ஜெயந்தி சங்கர்

2015 முதலே ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதிவரும் ஜெயந்தி சங்கர், 1995 முதல் இலக்கியவுலகில் தொடர்ந்து இயங்கி வருபவர். தற்போது ஆங்கிலத்தில் தனது முதல் நாவலை எழுதி முடித்து நூலாக்கத்திற்காகக் காத்திருக்கும் இவர், தனது ஆங்கிலச் சிறுகதைகளை  ‘ஊசலாடும் காந்தி’ நூலில் தானே மொழியாக்கம் செய்துள்ளார்.  இவை Dangling Gandhi என்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளின் தமிழ் வடிவம். 

Dangling Gandhi என்ற இவரது ஆங்கில நூல் இரண்டு முக்கிய அனைத்துலக விருதுகளையும் இந்தியாவில் சில விருதுகளையும் வென்றுள்ளது. இவரது ஆக்கங்கள் வேற்றுமொழியில், குறிப்பாக ஆங்கிலம், ரஷ்யம், இந்தி, ஃபிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்ப்பு கண்டு வருகின்றன. தமிழ் நூல்களுக்கு ஆனந்தவிகடன் நம்பிக்கை விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் முக்கிய விருதுகளும் வாங்கியுள்ள இவரது ஒவ்வொரு நூலுமே ஏதோவொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அண்மைக்காலமாக ஓவிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அவருடன் மின்னஞ்சல்மூலம் நேர்காணல் செய்தவர்: நிர்மலா.

(‘ஊசலாடும் காந்தி’ மொழியாக்க நூலை முன்வைத்து)

நிர்மலா: இந்தத் தொகுப்புல சில கதைகள் 60, 70 வருஷம் முன்னால நடக்கிறதாக இருக்கிறது. அந்தக் காலத்து விஷயங்களில் உங்களுடைய பார்வை/கோணத்தைப் பதிவு செய்யும் முயற்சிகளா இக்கதைகள்?

ஜெயந்தி சங்கர்: இந்தச் சிறுகதைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. சில நண்பர்களின் ஆலோசனையின் பேரில் நானே பிற்பாடு தமிழாக்கம் செய்தேன் என்பது சின்னத் தகவலுக்காக. அது ஒருபுறமிருக்க, அந்தக் காலத்து மனிதர்களை அவர்கள் காலத்தில் உலாவ விட்டு, கதை எழுதுகையில் ’என் பார்வையைப் பதிவு செய்வது’ போல வாசிப்பவருக்குத் தோன்றுவதும் இயற்கைதான். எனினும், அதுமாதிரியான நோக்கங்கள் என்னில் இல்லை.

பலருக்கும் நடப்பது போலவே எனக்குள்ளும் பலவேளைகளில் காதால் கேட்கும் சம்பவங்கள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும். நான் என்னுடைய முன்னோர்கள், மிக நெருக்கமானவர்களின் முன்னோர்கள் குறித்து கேட்க, அறிய நேரும் போதெல்லாம் வியந்துஅவற்றை அசை போடுவதுண்டு. குறைவாகப் பேசி, அதிகமும் எனக்குள்ளேயே பலவாறாக சிந்தித்திருப்பேன். அவ்வாறு என்னால் அறியப்படுபவர்களில் சிலர் மட்டுமே என்னுடைய ஆழ்மனத்தில் அழுந்தத் தங்கி விடுவதையும் உணர்ந்திருக்கிறேன். அவ்வப்போது அவர்கள் என் மனவெளியில் மேலெழும்பி உயிர்ப்போடு உலாவி வருவதையும் என்னோடு உரையாடுவதையும் உணர்வேன். அப்படி என்னுடன் வாழும் உண்மையான மனிதர்களாக, அவர்கள் சில வேளைகளில் கதாபாத்திரங்களாக திரண்டு எழுவதுமுண்டு.

நிர்மலா: உங்கள் பார்வையை பதிவு செய்வதாக இருந்தாலும் சரிதான். தகவல்கள், வாழ்க்கை அவர்களுடையதாக இருந்தாலும் கேட்கும்போதும் பிறகு அவற்றை அசை போடும்போதும் அது நம்முடைய எண்ண ஓட்டங்களில் நிகழ்த்தும் மாறுதல்கள் நிஜமானவை. ஒரு தகவல் வந்து சேர்வதற்கு முன்னால் இருந்த நான், சேர்ந்த பிறகு வேறாகிறேன். அசை போடும்போது அந்த எண்ணம் வலுப்பெறுகிறது அல்லது விலகிப் போகிறது. அது உங்களுக்கும் நிகழ்ந்திருக்குமே?

