” பித்தாள தோண்டியத் தூக்கியிட்டு ஒங்க ஆயி என்னா இந்தப்பக்கம் போவுது”, என்று மகனிடம் யாராவது கேட்கலாம். என்ன செய்வது…நல்ல தண்ணிக்கிணற்றுக்கு எதிர்த்திசையில்தானே வட்டிக்கடை செட்டியார் குடியிருக்கிறார். கேட்டுவிட்டால் மட்டும், ”அய்யோ எங்கம்மாளுக்கு என்ன கஷ்டம்”, என்று அதறிப்பதறவா போகிறான். காதில் விழாத மாதிரி போவான். இல்லையென்றால் கேட்டவர்களிடமே வீம்புச்சண்டைக்குப் போய் ஆணாயிருந்தால் கைகலப்பில் முடியலாம்.  பெண்ணாயிருந்தால் ஏழேழு தலைமுறைக்கும் சேர்த்து மண்ணை வாரியள்ளி விட்டுவிட்டுப் போக நேரிடலாம்.

செட்டியார் வாடகை வீட்டில்தான் இருக்கிறார், எப்போது வேண்டுமானாலும் தேவகோட்டைக்குத் திரும்பிவிட வசதியாக. ஆனாலும் ஊருசனத்தின் அத்தனை ஆவதேவைக்கும் அவர்தான் நம்பிக்கை. அடுக்கு அடுக்காக வரிசையில் முன்னறை, கூடம், உள்ளறை என்று பாத்திரங்கள் அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்தால் பாத்திரக்கடை தோற்றுவிடும்.

அண்டா, குவளை, தவலை, குடம், சொருகுசட்டி, தூக்குவாளி என்று ரகரகமாகப் பிரித்து சுண்ணாம்பில் எண் போட்டு அடுக்கப்பட்டிருக்கும். முன்னறை மேசையில் கணக்குப் பேரேடுகள். நாற்காலியிலோ,சாய்வு நாற்காலியிலோ இப்போதுதான் குளித்து பூசை பண்ணியதைப்போன்ற பொலிவில் சோமு செட்டியார் உட்கார்ந்திருப்பார். வள்ளியம்மை ஆச்சி நட்பின் அவதாரம்.  ஊரே சிநேகிதம்.  ஆனால்,தொழிலில் இது குறுக்கே வந்துவிடாதபடியான கோடு போட்டுக்கொள்ளும் வித்தைதான் அவர்களை இங்கே இருபதாண்டுகளுக்கு மேல் நிலைநிறுத்தி வைத்திருந்தது.

வட்டியைப் பிடித்துக்கொண்டுதான் கொடுப்பார்- அது கல்யாணமாயிருந்தாலும் சரி, கருமாதியாயிருந்தாலும் சரி. ஆறு மாதத்திற்குள் மீட்கவில்லையென்றால், மொத்தமாக ஒரு நாள் ஏலம் என்று எழுதிப்போட்டு விடுவார்.   அதற்கு இரண்டு நாள் முன்வரை மீட்டுக் கொள்ளலாம். எல்லோருடைய பொருளாதார ஏற்ற இறக்கங்கள் நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டே வருவார். அதற்குத் தகுந்தாற்போல்தான் கொடுக்கல் வாங்கல். ‘ படைச்ச அப்பனே வந்து கேட்டாலும் ஈடு வைக்க என்ன கொண்டாந்தே’, என்றுதானே சோமு செட்டியார் கேட்பார் எனச் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் அவர் பற்றிப்பேசுவார்கள். ஆனாலும் அவருடைய சேவை அவர்களுக்குத் தேவையாக இருந்தது.

மூன்று பிள்ளைகளில் இன்னும் கல்யாணத்துக்குப் பாக்கியிருந்த மெய்யம்மைதான் கதவருகே நின்றிருந்தாள்.

தண்ணி தூக்கப்போகும் பழக்கத்திலேயே இடுப்பில் வைத்துக்கொண்டு வந்த தோண்டியைக் கீழேவைத்துவிட்டு வியர்வையைத் துடைத்துக்கொண்டாள் சிவகாமி .

