பொருள் 26 : கவிஞரும் கடவுளும்
பண்டைய வரலாற்றைச் சேர்ந்த ஒரு முக்கியமான பெண்ணைச் சந்திப்பதற்கு முன் அவருடைய தந்தையை அறிமுகம் செய்துகொண்டுவிடலாம். பொயுமு 2350 வாக்கில் சுமேரியாவை சர்கோன் என்னும் புகழ்பெற்ற மன்னர் ஆண்டு வந்தார். சுமேரியாவையும் அக்காடையும் இணைத்து அக்காடியப் பேரரசை நிறுவியவர் இவர். மெசபடோமிய மண்ணில் அமைக்கப்பட்ட முதல் பெரும் பேரரசு என்பதால் வரலாற்றில் இவர் நிலைத்து நிற்கிறார். இதற்குமுன் இல்லாத அளவுக்குப் பெரும் படைப்பிரிவுகளை உருவாக்கிய சர்கோன், அண்டை நாடுகளுடன் போரிட்டு அவற்றை இணைக்கும் முயற்சிகளை மும்முரமாக மேற்கொண்டார். சார்கோனின் தாய் அநேகமாக ஒரு பூசாரியாக இருக்கலாம் என்று கணிக்கிறார்கள். தன் தந்தையை அவர் அறிந்திருக்கவில்லை.
சர்கோன் ஆட்சிக்கு வருவதற்கும் புகழ் ஈட்டுவதற்கும் காரணமாக இருந்தவர்கள் பெண்கள். அதனாலேயே அவருக்குப் பெண்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது. இஷ்தார் என்னும் பெண் கடவுளின் வாரிசாகத் தன்னைக் காண்பித்துக்கொள்ள அவர் விரும்பினார். தன்னுடைய மகன்களுக்கு ஆட்சி அதிகாரத்தை அளித்த அவர், தன் மகள்களைத் தலைமை கோயில் பூசாரிகளாக நியமித்தார். கற்றறிந்தவர்களே தலைமை பூசாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம் என்பதால் சர்கோன் தன் மகள்களுக்கு முதலில் நல்ல கல்வியை அளித்திருக்க வேண்டும்.
சர்கோனின் மகள்களில் ஒருவர் என்ஹெடுவானா. அவர் பெயரைத் தாங்கி நிற்கும் இரண்டு முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவருடைய உருவச்சிலையும்கூட அகழ்வாராய்ச்சிமூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. கற்றறிந்தவரான என்ஹெடுவானா கடவுளைப் போற்றி பல பாடல்களை இயற்றியிருக்கிறார். கியூனிஃபார்ம் எழுத்துமுறையைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் பாடல்களின் பிரதிகள் களிமண் பலகைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கப் பதிவுகளைப் பாதுகாப்பதைப் போல் இவருடைய படைப்புகளை மக்கள் பாதுகாத்து வந்திருக்கின்றனர். சுமேரிய கோயில் பாடல்கள் என்னும் தலைப்பில் 42 பாடல்கள் உள்ளன. இனானா என்னும் பெண் கடவுளைப் போற்றிப் பாடும் பாடல்கள் 153 வரிகள் கிடைத்துள்ளன. இவை போக முற்றுப்பெறாத கவிதைகளும் உள்ளன. உலகின் பல மொழிகளுக்கு இன்று அவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இணையத்திலும் அவற்றை வாசிக்க இயலும்.
நாம் அறிந்தவரை உலகின் மிக மூத்த படைப்பாளர் என்ஹெடுவானா. ஆனால் அது மட்டுமல்ல அவருடைய சாதனை. இவ்வளவு காலம் கழித்தும் அவருடைய படைப்புகள் நிலைத்து நிற்பதற்குக் காரணம் தன்னுடைய படைப்புகளில் அவர் அறிமுகப்படுத்தியுள்ள இரண்டு புதிய அம்சங்கள். முதலாவதாக, இனானா என்னும் பெண் தெய்வம் பற்றிய பிம்பத்தை அடியோடு மாற்றியமைத்திருக்கிறார். பண்டைய மெசபடோமியாவின் முக்கியமான கடவுளான இனானா அன்புக்கும் அழகுக்கும் அடக்கத்துக்கும் பெயர் போனவர். வானம், மேகம், பிறப்பு ஆகியவற்றோடு இனானாவைத் தொடர்புபடுத்துவது வழக்கம். என்ஹெடுவானா புதிதாக இன்னொரு பண்பையும் இனானாவுடன் இணைக்கிறார். போர்.
