ஜெஸ்ஸி முதல் ஜானு வரை பகுதி – 1

திரைப்படங்களுக்கும் பெண்கள் சமூகத்திற்கும் இடையே என்ன தொடர்பு? பெண் முன்னேற்றம், ஆண் – பெண் சமநிலை என்பதில் திரைப்படங்களின் பங்கு ஏதேனும் உள்ளதா? திரைப்படங்களில் காட்டப்படும் பெண் கதாபாத்திரங்கள் உண்மையிலேயே நடைமுறை வாழ்வில் நாம் சந்திக்கும் பெண் சமுதாயத்தைப் பிரதிபலிக்கிறதா? எல்லாவற்றுக்கும் மேலாக திரைப்படங்களைப் பெண்கள் வாழ்வோடு தொடர்புபடுத்த வேண்டிய அவசியம் தான் உள்ளதா? என் இத்தனை கேள்விகளுக்கும் பதில் தேடி முடிவாக ‘ஆம் தொடர்பு உள்ளது’ என்ற நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டேன். சிறுவயது முதலே திரைப்பட நாயகிகள் தான் எனக்குப் பெரும்பாலும் பெண்ணியச் சிந்தனைகளைக் கடத்தியிருக்கிறார்கள். என் தோழிகள் அனைவரும் ராதா, அமலா, நதியா என்று ஸ்டைல், பேஷன் பற்றிப் பேசும் போது நான் மட்டும் ரேவதி, சுகாசினி, ஸ்ரீபிரியா என்று பெண்ணியக் கதாபாத்திரங்கள் மேல் காதல் கொண்டு அவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பேன். பின்னாளில் அது வளர்ந்து பெண்ணிய கதாபாத்திரங்கள் என்று இயக்குநர்களால் வரையறுக்கப்பட்டவற்றில் மாற்றுக் கருத்துகள் எழுந்த தருணங்களும் நிறைய உண்டு. ஆனாலும் திரைப்பட நாயகிகளே என் வாழ்வில் பெரும் மாற்றங்கள் நிகழக் காரணமாய் இருந்திருக்கிறார்கள். நான் மிகவும் ரசித்த, என்னுள் பல கேள்விகளை எழுப்பிய, ‘இன்னமும் இது இப்படித்தானா’ என்று சலிப்படைய வைத்த, நவீனத் தமிழ் சினிமாவின் பல்வேறு கதாபாத்திரங்களாக வலம் வந்த நாயகிகளைப் பற்றி நீண்ட நாட்களாக எழுத எழுந்த ஆசையின் விளைவே இந்தத் தொடர்.

ஒரு சின்ன ப்ளாஷ்பேக். 2005ஆம் வருடம் சந்திரமுகி படம் வெளிவந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. படம் நூறு நாட்கள் கடந்து அதன் வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது ஜோதிகா ஒரு முக்கியமான கோரிக்கையைத் தமிழ்த் திரையுலகின் முன் வைத்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றவர்கள், சந்திரமுகி போன்ற பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு தலைப்புகளை (டைட்டில்) விட்டுக் கொடுத்தது போலவே மற்ற முன்னணி நடிகர்களும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் என்று வரும் போது டைட்டிலை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றார். அவரின் அந்தப் பேச்சைக் கேட்ட பின்னர் தான் நான் ஜோதிகாவை ஒரு நடிகை என்பதையும் தாண்டி, சினிமாவில் பெண்களுக்கான இடத்தை நன்றாகப் புரிந்து வைத்து, அதைப் படத்தின் வெற்றி மேடையில் சொல்லும் அளவுக்குச் சுயமரியாதையும் தைரியமும் உள்ள பெண்ணாக எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

பொதுவாகவே படத் தலைப்புகள் அனைத்தும் கதைக்குத் தகுந்தவாறு தேர்வு செய்யப்படுகிறது என்று தான் இத்தனை காலமும் நான் நினைத்திருந்தேன். விருமாண்டியில் ஆரம்பித்து வரலாறு வரை தமிழ் சினிமா பல டைட்டில் சண்டைகளைக் கண்டு, கடந்து வந்திருக்கிறது. இந்தப் பதினைந்து வருடங்களில் பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து வெளிவந்த படங்களில்கூட பெண்களின் பெயர்கள் பெரும்பாலும் இருட்டடிக்கப்பட்டே வந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களில், படத்திற்குச் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ அந்த நாயகனின் பெயர் கட்டாயம் படத்தலைப்பாக வைக்கப்பட்டு விடுகிறது. ஆண் கதாபாத்திரங்களின் பெயர்களை, குறிப்பாக டாப் ஹீரோக்களின் பாத்திரப் பெயர்களை டைட்டிலாக வைப்பது என்பது மிகவும் பழகிப்போன ஒன்றாக மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது.