” அப்பிச்சி இல்ல…”, மெச்சி மெதுவாகச் சொன்னாள்.

” எப்பம்மா வருவாவோ”

” ரெண்டு நாளாவுங்க்கா, ஊருக்குப் போயிருக்காக”

கோயிலுக்கோ,கடைத்தெருவுக்கோ போயிருக்கலாம் என்ற தன் ஊகம் உடைவதை உணர்ந்தாலும் கண்ணீர் பெருகாமல், கவனமாக எங்கோ பார்ப்பதுபோல் தலையைத் திருப்பி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

இதோ இந்த வீட்டின் நடுக்கட்டில்தான் ஆசையாய் வாங்கிய சைக்கிள் நிற்கிறது. உடம்பு வணங்கி எந்தத் தொழிலையும் கற்றுக்கொள்ளாமல் எடுபிடியாகவேதான் வாழ்ந்தான் பழனி.

அதற்குக்கூட யாராவது சற்றுத்தொலைவில் போய்வர வேலையிட்டால் சைக்கிள் இருந்தால் சவுகரியம் என்று அவன் முணங்கிக்கொண்டே இருந்ததற்காக, ஒரு சீட்டு போட்டு சிவகாமி வாங்கியது அந்த சைக்கிள். அது கிடக்கட்டும்…கசர் காசு வீணாகிவிடக்கூடாது என்று தள்ளுவண்டிக்காரரிடம் மாதமொன்றாக வாங்கிய தம்ளர் வட்டா கூட இங்குதான் ஏதோ ஒரு அடுக்கில் நிற்கிறது.

குடி பெருகியபின் அவள் வீட்டிலிருக்கும்போதே சிவகாமிக்குத் தெரியாமல் கைவாகாக மறைத்து எடுத்துவரப் பழனிக்கு சின்ன ஐட்டங்கள்தான் தோது.

ஒருமுறை கொட்டுகொட்டெனக் கொட்டும் மழையில் தொப்பலாக நனைந்தபடி பாத்திரம் தேய்க்க வருகிறாளே எனச் சேர்மன் வீட்டில் ஒரு குடை கொடுத்தார்கள். அடுத்த மழைக்கும் அப்படியே நனைந்து கொண்டுதான் போக வேண்டியிருந்தது.

” அவுரு எடுத்துட்டுப் பொயிட்டாரு”, எனத் தனக்குள்ளாகப் பேசுவது போல சொல்லிக்கொண்டு புடவையைப் பிழிந்துகொண்டு நின்றவளிடம், ” என்னா, சாராயக்கடக்கிப் போயிருச்சா கொட?”, சேர்மன் மகனின் கிண்டலான கேள்வி வந்து விழுந்தபோது நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் போல்தான் இருந்தது. குடை மட்டுமா? சுவரில் தொங்கிய கடிகாரம், பேட்டரிலைட் உள்பட எல்லாம் அங்குதானே போனது. எத்தனைமுறை நாக்கைப் பிடுங்கிக்கொள்ள முடியும். 

புலம்பினால், ” எச்சியாப் போயிடுமேன்னுதானம்மா யோசிக்கிறே”, என்று சிரிப்பாள் மகள்.

கல்யாணமாகி வந்தபோதே தெரியும் பழனிக்குக் குடிப்பழக்கம் இருக்கிறது என்று.

” யாருதான் குடிக்காம இருக்குறான்…அப்புடித் தேடணும்னா எங்கியாச்சும் சீமயிலதான் ஒம்மவளுக்கு மாப்புள பாக்குணும்”, வீட்டுத்தலைவன் இல்லாமல், யாரோ பாடி பரதேசி வழிகாட்டலில் மகளுக்குக் கல்யாணம் செய்ய முடிவதிலேயே கண்நிறைந்து போயிற்று அவள் தாய்க்கு.

பேருபெத்த ஊருல கட்டிக் குடுத்துருக்கு என்றுவேறு பெருமை. ஏதோ மகளுக்குச் சோறில்லையென்றால் மன்னார்குடியே திரண்டு வந்து காப்பாற்றிவிடும் என்பதுபோலப் பேசித்திரிவாள்.

