நவீன தமிழ் சினிமாவில் பெண்கள் பகுதி – 2

இதயம் முரளியில் ஆரம்பித்து, காதலுக்கு மரியாதை விஜய் வரை தொண்ணூறுகளில் வெளியான படங்கள் பெரும்பாலும் காதல் என்ற கதைக்களத்தையே முன்வைத்து எடுக்கப்பட்டிருந்தன. கண்டதும் காதல், காணாமல் காதல், டெலிபோன் காதல், ஒரு தலைக்காதல், நிறைவேறாத காதல், முக்கோணக் காதல் என்று விதவிதமான வடிவங்களில் திரைப்படங்கள் வெளியான காலம் அது. இது போன்று ஆண், பெண் உறவைக் கொத்து பரோட்டா போட்டுக் குழப்பியடித்தது நிச்சயம் தொண்ணூறுகளின் திரைப்படங்கள்தான் தான். “நான் நட்புக்காக காதலை தியாகம் செய்கிறேன், நீங்க ரெண்டு பேரும் எனக்காக உங்க காதலை தியாகம் செய்வீங்களா?” என்று தபு காதல் தேசம் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் தன் நண்பர்களான வினித், அப்பாஸிடம் பேசும் வசனம் அபத்தத்தின் உச்சம். அதற்க்குப் பின்னர் அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்தார்கள் என்று நம்மை நம்ப வைப்பது போலித்தனம் அல்லாமல் வேறென்ன? இயல்பாக உடலில் எழும் ரசாயன மாற்றங்களின் விழைவாக காதலில் விழும் ஆணும் பெண்ணும்கூடக் காதல் தோல்வி என்று வந்தவுடன் மரணத்தைத் தேடுவது, வேறு காதல் என்று முன்னேறாமல் தேங்கியே கிடப்பது போன்ற பல அபத்தங்களை நவீன தமிழ் சினிமாக்கள் அதிகம் படமாக்கப்படுவதில்லை என்பது பெரிய ஆறுதல்.

ஒரு பெண்ணை முதன் முதலில் கண்டதுமே காதல் வயப்படுவது, அவளைச் சுற்றிச் சுற்றி வருவது, தன்னைக் காதல் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவது போன்ற தமிழ் சினிமாவின் ‘பாரம்பரியம்’ இன்றும் கூடச் சில படங்களில் தொடர்ந்தாலும் ஆண், பெண் நட்பு மற்றும் அவர்களுக்குள்ளான உறவுச் சிக்கலை நவீன தமிழ் சினிமாக்கள் அழகாகவே கையாண்டு வருகின்றன என்று தோன்றுகிறது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நபர்கள் ஒரு பெண்ணிடம் காதல் சொல்லும் போது, அவளுக்கு அந்த இருவரையுமே பிடித்திருந்தாலும் முடிவாக ஒருவரைத் தேர்வு செய்வது தானே யதார்த்தமாக இருக்க முடியும்! காதலைப் புனிதமாக்குகிறோம் என்ற பேரில் ஒரு காதல் தோல்வியைச் சாதாரணமாகக் கடக்க முடியாமல் ‘லவ் ஃபெயிலியர் ஆகிருச்சு’ என்று அந்தக் காதலுக்காக வாழ்க்கையை ஒப்புக்கொடுக்காமல், இன்றைய சினிமாக்கள் ‘ப்ரேக்கப் ஆகிருச்சு மச்சி’ என்று ஆணோ பெண்ணோ அதை எளிதாகக் கடந்து வரும் மனநிலைக்கு மாறியிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று.

காதல் கடந்த ஒரு காமத் தேடலில் ஓர் ஆண் ஈடுபடும்போது அதைச் சமுதாயம் பார்க்கும் கண்ணோட்டமும் அதையே ஒரு பெண் செய்யும் போது அவளைப் பார்க்கும் கண்ணோட்டமும் எவ்வளவு மாறுபடுகிறது என்று அப்பட்டமாகச் சொல்லியது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ’இறைவி’ திரைப்படத்தின் பெண் பாத்திரங்கள். வேறு பெண்ணுடன் திருமணம் முடிந்த பின்னரும் தன்னைத் தேடி வரும் மைக்கேலை (விஜய் சேதுபதி) விலக்கிவிடும் மலர் (பூஜா) அழகோ அழகு. ‘எனக்கு ஒரு தடவ கல்யாணம் ஆகிருச்சு. ஒரு குழந்தைகூட இருக்கு. ஆனா, என்னை யாரும் காதலிச்சதில்லை. நீ தான் பர்ஸ்ட்டு’ என்று விஜய் சேதுபதி மனைவியாக வரும் பொன்னி (அஞ்சலி) தன்னைக் காதலிக்கும் ஜெகனிடம் (பாபி சிம்ஹா) சொல்வாள். காதலும் காமமும் வேறு வேறு என்று இவ்வளவு அழுத்தமாக பெண் பாத்திரங்கள் பேசி, அதற்கு தியேட்டரில் கைதட்டல்களையும் வாங்கிக் கொடுத்த அந்த இயக்குநரை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. பின்னாளில் அது மாறிப்போன சோகக் கதையை இப்போது பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்.