அதுவும் எப்படிப்பட்ட வீரம்? ஒரு புயலைப் போல் சீற்றத்துடன் பாய்ந்து வரும் பறவை என்று இனானாவை வர்ணிக்கிறார் என்ஹெடுவானா. பிரமாண்டமான இந்தப் புயல் பறவையைக் கண்ட மற்ற சிறிய கடவுள்கள் வெடவெடத்து வௌவால்களைப் போல் சிதறியோடுகிறார்களாம். இனானா ஒரு பெண் கடவுள் மட்டுமல்ல, போர்க் கடவுளும்கூட என்பதைத் தன் பாடல்களில் அழுத்தமாகவும் அழகாகவும் காட்சிப்படுத்துகிறார் என்ஹெடுவானா. சுமேரிய கடவுள்கள் அழகு தேவதைகள் மட்டுமல்ல, தீரமும் துணிச்சலும் மிக்கவர்களும்கூட என்னும் செய்தியை அவர் அழுத்தமாக முன்வைக்கிறார்.
இரண்டாவது புதுமை தனது பாடல்களில் அவர் பயன்படுத்தும் ஆச்சரியமூட்டும் ஓர் உத்தி. கடவுள்களைப் பற்றிய பாடல்கள்தாம் என்றாலும் இடையிடையில் அவரும் ஒரு நபராக உள்நுழைந்துவிடுகிறார். உதாரணத்துக்கு, இனானாவின் மாண்புகளை அடுக்கிக் காட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென்று என்ஹெடுவானாவும் பாடல்களில் வந்துவிடுகிறார். இனானாவைப் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறேனே, அவரைப் பற்றிப் பாடும் நான் யார் என்று உங்களுக்குத் தெரிய வேண்டாமா என்னும் ரீதியில் அவரும் தன்னை சுயஅறிமுகம் செய்துகொள்கிறார். இனானாவின் குணநலன்கள் படர்க்கையில் விவரிக்கப்படும்போது ஒருமையில் என்ஹெடுவானா நம்முடன் நேரடியாக உரையாடுகிறார். இந்த இரண்டும் அடுத்தடுத்து நடைபெறுகின்றன. கடவுளின் அருமை பெருமைகளை வாசிக்கும்போதே அதை விவரிக்கும் எழுத்தாளரின் அருமை பெருமைகளையும் சேர்த்தே நாம் வாசிக்கிறோம்.
என்ஹெடுவானாவுக்கு அவர் குடும்பத்தைச் சேர்ந்த லுகலானே என்பவனிடமிருந்து எதிர்ப்பு தோன்றுகிறது. அவருடைய பாடல்களுக்காக அல்ல, அவர் வகித்த உயர் பதவிக்காக. என்ஹெடுவானா அவருடைய பதவியில் இருந்து கீழிறக்கப்படுகிறார். அதிகாரம் அவரிடமிருந்து பறிக்கப்படுகிறது. இது போதாதென்று, ஊரிலிருந்தும் ஒதுக்கிவைக்கப்படுகிறார். என்ஹெடுவானா இதையெல்லாம் அமைதியாகக் கடந்துவிடவில்லை. இந்நிகழ்வுகளைத் தன்னுடைய பாடலுக்கான கருவாக எடுத்துக்கொள்கிறார். தனக்கு நேர்ந்த அநீதியை அவர் சத்தமிட்டுப் பாடுகிறார். தன்னுடைய சிக்கலை வெளிப்படையாக மக்களிடம் கொண்டுசெல்கிறார். கடவுளிடமும்தான். நிலாக் கடவுளான நானா என்பவரிடம் முறையிடுகிறார். என் மீது இரக்கம் கொள்ளமாட்டாயா? என் விஷயத்தில் தலையிடவே மாட்டாயா என்று இறைஞ்சுகிறார்.
