சான் பிரான்சிஸ்கோ கலிபோர்னியாவின் கலாச்சார, வணிக மற்றும் நிதி மையமாகும். இது சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியின் வடக்கு முனையில் உள்ளது.

சான் பிரான்சிஸ்கோவிற்கு என நீண்ட வரலாறு உள்ளது. சான் பிரான்சிஸ்கோ பகுதியில் சுமார் கி.மு 10,000 மனிதன் வாழ்ந்ததற்கான தொல்பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.

இங்கு ஓஹ்லோன் (Yelamu) மற்றும் ஏலமு (Ohlone) பழங்குடி மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. தொல்பொருள் சான்றுகளிலிருந்து, அவர்கள், கிமு 3000-8000 இல் வந்தனர் எனச் சொல்லப்படுகிறது.

ஜூன் 29, 1776இல், சான் பிரான்சிஸ்கோவில் ஸ்பானியர்கள் குடிவந்தனர். கோல்டன் கேட் பகுதியில் கோட்டை (Presidio of San Francisco at the Golden Gate) மற்றும் அசிசி மிஷனரி (Mission San Francisco de Asís) கட்டப்பட்டன. கோட்டை கடற்கொள்ளையில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும், தேவை ஏற்படும்போது, அங்கு ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த பூர்வகுடி மக்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் பயன்பட்டது.

1821இல் ஸ்பெயினில் இருந்து மெக்சிகன் சுதந்திரம் பெற்ற போது, இது ஒரு மெக்சிகன் கோட்டையாக இருந்தது. அமெரிக்காவும் மெக்ஸிகோவும் ஏப்ரல் 1846 முதல் பிப்ரவரி 1848 வரை சண்டையிட்டன. பிப்ரவரி 2, 1848 அன்று கையெழுத்திடப்பட்ட குவாடலூப் ஹிடால்கோ ஒப்பந்தம் மெக்சிகன்-அமெரிக்கப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. அமெரிக்காவிற்கு கலிபோர்னியா, டெக்சாஸ், நியூ மெக்ஸிகோ, அரிசோனா, உட்டா, வயோமிங் மற்றும் கொலராடோ (California, Texas, New Mexico, Arizona, Utah, Wyoming and Colorado) ஆகிய பெரும் நிலப்பரப்புகளின் உரிமை கிடைத்தது. சான் பிரான்சிஸ்கோ அதிகாரப்பூர்வமான அமெரிக்க ஊராக மாறியது .

ஸ்பெயினிடமிருந்து கியூபா சுதந்திரம் பெற போராடிய நேரம், கியூபாவிற்கு ஆதரவாக ஏப்ரல் 25, 1898 அன்று, அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது. அப்போதைய கடற்படையின் செயலாளர் தியோடர் ரூஸ்வெல்ட், பிலிப்பைன்ஸில் உள்ள ஸ்பானிஷ் கடற்படை மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். அமெரிக்கா எளிதாக வென்றது. கியூபா, புவேர்ட்டோ ரிக்கோ, குவாம், பிலிப்பைன்ஸ் ஆகிய பிரதேசங்கள் ஸ்பெயினிடமிருந்து அமெரிக்கக் கட்டுப்பாட்டில் வந்தன. இந்தத் தாக்குதல், பிரசிடியோவில் இருந்துதான் நடத்தப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது, பிரசிடியோ அமெரிக்காவின் ஆயுதக் களஞ்சியம் ஆனது. 350க்கும் மேற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரசிடியோ, 1962இல் ஒரு தேசிய வரலாற்று அடையாளமாக அறிவிக்கப்பட்டது.

கலிபோர்னியாவில் தங்கம் மார்ச் 9, 1842இல், இன்றைய லாஸ் ஏஞ்சல்ஸின் வடக்கே உள்ள ராஞ்சோ சான் பிரான்சிஸ்கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜனவரி 24, 1848 இல், ஜேம்ஸ் டபிள்யூ. மார்ஷல் (James W. Marshall), என்பவர் ஜான் சட்டர் என்பவருக்கு ஓர் ஆலை (Sutter’s Mill) கட்டிய போது, அமெரிக்க ஆற்றில் கொலோமா அருகே பளபளப்பான உலோகத்தைக் கண்டார். சோதனையில் அது தங்கம் என்று தெரியவந்தது. பிப்ரவரி 2ஆம் தேதி மெக்சிகன்-அமெரிக்கப் போர் முடிவடைந்து கலிபோர்னியா அமெரிக்கா வசம் வந்தது.

பிப்ரவரி 1848இல், மில் நிற்கும் நிலத்தின் கனிம உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கலிபோர்னியாவின் அதிகாரியைச் சந்திக்க ஒருவரை அனுப்பினார். அவர் வழியில் உளறிக் கொட்டியதால், இன்னொருவரும் உரிமை கோரினார். அதிகாரி கனிம உரிமை குறித்த தீர்ப்பைக் கொடுக்க மறுத்துவிட்டார்.

