தோழி ஒருவர் பகிர்ந்துகொண்டது இன்னமும் நெஞ்சில் கனமாகத் தங்கியுள்ளது.

“என்னோட வீட்லயும் உறவினர் வட்டாரத்திலேயும் நான்தான் முதன் முதலாகப் படிச்சு, பட்டம் வாங்கின பொண்ணு. எனக்குன்னு கனவு இருந்தது. என்னோட துறையில பெரிசா சாதிக்கணும்னு ஆசைப்பட்டேன். நான் விரும்பின மாதிரியே வேலை, வெளியூர்ல கிடைச்சது. குடும்பத்தை கன்வின்ஸ் பண்ணி, அங்கே தங்கி சந்தோஷமா வேலை பார்த்தேன். அந்த ஊர்ல இருக்கும்போதுதான் கூட வேலை பார்த்தவனாலேயே அந்தக் கொடுமையான வன்புணர்வு எனக்கு நடந்தது. ஒரு வாரம் ஆஸ்பத்திரில தங்கி ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டிய கட்டாயம். ஃப்ரெண்ட்ஸ்கூட இருந்து உதவி செஞ்சாங்க.

ஒருவழியா மீண்டு வந்துட்டாலும், அப்போ வீட்ல இதைப் பத்தி மூச்சே விடலை. சொல்லியிருந்தா மட்டும் என்ன செஞ்சிருப்பாங்க? `நாங்க அப்பவே சொன்னோம், வெளியூருக்கெல்லாம் வேலைக்குப் போகாதேன்னு. இப்ப சீரழிஞ்சுட்டு வந்து நிக்கிற. குடும்ப மானமே போச்சு’ன்னு சொல்லி வீட்ல உட்கார வச்சிருப்பாங்க. அவசர அவசரமா மாப்பிள்ளை பார்த்து, எவனுக்காவது என்னைக் கட்டிக் குடுத்திருப்பாங்க. என்னோட கனவு, வேலை எல்லாத்துக்கும் முழுக்கு போட்டிருப்பேன்.

இப்போ, என்னோட துறையில் சாதிச்சிருக்கேன். கை நிறைய சம்பாதிக்கிறேன். விரும்பின இணையர், குடும்பம், குழந்தைன்னு சந்தோஷமா இருக்கேன். என்ன…. அந்த ராஸ்கலை ஒன்னுமே பண்ண முடியலையேங்கற கோபம் மனசில இப்பவும் இருக்கு கீதா…” என்று கண்கலங்க அவர் முடித்தபோது, யதார்த்தம் முகத்தில் அறைந்தது.

“வன்புணர்வு செய்தவனைச் சும்மா விடாதே, போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணு, தண்டனை வாங்கிக் கொடு” என்று ஆளாளுக்கு, பாதிக்கப்படும் பெண்களுக்கு அட்வைஸ் செய்கிறோமே, தனக்கு நடந்த கொடுமையைக் குடும்பத்தினரிடம்கூடச் சொல்ல முடியாத அவல நிலையில் பெண் குழந்தைகளை வைத்திருக்கிறோம் என்பது நமக்கு உறைக்கிறதா?

தனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் சொல்லாமல் என் தோழியைத் தடுத்தது எது? காவல்துறையில் புகார் அளித்து, குற்றவாளிக்குச் சட்டப்படி தண்டனை தேடித்தர முடியாமல் செய்தது எது? “உன்னோட படிப்போ, வேலையோ, கனவோ எதுவும் முக்கியமில்லை. இந்த ஆணாதிக்கச் சமுதாயம் சொல்ற ’கற்போட’ நீ இருக்கிறாயா என்பது தான் அதிமுக்கியம். அதற்குப் பங்கம் வந்ததுன்னா, அவ்வளவுதான். அதுக்கப்புறம், உன் விருப்பப்படி நீ எதுவும் செய்ய முடியாது. நாங்க சொல்றபடிதான் கேட்கணும்” என்பதைக் குடும்பமும் சுற்றமும் சொல்லாலும் செயல்களாலும் வலியுறுத்திக் கொண்டே இருப்பதால்தான், தனக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பேசவே பெண்கள் அஞ்சுகிறார்கள்.

வளர்ந்த பெண்ணுக்கே இந்த நிலை என்றால், வளரிளம் குழந்தைகளின் நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம். சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட கோவை பெண்ணின் விஷயத்திலும், வீட்டில் சொல்லக் கூடாது என்று மிரட்டியிருக்கிறார்கள். அதை அந்தக் குழந்தையும் கேட்கிறது என்றால், குடும்ப அமைப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது.