இன்னோர் அநீதியும் நடைபெறுகிறது. லுகலானே என்ஹெடுவானாவிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்கிறான். பண்டைய ஏடுகளில் பதிவாகியுள்ள முதல் பாலியல் குற்றச்செயல் அநேகமாக இதுவே. இந்தப் பதிவைச் செய்தவர் வேறு யாருமில்லை, என்ஹெடுவானாவேதான். வெட்கி ஒதுங்கவில்லை அவர். இதைத் தனக்கு நேர்ந்த அவமானமாகவோ தன் குடும்பத்தின் பெருமைக்கும், குறிப்பாகத் தன் தந்தையின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கமாகவோ அவர் பார்க்கவில்லை. நடைபெற்றிருப்பது ஒரு குற்றச்செயல், அதற்கான முழுப் பொறுப்பும் குற்றமிழைத்தவனையே சாரும் என்று உறுதியாக அவர் நம்பியிருக்கிறார். அதனால்தான் எந்தவித ஒளிவுமறைவும் இன்றி தன் பாடல்களில் இந்நிகழ்வையும் அவர் புகுத்துகிறார். நேர்மையும் துணிச்சலும் ஒருங்கே கொண்டிருக்கும் ஒருவரால் மட்டுமே இவ்வாறு செய்ய இயலும். அவர் காலத்தில் மட்டுமல்ல இன்றுமே இது ஒரு கலகம்தான்.
ஒரு தலைமைப் பூசாரியாக, ஓர் இளவரசியாக, ஒரு பெண்ணாகத் தான் எட்டிப் பிடித்த உயரங்களையும் சந்தித்த துயரங்களையும் ஒரு படைப்பாளியாக என்ஹெடுவானா தன் பாடல்களின் வழியே வெளிப்படுத்துகிறார். மோசமான காலங்கள் கடந்து செல்கின்றன. என்ஹெடுவானா மீண்டு வருகிறார். கலகம் முறிக்கப்படுகிறது. பதவியும் அங்கீகாரமும் அவர் கரங்களில் மீண்டும் குவிகின்றன. இப்போதும் பாடுகிறார். பார்த்தாயா நான் வென்றுவிட்டேன் என்று இனானாவிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார்.
ஒரு கட்டத்தில் கடவுள் யார், கவிஞர் யார் என்று பிரிக்கமுடியாதபடி என்ஹெடுவானா தன்னை இனானாவிடம் கரைத்துக்கொண்டுவிடுகிறார். இனானாவின் பெருமைகளை விவரிக்கும்போது தன்னுடைய பெருமைகளையும் பெருமிதத்துடன் முன்வைக்கிறார். உன்னைப் போலவே நானும் துயரடைந்தேன் என்று தன்னைக் கடவுளுடன் ஒப்பிடவும் செய்கிறார். இனானாவுக்கு வீரத்தை அள்ளி அளித்தபோது அதில் சிறிதளவை அவர் தன்னிடமும் வைத்துக்கொண்டிருக்கவேண்டும். ஓரிடத்தில் இனானாவைப் பற்றி இப்படிப் பாடுகிறார் என்ஹெடுவானா. ‘அவளால் இருளை வெளிச்சமாக மாற்றமுடியும்.’ இது என்ஹெடுவானாவுக்கும் பொருந்தவே செய்கிறது.
பொருள் 27 : குற்றமும் தண்டனையும்
பண்டைய காலம் முதலே பெண்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்தப் பெரும் பணியைத் தனி நபர்களால் செய்ய இயலாது என்பதால் அதற்கென ஒரு நிறுவனத்தை அரும்பாடுபட்டு உருவாக்கினார்கள். இந்த நிறுவனம் சமூகத்தின் சுமையைத் தன்மீது ஏற்றிக்கொண்டது. இருபத்து நான்கு மணி நேரமும் முழு விழிப்புடன் செயல்பட்டு பெண்கள் இழைக்கும் குற்றங்களைக் கவனித்து, பட்டியலிட்டு அவற்றுக்கு தண்டனைகளையும் இயற்றியது. மெசபடோமிய நகரமான அசிரியா அதற்கோர் உதாரணம். பொயுமு 1300 வாக்கில் இங்கே இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட 112 சட்டங்களில் கிட்டத்தட்ட பாதி பெண்களைப் பற்றியவை.
சில உதாரணங்கள். கோயிலுக்குள் நுழையும் ஒரு பெண் அங்கிருந்து ஏதேனும் ஒரு பொருளைத் திருடினால் கடவுளிடம் முறையிட வேண்டும். கடவுள் என்ன தண்டனை விதித்தாலும் அதை நிறைவேற்றியாக வேண்டும். அவள் திருடவில்லை, ஆனால் திருடப்பட்ட பொருள் அவளிடம் இருக்கிறது என்றாலும் அதே தண்டனைதான். ஒரு பெண் முறைதவறிப் பேசினால், மதத்தைப் பழித்தால் அவள் மட்டுமல்ல அவளும் அவளுடைய பெற்றோரும் விலக்கிவைக்கப்படுவார்கள். மணமானவள் என்றால் அவள் கணவனும் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவான். அவளுடைய சிந்தனைகள் கோணலாக இருப்பதற்கு அவளுடைய குடும்பமும் சேர்த்தே தண்டிக்கப்படும்.