டிசம்பர் 5, 1848 அன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் கே. போல்க் காங்கிரஸின் உரையில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். இதன் விளைவாக, 1949இல் அமெரிக்காவின் வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்ல, தென் அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பாவில் இருந்தும் மக்கள் வரத் தொடங்கினர். அவர்கள் 49ers என அழைக்கப்பட்டனர். இன்றும் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் உள்ள கால்பந்து அணிக்கு ’49ers’ என்று தான் பெயர்.

சட்டர் பயந்தபடி, அவருடைய நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் கைப்பற்றி, அவரது பயிர்களையும் கால்நடைகளையும் திருடிச் சென்றனர். சிறிய ஊராக இருந்த சான் பிரான்சிஸ்கோவின் மக்கள் தொகை விரைவாக அதிகரித்தது. குற்றச் செயல்கள் அதிகரித்தன. மண்ணின் மைந்தர்கள் கொல்லப்பட்டனர். Wells Fargo, Bank of California போன்ற வங்கிகள் உருவாகின. Bank of California எங்கள் ஊரான பெல்மான்டைச் சார்ந்தவர். இப்போது வரை கலிபோர்னியாவின் மொத்த தங்க உற்பத்தி 3700 டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

1882 Chinese Exclusion Act அனைத்து சீனக் குடியேற்றங்களையும் தடை செய்தது. இந்த சட்டம் 1943 நீக்கப்பட்டது.

சான் பிரான்சிஸ்கோவில், ஏப்ரல் 18, 1906, அதிகாலை 5:13 மணிக்கு, 8. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 3,000 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இந்த விபத்து நகரின் வரலாற்றையே மாற்றிப் போட்டது.

மெக்ஸிகன்-அமெரிக்கப் போருக்குப் பிறகு அமெரிக்க மண்ணில் நடந்த பெரிய தாக்குதல், பேர்ல் ஹார்பர் (Pearl Harbor) மீது ஜப்பான் நடத்திய தாக்குதல். இந்த நிகழ்விற்குப் பதிலடி கொடுத்த ராணுவ நிகழ்வுகளில் சான் பிரான்சிஸ்கோ துறைமுகம் முதன்மையான பங்கு வகித்தது.

வியட்நாம் போரின் போது, அமெரிக்க மக்கள் அமெரிக்க அரசின் முடிவை விரும்பவில்லை. அதை வெளிப்படுத்தும் விதமாக 1967 ல் சான் பிரான்சிஸ்கோவில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் இணைந்து கலை, இசை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடத்தினர்.

சான் பிரான்சிஸ்கோவின் பருவநிலை ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொருவிதமாக இருக்கும். ஒரு தெருவில் வெய்யில் அடிக்கும். அடுத்த தெருவில், மூடுபனியால் எதிரில் வருபவரைக்கூடப் பார்க்க முடியாது. இடத்திற்கு இடம் மட்டுமல்ல; நேரத்திற்கு நேரம், நொடிக்கு நொடி மாறக்கூடியது. ஆனாலும் 70 டிகிரி வெப்பநிலையைவிட மிக அரிதாகவே உயரும். அதனால் எப்போதும் குளிர் தாங்கும் உடைகள் அணிந்து செல்வது நல்லது.

கேபிள் கார்கள் (Cable cars) சான் பிரான்சிஸ்கோவின் வரலாற்று சின்னம். சான் பிரான்சிஸ்கோவில் இயங்கும் கேபிள் கார்கள் தான், இது போன்ற கேபிள் கார் அமைப்பில், உலகின் கடைசியாகப் புழக்கத்தில் உள்ள அமைப்பு.

மூன்று கம்பி தண்டவாளத்தில் ஓடக்கூடிய, கேபிள் கார்கள் நிலத்தடி கேபிளைப் பிடிப்பதன் (gripping an underground cable) மூலம் நகர்கின்றன, இது நடுவில் ப வடிவ ஓர் இயந்திரத்தால் (powered by an engine located in a central powerhouse) இயக்கப்படுகிறது. அது திரும்பும் இடத்தில் ஒரு வட்டம் இருக்கும். அதன் மேலே கேபிள் கார் நின்றதும், அதுவே வண்டியைத் திருப்பிவிடும். அது பார்க்க அழகாக இருக்கும்.

செங்குத்தான சாலையில் பயணிக்கும் போது, வண்டியை இழுக்கும் குதிரைகள் இறந்ததைக் கவனித்த ஒருவர், கேபிள் கார்கள் இங்கு வருவதற்குக் காரணமாக இருந்தார் எனச் சொல்லப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கேபிள் கார் அமைப்பு 1873இல் நிறுவப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மின்சார கார்கள் (electric streetcars) புழக்கத்திற்கு வந்துவிட்டதால், பல இடங்களிலும் கேபிள் கார்கள் வழக்கொழிந்து போயின.

கேபிள் கார் அருங்காட்சியகம் மற்றும் SF ரயில்வே அருங்காட்சியகத்தில், சான் பிரான்சிஸ்கோ கேபிள் காரின் வரலாற்றுத் தகவல்களை அறியலாம்.

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.