2019ம் ஆண்டு வெளியான ” தி பெர்ஃப்யூம்ஸ் (Les Parfums)” என்னும் ஃபிரென்ச் திரைப்படம், ஐரோப்பிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஆன் வால்பெர்க் என்னும் வாசனை திரவிய நிபுணருக்கும், குய்லாமே ஃபாவ்ரே என்னும் வாடகை கார் ஓட்டுனருக்கும் உருவாகும் நட்பே கதை.

ஆரம்பத்தில் சற்றே திமிரோடு நடந்துக்கொள்ளும் ஆன்’க்கு, இக்கட்டான சூழலிலும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத நாயகனை பிடித்துவிடுகிறது. அதன் பிறகான பயணங்களில் இந்தக் கார் ஓட்டுனர்தான் வேண்டும் என்று தேர்வு செய்கிறாள். அந்த பயணங்கள் இருவர் வாழ்வையும் மாற்றி அமைக்கிறது.

படத்திற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். வாசனை திரவியம் தானே என்று இனி நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாதபடி, அதன் பின்னிருக்கும் அசாத்தியமான உழைப்பை, நுட்பமான தகவல்களை படம் முழுக்க சொல்கிறார்கள். மனிதர்கள் பயன்படுத்தும் வாசனை திரவியம் உருவாக்குவதைத் தாண்டி வேறேங்கெல்லாம் ஆன் போன்றவர்களின் தேவை இருக்கிறது என்பதே ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

உதாரணமாக மால்களில் நம்மை நீண்ட நேரம் செலவிட வைப்பதற்காக பரப்பப்படும் வாசனை பற்றி போகிற போக்கில் சொல்கிறார்கள். இப்படி இன்னும் பல இடங்களில் நாம் நுகர வைக்கப்பட்டே நுகர்வோர் ஆக்கப்படுகிறோம் என்பதையும் சீரியஸ் தொனி இல்லாமல் சொல்கிறார்கள்.

நாயகனாக நடித்திருப்பவருக்கு நகைச்சுவை வெகு இயல்பாக வருகிறது. ஆன்’னாக வருபவர் பாத்திரத்திற்கேற்ப க்ளாஸிக் பெண்மணிக்கான முக, உடல் மொழி கொண்டு அசத்துகிறார்.

குறிப்பிடும்படியான சில காட்சிகள் :

ஒரு காட்சியில் ஆன், உணவக பணிப்பெண்ணிடம் ஆர்டர் தந்து அனுப்பி விட்டு, அவள் அணிந்திருந்த பெர்ஃப்யூம் அதில் கலக்கப்பட்டிருக்கும் ரசாயனங்களின் பெயர்களைச் சொல்லி விமர்சிக்கிறாள். நாயகன், ‘ மனிதர்கள் வாசனைகளால் மட்டும் ஆனவர்களில்லை’, என்கிறான். மேலும், ‘ வந்திருந்த பெண்ணின் முகத்தைக்கூட நீ பார்க்கவில்லை. அவளோடு உன்னால் ஓரிரு வார்த்தைகள் கூட பேச முடியாது’, என்று சவால் விடுகிறான். ஆன், அந்த இடத்தில் மாறுதல் கொள்கிறாள்.

தன் பதினோரு வயது மகளின் பிறந்தநாள் சுவாரஸ்யமாக்க பிரயத்தனப்படும் நாயகனிடம் ஆன், ” என்னை எப்படி அழைத்துப் போகிறாயோ, அப்படி வெவ்வேறு வித்தியாசமான இடங்களுக்கு மகளை கூட்டிப்போ”, என்கிறான். அந்த அறிவுரைப்படி நடக்கும் நாயகனுக்கு மகளுடனான நெருக்கம் கூடுகிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் உருவாகும் நட்பு இவ்வாறு தான் முடிய வேண்டும் என்பதான ஃபார்முலாக்குள் சிக்கிக்கொள்ளாமல் படம் செல்வது ரசிக்கும் படியாக இருக்கிறது. ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் நேர்க்கோட்டில் பயணிக்கும் படம் என்றாலும், நடிப்பும், திரைக்கதையும், விடாமல் கூட வரும் மென்நகைச்சுவையும் படம் பார்க்கையில் சலிப்பில்லாத நல்ல அனுபவத்தை தருகிறது.

மிகப் பணக்காரர்களுக்கான வாசனை திரவியம் உருவாக்கும் ஒரு சீமாட்டிக்கும், வாடகை கார் ஓட்டுனருக்கும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள என்ன இருக்க முடியும் என்ற ஆவல் தான் படம் பார்க்க தூண்டும் இடம். எனினும் நாம் சந்திக்கும் மனிதர்கள் எதையாவது கற்றுக்கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள், கற்றுக்கொள்ளும் மனம் நமக்கு இருந்தால் போதும் என்று காலாகாலமாக சொல்லப்பட்டு வருவதை நிஜம்தான் என்கிறது ‘பெர்ஃப்யூம்ஸ்’ திரைப்படம்.

படைப்பு:

விக்னேஸ்வரி சுரேஷ்