ஜெயந்தி சங்கர்: சந்தேகமே இல்லாமல் எனக்குள், ஏன் பெரும்பாலோருக்குள் நடப்பதுதான் அது. தகவல் மட்டுமல்ல, அனுபவங்களுக்கும் அது பொருந்தும். அப்படி அசைபோடுகையில் என்னைவிட்டு விலகிப் போனவைதான் மிக அதிகம். என்னுடனேயே ஆழத்தில் தங்கிக் கிடந்து பிற்பாடு ஆக்கமாய் மேலெழுபவை அதனினும் மிகக்குறைவுதான். அவ்வாறு திரண்டு எழுந்தவைதான் இக்கதைகள்.

நிர்மலா: இவை என்ன பாணி கதைகள்? வழக்கமாகக் கதைகளில் கதை முடியும் இடங்களில் இவை முடிவதில்லை. அதைத் தாண்டியும் கதை நகர்ந்து நிற்கிறது. இது தானாக நிகழ்ந்ததா? அல்லது எழுதும்போது உதித்த ஒரு யோசனையைத் தொடர்ந்தீர்களா? 

ஜெயந்தி சங்கர்: இந்தக் கேள்வி எழும் இக்கணத்தில்தான் இவற்றின் வகைமைசார்ந்தே சிந்திக்கிறேன். 12 கதைகளில் ஒவ்வொன்றையுமே வெவ்வேறு வகைமைக்குள், பாணிக்குள் அடக்க முடியலாம்; திட்டவட்டமாக அது முடியாமலும் போகலாம். அதேபோல ஒரே கதை இருவேறு வகைமைக்குள் பொருந்தியும் வரலாம்.

இக்கதைகளில் பாதி ’ஹிஸ்டாரிகல் ஃபிக்‌ஷன்’ என்ற பொதுவகைமைக்குள் வரக்கூடியன என்பது எனக்குத் தோன்றுவது. மற்ற கதைகள் சமகாலத்தைப் பேசுபவை என்றபோதிலும் வடிவத்தில் பல சோதனை முயற்சிகளைக் கொண்டவை.

எழுதியதும் சீராக்குகையில் நடமாடும் சொல்லகராதி, விசிறி இழுப்பவன், தாய் ஆகிய சிறுகதைகள் ஒரு நாவலை/குறுநாவலை உள்ளடக்கி இருந்த உணர்வை எனக்குள் ஏற்படுத்தின.  சரி, தவறு என்பதையெல்லாம் கடந்தும் என் வரையில் இவற்றில் ஒருவித வடிவ மீறலையும்கூட உணர்ந்தேன். தேர்ந்த வாசகர்கள் சிலரும் அதனையே சொன்னபோது என் உணர்வு உறுதிப் பட்டது.

இயல்பாகவே அமைந்தவைதான் இக்கதைகள். அதில் எந்த சந்தேகமுமில்லை. இருந்தபோதிலும், எந்தப் படைப்பாளியுமே கதைகள் புனைகையில் விதவிதமான சோதனை முயற்சிகளில் ஈடுபடுவார் தானே? அப்போது கதை சொல்லல் முறையில், ஆகவே உத்திகளில், ஆகவே மரபு மீறல்கள் உள்ளிட்ட பரிட்சார்த்தங்கள் நிகழ்ந்தவாறே இருக்கும் தானே? எடுப்பு, தொடர்பு, முடிப்பு என்ற சிறுகதைகளுக்கான வழக்கமான கலயம் படைப்பாளிக்குப் போதாமலாகும்போதோ சலிப்பேற்படும்போதோ வேறு கலயத்தில் ஆக்க முயல்வதும் மிக இயல்பாகிறது.

நிர்மலா: இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சில நேரங்களில் அவை நாம் எதிர்பார்க்காத வண்ணம் அதற்கான போக்கை தீர்மானிப்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். எந்தப் படைப்பும் அதனளவில் தனித்துவம் வாய்ந்தது, மனிதர்களைப் போலவே. இல்லையா?

ஜெயந்தி சங்கர்: நச்சென்று சொன்னீர்கள். ஒவ்வொரு ஆக்கமுமே அதனதன் அளவில் முக்கியம்தான். வாசிக்கும் நாம்தான் நமது மூளையையும் மனத்தையும் சற்றே நெகிழ்த்திக் கொண்டு படைப்பாளியைக் கொஞ்சம் மறந்துவிட்டு ஆக்கத்திற்குள் புக முயல வேண்டும். அதுதான் அந்தப் படைப்பிற்கு நாம் செய்யும் குறைந்தபட்ச மரியாதை.