குடும்பத்தினரிடம் தன்னைப் பற்றியோ, தனது உணர்வுகளைப் பற்றியோ பேசுவதற்குப் பெண் குழந்தைகளை அனுமதிக்கிறோமா? பெண் குழந்தைகள், பெற்றோரையும், குடும்பத்தினரையும் நம்பி தனக்கு நேரிட்ட அத்துமீறலைச் சொல்வதற்கான இடம் இருக்கிறதா? அப்படிச் சொன்னால், “நீ ஏதாவது செஞ்சிருப்பே. இல்லாட்டி இப்படி நடக்குமா?” என்ற முன்முடிவுகள் இல்லாமல், அவர்கள் சொல்வதை, திறந்த மனதுடன், காது கொடுத்து குடும்பம் கேட்குமா? எல்லாவற்றுக்கும் இல்லை என்பது தான் பதில்.

“நீ சொல்வதை நாங்கள் நம்புகிறோம்மா, முக்கியமாக உன்னை நாங்கள் நம்புகிறோம், உனக்கு என்ன நேர்ந்தாலும் நாங்கள் அரவணைக்கிறோம், உன்னுடன் இருக்கிறோம். நீ சொல்லும் விஷயங்களால் உன் படிப்பு தடைபடாது, உன் வேலை, கனவுகள் தகர்ந்து போகாது, எங்களை நீ நம்பலாம். நாம் எல்லோரும் சேர்ந்து குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித் தரலாம்” என்ற நம்பிக்கைதானே பெண் குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு. அதைக் குடும்பம் இதுவரை தரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

ஒவ்வொரு முறையும் பெண் குழந்தையோ பெண்களோ பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவங்கள் பரவலாகப் பேசப்படும்போதெல்லாம் அனைவரும் வலியுறுத்துவது, சமுதாயத்தில் பெண்ணுக்குப் பாதுகாப்பில்லை என்பதைத்தான். ஆனால், பெண் குழந்தைக்கு, அவள் பிறந்து வளர்ந்த குடும்பம் என்ற அமைப்பே பாதுகாப்புணர்வை அளிப்பதில்லை.

’டாடீஸ் பிரின்சஸ்’, ’எங்கள் வீட்டு இளவரசி’ என்றெல்லாம் அடுத்த தலைமுறையினர் பெண் குழந்தைகளைக் கொண்டாடுகின்றனர். விதவிதமாக உடைகள் வாங்கிக் கொடுப்பதும், நகைகளை வாங்கிப் பூட்டுவதும், வீட்டிலிருந்து தரையில் கால்படாமல் வாகனத்தில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துப் போய், பத்திரமாக அழைத்து வருவதும், எங்கு போனாலும் துணைக்கு ஒருவர் போவதும், மொபைல், டேப்லெட் என்று கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பதும்… இதுவா பெண் குழந்தை வளர்ப்பு? பார்பி பொம்மை மாதிரி, உங்கள் விருப்பம் போல அவளை அழகுபடுத்தி, பொத்திப்பொத்தி காப்பதல்ல ஆரோக்கியமான வளர்ப்பு. அவளை நிறை, குறைகளுடன் கூடிய இயல்பான ஆளுமையாக வளர்த்தெடுப்பதுதானே சரியாக இருக்க முடியும்.

பெற்றோர், பெண் குழந்தையிடம் தினமும் உரையாட வேண்டும். அவள் கேட்கும் கேள்விகளுக்கு உளப்பூர்வமாக, நேர்மையாகப் பதிலளிக்க வேண்டும். அவளைப் பேசவிட வேண்டும். அவளது பயங்களை, கவலைகளை, உணர்வுகளை, சந்தோஷங்களைத் திறந்த மனதுடன் கேட்கும் இடமாக வீட்டை மாற்ற வேண்டும். அவளுக்கு நம்பிக்கை தரவேண்டும்.