இது இன்று நேற்று ஆரம்பித்த விஷயம் அல்ல. ஏன் ஜோதிகா சந்திரமுகி என்ற டைட்டிலைக் கொண்டாடினார் என்று ரஜினிகாந்தின் டைட்டில் ஹிஸ்டரிகளை அலசினால் தெரிந்துவிடும். அண்ணாமலை, முத்து, படையப்பா என்று வளர்ந்து வளர்ந்து காலா, கபாலி என்று இன்றும்கூட அது தொடர்ந்து கொண்டே தான் வருகிறது. இதில் தல, தளபதிகளின் பங்கும் பெரிதளவில் உள்ளது. வீரம், விவேகம், விசுவாசம், வேதாளம் , வலிமை என்று தல சிறிது விலகி இருக்கிறார் போல. எனக்கும் ஆண் கதாபாத்திரங்களின் பெயர்களை படத்திற்குத் தலைப்பாக வைப்பதில் எந்த வெறுப்பும் இல்லை. அது கதைக்காகவும் அந்தக் கதாபாத்திரங்களை வலுவாக்கவும் தலைப்பாகக் கொடுக்கிறார்கள் என்றே புரிந்துகொள்கிறேன். ஆனால், அதே அளவு முக்கியத்துவம் பெண் கதாபாத்திரங்களை முன்வைக்கும் படங்களுக்கும் கொடுக்கப்படுகிறதா என்பதே என் கேள்வியாக இருந்து கொண்டே இருக்கிறது.

விவசாயிகளின் பிரச்னையை மையமாக வைத்து 2014இல் ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் கத்தி. அது வந்த புதிதில் கத்தி போன்ற கூர்மையான, வலிமையான ஆயுதமாக மக்கள் முன் ஹீரோ களமாடுவதால் அந்த டைட்டில் கொடுக்கப்பட்டது என்று நான் புரிந்து வைத்திருந்தேன். ஆனால், படத்தைப் பார்த்த பிறகு அது ஹீரோவின் பட்டப்பெயர் (கத்தி என்கிற கதிரேசன்) என்று உணர்ந்ததும் நான் சிறிது நொந்து தான் போனேன். இதே போல் 2020 இல் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான திரைப்படம் க/பெ ரணசிங்கம். வெளிநாட்டில் வேலைக்குச் செல்லும் தன் கணவன் அங்கே நடக்கும் ஒரு விபத்தில் இறந்து விடுகிறான். கணவரின் டாக்குமெண்ட்களில் உள்ள குழப்பம் காரணமாக அவரின் உடலை இந்தியா கொண்டுவர சிக்கல் நீடிக்கிறது. படத்தில் முக்கால்வாசி நேரமும் ரணசிங்கம் வெளிநாட்டில் ஏதோ ஒரு மார்ச்சுவரியின் ஐஸ் பெட்டியில் வெறும் சடலமாகக் கிடக்கிறான். அவனை மீட்டுக் கொண்டு வரும் அரிய நாச்சியின் வசனங்களுக்குப் படம் முழுவதும் விசில்கள் பறக்கின்றன. ஆனால், அவள் க/பெ ரணசிங்கம் என்ற கணவன் பெயரில் ஒட்டிக்கொண்டு வாழும் ஓர் அபலைப் பெண்ணாகக் காட்டும் ஒரு டைட்டிலைத் தான் அவர்களால் கொடுக்க முடிகிறது. மாறாக அவள் அரியநாச்சியாக எப்போது அறியப்படுவாள்? ம/பெ அரியநாச்சி என்பது தானே இந்தப் படத்திற்கு மிகப் பொருத்தமான தலைப்பாக இருந்திருக்க வேண்டும்? க/பெ ரணசிங்கமாகவே வாழ்ந்து மடிய அரியநாச்சிகள் ஒரு போதும் விரும்புவதில்லை.