நம் வாழ்விலும் இதுபோன்ற தருணங்களைப் பலரும் கடந்து வந்திருக்கக்கூடும். மனதில் தோன்றும் காதல் உணர்வைத் திருமண வாழ்வோடு பொருத்திப் பார்ப்பது தான் இங்கு எழும் சிக்கல். காதல் முறிந்து போவது போல் அதனுடனான காமமும் காலப்போக்கில் கடந்துவிடும். இந்த எளிய விஷயத்தைத் தமிழ் சினிமாக்களில் அழுத்தமான பாத்திரங்கள் பேசும் போது அதன் பாதிப்பைச் சமூகமும் மெல்ல உணரத் தொடங்கும்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் தன் முன்னாள் காதலனுடன் ஒரு நேரம் படுக்கையைப் பகிர்ந்த தன் மனைவி வேம்பு (சமந்தா) மீது கொலை வெறியுடன் சுற்றும் முகில் (ஃபஹத் ஃபாசில்) க்ளைமேக்ஸ் காட்சியில் வில்லன் அவளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முற்படும் போது, அவளின் மனநிலையை அறிந்து அவர்களுக்குள் ஒரு நல்ல புரிதல் வருவது போன்ற காட்சி அமைப்பு இருந்திருக்கும். ‘தன் மனைவி திருமணத்திற்கு முன் யாரையாவது காதலித்திருப்பாளா? அவனுடன் எவ்வாறெல்லாம் இருந்திருப்பாள்?’ என்பது போன்ற பிற்போக்குத்தனமான சிந்தனைகளில் இருந்து வெளிவர இது போன்ற காட்சி அமைப்புகள் சினிமாக்களில் வருவது சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கும்.

ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொள்ளலாமா, அது தவறில்லையா என்ற ஆதாம் ஏவாள் காலத்து சந்தேகத்திற்கே இன்றைய தலைமுறை ‘ஓ காதல் கண்மணி’ வழியாகத்தான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால், திருமணத்திற்கு முன்னான உறவில் அந்தப் பெண்ணுக்கும் ஆணுக்கும் விருப்பம் இருக்கிறதா, இல்லையா என்பது தான் கேள்வியாக இருக்க வேண்டும்? விருப்பமில்லாத பெண்ணை அதிகாரம், பண பலத்தால் வீழ்த்தி அவளை ஒழுக்கமில்லாதவள் என்று சட்டத்தின் முன் நிற்க வைத்தும், அதிலிருந்து மீண்டெழும் ‘நேர்கொண்ட பார்வை’ மீரா (ஷ்ரதா ஸ்ரீநாத்) போன்ற பெண்ணை இந்தச் சமுதாயம் கொண்டாட வேண்டும். நோ மீன்ஸ் நோ. இது போன்ற திரைப்படங்களில் தல, தளபதிகள் நடிப்பது அவர்களின் ரசிகர்களிடையே சிறு மாற்றத்தையாவது உண்டு பண்ணக்கூடும். கூடவே அவர்கள் நடிக்கும் திரைப்படங்களிலும் அயிட்டம் டான்ஸ் ஆடாமல் இருந்தால் இன்னும் சிறப்பு.

ஆண் – பெண் உறவுச்சிக்கலைக் கையில் எடுக்கும் இதுபோன்ற சில சென்ஸிட்டிவான விஷயங்களில் பொதுப்புத்தியை மாற்றிச் சிந்திக்க வைக்க பிரம்மப் பிரயத்தனப்படும் இக்காலத்தில், சமீபத்தில் வெளிவந்த ’வாழ்’ திரைப்படத்தின் யாத்ராம்மா கதாபாத்திரம் அந்த முயற்சிகளை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டது. சைக்கோ கணவனை ஓர் ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஓர் ஆண் நண்பனிடம் உதவி கேட்டுச் செல்லும் வரை எல்லாம் சுபம். ஆனால், இரண்டு நாட்கள் முன்னால் ஒரு மரண வீட்டில் தன்னிடம் ஃப்ளிர்ட் (Flirt) செய்த ஓர் ஆணை, தன் அழகால் வயப்படுத்தி தன் மகனை அவனிடம் ஒப்படைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று நினைக்கும் ஒரு சாதாரணப் பக்கத்து வீட்டுப் பெண் ’யாத்ராம்மா’ என்பது எண்ணிப் பார்க்கவே இயலாத கொடூரம். அழகான ட்ரோன் காட்சியமைப்புகள், ரம்மியமான இயற்கைச் சூழல், மனதிற்கு இதமான இசை, அருமையான வசனங்கள், அசர வைக்கும் நாயகியின் முக அழகு, கூடவே சேர்ந்த நேர்த்தியான பின்னணி குரல் என்று திரைப்படமும், யாத்ராம்மா கேரக்ட்டரும் இளைஞர்கள் மத்தியில் படுவேகமாகப் பிரபலமானது. இதையெல்லாம் காண ஓர் அழகான ட்ராவல் வ்லாக் (Travel Vlog) போதுமே. கதை சொல்லல், நேர்கோட்டுத்தன்மை, யதார்த்த வாழ்விலிருந்து விடுபடல் என்று பல அலங்கார வார்த்தைகளைப் போட்டு சிலர் ‘இதெல்லாம் தெரியவில்லையா’ என்று என்னிடம் சண்டை செய்தார்கள். ஆனால், படத்தின் ஆணிவேரான அந்தப் பெண் பாத்திரம் எப்படி உருவகப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதைத் தாண்டி இந்த அழகியலை என்னால் ரசிக்க முடியவில்லை. படத்தில் முக்கால்வாசி நேரமும் பெண் உடலை வெறும் க்ளிஷேவாகவே காட்டிவிட்டு, அதில் உள்ள அழகியலை மட்டும் பாருங்கள் என்ற விமர்சனங்களை அருவி பட இயக்குநரிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை.

காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் எதிர்பாராத சூழலில் வேலையை இழக்கும் யாழினிக்கு (மடோனா செபாஸ்ட்டியன்), பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கதிர் (விஜய்சேதுபதி) உடன் ஒரு நட்பு உருவாகிறது. தன் வாழ்வு முறைக்குச் சிறிதும் பொருந்தாத ஒருவருடனான நட்பு அமைந்துவிட்டது என்று அந்தப் பெண் தவிப்பதும், வேறு வழியின்றி அவனின் உதவிகளை நாடுவதும் வெகு இயல்பான காட்சி அமைப்பில் படமாக்கப்பட்டிருக்கும். இது போன்ற நட்புகளை யதார்த்தத்தில் ஓர் ஆணோ பெண்ணோ நிச்சயம் கடந்து வந்திருப்பார்கள். ஆண் – பெண் நடுவில் நட்பு, காதல், காமம், திருமணம் இதைத் தாண்டி பேர் சொல்ல இயலாத ஓர் உறவு இருக்கவே முடியாதா? அந்த உறவில் காதல் இல்லை, காமம் இல்லை, புனிதம் இல்லை, அருவருப்பு இல்லை. அந்த உறவு சலிக்காது, துன்பப்படுத்தாது, வெறுமை கொள்ள வைக்காது, இனி இவனைச் சந்திக்கவே கூடாது என்று தூக்கிப் போட வைக்காது. மாறாக அவனுடன் கழித்த நாட்களை, நல்ல நினைவுகளை மனதில் சுமக்க வைக்கும். ஒரு மழை நாளில் நேர்முகத் தேர்வுக்காகச் செல்ல முடியாமல் தவிக்கும் போது நாயகன் ஒரு குடை கொண்டு வந்து தந்தவுடன் நாயகி அவன் மீது காதல் பாணம் வீசுவது போல் ஒரு காட்சி வைத்திருந்தால் ‘அடச்சே!’ என்ற சலிப்பு நிச்சயம் நம்மில் பலருக்கும் வந்திருக்கும். அவளுக்காக அவன் தன் பாணியில் செயற்கரிய பல செயல்களைச் செய்தபோதும்கூட அது காதல் என்ற கோணத்தில் காட்டாமல் விட்டது வெகு சிறப்பு.

ஹாலிவுட்டில் லாலா லேண்ட் (La la Land) படம் வெளிவந்து ஆஸ்கர்களை வாங்கிக் குவித்தது. நண்பர்களுடன் அந்தப் படம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது ‘என்ன பெரிய லாலா லேண்ட்? ஒரு டீஸ்பூன் விண்ணைத்தாண்டி வருவாயா, ஒரு டீஸ்பூன் காதலும் கடந்து போகும் ரெண்டையும் சேர்த்து கொஞ்சம் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை அங்கங்கே தூவினால் லாலா லேண்ட்’ என்று ஜாலியாக ஒரு கமெண்ட் செய்திருந்தேன். வேடிக்கையாகச் சொல்லியிருந்தாலும் ஒரு வகையில் அது உண்மைதான். தமிழ் சினிமாவில் ஆண் – பெண் உறவை வைத்து ஒரு புதுமையான கதைக்களமாக அதிகம் பேரால் கவரப்பட்ட படத்தைக் கொடுத்த இயக்குநருக்கு (நலன் குமாரசாமி) கட்டாயம் ஒரு சபாஷ் போடலாம். க்ளைமேக்ஸ் காட்சியில் அவர்கள் இருவரும் பெட்ரோல் பங்கில் சந்தித்த பிறகு என்ன நடந்திருக்கும் என்ற கற்பனையைத் தாண்டி, அவர்கள் எப்போது சந்தித்தாலுமே அவர்களுக்குள் ஓர் அழகான புரிதல் மட்டுமே எஞ்சியிருந்திருக்கும் என்பதை யதார்த்தத்துடன் பதிவு செய்தது அருமை. காமமும் கடந்து போகும்!

(தொடரும்)

படைப்பாளர்:

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.