ்வப்போது அன்பு(?) தேடி இளைப்பாறிக் கொள்ளக் கிடைத்த ஒரு வேடந்தாங்கல்.

அன்பை வெளியில் தேடாமல் தனது துணையிடமே காட்டி இன்பமாக வாழலாமே? வெளியில் இருந்து வருபவர்களின் மனோபாவத்தை நாம் உடனே அறிந்து கொள்ள முடிவதில்லை. தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல் என்ற பழமொழி உண்மையோ உண்மை.

GQ

எல்லாவிதமான அன்புகளும் இறுதியில் படுக்கைக்குத் தானே போய் முடிகின்றன? வெறும் வாய்ப் பேச்சோடு நிற்பவை எத்தனை?

மாற்றான் தோட்டத்து மல்லிகை மணத்தை நுகர்பவர்கள் தனது தோட்டத்து மல்லிகையின் மணம் வீணே காற்றில் கலப்பதை மறந்து விடுகிறார்கள். அது அடுத்தவரின் நாசியைத் தீண்டும் என்பதையும் மிகச் சுலபமாக மறந்து விடுகிறார்கள். திருமண உறவில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை, உணர்வுச் சிக்கல்களை நன்கு உணர்ந்து கொண்டவர்களால் வேலி தாண்ட முடியாது. கூடுமானவரை குடும்பத்தில் குழப்பம் விளைவிக்காமல் இருப்பது ஆண்களின் உடல்நலனையும், மனநலனையும் காக்கும்!

***

கட்டுரையாளரின் மற்ற படைப்பு:

படைப்பு:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.