பெண்களின் பெயர்கள் படங்களுக்குத் தலைப்பாக வைக்கப்பட்டதே இல்லையா என்றால், இருந்திருக்கிறது. தேவி, ராணி, மோகினி, மைனா, மாயா, மாலினி, காஞ்சனா, கயல் , பவானி, சாருலதா, லக்ஷ்மி, திரௌபதி. இவை அனைத்தும் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழில் வெளியான சில பிரபலமடைந்த திரைப்படங்களின் பெயர்கள். இவை போக இன்னும் சில மூன்றாம் தரப் படங்கள் மற்றும் தியேட்டருக்கு வந்ததே தெரியாமல் காணாமல் போன சில படங்களுக்கும் பெண் கதாபாத்திரங்களின் பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப் பெண் கதாபாத்திரங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் பெரும்பாலான படங்கள் பக்திப் படங்களாகவோ இல்லை பேய்ப் படங்களாகவோ இருப்பது வெறும் தற்செயல் என்று தோன்றவில்லை. பக்தி என்ற பெயரில் பெண்ணிடம் பயத்தையும், பேய்க் கதைகள் என்ற பெயரில் மூட நம்பிக்கைகளையும் ஊட்டி பெண்களைக் காலம்காலமாகச் சிந்திக்க விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறோம். அதிலும் குறிப்பாகப் பேய்ப்படங்கள் பெரும்பாலும் பெண் ஆடியன்ஸை முன் வைத்தே எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் லாரன்ஸ் ராகவேந்திராவின் படங்கள் பேய்ப்பட வரிசையில் முனி என்று பயணத்தை ஆரம்பித்தது. பின் அவரும் மனம் மாறி காஞ்சனா 1, காஞ்சனா 2 என்று பெண்களின் பெயரைச் சூட்ட ஆரம்பித்துவிட்டார். இதை வாசித்துக் கொண்டிருக்கும் போதுகூடத் திரையில் ‘பூமிகா’ என்ற நவீனப் பெயருடன் ஒரு பேய்ப்படத்தை நீங்கள் பார்க்கலாம். பேய்ப்படங்களுக்குப் பெண் பெயர் சூட்டினால் என்ன என்று மீண்டும் அதே கேள்வியை முன் வைப்பீர்களானால் என் கேள்வியும் ஏன் பேய்ப்படங்களுக்கு மட்டும் என்பதே.

அடடா, ஒரு டைட்டிலுக்கு இவ்வளவு அக்கப்போரா என்று கேட்டால், ஆமாம் அக்கப்போர் தான். பெயர்கள் தாம் வாழ்வின் அடையாளம். பாலினத்தில்கூட ஆண், பெண், திருநங்கை, திருநம்பி என்ற அடையாளங்கள் உண்டு. ஆனால், பெயரில் ஆண், பெண் என்ற இரண்டே வகை தான். ஹீரோ ஒரு துணிச்சலான போலீஸ் அதிகாரியாக வந்து, வில்லன்களை அடித்துத் துவம்சம் செய்கிறார். ஜீப்பில் பறக்கிறார். மீசையை முறுக்குகிறார். தெறிக்கவிடும் வசனங்களால் தூள் கிளப்புகிறார். இது போன்ற படங்களுக்கு என்ன தலைப்பு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். படம் முழுவதும் ஆணாதிக்கத்தைக் காட்டிவிட்டு டைட்டிலில் என்ன வைத்தால் என்ன? பெண்கள் சார்பு படங்கள் என்ற அடிப்படையே தவறாக இருக்கிறது. எல்லாத் திரைப்படங்களும் ஆண் சார்ந்து எடுக்கப்படுவதால், பெண்ணை முன்வைத்து எடுக்கும் படங்களைத் தனியே பெண்ணியப் படம் என்று சொல்ல வேண்டி வருகிறது. அதுவே பெரும் குறை. பென்குயின், பொன்மகள் வந்தாள், மிஸ் இந்தியா என்று சமீபத்தில் OTT தளங்களில் வந்த பெரும்பாலான படங்கள் பெண் கதாபாத்திரங்களை முன்வைத்து எடுக்கப்பட்டிருந்தன. அதிலும்கூட டைட்டில் கார்டுகளில் இடம் இல்லை.