நிர்மலா: விசிறி இழுப்பவன், நடமாடும் சொல்லகராதி- மிகவும் ஆரம்பகால சிங்கப்பூரைப் பற்றியது. ஒரு சிறந்த டாக்குமெண்டேஷன். உழத்திப் பெண் பர்மிய நிலம், தாய் ஷில்லாங். நிறைய ரிசர்ச் செய்தீர்களா?

ஜெயந்தி சங்கர்:  ’உழத்தி பெண்’, நாங்கள் முன்பு குடியிருந்த (சிங்கப்பூரில்) வீட்டின் அண்டை வீட்டில் பணியாற்றிய பர்மியப் பணிப்பெண்ணை, அவள் பகிர்ந்து கொண்டவற்றை வைத்துப் புனையப் பெற்றது.

’தாய்’ கதையில் வரும் மதர் செசில் நிஜமான மனுஷி. நான் ஷில்லாங்கில் பள்ளிப்படிப்பு பயில்கையில் எங்களுக்குக் கற்பித்தவர். பூகம்பத்தால் பாதிக்கப்பெற்றவர்களும், பிரிவினைப்போக்குகள், கலவரங்களால் பாதிக்கப்பெற்றவர்களும் தங்களுடைய மூதாதையர் சொன்ன அனுபவங்களை, தொன்மக் கதைகளை நிறையவே நான் அப்போது கேட்டதுண்டு.

சில சிறுகதைகள் காலங்களை, நிலப்பரப்பை எல்லாம் கடந்தும் விரிகின்றன என்பதாலும் அவ்வந்த காலகட்டம், அவ்வந்த நிலப்பரப்பு சார்ந்த உணர்வுகளை வாசகனுக்குள் உருவாக்கி அதனூடே கதைகள் சொன்னால் முழுவதுமாக உள்வாங்க முடியும் என்பதாலும் கருப்பொருள்கள், கதைகளின் காலம் ஆகியன கோரிய விவரணைகளை அளவோடுதான் கொடுக்க முயன்றிருக்கிறேன்.

‘நடமாடும் சொல்லகராதி’ என் தந்தையைப் பெற்ற தாத்தாவை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பெற்ற ஒரு கதாபாத்திரம். கதை அவருடையதல்ல. வேறொரு தூரத்து சொந்தக்காரருடையது. தாத்தா பிரமிக்க வைக்கும் ஆங்கிலப்புலமை கொண்டவர். அத்துடன் மூன்று பள்ளிகளை நிறுவியவர்.

அவ்வந்த கதாபாத்திரங்கள் வாழ்ந்த காலம், நிலம் கதைகளில் வருகின்றன. அதற்குத் தேவையான சிறிய ஆய்வுகளை, குறிப்பாக, சரி பார்த்துக்கொள்ள, எந்தக் கதாசிரியரும் செய்வதுபோலவே செய்தேன்.

’விசிறி இழுப்பவன்’ பாத்திரமும் பிரிட்டிஷ் காலத்தில் பஞ்சாப், சிந்து மாநிலங்களில் அவ்வாறாகப் பணியாற்றிய ஒருவரின் பேரன், என் தந்தைக்கு நண்பர். என்னுடைய இளமைக்காலத்தில் ஷில்லாங்கில் வசிக்கையில் அவர் சொல்லக் கேட்டவை முதன்மை கதாபாத்திரம் உருவாக உதவின. இந்த விசிறி இழுக்கும் பணி சீன, இந்திய கலாசாரத்தில் மட்டுமின்றி வேறு பகுதிகளிலும் இருந்திருக்கிறது.  சிங்கப்பூரிலும் விசிறி இழுப்பவர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். 