தன் கணவன் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது இறந்துவிட்ட பிறகு அவனுடைய வீட்டிலிருந்து அவன் மனைவி ஏதேனும் பொருளைத் திருடினால் அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். அந்தப் பொருளை அவள் வேறோர் ஆணிடம் ஒப்படைத்தால் அந்த ஆணும் சேர்த்தே கொல்லப்பட வேண்டும். கணவனுக்கு அல்லது அவன் நினைவுகளுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகமாக இச்செயல்கள் கருதப்படும். ஒருவேளை கணவன் திடகாத்திரமாக இருந்தாலும் இச்செயல்களை மனைவி இழைத்தால் அவள் கொல்லப்படுவாள்.
அடிமைப் பெண் ஒருத்தி வேறொரு நபரிடம் இருந்து ஏதாவது பரிசுப் பொருள் பெற்றால் அவளுடைய மூக்கும் காதுகளும் துண்டிக்கப்பட வேண்டும். தன்னுடைய எஜமானர்களிடம் அவள் முழுவிசுவாசத்துடன் இருக்க வேண்டும். ஒரு பெண் அந்நியனைத் தீண்டிவிட்டால் அவள் சவுக்கடிகள் பெற வேண்டும், அபராதமும் செலுத்த வேண்டும். இன்னோர் ஆடவருடன் தன் மனைவிக்குத் தொடர்பிருப்பதை அவளுடைய கணவன் கண்டுபிடித்தால் இருவரையுமே அவன் கொன்றுவிடலாம். திருமணமான ஒரு பெண் இன்னோர் ஆடவரை மயக்கினால், அந்த அப்பாவி ஆண் மகனை விட்டுவிட வேண்டும். குற்றவாளி அவளே. அவளுடைய கணவன் அவளை எப்படி வேண்டுமானாலும் தண்டிக்கலாம்.
ஒரு பெண் தன் கற்பை உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டியது அவசியம். திருமணத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும்போது தான் கற்போடு இருப்பதைத் தன் கணவனுக்கு அவள் உறுதி செய்ய வேண்டும். இதில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பதாகத் தெரிந்தால் இரண்டு காரியங்களை அவள் கணவன் உடனடியாகச் செய்யலாம். அவளை அவள் பிறந்த வீட்டுக்குத் துரத்தலாம். அல்லது, கொன்றுபோடலாம். கற்புடன் இருக்கும் ஓர் இளம்பெண்ணை ஆடவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டால், அவளை அவனுக்கு மணமுடித்துக் கொடுப்பதன்மூலம் பிரச்னையைத் தீர்த்துவிடலாம்.
வயற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணை ஓர் அந்நியன் தாக்கினால் அதன்மூலம் அவளுடைய பிரசவம் பாதிக்கப்பட்டால் அடித்தவனின் மனைவி கர்ப்பமாகும்வரை காத்திருந்து அவளுடைய பிரசவத்தையும் தடைசெய்ய வேண்டும். ஒரு பெண் எந்நிலையிலும் குழந்தை பெற்றுக்கொள்ள மறுக்கக் கூடாது. சுயமாகக் கருக்கலைப்புச் செய்துகொள்ளக் கூடாது. இன்னொரு பெண்ணின் உதவியையும் கோரக் கூடாது. அவ்வாறு செய்தால் குற்றமிழைத்த பெண், அவளுக்கு உதவிய பெண் இருவரும் கூரான ஆயுதத்தால் குத்திக் கிழிக்கப்படுவார்கள். அவர்களுக்கு முறையான இறுதிச்சடங்குகள்கூடச் செய்யப்பட மாட்டாது. இந்த இடத்தில் ஒரு விளக்கம் அவசியமாகிறது. குழந்தைகள் எந்நிலையிலும் கொல்லக் கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டவிதிகள் அல்ல இவை. குழந்தைகள் கொல்லப்படுவதும் கருச்சிதைவும் அப்போது வழக்கத்தில் இருந்திருக்கின்றன. ஆனால், அவற்றை முடிவு செய்ய வேண்டியவர்கள் ஆண்கள். தன்னுடைய எந்தக் குழந்தை வாழ வேண்டும், எது வாழ வேண்டியதில்லை என்பதைத் தந்தையே முடிவு செய்ய வேண்டும். அந்த உரிமையைத் தானே கையில் எடுத்துக்கொள்வதால்தான் மனைவிக்கு மரண தண்டனை.