S Elaiyaraja, artzolo

ஊர் உலகத்தில் உள்ளதுபோல தேர் திருவிழா என்று ஆசையாக மகள் வீட்டுக்கு இரண்டுநாள் வந்து போகவும் வாய்ப்பில்லாத குடும்பம். ஊரே வெண்ணெய்த்தாழியில் வெண்ணெய் வீசிக்கொண்டு பஞ்சுமிட்டாய், நீர்மோர், வளையல்கடை என்று திமிலோகப்பட்டுக் கொண்டிருக்கும்போது, சிவகாமி வேலைபார்க்கும் வீடுகளில் வந்திருக்கும் விருந்தினர்களுக்காக நாலுகுடம் கூடுதலாக நல்லதண்ணீர் இறைத்துச்சுமந்து கொண்டிருப்பாள்.   அந்த ராஜகோபால சாமி உள்ளே இருக்கும் அலங்காரத்தையும் பார்த்ததில்லை…ஊர்வலக் கூட்டத்திலும் சிக்கியதில்லை….

சும்மா சொல்லக்கூடாது…மாமியாக்கிழவியும் இருந்தவரை கீரைக்கட்டு சுமந்தோ, பதநீர் விற்றோ, அதுவும் முடியாதபோது திருமஞ்சன வீதியோரத்தில் ஒரு சாக்கு விரித்து நாலு கூறு கத்தரி, வெண்டை விற்றோ பத்துகாசு திரட்டுவாள்.

எல்லாமே வயித்துப்பாட்டுக்கே போய்விடுகிறது என்பதைப் பழனியே நம்ப மாட்டான்.

” மாமியாளும் மருமொவளுமா எங்க பொதையல் கட்டி வெச்சிருக்கீங்க… ஒருநாள் இல்லன்னா ஒருநாளு தரையே வெடிச்சிகிட்டு வெளியில வரப்போவுது..அன்னிக்கித்தான் அவுட்டாவும் ஒங்க பொய்யெல்லாம்”, என்று சிரித்தபடியே சொல்வான்.

மாமியார் இறந்தபோது கருமாதி காரியம் செய்யக்கூடக் கையில் காசில்லை என்று இவள் சொன்னதற்கு நம்பாமல் இழுத்துப்போட்டு உதைத்தான். கொத்தாகத் தலைமயிர் இழுபடுவது தாளாமல் மகள் அலறும் அவலம் நெஞ்சை அறுக்க, ” என்னா கருமாதிக்கு காசு வேணும் அவ்வளதான… எந்தலய அடவு வெச்சாச்சிம் நா குடுக்குறன்…எம்மவள வம்பாடு படுத்த வேணாம்”, எதிர்நின்று மருமகனிடம் பேசும் வழக்கத்தையும் மீறி கண்சிவக்கச் சொல்லிவிட்டுப் படி இறங்கினாள்.

சொன்னதுபோலக் கொண்டுவந்து கொடுத்தபோது, ” அப்ப…அந்தப் பொதையலு  ஓவர்ச்சேரியிலதான் இருக்குன்னு சொல்லு…அட்றா சக்கன்னானாம்”, என்று வெடிச்சிரிப்பு சிரித்தான்.

கிணற்றில் நீர் இறைத்து இறைத்துச் சிவந்து எரியும் தன் உள்ளங்கையைப் பார்த்தபடி பேசாமல் உட்கார்ந்திருந்தாள் சிவகாமி. பல்வலி வந்தபோது மாமியார் சொல்லிப் புகையிலையைக் கிள்ளிக் கடைவாயில் அதக்கிக்கொள்ளும் வழக்கம் ஒருவகையில் இதற்கு உதவியாகிவிட்டது.  ஊறும் எச்சில் சிந்தாமல் இருக்க என்று பேச்சைக் குறைத்தாயிற்று.

