ஒரு சிறிய சர்வே எடுத்துப் பாருங்கள். தேனிலவு சென்று வந்து தன் வாழ்வைத் தொடங்கியவர்களை விடவும், தேனிலவு செல்லாமல் தன் திருமண வாழ்வைத் தொடங்கியவர்களுக்குள் மனநெருக்கம் குறைவுதான்.

அந்தந்த நாளில் தத்தமது பிரச்னைகளை மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்புள்ள தம்பதிகளை விடவும், பேசக்கூட வாய்ப்பில்லாதவர்களுக்குள் நாள்பட்ட வெறுப்போ கசப்போ இருந்து கொண்டே இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது, அது சிறிய காரணமாகக்கூட இருக்கலாம். வெடித்து விடும்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு காரணமா இவர்கள் பிரிவதற்கு என்று கூடத் தோன்றும்.

பிரச்னைகளுக்குத் தீர்வுகூட வேண்டாம்; பிரச்னைகள் இல்லாத மனிதர்கள் யார்? பிரச்னை வெறுமனே காது கொடுத்துக் கேட்டாலே, பாதி பிரச்னைகளின் அழுத்தம் இல்லாமலாகி விடும்.

அவர்கள் ஒரு பிரச்னையில் இருக்கும்போது அந்தப் பிரச்னைக்குச் சம்பந்தமில்லாத சூழலின் அழுத்தங்களில் இருந்து விடுபட நேர்கிற ஒரு மகிழ்வான சூழலைக் கொடுத்தாலே போதும். அவர்கள் தாமாக தனது சூழலைக் கையாளும் அல்லது எதிர்கொள்ளும் பலம் பெற்று விடுவார்கள்.

சிலர் சொல்வார்கள், தியானம் மெடிட்டேஷன் சென்டர்களுக்குச் சென்று வந்தால் எல்லாம் சரியாகிவிடும். வேறு சிலர், பயணங்கள் சென்று வந்தால் எல்லாம் நலமாகி விடும் என்பார்கள். ஜோசியர்கள் சொல்வார்கள், இந்த ஊருக்குச் சென்று வந்தால் எல்லாம் நிவர்த்தியாகி விடும் என்று. இவற்றில் உண்மை இருக்கிறதா என்றால் உண்டு. அவர்கள் நேரடியாகச் சொல்லும் முறைகளில் இல்லாமல், வேறு வகைகளில்.

ஒரு கதை உண்டு. ஒரு சம்சாரி தாங்க முடியாத பிரச்னைகளோடு ஒரு முனிவரிடம் சென்று அவற்றிற்குத் தீர்வளிக்குமாறு கேட்டானாம். அவனது எல்லாப் பிரச்னைகளையும் செவி கொடுத்து கேட்ட முனிவர், அவனது வீட்டின் வெளியே இருக்கிற ஆடு, மாடுகளை வீட்டினுள் கட்டச் சொல்லி, ஒரு வாரம் கழித்து வந்து பார்க்கச் சொன்னாராம். அவனும் ஒரு வாரம் கழித்து வந்து, ‘ஐயோ முடியலை சாமி’ என்று அழுதானாம். இன்னும் வெளியே இருக்கும் பன்றி, கோழிகள், நாய் பூனை மற்றும் வளர்ப்புப் பிராணிகளை எல்லாம் வீட்டினுள்ளேயே வைத்துக் கொள்ளச் சொன்னாராம். அடுத்த வாரம் வந்து பார்க்கச் சொன்னாராம். அடுத்த வாரம் வந்த அவன், ‘ஒரே குழப்பமும் கூச்சலுமாக இருக்கிறது; இது என்ன சாமி வாழவே பிடிக்கலை’ என்றானாம். அதற்கு அவர் அடுத்து வரும் வாரங்களில் ஒவ்வொரு பிராணியாக வெளியே முன்பு அவை இருந்த இடத்திற்கு அனுப்பி விட்டு, ஓரிரு வாரங்களில் அவனை வந்து சந்திக்கச் சொன்னாராம்.