இந்த உரையாடல் வளரிளம் பருவத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ’குட் டச், பேட் டச்’ பற்றிச் சொல்லிக்கொடுப்பதோடு பெற்றோரின் பொறுப்பு முடிந்து விடுவதில்லை. பெண் குழந்தை பருவம் அடைந்த பிறகு, அவளுக்கு ஏற்படும் உணர்வுகளைப் பகிரச் செய்ய வேண்டும். இது எளிதான காரியமல்ல. மாதவிடாய் பற்றி விளக்கமளித்து, அம்மா இந்த உரையாடலைத் துவக்கலாம். பிறகு அப்பாவும் இதில் பங்கேற்கலாம். அவளுக்குப் பிடித்த நடிகரில் ஆரம்பித்து ஜாலியாகவே பேசலாம். பிறகு, அவளை சைட்டடிக்கும் பையன்கள், அவளுக்குப் பிடித்த நண்பர்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக அதை வளர்த்து, அவளது எண்ணவோட்டங்களைப் பகிரச் செய்யலாம். எதையும் அம்மா, அப்பாவிடம் சொல்லலாம், அவர்கள் தவறாக நினைக்க மாட்டார்கள் என்ற பாதுகாப்புணர்வை மகளுக்குத் தரவேண்டியது நமது மிகப்பெரிய கடமை.

முக்கியமாக, காலங்காலமாக இந்த ஆணாதிக்கச் சமுதாயம் மூளைச்சலவை செய்து வைத்திருக்கும் ’கற்பு’ பற்றிய கருத்தாக்கங்களிலிருந்து அம்மாவும் அப்பாவும் தம்மை விடுவித்துக் கொண்டால்தான், திறந்த மனதுடன் மகளுடன் உரையாடுவது சாத்தியம். நீங்கள் அறிந்தோ அறியாமலோ `கற்பு’ பற்றிய விழுமியங்களுடன் உரையாடும் போது, மகள் தனது உண்மையான உணர்வுகளையும் தனக்கு நடக்கும் நிகழ்வுகளையும் மறைத்து, தேவையற்ற குற்றவுணர்விற்கு ஆட்பட வாய்ப்புள்ளது.

Family at dinner table vector illustration. Silhouettes of mother, father and son with daughter kids drinking tea or eating, sitting together on chairs in kitchen at evening

பெண் குழந்தை தனக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்களைப் பெற்றோரிடம் பயமின்றி, நம்பிக்கையோடு சொல்லும் நிலையை முதலில் உருவாக்க வேண்டும். அப்படிச் சொல்லும்போது, குடும்பம் அவளுக்கு உறுதுணையாக நின்று குற்றவாளிகளுக்குத் தண்டனை தேடித்தர வேண்டும். இதனால் குற்றங்கள் குறைந்துவிடுமா என்றால், உறுதியாகச் சொல்ல இயலாது, நீண்ட காலமாகலாம். அதுவரை நமது பெண் குழந்தைகளைக் காப்பதற்கான பணிகளை நாம் செய்ய வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, இன்னொன்றையும் பேசியாக வேண்டியுள்ளது. பெண் குழந்தை பருவம் அடைந்த பிறகு, அவளுக்குக் காம உணர்வுகள் வருவது இயல்பு. பெற்றோர், அதை எண்ணிப்பார்க்கவோ ஏற்றுக்கொள்ளவோ மறுப்பதால் அது இல்லை என்று ஆகாது. ஒருவேளை, பெண் குழந்தை தனது உணர்வால் உந்தப்பட்டு, விருப்பட்டு, யாருடனாவது உடலுறவு கொண்டாலும், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன, அது அவளது படிப்புக்கும் வாழ்க்கையில் அவள் அடைய விரும்பும் இலக்குகளுக்கும் என்னவிதமான பாதிப்புகளைத் தரும் என்றெல்லாம் அவளுக்குப் புரிய வைப்பதுதான் சரியாக இருக்கும். அதைவிடுத்து. “என்ன தைரியம்டி உனக்கு? இப்படித் தப்பு பண்ணிட்டு வந்து நிக்குற?” என்று ஆத்திரப்படுவதும் பதறுவதும் எப்படி நியாயமாக இருக்கும்?

அன்புத் தோழர்களே, நமது அருமையான மகள்களைவிட, அவர்களது உயிரைவிட, உரிமைகளைவிட, கல்வியைவிட, அவர்கள் கனவு வேலைகளைவிட, அழகான வாழ்க்கையைவிட, இந்தப் பிற்போக்குத்தனமான, கொடுமையான ’கற்பு’ என்ற கருத்தாக்கம் முக்கியமில்லை. நமது பெண் குழந்தைகளை, பெண்களை, எந்த முன்முடிவும் இல்லாமல் அரவணைப்போம். அன்பான, நம்பிக்கையான உலகை அவர்களுக்கு உருவாக்குவோம்.

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.