நிர்மலா: வெவ்வேறு நிலப்பரப்பை/கலாச்சாரங்களை தளமாகக் கொண்டதுதான் இந்தக் கதைகளின் சிறப்பாகச் சொல்லலாம். அந்தக் காலகட்டம் அந்த நிலம் அதன் வாழ்க்கை முறை இவற்றைக் கதைகளின் மூலமாக பதிவு செய்வதை உங்களுடைய எல்லாக் கதைகளிலும் காண முடிகிறது. இந்தத் தகவல் பரிமாற்றம் மற்றும் பதிவு முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது, புனைவையும் தாண்டி. இது ஒரு முக்கியமான விஷயம். இது என்னுடைய அவதானிப்பு. இதைப் பற்றி ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

ஜெயந்தி சங்கர்: இக்கதைகளை, கதாபாத்திரங்களின் மீதான கட்டமைப்பாகக்கூட பார்க்க முடியும். அந்தப் பாத்திரங்கள் வாழும் காலங்களோ வேறு. ஆகவே, நிலப்பரப்பை, நிகழ்பரப்பினூடாக கதாமாந்தர்களையும் அவர்களது கதைகளையும் சொல்ல முயன்றேன். பொதுவாகவே, நம்முடைய எண்ண ஓட்டங்கள், வாழ்க்கைமீதான பார்வைகள் போன்ற அனைத்துமே கலாசாரத்தின் மீதான அல்லது மீறுவது போன்ற தோற்றம் கொண்டவைதான். எத்தனையோ சொல்லலாம், ஆனால் ஒன்றை மட்டும் பார்ப்போம். நீண்ட கூந்தல் கொண்ட பெண்கள் அப்படியே விரித்துப் போட்டுக் கொள்வது வங்காளிகளிடம் சுமங்கலியாகக் கருதுவோர் செய்வது. அதையே தெற்கில் எப்படிப் பார்க்கிறார்கள். நுனியாவது முட்டிச்சிட்டிருக்க வேண்டும் என்பார்கள்.

நிலம் கலாசாரத்தையும் கலாசாரம் நம் வாழ்க்கையிலும் நாம் அறியாமல் ஏற்படுத்தும் கற்பிதங்களும் கோட்பாடுகளும் ஏராளம், ஏராளம். அவை ஏற்கப்படலாம்; மீறப்படலாம்; கேள்விக்குட்படலாம். ஆனால், அவை எப்போதும் மாற்றங்கள் கொண்டபடியேவும் இருக்கின்றன‌. எனக்குக் கதை சொல்வதற்கு அவை அவதானிப்புகளாக முக்கியம் பெறுகின்றன. விரிந்து பரந்த திணைகள் விவரிப்பினூடான சின்னஞ்சிறு சம்பவம் சொல்லும் நமது பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லாததா?

நிர்மலா: ஆசிரியருடைய தேர்வுதான் என்றாலும், நடமாடும் சொல்லகராதியில் ராமசாமி இறந்து போவது எதனால்? ஊசலாடும் காந்தியிலும் கடைசியில் மோகன் இறந்து போவது ஏன்?

ஜெயந்தி சங்கர்: முதியவர் மோகன் இறப்பதுபோல இயல்பாக அமைந்துபோனது. திட்டமிடவில்லை. ’இறக்கும் முன்னர் இளமைக்காலத்தை தீவிரமாக அசைபோடும் மனம்’ என்ற உளவியல் எனக்குள் அங்கே வேலை செய்திருக்கிறது என்று பின்னர்தான் எனக்குத் தோன்றியது. நவீன உலகில் காந்திக்கு, காந்தியத்துக்கு, அவர் போற்றிய அகிம்சைக்கு உருவாகி வரும் ஒருவித தடுமாற்றத்தைக் காட்டுகிறது ‘ஊசலாடும் காந்தி’ படிமம். கதையின் தலைப்பை நூலுக்கு தலைப்பாக்கியதற்குக் காரணம் கதையிலும் படிமமாக மட்டுமே வருவார் காந்தி.

அதேபோல, ராமசாமியின் இறப்பு புனைவில் வந்தாலும், அவருக்குள் விழுந்த இடி அவரை நிலைகுலையச் செய்து விடுவதும், சற்றே தன்னை அவர் மீட்டெடுக்கையில் பெரும் விபத்து ஏற்படுவதுமாக சரியாகவே அமைந்து போனது.

நிர்மலா: ’நான் என்ன ஜாடியா?’ கதை அதிக பரிச்சமில்லாத உலகம். வறட்டு பெண்ணியம் பேசும் ஒரு தலைமுறையின் குழப்பத் தேடல்கள் என்று நினைக்கிறீர்களா?

ஜெயந்தி சங்கர்:  ஆம், சரியாகச் சொன்னீர்கள். நான் அறிந்த சீனக் குடும்பம் ஒன்றில் நான்கு பிள்ளைகளில் மூத்தபெண் காதல் தோல்வியில் தடுமாறியது, அதேநேரத்தில் ஒரு பெண்ணினால் தாக்கமேற்பட்டதும் தானும் மிகக் குழம்பி குடும்பத்தினரையும் குழப்பினாள். அது என்னை மிகவும் யோசிக்க வைத்தது.