‘ வாழைக்குக் கீழ்ங்கன்னு வெச்சிப் பயிராக்கியிருக்குங்கிற’ மாதிரிதான் மகன் வளர்ந்தான்.  வருடந்தப்பாமல் ஃபெயிலாகி ஒருகட்டத்தில் அது அலுத்துப்போக  டீக்கடை பெஞ்சு, வாய்க்கால் மதகுக்கட்டை, கோபுரவாசல் என்று கூட்டமாய்த்திரிய பிடித்துப்போனது அவனுக்கு. சற்று நேரந்தவறினாலும், ” கோபி இருக்கானா”, என்று தேடிவரும் ஆளின் சைக்கிளில் கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு ஏறிவிடுவான்.

வீடு எப்படி நடக்கிறது.. அப்பா ஏன் இப்படிக் குடித்துப்புரண்டு எங்காவது கிடக்கிறார்…அம்மா ஏன் யார்யார் வீட்டிலிருந்தோ மிச்சம் மீதியைக் கொண்டுவந்து பசியாற்றுகிறாள்…பள்ளிக்கூடத்தில் தரும் சீருடையையே விடுமுறை நாளில்கூடத் தங்கை ஏன் போடுகிறாள்…என்றெல்லாம் அவன் மனதில் கேள்விகளே வராதா என்று ஏங்குவாள் சிவகாமி.

” சொல்லிக்குடுத்து வளத்துருக்கணும்…நம்ம நடவாளு ரெத்தினத்தப் பாத்தீல்ல? புருசனும் பொண்டாட்டியும் இன்னம வேலக்கி வரமாட்டாவொளாம். மொவன் வாத்தியாரு வேலக்கிப் போனதும் உத்தரவு போட்டுட்டான். நமக்கு வேல செரமந்தான்…ஆனா ராப்பாடு பகபாடு பட்டு புள்ள வளத்தா நல்லாருன்னு சொல்லி வெத்தல பாக்கும் அஞ்சு ரூவாயும் குடுத்து அனுப்பிவுட்டாவோ ஒங்க ஐயா”, சேர்மன் மனைவி சமைத்தவாறோ அடுப்படியை ஒழித்தவாறோ சிவகாமியிடம் பேக்கொண்டிருப்பாள். கடவாயில் நிற்கும் புகையிலை காரணமாக பதிலாக ஒரு வார்த்தையும் பேசாவிட்டாலும் செவ்வாமியிடம் எதையாவது சொல்லிக்கொண்டே இருந்தால் அந்த அம்மாவுக்கு விறுவிறுப்பாக வேலை நடப்பதுபோல ஒரு உணர்வு.

ஆக, மாடுகள் பராமரிப்பு, தோட்ட காரியங்களைச்செய்ய ரெத்தினம் வரமாட்டாள். வயல் வேலைகளில் அவள் புருஷன் இடத்துக்கு சேர்மனே யாரையாவது வைத்துவிடுவார். தினம் ஒரு இலையை நறுக்கிவந்து ரெத்தினம் கொல்லைப்படியருகே வைக்க, பழையதோ குழம்போ கொடுக்கும் வேலை சிவகாமியுடையதுதான். பேசாமல் தானே அந்த வேலைகளையும் செய்வதாகச்சொல்லி இன்னும் கொஞ்சம் பணம் கேட்டு வாங்கலாமா … பத்துப்பதினைந்து மாடு நிற்கிறது…சாணியள்ளி மாட்டுக்கொட்டாயைக் கழுவி, கவணையில வைக்க பாத்து எடுத்துப்போட்டு தண்ணி, புண்ணாக்குன்னு பக்குவம் பண்ண ரெத்தினத்துக்கு அரநாளு ஆயிடும். வாசல் தெருவுன்னு கூட்டியள்ளவே அவ்வளோ வேல கெடக்கும். எல்லாம் சமாளிக்க ஏலுமா… 

யோசித்து யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்கும் போதே வேறு ஒருத்தி வந்துவிட்டாள்.

இன்னும் கொஞ்சம் வேலை செய்யலாமே என்று யோசிக்கத் தொடங்கியது நிற்கவில்லை. மணலிக்காரர் வீட்டில் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த காத்தாயி இறந்துவிட்டாள் என்ற செய்தி காதில் விழுந்ததும் அங்கு போய் நின்றாள்.

” ஏன்..சேர்மன் வூட்டுல எதுவும் தாங்கலா…” என்றாள் அந்தம்மா.