இந்த விஷயத்தில் பாலிவுட் படங்கள் ஓரளவு டைட்டில் கார்டுகளில் பெண்களை மையப்படுத்தியிருக்கிறது என்றே தோன்றுகிறது. 2015இல் தீபிகா படுகோனே நடித்து வெளியான பிக்கு (Piku), ஹவுஸ்வொய்ஃப் ஆன பிறகு என்ன செய்வதென்று தெரியாமல், பல சொதப்பல்களைச் செய்து தனக்கும் ஒரு வழி கிடைக்கும் என்பதை வித்யாபாலனின் அழகான எதார்த்தமான நடிப்புடன் காட்டிய தும்ஹரி சுலு (Tumhari Sulu), சரோகேட் மதர் (Surrogate Mother) என்று இந்திய சினிமாக்கள் அதிகம் தொடாத விஷயங்களுடன் 2021இல் வெளிவந்த மிமி (Mimi) என விரல் விட்டு எண்ணும் அளவிலாவது பெண் பாத்திரங்களுக்கு டைட்டில் கார்டுகளில் இடம் இருந்ததாகத் தோன்றுகிறது. ஆனால், ‘தும்ஹரி சுலு’ ரீமேக் செய்யப்பட்டு ‘காற்றின் மொழி’யாகவே நம் வரவேற்பறையை அலங்கரித்தாள்.

இந்தப் பத்து வருட இடைவெளியில் அனைவரின் மனதையும் பெரிதும் கவர்ந்த பெண் பாத்திரம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸி. அந்தத் திரைப்படத்தின் மொத்த அழகுமே அந்த ஜெஸ்ஸி என்ற கதாபாத்திரத்தைச் சுற்றியே அமைக்கப்பட்டிருக்கும். ‘ஜெஸ்ஸி யூ ஆர் வெரி ப்ராக்டிக்கல், சென்சிபிள்’ என்று கார்த்திக் ஒவ்வொரு முறையும் ஜெஸ்ஸியின் அந்த முரணான எண்ணங்களை ரசிப்பான். இந்த நிமிடம் ஒன்றை யோசித்துவிட்டு மறுகணமே அதற்கு நேர்மாறாய் யோசிக்கும் பெண்ணின் மனதை அப்படியே பிரதிபலித்ததாக நான் உணர்ந்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது ஜெஸ்ஸிதான். அந்தப் படத்திலேயேகூட கார்த்திக் என்ற இயக்குனரின் முதல் படமாக, சிம்பு எடுக்கும் படத்திற்கு ‘ஜெஸ்ஸி’ என்ற பெயர் தான் கொடுத்திருப்பார் இயக்குனர் கவுதம் மேனன். அவரின் படங்கள் அனைத்துமே அருமையான தலைப்புகள் கொண்டிருக்கும். ஆனாலும்கூட இவ்வளவு அழுத்தமான பாத்திரத்தைப் படைத்துவிட்டு ஜெஸ்ஸி என்ற பெயருக்கு டைட்டிலில் இடம் இல்லாதது என்றுமே எனக்கு வருத்தம் தான். ‘ஜெஸ்ஸி’ என்று பெரிய திரையில் அந்தப் படத் தலைப்பைப் பொருத்திப் பாருங்கள். உங்களுக்கும்கூடப் பிடிக்கலாம்.