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஒருபாலுறவு கொள்ளும் ஆண்களுக்கு, பெண்களுக்கு தனி ‘பார்’களும் ‘க்ளப்’களும் இயங்குகின்றன. அங்கே அவர்கள் கூடுவதும் அளவளாவுவதும் நடக்கும். இந்த இடங்கள் மற்ற வழக்கமான ‘பார்’கள் ‘க்ளப்’களிலிருந்து பெரிய வேறுபாடுகள் ஒன்றும் இல்லாதவை. மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்குள்ளும் போட்டி, பொறாமைகள், அன்பு, காதல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பலவிதமான உணர்வுகளும் நிலவுகின்றன.

நிர்மலா: ’சர்ச்சிலுக்குத் தெரிந்திருக்குமா?’ என்ற கதையில் தாத்தா கல்யாணமே கட்டல, அம்மா பாட்டி ரெண்டு பேருமே கர்ப்பப்பை கோளாறால இறந்து போனாங்க. ஆனி இறந்து போன விதம், இழப்புகளில் இருந்து மீள் முடியாத ரெண்டு பேர், சர்ச்சில் இதை எல்லாம் எப்படி இணைக்க நினைத்தீர்கள்?

ஜெயந்தி சங்கர்:  மூணாறுதான் இவற்றையெல்லாம் மிக இயல்பாக எனக்குள்ளே இணைத்தது! மூன்றாண்டுகளுக்கு முன்னர் நான்கு நாளைக்கு அங்கே தங்கியிருந்து கொஞ்சம் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது கண்ட, கேட்ட அனைத்துமே துண்டு துண்டாகத் தோன்றிய போதிலும் சீக்கிரமே ஒன்று திரண்டு கதையாக உருக்கொள்ளும் என்று நானே எதிர்பார்க்கவில்லை.

இழப்புகளிலிருந்து மீள முடியாத இருவரது தற்செயலான சந்திப்பதினூடாக சொல்லப்பட்ட எளிய கதை. கேள்வியாகக் கொடுக்கப்பட்ட கதையின் தலைப்புமேகூட ஆங்கிலேயர்கள் தங்களது நாட்டில் இருந்த சீதோஷணத்தை இந்தியாவில் தேடியது, அவர்களுக்கு வேண்டிய தேயிலையைப் பயிரிட முயன்றது, இவற்றுக்காக மலைவாசத் தலங்களை உருவாக்கியது, போக்குவரத்துப் பாதைகளை ஏற்படுத்தியது, மலைவாழ் மக்களின் வாழ்க்கையை அவை பாதித்த விதம் என்ற எண்ணற்ற பல  கிளைக் கேள்விகளை வாசகர் மனத்தில் உருவாக்க வல்ல கதை இது.

நிர்மலா:  ‘என் அம்மா ஒரு பெண்ணியவாதி’  கதை ஒரு வித்தியாசமான கோணமாகத் தெரிந்தாலும் அதில் பெண்ணியம் மட்டுமே இல்லை. ஒரு மனித சிந்தனையாகத் தான் தெரிந்தது. விலைமாது என்பதாலேயே முழுத் தவறையும்  அவர்மேல் போடுவது நியாயமே இல்லை. அது என்ன மன் பிராய் எண்ணை? 

ஜெயந்தி சங்கர்:  துல்லியமான வாசிப்பு. பெண்ணியக் கதை மட்டும் கிடையாது அது. ஆனால், மகனே ஆனாலும்கூட ஆணானவன் அவளின் சிந்தனைகளை பெண்ணியத்திலே பொருத்திவிடவே துடிக்கிறான் என்பதை சொல்லாமல் சொல்கிறது கதை.

அந்த எண்ணெய், வசியம், ப்ளாக் மேஜிக், வூடூ, மாந்திரிகம் போன்றவற்றில் பெருநம்பிக்கை கொண்ட தாய்லாந்தில் செய்யப்படுகிறது.  சுற்றுப்புற நாடுகளிலும் பயன்படுத்துகிறார்கள். அதுகுறித்து சுவாரசியமான பல்வேறு கதைகள் உலாவுகின்றன தென்கிழக்காசிய நாடுகளில்.