அங்கு கிடைக்கும் இடைப்பட்ட நேரத்தில்தான் வர முடியும் அதற்கு சம்மதமென்றால்  வருகிறேன் என்றாள் சிவகாமி. அவள் குடும்ப நிலை பற்றி யாருக்கும் விளக்கத் தேவையில்லை.

” ஐய்யினாராட்டம் திரியிறானுவொ அப்பனும் மொவனும் …நீ இப்பிடி தேயிற….என்ன சொல்றது…கஷ்டம்னு வந்து நின்னுட்ட…செரி வா…ஆனா அப்பறம் அங்க ரொம்ப வேல முடியல கிடியலன்னு சொல்லக்கூடாது செவ்வாமி”, கட்அண்ட் ரைட்டா பேசினாலும், அந்தம்மாவுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.

சேர்மன் வீட்டில் பித்தளை சாமானெல்லாம் பளபளவென்று நறுவிசாகத் தேய்த்துத் துடைத்து வைக்கும் சிவகாமியின் ‘ தெறவுசு’ அவள் அறிவாள்.

என்ன தெறவுசு இருந்து என்ன..ஒரு வீட்டுக்கு ரெண்டு வீடா ஒழச்சி ஒருத்தர் மனசும் கோணாமல் உழைத்தாலும் எப்போதும் இழுபறிதான். மணலிக்காரர் வீட்டில் எப்போது தாராளமாக இருப்பார்கள் எப்போது பிசுநாரித்தனம் செய்வார்கள் என்று சொல்ல முடியாது.

” ஏம்மா எலயில வெச்சி எடுத்திட்டு வந்த நாலு இட்டிலிய அந்த ஆச்சி நடுவால பூந்து நாலு என்னத்துக்கு, மூணு குடு போறும்னு ஒண்ணத் தூக்கிட்டுப் போச்சுன்னு நீதான சொன்ன…இப்ப அவ்வோ வூட்டுக்கு மாவிடிக்கணும்னு கூப்புடுறியே”

பாயிண்டாதான் பேசுது குட்டி என்று நினைத்தாலும், ” பொல்லாப்பா உள்ளத வுட்டுறணும் பாப்பா…தீவாளிக்கு ஒனக்கும் சேத்து பாவாட எடுத்துக் குடுத்தாவள்ள…”, சொல்லி முடிக்குமுன், ” எல்லாம் ஒரு யோசனதான் ஒன்ன மாறி ஆளப்பத்தி அவ்வொளுக்குத் தெரியாதா….இப்ப இதுக்கென்ன தனி காசா குடுப்பாவொ”, முனகிக்கொண்டே கிளம்பினாள்.

மகள் வீட்டுக்குத் தஞ்சாவூர் போவதென்றால் இடியாப்ப மாவு தொடங்கி அந்தப்பொடி இந்தப்பொடி என்று மூட்டைகட்டிக்கொண்டு கிளம்புவாள் அந்த அம்மா. இன்றைக்கென்று பார்த்து சேர்மன் வீட்டுக்கு யாரோ கட்சிக்கார தலைவர் வருகிறாராம். ஆடு கோழியென்று நேற்றே திமிலோகப்பட்டது. வேலை நெட்டித்தள்ளி விடும். வழக்கம்போல ஏனம் விளக்கி கொல்லை கூட்டுவதென்றால் ஓடிப்போய் வந்துவிடலாம்.

ஆனால் இந்த சிங்கிநாத வேலையையெல்லாம் இன்றே முடிக்க வேண்டும் என்று பரபரக்கிறாள் அந்த அம்மா.

கை உலக்கை மழுமழுவென்று வாகாக இருக்கும் நீ இந்த வேலையைச் சுளுவாகச் செய்து விடலாம் என்று மகளைத் தாஜா பண்ணிக் கொண்டிருக்கிறாள் சிவகாமி.

S Elayaraja, artzolo

வீட்டுத்துணிகளை எடுத்துக்கொண்டு போய்த் துவைத்து வருவது, என்றைக்காவது அதிசயமாகச் சுடுசோறுவடிக்கவேண்டுமென்றால் செய்வது என்று வழக்கமாக ஒத்தாசை செய்பவள்தான்.