சில வாரங்கள் கழித்து வந்த அவன், ‘சாமி வீடென்றால், இது சொர்க்கம்; ரொம்ப நன்றி சாமி’ என்று வணங்கிச் சென்றானாம்.

அப்படித்தான் நம்மேல் படிந்திருக்கும் துன்பங்கள் எல்லாவற்றிலிருந்தும் விலகி, ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்க்கும்போது, வலியும் அளவும் நமது எல்லைகளுக்குள் சரி செய்யக் கூடியனவாக அமையும்.

கட்டுரையின் முதல் வரிகளுக்கு வருவோம். // ஒரு சிறிய சர்வே எடுத்துப் பாருங்கள். தேனிலவு சென்று வந்து தன் வாழ்வைத் தொடங்கியவர்களை விடவும், தேனிலவு செல்லாமல் தன் திருமண வாழ்வைத் தொடங்கியவர்களுக்குள் மனநெருக்கம் குறைவுதான்.//

எந்தத் தலையீடும் யாருடைய குறுக்கீடும் இல்லாமல், மகிழ்வாக ஓர் உறவை அணுக நேர்வதைத்தான் தேனிலவு என்கிற விஷயம் தருகிறது. கிட்டத்தட்ட, தியானத்திற்காக ஒரு மலையில் தனித்திருப்பது போன்றதுதான்; அமைதியான மனநிலையை அடைவதுதான். என்ன, இதில் அந்த அமைதியைப் பகிர ஒருவர் உடனிருக்கிறார். அவ்வளவுதான். யாராக இருந்தாலும் இந்தக் காலகட்டம் தந்த ஒளியின் வெளிச்சத்தில், பிறகான காலத்தை மகிழ்வோடு எதிர்கொள்வார்கள்.

உண்மையில் மற்றவர்களின் பிரச்னைகளுக்கு நாம் தீர்வு சொல்வது என்பது மிக எளிதான ஒன்று. அது எப்படி என்றால், வெப்ப நாட்டில் இருந்து கொண்டு, குளிர் நாட்டு மக்களுக்கு அறிவுரை சொல்வது போன்றது. அதனதன் சூட்டில் / குளிரில் அவரவர் இருந்து பார்த்தால்தான் தெரியும்; இதை உணர்ந்தால், யாருக்குமே நாம் அறிவுரை வழங்க மாட்டோம்.

பொதுவாக நான் நண்பர்களது பிரச்னைகளுக்குப் பெரும்பாலும் தீர்வு சொன்னதில்லை. மீறி வெகு சிலருக்கு அப்படிச் சொல்லும் தீர்வும் நான் எனது பிரச்னைகளுக்குக் கையாளும் தீர்வு முறைகளில்லை. அவர்களுக்கு எது ஒத்து வருமோ, அவர்களுக்கு எது சரியோ அதுவே சரி என அப்படிச் சிந்தித்து சொல்பவை.

ஆனால், அவரவருக்காக அவரவரே சிந்திப்பதே சிறந்தது. அவரவருக்குச் சிந்திக்க சோம்பேறித்தனம் எனில், அந்தப் பிரச்னைகளைப் பிரிய அவர்களுக்கு எண்ணமில்லை என்று அர்த்தம்.

சின்னச் சின்ன விஷயங்களில் தேர்ந்தெடுக்கச் சோம்பேறித்தனப்பட்டு அல்லது யோசிக்கத் தெரியாமல், நாம் மற்றவர்களிடம் நமது லகானைக் கொடுப்போம். ஒரு ஹோட்டல் போகிறோம். நமக்கும் சேர்த்து அவர்களையே ஆர்டர் பண்ணச் சொல்வது. அவர்கள் எதையோ ஆர்டர் பண்ணிவிட, பிறகு சலித்துக்கொள்வது. முதலில் நமது லகான் நமது கைவசம்தான் இருந்தது; அதை நாம்தான் அவர்களிடம் தந்தோம் என்பதை உணர வேண்டும். நமக்கான பொறுப்பை நாம்தான் உணர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அல்லது குறைந்தபட்சம் எதற்கு, யாரிடம், ஏன் உதவியும் ஆலோசனையும் பெற வேண்டும் என்கிற அளவிற்காவது நாம் நமக்காகச் சிந்திக்க வேண்டும்.

