எந்திரன் திரைப்படத்தில் ‘உயிர் என்றால் என்ன?’ என்ற சிட்டியின் சாதாரணக் கேள்விக்கு வசீகரன் பதில் சொல்லத் திணறுவதைப் பார்த்திருப்போம். உயிருள்ளவை/உயிரற்றவை என்று தன்னுணர்வாக மனிதர்களால் பிரிக்க முடிகிறது என்றாலும் ‘உயிர்’ என்பதற்கான வரையறையை முன்வைக்க முடிவதில்லை என்பதே உண்மை. வேற்று உலக ஜீவராசிகளைத் தேடி மனிதன் பயணிக்கத் தொடங்கிய பின்னர் இந்த வரையறையின் முக்கியத்துவமும் அதை நிறுவுவதில் உள்ள சிக்கலும் கூடிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

எப்படியாயினும் ‘அடுத்த தலைமுறையை உருவாக்குதல்’ என்பது உயிர்களுக்கே உள்ள தனிப்பண்பாகப் பார்க்கப்படுகிறது. ஒரு பேனாவிலிருந்து இன்னொரு பேனா பிறப்பதில்லை. ஆனால், சாதகமான சூழல் அமையும்போது ஓர் அமீபா தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்கிறது. ஆண் ஒட்டகமும் பெண் ஒட்டகமும் இணைசேர்ந்து குட்டிகளைப் பெற்றெடுக்கின்றன. அடுத்த செடிக்கான ஆரம்பகட்ட செல்களை ஏந்தியபடி பூக்கள் பூக்கின்றன.

இனப்பெருக்கம் என்ற பண்பு எல்லா உயிர்களுக்கும் பொதுவானது என்றாலும் உலகில் கணக்கிலடங்கா இனப்பெருக்க முறைகள் உண்டு. இரண்டு செல்களாகப் பிரியும் எளிய முறை தொடங்கி, வெவ்வேறு மரபணுக் கூறுகள் கொண்ட விலங்குகளோடு இணைசேரும் உயிரிகள் வரை அந்தக் களத்தில் பல ஆச்சரியங்கள் உண்டு. முதல் செல் தன்னைப் பிரதியெடுத்துக்கொண்டபோது பூமியில் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்தது என்றால், பால்சார் இனப்பெருக்கம் (Sexual Reproduction) என்ற அம்சத்தின் வருகை உயிரியல் உலகின் மற்றொரு மைல்கல் எனலாம்.

காதலோ கலவியோ, அதை அடையும் பாதை மலர் நிறைந்ததாக மட்டுமே இருக்காது என்பது மனிதர்களுக்குத் தெரிந்ததுதான். அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டுமானால் இரு செல்கள் சேர வேண்டும் என்ற கட்டாயம் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கிறது என்று கூறும் அறிவியலாளர்கள், பால்சார் இனப்பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பட்டியலிடுகிறார்கள்:

  1. பால்சார் இனப்பெருக்கம் வேண்டுமானால் செல்பிரிதல் முறை மாற வேண்டும். அதற்கு ஒரு பரிணாமப் பாய்ச்சல் தேவைப்படும்.
  2. ஒருவேளை பரிணாம வளர்ச்சியில் பால்சார் இனப்பெருக்கம் வந்துவிட்டால், அடுத்தது இனப்பெருக்கத்துக்கான தனி செல்களை உருவாக்க வேண்டியிருக்கும். ஆணின் உயிரணுக்கள், பெண்ணின் கருமுட்டை இரண்டையும் உருவாக்க அதிக ஆற்றல் தேவைப்படும்.
  3. ஒவ்வொரு முறையும் இணைசேருவதற்கு இன்னொரு உயிரியைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். நீரில் நீந்தியபடி நினைத்த போதெல்லாம் இரண்டாகப் பிரிந்து அடுத்த தலைமுறையை உருவாக்கும் கதை இனி நடக்காது.
  4. அடுத்ததாக இணையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு படலம் தொடங்குகிறது. இணையைக் கவர்வதற்காக ஒவ்வொரு விலங்கும் தனித்தனிப் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவை சில நேரங்களில் வேட்டையாடிகளிடமிருந்து தப்பிப் பிழைப்பதற்கே தடையாக இருக்கலாம். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆண் மயிலின் நீண்ட, கனமான தோகை. தவிர, இணைகவர்வதற்கு இதுபோன்ற பண்புகளை உருவாக்கக் கூடுதல் ஆற்றலும் மரபணு மாற்றங்களும் தேவைப்படும்.
  5. இணையை ஒருவழியாகக் கவர்ந்த பிறகு இரு உயிரிகளும் இணைசேர்கின்றன. இந்த நேரத்தில் வேட்டையாடிகளின் தாக்குதல் இருக்கலாம், பாலியல் நோய்கள் பரவுவதற்கும் இது வழிவகுக்கும்.
  6. இத்தனை ஆபத்துகளோடு இணைசேர்ந்த பிறகு, தன் மரபணுக்களில் 50% மட்டுமே அடுத்த தலைமுறைக்குப் போகும். ஆனால், கலவியற்ற இனப்பெருக்கத்திலோ 100% தன்னுடைய மரபணுக்கள் மட்டுமே இருக்கும் ஓர் உயிரை உருவாக்க முடியும்.
  7. பால்சார் இனப்பெருக்கத்தில் முட்டையை உருவாக்கவும் குட்டிகளைப் பெற்றெடுக்கவும் பெண் உயிரிகளே அதிக ஆற்றலையும் நேரத்தையும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஆண் விலங்குகளுக்கோ மரபணு தொடர்ச்சி சார்ந்த சில சிக்கல்கள் எழுகின்றன. ஆகவே இருசாராருக்கும் இந்த வகை இனப்பெருக்கத்தில் இழப்புகள் உண்டு.
  8. ஒருசெல் உயிரிகள் இரண்டாகப் பிரியும் தன்மை கொண்டவை. அவை இறப்பதில்லை. முடிவற்ற பிரிதல்கள்மூலம் அவை தங்கள் வாழ்வை நீட்டிக்கொண்டே போகின்றன. இன்னும் சொல்லப்போனால் ஒருசெல் உயிரிகள் மரணமற்ற பெருவாழ்வு வாழ்கின்றன எனலாம். ஆனால், பால்சார் இனப்பெருக்கம் அப்படியல்ல. அறிவியல் ரீதியாக இது ஒரு பாதகமா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், மனித மனத்திற்கு இந்தச் செய்தி ஒரு சின்ன பெருமூச்சைத் தருகிறது என்பதே உண்மை.

இத்தனை பாதகங்கள் இருக்கிற பால்சார் இனப்பெருக்கம், நியாயமாகப் பார்த்தால் எப்போதோ வழக்கொழிந்து போயிருக்கவேண்டும். ஆனால், 99% பாலூட்டிகளின் இனப்பெருக்க முறை இதுதான். தாவரங்களில் 1% மட்டுமே பெரும்பாலும் கலவியற்ற முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. விலங்குகளில் ஆயிரத்தில் ஓர் இனம் மட்டுமே பாலற்றதாக இருக்கிறது. பூக்கும் தாவரங்களில் பாலற்ற இனப்பெருக்கம் 300 முறை மீண்டும் மீண்டும் தோன்றினாலும் அந்த இனங்கள் பரிணாம ரீதியில் அடுத்த கட்டத்துக்குப் போகாமல் அறுந்துவிட்டது என்கிறார்கள் தாவரவியலாளர்கள். பறவைகள், பட்டாம்பூச்சிகள், மீன்கள் என நாம் அறிந்த உயிரினங்களைத் தவிர, பல ஒரு செல் உயிரிகளிலும் பால்சார் இனப்பெருக்கப் பண்பு உண்டு. ஒருவகையான ஒருசெல் பூஞ்சையில், மரபணுக்களைக் கலக்கும் இனப்பெருக்க முறை நிகழ்கிறது. ப்ளாஸ்மிட் எனப்படும் மரபணுக்களை பாக்டீரியாக்கள் ஒன்றோடொன்று கலந்து இனப்பெருக்கம் செய்கின்றன. காலத்தின் கடிகாரத்தைச் சற்றே பின்னோக்கிப் பார்த்தால் பால்சார் இனப்பெருக்கப் பண்பு உருவாகி 2 பில்லியன் ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது!

இதற்கு என்ன காரணம்?

டார்வின் தொடங்கி இன்றைய உயிரியலாளர்கள் அனைவரும் கேட்கும் கேள்வி இது. 2021இல் மரபணுத் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த நூற்றாண்டிலும்கூட விஞ்ஞானிகளால் தரமுடிகிற பதில் இதுதான்…

“பால் சார் இனப்பெருக்கம் ஏன் இன்னும் நிலைத்து நிற்கிறது என்பதற்கு ஒருமித்த காரணம் ஒன்றைக் கூறிவிட முடியாது. சில கருதுகோள்கள் இருக்கின்றன.”