தீபாவளிக்குப் பலகாரம் சுடும் நேரம் சேர்மன் வீட்டுக்கு ஒத்தாசைக்காக அழைத்துப் போயிருந்தாள். அந்த சேதிதான் இன்று வேண்டாமே நாளை இடித்துத் தருகிறேனே என்று சிவகாமி சொன்னதையும் தாண்டி, மணலிக்காரர் வீட்டம்மாவை இன்றே இப்பொழுதே என்று உசுப்பி விட்டுவிட்டதோ.

மகளைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத்துப்போய் அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு சேர்மன் வீட்டுக்குப் போய் அம்மியைப் பிடிக்க ஆரம்பித்ததுதான். அதை நறுக்கி, இதைக்கழுவு என்று ஒருவாய் நீராரம் கூட இல்லாமல் நீண்டு கொண்டிருந்த போதுதான், யாரோ ஒரு பையன் ஓடிவந்து மூச்சிறைக்க, ” ஒங்கள ஒடனே வர சொன்னாவோ மணலிக்கார வூட்ல…ஒங்க மொவளுக்கு அடிபட்டுச்சாம்”, சொல்லிவிட்டு ஓடிவிட்டான் .

முறைத்துக்கொண்டிருக்கும் சேர்மன் மனைவியிடம், ” ந்தா வந்துர்ரன்”, என்று சொல்லிவிட்டு ஓடிப்போய்ப் பார்த்தால், கால்விரல் நசுங்கி ரத்தம் பெருக அழுதுகொண்டிருக்கிறாள்.
” கொடகல்லுல ஒக்காந்து கை ஒலக்கையப் போட்டுதான் இடிக்க சொன்னேன்…பருப்புப்பொடி ஒளுங்கா இடிச்சிட்டா…ந்நா கொத்தமல்லிப்பொடி ஒரல்ல கெடக்கு…கால்ல போட்டுகிட்டு …”, வேலை கெட்டுப்போன எரிச்சல்தான் அவர்களுக்கு. “கொஞ்சம் மொளாத்தூளு குடுங்க ஆச்சி”, என்று வாங்கி காயத்தைக் கழுவி, எரியுதே எரியுதே என்று அவள் அழ அழ அப்பிவிட்டு, ” இஞ்சியே ஒக்காந்திரு..ந்தா வாரன்”, என்று ஓடத்தொடங்கியவளிடம், ” எஏட்டீ …வறுத்த மல்லி நமுத்துப்போயிடும்டீ…அத செத்த இடிச்சுப் போட்டுட்டுப் பொயிரு”, என்று கூவிய கிழவியிடம்..” ஆச்சீ …அங்ஙன கொளம்பு சாமான் அம்மியில கெடக்கு…விருந்தாளி வந்துட்டாவொ….பத்து நிமிசம் அத ஓட்டிக்குடுத்துட்டு ஒடியாந்துர்ரன் மூடியப்போட்டு வைங்க”, பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினாள்.

எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்த சேர்மன் மனைவியின் முனகல்களைப் பொருட்படுத்தாமல் வேலை முடித்து, அரக்கப்பரக்க வந்து குடைகல்லில் கிடந்த  கொத்தமல்லியை இடித்துக்கொடுத்து என்று இருவீட்டுக்கும் மாறி மாறி ஓடி வேலை முடித்ததில், நடுவில் எதுவும் சரவை இல்லாமல் ஒரு ஓரமாக மகள் தூங்குவதே போதும் என்றிருந்தது.

ஆனால் இரும்பு உலக்கை விழுந்த வேகம் கடுமையாக இருந்துவிட்டது போல. மிளகாய்த்தூள், மஞ்சள்பற்று, குப்பைமேனி என்ற இவள் சிகிச்சைகளைப் போய்ட்டுவா என்று பழுக்கத் தொடங்கிவிட்டது. கெவுருமென்டு ஆஸ்பத்திரிக்குப் போனால் டாக்டர் இல்லையாம். வேலையைக் கெடுத்துகொண்டு காலைநேரம் வந்து அலையாதே என்று அங்கிருந்த கம்பவுண்டர் ஆலோசனைப்படி கடைத்தெரு கிளினிக்குக்குப் போனாள். அந்த டாக்டர் இலவசமாகக் கொடுத்த ஒரு சாம்பிள் மாத்திரையில் வலி மறந்து மகள் தூங்குவதிலேயே, இவர்தான் தெய்வம் என்று தோன்றியது.  நாளை புண்ணை அறுத்து சீழெடுத்துக் கட்டுவார்களாம். நூறு இருநூறு கையில் வைத்துக்கொள், என்றாள் அந்த ஆயாம்மா.