Lonely sad woman

அப்புறம் இன்னொன்று. மற்றவர்கள் நமக்காக அவர்களுக்குத் துன்பம் தந்துகொண்டு, நமக்கு அதி அருமையான விஷயங்களைத் தர வேண்டும் என்று சிலர் எதிர்பார்ப்பார்கள். அப்படி எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

ஒரு கதை. வெளியில் விளையாடப் போன இரண்டு சிறுவர்கள் வீட்டிற்கு வருகிறார்கள். வந்தால், அவர்கள் சாப்பிட ஒரு பெரிய மீனும் ஒரு சிறிய மீனும் தட்டில் இருக்கிறது. ஒருவன் ஓடிப்போய், பெரிய மீனைத் தனக்கு எடுத்துக்கொள்கிறான். அதற்கு மற்றவன், ‘நானாயிருந்தால் எனக்குச் சிறிய மீனை எடுத்துக்கொண்டு, உனக்குப் பெரிய மீனைத் தந்திருப்பேன்’ என்கிறான். அதற்கு முதலாமவன், ‘இப்போது மட்டும் என்ன, உனக்குத்தான் சிறிய மீன்தான் இருக்கிறதே. எடுத்துக் கொள்’ என்கிறான்.

நமக்கானவற்றை நாமே சிந்திக்காதபோது, மற்றவர் எப்படி நமக்கானவற்றைச் சிந்தித்துத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்? நமக்கு என்ன வேண்டும் என நமக்கே தெரியாதபோது, மற்றவருக்கு எப்படித் தெரியும்?

மேலும் பிறர் தந்த அறிவுரையில் செயல்பட்டு அது நலமாக முடிகையில் மகிழ்வு. ஆனால், அதுவே மீளாத் துயரில் ஆழ்த்தியதாக அமைந்தால், அவர்களிடம் போய் சொல்லிப் பாருங்கள். ‘நீங்கள் சொன்னதைக் கேட்டு எனக்கு இவ்வாறாக ஆகிவிட்டது’ என்று. ‘நான் சொன்னேன்னா உனக்கு எங்க போச்சு புத்தி?’ என்பார்கள். யாருமே தாம் தந்த அறிவுரைகளின் பின்விளைவுகளுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. இதை எந்தளவிற்கு நம்புவீர்கள் என்று தெரியாது. ஆனால், நான் எனது வாழ்வை உற்றுநோக்கிக் கண்டறிந்தது. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருந்தாலும், ஓஷோவை வாசித்திருந்தாலும், நானே எனக்குக் கிடைந்த என் வாழ்வை பரிசீலித்துதான் ஒவ்வோர் உண்மையையும் ஏற்கிறேன். இந்த உண்மைகளும் கால காலத்திற்கு மாறிக்கொண்டே இருப்பவைதாம். குளிர்காலம், வசந்த காலம் போல, இந்த நம்மைத் தொட்டுத் தொடரும் துன்பங்களும் இன்பங்களுமேகூட வரும், செல்லும். மறுபடி வேறு ரூபத்தில் வரும்; செல்லும். ‘இது நானே இல்லை’ என உங்களை நீங்கள் துன்பப்பட விடலாம். தானாகவே அவை சென்று விடும். உதாரணமாக இந்த கொரானா காலத்தைச் சொல்லலாம். எதுவும் புதிதாக இருப்பது, மனம் பழகும் வரைதான். மனம் எதையும் ஏற்கும் நிலை பெற்ற பிறகு எதுவுமே கடினமானதில்லை.

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.