ஒன்றல்ல இரண்டல்ல, இதுவரை 20 கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சில காரணங்களைப் பார்க்கலாம்.

பாலினப்பெருக்கம்

வால்வாக்ஸ் (Volvox), பரமீசியம் (Paramecium)போன்ற ஒருசெல் உயிரிகள், பொதுவாகக் கலவியற்ற இனப்பெருக்கம் மேற்கொள்ளும் பண்பு உடையவை. ஆனால், ஆய்வகத்தில் மோசமான சூழ்நிலையில் இவை வைக்கப்படும்போது திடீரென்று இவை பால்சார் இனப்பெருக்க முறையில் மரபணுக்களைக் கலந்து இனப்பெருக்கம் செய்கின்றன. சுற்றியுள்ள சூழல் ஆபத்தானதாக மாறும்போது, மரபணு வலிமையை அதிகரித்துக்கொள்ள அவை இந்த முறையைக் கையாள்வதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே ஆதி உலகில் சூழ்நிலை மாறும்போது, தங்களைக் காத்துக்கொள்ள விலங்குகள் இந்த முறைக்குத் தாவியிருக்கலாம்.

சரி… அப்போதைய பூமியோடு ஒப்பிடும்போது இன்றைய உலகம் சீராகத்தானே இருக்கிறது? இன்னமும் ஏன் பால்சார் இனப்பெருக்கமே தொடர்கிறது?

அதற்கு Red Queen Hypothesis ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அற்புத உலகிற்குள் நுழையும் ஆலிஸ் என்ற சிறுமியின் கதையை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அதில் வரும் சிவப்பு ராணி என்ற கதாபாத்திரம், “நீ இருக்கும் இடத்திலேயே நிலைத்து நிற்க வேண்டுமானால் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்” என்பாள். சூழ்நிலை மாறியபோது பால்சார் இனப்பெருக்கத்தை மேற்கொண்ட விலங்குகள், கிடைத்த வலுவைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் அதையே தொடர வேண்டும் என்பதையே இந்தக் கருதுகோள் தெரிவிக்கிறது.

Binary fission in bacteria. 3D illustration.

சில விஞ்ஞானிகளோ, சூழ்நிலை நாம் நினைக்கும் அளவுக்குச் சீராக இல்லை என்று நினைவுபடுத்துகிறார்கள். இந்த உலகம் ஒட்டுண்ணிகள் நிறைந்தது. அவை உயிருக்கு ஆபத்தான நோய்களைத் தருகின்றன. ஒட்டுண்ணிகளோடு நாம் ஒவ்வொரு நொடியும் போட்டி போட்டபடியே இருக்கிறோம். ஆகவே அதற்கான வலுவை அதிகப்படுத்திக்கொள்ள நம் மரபணுக்கள் கலப்பது அவசியம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். கலவியற்ற முறையில் இனப்பெருக்கம் செய்யும் உருளைக்கிழங்கில் ப்ளைட் நோய் தாக்கியதில் எல்லாப் பயிர்களும் அழிந்து 1845இல் அயர்லாந்தில் நாடு தழுவிய பஞ்சம் ஏற்பட்டது. உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. ஒருவேளை உருளைக்கிழங்குகள் பால்சார் இனப்பெருக்கப் பண்பு கொண்டவையாக இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பு குறைவுதான்.

மகரந்தச் சேர்க்கை

மரபணுக்களில் பிழைகள் நடப்பது சகஜம். சில மரபணு மாறுபாடுகள் ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. பிழைகளைத் திருத்தி, ஆபத்தான மரபணு மாறுபாடுகளை விலக்குவதில் பால்சார் இனப்பெருக்கம் முக்கியப் பண்பு வகிக்கிறது. ஆகவே இந்தப் பண்பு கொண்ட உயிரிகளின் மரபணு வலுவானதாக இருக்கிறது.

இனப்பெருக்கத்தின் முக்கிய நிகழ்வான இணைசேருதல் நிகழ்வு வேறு சில பயன்களையும் அளிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழ ஈக்களில் (Fruit Fly), இணைசேர்தல் நிகழ்வுக்குப் பின்னர் பெண் ஈக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதனால் அவற்றின் ஆயுட்காலம் நீள்கிறது. இனப்பெருக்கத்தின்போது உருவாகும் ப்ராஸ்டாக்ளாண்டின் என்ற வேதிப்பொருள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 2018இல் நடந்த ஓர் ஆய்வில், இணைசேர்தல் நிகழ்வு ஆண் எலிகளின் மூளைத்திறனை அதிகப்படுத்தும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதன் மற்றும் சில பாலூட்டிகளைத் தவிர, இணைசேர்தல் நிகழ்வால் விலங்குகள் மகிழ்ச்சியடைகின்றனவா என்று தெரியாத நிலையில், இதுபோன்ற ஆய்வுகள் முக்கியமானவை.