இரண்டுவீட்டிலும் முதலுக்கு மிஞ்சி வாங்கி வைத்திருக்கிறாள். மல்லிப்பொடி வாசம் குறைந்துவிட்டதென்று ஒரு வீட்டிலும், விருந்தாளி வந்த நாளில் பொறுப்பாக வேலை நடக்கவில்லையென்று இன்னொரு வீட்டிலும் முறைத்துக்கொண்டு வேறு இருக்கிறார்கள்.

வாயைத்திறக்க முடியாது. வழக்கம்போல அப்பனும் மகனும் அவரவர் கவலை அவரவர் கூட்டம்….

 பொத்தல் விழுந்து மேலே கிடந்த பித்தளைத் தோண்டி நினைவுக்கு வந்ததும் அத்தனை தெம்பு கிடைத்திருந்தது சிவகாமிக்கு.

சோமு செட்டியார் ஊரிலிருந்து வந்துவிட்டால் நிச்சயம் பித்தளைத்தோண்டி கை கொடுக்கும். இந்த இரண்டு நாளைக்கு யாராவது கைமாத்து கொடுத்தால் கூட சமாளித்து விடலாம். தண்ணியில்லாத வெற்று தோண்டியை இடுப்பில் வைத்தபடியே திருமஞ்சன வீதியை அளப்பவளாக நடந்து கொண்டிருக்கிறாள் சிவகாமி.
       

***

கொத்தமல்லிப்பொடி

பொதுவாக பருப்புப்பொடி கறிவேப்பிலைப்பொடி போன்றவை இன்று
ரெடிமேடாகவும் கிடைக்கிறது. வீடுகளிலும் செய்வதுண்டு. கொத்தமல்லிப்பொடி  வீடுகளில் மட்டுமே செய்யப்பட்டது.

காய்ந்த மல்லி ( தனியா) 100 
வற்றல் மிளகாய் 10 
உப்பு
தோல் எடுக்காத பூண்டு பல் 4
எண்ணெய் இல்லாமல் மிளகாய் வற்றலையும், மல்லியையும் தனித்தனியாக நன்கு சிவக்க வறுத்துக்கொள்ள வேண்டும். கருகிவிடக்கூடாது. தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக இடித்துக்கொள்ளவும். மிக்சியில் சீக்கிரம் மாவாகிவிடும். சற்று கொரகொரப்பாக இருக்கலாம். தோல் உரிக்காத பூண்டுப்பல்லைக் கடைசியாகப் போட்டு ஒரு சுற்று விட்டு எடுத்து
வைத்துக்கொள்ளவும். சுடு சோற்றில் போட்டு நல்லெண்ணெய்
சேர்த்து சாப்பிடலாம்.

படைப்பாளரின் மற்றொரு கதை

படைப்பு:

உமா மோகன்

கவிஞர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், வலைப்பூ பதிவர் என பன்முகம் கொண்ட ஆளுமை உமா மோகன். புதுச்சேரி அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணிபுரியும் இவர், நேர்முகங்கள் காண்பதில் தேர்ந்தவர். கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றில் ஆர்வமுண்டு. ‘டார்வின் படிக்காத குருவி’, ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’, துஅரங்களின் பின்வாசல்’, ‘நீங்கள் உங்களைப் போலில்லை’, ‘தழையுணர்த்தும் சிறுவாழ்வு’, உள்ளிட்ட ஒன்பது கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். ‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பும், ‘வெயில் புராணம்’ என்ற பயணக் கட்டுரைத்தொகுப்பையும் எழுதியிருக்கிறார். வார, மாத இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.