நிர்மலா: கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னமும் தொடரும் அவர்களுடைய நம்பிக்கைகள், சடங்குகள் பற்றியும். ஆனாலும் அதை இந்தக் கதையில் அந்த இரண்டு பாத்திரங்கள் பேசிக் கொள்ளும்போது ஏற்க முடியவில்லை! இந்தத் தலைமுறை கூட இதையெல்லாம் நம்புகிறார்களா? ஒரு தகவலுக்காகக் கேட்கிறேன்.

ஜெயந்தி சங்கர்: மேலைக் கலாசாரம் நிரம்பியிருக்கும் சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் இளையோரிடம் கூட இது போன்ற நம்பிக்கை நிலவியே வருகின்றன. சர்வசாதாரணமாக பேய்கள், மாந்திரிகம் குறித்து நம்பிக்கையோடு அன்றாட விலைவாசி விவாதம் போலப் பேசுவோரை இங்கெல்லாம் பார்க்கலாம். அமானுஷ்யங்களில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள் தென்கிழக்காசியர்கள்.

நிர்மலா:  ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ கதையில் தாய்மொழி மீது அதிக நாட்டமில்லாத இளைய தலைமுறை, செய்யும் தொழிலில் அர்ப்பணிப்புள்ள சீனர்கள் என்று சொல்ல வந்தீர்களா? 

ஜெயந்தி சங்கர்: பணியில் அர்ப்பணிப்புள்ளவர்கள் எந்தப் பிரிவினரிலும், தமிழர்களில், இந்தியர்களிலுமேகூட இருக்கிறார்கள். எனினும், சித்திர எழுத்துமுறைக்கு பழக்கப்பட்ட சீன நூலகரின் மூளைத் திறனில் இருக்கும் தன்னம்பிக்கைதான் அக்கதையில் சன்னமாக வெளிப்பட்டிருக்கும். ஆம், என்னுடைய மகன்கள் உட்பட தாய்மொழியைக் கடனே என்று கற்று தேர்வை  முடித்ததும் தூக்கி உயரே வைத்து விட்டு ஒருவித நிம்மதிப் பெருமூச்சோடு வாழ்க்கையைத் தொடரும் இன்றைய இளைய தலைமுறையின் போக்குகளைப் பதிகிறது அக்கதை.

நிர்மலா: தகவல் தொழில்நுட்பம் அசுரப் பாய்ச்சலில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் பிம்பங்களும் அதன் மீதான கேள்விகளும் என்று இவை இரண்டுமே பதிவாகும். தேர்வு என்னவோ அவரவரைப் பொறுத்தது. காந்தியம், அகிம்சை இவை அதற்கான கனத்தை மெல்ல இழந்து கொண்டிருப்பது போலவும், அவருடைய பிம்பத்தின் மீது எழுப்பப் படும் பல்வேறு கேள்விகளையும் மீண்டும் நினைக்க வைத்தது இந்த தொகுப்பு. 

ஜெயந்தி சங்கர்:  இதுவும் ஒருவகையில் சிறப்பான வாசிப்புதான். எனினும், நூலின் தலைப்பு, ஒரு கதையின் தலைப்பு மட்டுமின்றி கதையில் வரும் படிமமும்கூட அவ்வாறான சிந்தனையை எழுப்பக்கூடியதாக ஒருவித திட்டமும் இல்லாமலே, நானே எதிர்பார்க்காதபடி அமைந்துபோனது.

ஆளுமைக் கட்டமைப்பு என்பதும் வரலாற்றுக் கட்டமைப்பு என்பதும் சதா நடந்தவாறேதான் இருக்கின்றன. அகிம்சை என்ற கோட்பாடும் பல்வேறு மாற்றங்கள் கண்டு வருகின்றது. ஆகவே, காந்தியுமே. அவற்றையெல்லாம் கடந்தும் அகிம்சைக்கு அவர் ஏற்படுத்திய முக்கியத்துவமும் நம்பிக்கையும் மாறிவரும் உலகிற்கும் காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தேவையாகவே இருக்கின்றன.  தொடர்ந்தும் இருக்கும்.

நிர்மலா: நன்றி ஜெ, வணக்கம்.

ஜெயந்தி சங்கர்:   உங்களது வாசிப்புக்கு மிக்க நன்றி நிர்மலா, வணக்கம்.

நேர்காணல் படைப்பாளர்

நிர்மலா
நிர்மலா... ஆழ்ந்த, நீண்ட கால வாசகர், கவிதைகளும் சுவாரசியமான பயணக் கட்டுரைகளும் எழுதும் ப்ளாக்கர், ஓர் ஆளுமை வடிவமைப்பாளர் (இமேஜ் கன்சல்டண்ட்).