இணைசேர்தலால் ஏற்படும் துளியூண்டு நோய் எதிர்ப்பு சக்திக்காக மட்டுமே பால்சார் இனப்பெருக்கம் நிலைத்திருக்கிறதா என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், பரிணாமத்தைப் பொறுத்தவரை ஓர் அம்சம் நன்மை பயக்கிறது என்றால் அது எப்படியாவது நிலைநிறுத்தப்படும் என்பதையே அறிவியல் சொல்கிறது.

A pair of mating Maltese Swallowtail butterflies next to a snail

மேலே சொல்லப்பட்ட கருதுகோள்கள் எல்லாமே கூட்டுக் காரணிகளாகவும் இயங்கலாம் என்று சில விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இயற்கை நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட பல நுணுக்கங்கள் நிறைந்தது என்பதால் ஒரு காரணியை மட்டும் இழையாகப் பின்பற்றி இயற்கையை விளக்கிவிட முடியாது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இன்னொரு சாரரோ, என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் நம் மனித மனம் குறுகலானது என்பதால், பால்சார் இனப்பெருக்கம் சார்ந்த நமது ஆராய்ச்சிகள் எல்லாமே ஆரம்பகட்டத்தில் இருப்பதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். “இனப்பெருக்க முறைகளைப் பொறுத்தவரை, எதை ஆராய வேண்டும் என்பதை நமது மரபுசார் மதிப்பீடுகளே தேர்ந்தெடுக்கின்றன” என்கிறார் அறிவியலாளர் ஏமி வொர்த்திங்க்டன். அவரது கூற்றுப்படி பார்த்தால் விஞ்ஞானிகளின் பார்வை விரிந்தால் மட்டுமே பால்சார் இனப்பெருக்கத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக விஞ்ஞானிகளைப் போட்டுக் குழப்பியடிக்கும் இன்னொரு கேள்வியும் இருக்கிறது. செல்கள் கலந்தால்தான் உயிர்கள் உருவாகும் என்றான பின்பு, ஏன் இரண்டு செல்களின் கலப்பு என்ற கட்டாயம் ஏற்பட்டது? ஒரு செல் பிரியும்போது மரபணுப் பிழை வரலாம், இரு செல் சேரும்போது வலு அதிகரிக்கும் என்றால், மூன்று செல்கள் சேர்ந்தால் கூடுதல் வலு கிடைக்குமே? இணைசேர இரு உயிரிகளைத் தேடுவது நடைமுறையில் வேலைப்பளுவை அதிகரிக்கும் என்றாலும் அதற்கான பயன்கள் அதிகம்தானே?

இதற்கு ஒரு சில ஆரம்பகட்ட பதில்கள் கிடைத்திருக்கின்றன என்றாலும் விஞ்ஞானிகளின் தேடல் தொடர்கிறது. பதில் தேடுவது ஒருபுறம் என்றால், இரண்டு செல்களுக்கு மேல் கலந்தால் மட்டுமே உயிர் உருவாகும் என்ற நிலை இருந்தால் இந்த உலகம் எப்படி இருக்கும் என்ற எண்ணமே சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கற்பனைப் பிரபஞ்சத்தை The Gods Themselves என்ற நூலில் படைத்திருப்பார் அறிவியல் புனைவின் காட்ஃபாதரான ஐஸக் அசிமோவ்.

“ஹலோ, வேற்றுகிரகம், அறிவியல் புனைவு என்ற ஆழத்துக்கெல்லாம் போக வேண்டாம், இந்தப் பூமியிலேயே விநோத இனப்பெருக்க முறைகளும் பால்பண்புகளும் கொண்ட பல உயிர்கள் உண்டு” என்கிறார்கள் உயிரியலாளர்கள். அதற்கு உதாரணமாக பார்ப்பதற்கு ஜெல்லி போலத் தோற்றமளிக்கும் ஒன்றை எடுத்து நீட்டுகிறார்கள்.

அது என்ன? விலங்கா, தாவரமா?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.