மற்ற தண்டனைகளிலும் இந்த உணர்வு வெளிப்படுவதைக் காண முடியும். பாலியல் குற்றமாக இருந்தாலும் சரி, கருக்கலைப்பாக இருந்தாலும் சரி; செய்பவர் ஒரு பெண்ணாக இருக்கும்போது அவள் கொல்லப்படுகிறாள். ஆண் பெரும்பாலான குற்றங்களிலிருந்து நழுவிக்கொள்கிறான். அல்லது, குறைவாகத் தண்டிக்கப்படுகிறான். எப்போதெல்லாம் அவன் ஒரு பெண்ணுடன் சேர்ந்து குற்றமிழைக்கிறானோ அப்போது அவனும் மரண தண்டனை பெறுகிறான். ஆக இங்கும் அவன் தவறு ஒரு பெண்ணுடன் இணைவதுதான். அவன் செய்த பெரும் குற்றமும் இதுவேதான்.
பெண்களுக்கு எதிரான பண்டைய கால சட்டங்களில் கொடூரமானவை அசிரிய சட்டங்களே என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆனால், எழுதப்படாத சட்டங்களைக் கொண்டிருந்த பல சமூகங்களிலும் இத்தகைய கொடூரமான, குரூரமான தண்டனைகளே பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. காரணம் இந்தத் தண்டனைகள் அனைத்தும் ஒரே ஆதார நம்பிக்கையில் இருந்து பிறந்தவை. பெண் என்பவள் ஆணின் உடைமை என்பதுதான் அது. அசிரிய சட்டங்கள் இயற்றப்படுவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நம்பிக்கை பலமாகச் சமூகத்தில் வேறூன்றிவிட்டது.
திருமணம் என்பது பண்டமாற்றமே. ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு மற்ற பொருள்களோடு பெண்ணும் ஏற்றி அனுப்பப்பட்டாள். இந்தப் பரிவர்த்தனை நடக்கும்போது அந்தப் பெண் தன்னுடைய முந்தைய உடைமையாளர்களிடமிருந்து விடுபட்டு புதிய உடைமையாளரைச் சென்று சேர்கிறாள். அதற்கு முன்பு கடைபிடித்த விதிகளோடு சேர்த்து மேலும் பல புதிய விதிகளை அவள் புதிய வீட்டில் கற்றுக்கொள்கிறாள். அவற்றையும் அவள் இனி கடைபிடித்தாக வேண்டும்.
அவள் இழைக்கும் ஒவ்வொரு விதிமீறலும் கடுங்குற்றமாகவே பார்க்கப்படும் என்பதை அவள் அறிந்திருக்க வேண்டும். அனுமதியின்றி வெறுமனே வீட்டைவிட்டு வெளியில் வருவதுமேகூட உயிருக்கு ஆபத்தான செயலாக மாறலாம். அந்நிய ஆடவரைச் சாதாரணமாகப் பார்ப்பதுமேகூட வேறு மாதிரியாகத் திரிக்கப்பட்டு அவள் உயிரைப் பறித்துவிடலாம். அவள் வீட்டில் உள்ள ஒரு பொருள் கோயிலில் திருடுபோன ஒரு பொருளாக இருக்கும்பட்சத்தில் அவள் கடும் தண்டனைக்கு ஆளாகலாம். அவள் அறியாமல் அவள் மேல் இன்னொருவன் காதல் வயப்பட்டால் அதற்கு அவள் தன் உயிரைக் கொடுக்க நேரிடலாம். எனவே வெளியில் மட்டுமல்லாது உள்ளுக்குள்ளும் ஒரு கூண்டை அமைத்துக்கொண்டு அடங்கியொடுங்கி இருப்பது ஒன்றே அவளுக்கு விதிக்கப்பட்ட ஒரே வாழ்க்கைமுறை. இதை உடைத்துக்கொண்டு வெளியில் வரவேண்டுமானால் ஒன்று அவள் இனானா போன்ற கடவுளாக இருக்க வேண்டும். அல்லது என்ஹெடுவானா போன்ற கவிஞராக இருக்க வேண்டும். ஒரு புயல் பறவையால் மட்டுமே இப்படிப்பட்ட கூண்டுகளை உடைக்க முடியும்.
(தொடரும்)
படைப்பாளர்:
மருதன்
எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.