அடுத்து சக்கைப் போடு போட்ட 96 திரைப்படம். இந்தப் படத்தின் கதையில் சில முரண்கள் எனக்கு இருந்தாலுமேகூடப் பெருவாரியான மக்களால் இன்றும் அந்தப் படம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்க்குப் பெரும் துணையாக நின்றது ராம் மற்றும் ஜானுவின் பாத்திரப் படைப்பு. ஏறக்குறைய படம் முழுவதிலுமே ஒரே ஒரு மஞ்சள் சுடிதாரில் வந்து அனைவர் மனத்தையும் கொள்ளை கொண்ட ஒரு பாத்திரம் ஜானு. ‘ஜானு மாதிரி ஒரு பொண்ணு இருந்தா அவளை நினைச்சுட்டே காலம் முழுதும் வாழ்ந்திருவேன்’ என்று நிறைய ஆண்கள் சொன்னதை நானே கேட்டிருக்கிறேன். இத்தனை ஆழமான, அழுத்தமான ஒரு கேரக்டரை உருவாக்கிவிட்டு, அந்த கேரக்ட்டருக்கு டைட்டிலில் இடம் கொடுப்பதில் என்ன சிக்கல் இருந்திருக்கக் கூடும்? படம் முழுவதும் அழகான மைவிழிகளோடு திரையெங்கும் வியாபித்து, தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட ஜானு என்ற பெண் பாத்திரத்தை, ராம் கடற்கரையில் தனியாக இருக்கும் ஒரு தருணத்தில் மணலில் வரைந்து பார்ப்பான். அந்தக் காட்சி என் மனதில் அப்படியே பதிந்து கிடக்கிறது. நம்மில் பலரும் காதலில் திளைத்திருந்த தருணங்களில் அதிகம் எழுதிப் பார்த்திருப்பது அவர்களின் காதலன்/காதலியின் பெயர்களாகத்தான் இருந்திருக்கும். கடற்கரையின் மணல் வெளியில் ராம் வரையும் ஜானு என்ற பெயரைவிடவா வேறு பெயர்கள் இந்தப் படத்திற்க்குப் பொருத்தமாக இருந்திருக்கக்கூடும்?

தியேட்டரில் ‘லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா’ என்று டைட்டில் கார்டு வரும்போது விசில் சத்தம் தூள் பறக்கும். ஆண்களுக்கான பட்டப் பெயர்களில் சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், நவரச நாயகன், மக்கள் செல்வன் என்று தனித்தனிப் பட்டப் பெயர்கள் கொடுத்துவிட்டு, நயன்தாராவுக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் கொஞ்சமும் பொருந்தவில்லை. வானில் கோடி நட்சத்திரங்கள் இருக்கும் போது ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமே தான் இருக்க வேண்டுமா? சூப்பர் ஸ்டார் நயன்தாராவாக இருந்தால் என்ன வந்துவிடப் போகிறது? டைட்டில் கார்டில் அறம் என்பதற்குப் பதில் ‘மதிவதனி’ என்ற பெயர் ஒளிர்ந்திருந்தால்? நிச்சயம் அது பெண்ணினத்தின் கொண்டாட்டத் தருணமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழர்களின் வாழ்வோடு இயைந்த அறம் வழுவாது, அதிகாரத்தை எதிர்த்து மக்களோடு மக்களாகச் சேர்ந்து உயிரைக் காப்பாற்றிய கலெக்டர் ‘மதிவதனியே’ எங்கள் டைட்டில் வின்னர்.

ஜோதிகாவின் சந்திரமுகி விழாவில் ஆரம்பித்த இந்தக் கட்டுரையை அவரின் ஐம்பதாவது படமான ‘உடன்பிறப்பே’ படத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒரு பேட்டியோடு முடிக்கிறேன். ‘உடன்பிறப்பே’ திரைப்படம் குறித்த பேட்டியில் ஜோதிகா மீண்டும் ஒரு விஷயத்தை முன்வைக்கிறார். ஆண் கதாபாத்திரப் படைப்புகளைக் கொண்ட படங்களே பெருமளவில் பண்டிகைக் காலங்களில் வெளியாகின்றன என்றும் முதல் முறையாகப் பெண் கதாபாத்திரத்தை முன் வைத்த ‘உடன்பிறப்பே’ படம் ஆயுத பூஜை அன்று வெளியாகிறது என்று மகிழ்ச்சியும் பாராட்டுகளையும் தெரிவித்திருக்கிறார். படத்தின் தரம் குறித்தும், படத்தில் பெண்களை எவ்வாறு சித்தரிக்கிறார்கள் என்பது குறித்தும் நிறைய பேசலாம். ஆனால், அதற்கு முன் தமிழ்த் திரையுலகில் காலம்காலமாகக் கடைப்பிடிக்கும் சில வழக்கங்களை மாற்றுவதற்காக ஜோதிகாவைப் பாராட்டியே தீர வேண்டும். அவரைப் போலவே தான் சார்ந்திருக்கும் துறைகளில் பெண்களுக்கான இடம் குறித்து சக பெண்களும் பொது வெளியில் பேச வேண்டும்.

(தொடரும்)

படைப்பாளர்:

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.