எப்போதெல்லாம் மனம் ஏதோ ஒரு பிரச்னையில் அல்லது தோல்வியில் துவண்டு போகிறதோ அப்போதெல்லாம் மனம் முணுமுணுக்கும் பாடல் வரிகளில் ஒன்றுதான் ’புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல்.

இங்கு முதலில் வெற்றி என்றால் என்ன என்ற கேள்வியை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். எதை நாம் வெற்றி என்று கொள்கிறோம்? வெற்றிக்கு ஏதேனும் வரையறை உண்டா? வெற்றி என்பதன் அளவுகோல் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் அல்லவா? என்னளவில் வெற்றி என்பதற்கு அளவுகோல் எதுவும் இல்லை. சுயத்தை வெல்வதே வெற்றி. ஆமை – முயல் போன்ற அபத்தமான ஒப்பீடுகளின் வெற்றியில் நாம் திளைக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய சுயத்தின் சிறந்த வடிவமாக நான் இருப்பதே என்னளவில் என்னுடைய வெற்றி.

அறிவு என்பது சந்தைப் பொருளாக மாறிவிட்ட சூழ்நிலையில் இங்கு சுய விற்பன்னர்களும் ஏராளமானவர்கள் உண்டு. சந்தைப்படுத்தப்பட்ட அறிவு, சுய விளம்பரங்கள், போலி தற்பெருமைகள் இப்போதெல்லாம் நம்மைச் சுற்றிலும் கொஞ்சம் மலிவாகத்தான் கிடைக்கின்றன.

கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாறிவிட்ட மருத்துவம் போன்ற துறைகளுக்கு வைக்கப்படும் நீட் போன்ற தேர்வுகளில் தோல்வியுறும் எத்தனையோ மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளி அளவில் பெரிய வெற்றி பெற்றவர்களாகவும் இருக்கத்தானே செய்கிறார்கள்!

சந்தைப்படுத்தப்பட்ட இந்த அறிவு ஜீவி சமூகம் நம் பிள்ளைகளின் படிப்பிற்கு வைத்திருக்கும் வடிகட்டிகளின் அபத்தங்கள் இந்தச் சமூகத்தின் சாபங்கள் என்றே கூறலாம்.

மதிப்பெண்கள் மட்டுமே நம் பிள்ளைகளின் வெற்றியாகப் பார்க்கப்படுவதின் அபத்தத்தை இன்னமும் பல பெற்றோர்களும் அறிந்திருக்கவில்லை என்பது பெரும் வருத்தமே. வாழ்க்கை என்பது ஓர் ஓட்டப்பந்தயம் அல்லவே. முதலில் வருபவர்கள் இரண்டாவது வருபவர்கள் என்று இங்கு யாருமில்லை. அவரவர் சூழலுக்கு அவரவர் தேவைக்கு அவரவர் சக்திக்கு ஓடினாலே போதுமானது. நம் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்க எவருக்கும் உரிமையில்லை.

அறிவைப் புகட்டும் கல்வி சாலைகளில் அனைவரும் அறிவாளிகளாகவும் அன்பானவர்களாகவும் இருக்கிறார்களா என்ற கேள்வியும் முக்கியமானது. என் மகள் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவள் நெற்றியில் சிறிது முடி விழும்படி சிகை ஒப்பனை செய்திருந்திருந்தாள். ஆசிரியை ஒருவர் இப்படியெல்லாம் வரக் கூடாது என்று சொன்னதையொட்டி முடியைத் தூக்கி வாரி கட்டி அனுப்பிவிடுவோம். ஆனால், விளையாட்டு பயிற்சி முடிந்து வரும் பிள்ளைக்கு முடி மீண்டும் நெற்றியில் சிறிது படர்ந்துவிடும். இதனைக் கண்ட ஆசிரியர், ‘நாளைக்கு ஒரு கத்தரிக்கோல் கொண்டு வந்து உன் முடியை கட் செய்யப் போகிறேன்’ என்று பயமுறுத்தியிருக்கிறார். இதை அழுதுகொண்டே மகள் என்னிடம் வந்து சொன்னாள். மறுநாளே ஆசிரியரைக் கண்டு ‘அந்த முடி முழுமையாக வளர இன்னும் சில மாதங்களாகும். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள். அதற்காகக் கத்தரிக்கோலை எடுத்து வெட்டுவேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை’ என்று கூறி விட்டு வந்துவிட்டேன். நாளடைவில் மகள் மற்ற பாடங்களிலெல்லாம் சிறப்பாகவும் கணக்குப் பாடத்தில் மட்டும் கொஞ்சம் பின்தங்கியே இருந்தாள். பின்புதான் தெரிந்தது அந்தக் கணித ஆசிரியர் அவர் வகுப்பில் தொடர்ந்து குழந்தையைப் புறக்கணித்திருக்கிறார் என்பது. கணித ஆசிரியரிடம் மட்டும் கணக்குப் பாடம் உருவாவதில்லை. அது ஒரு பாடம்.

நீ எங்கிருந்தாலும் கற்றுக்கொள்ளலாம் என்றெல்லாம் கூறி மீண்டும் அவளுக்குக் கணக்குப் பாடத்தைப் பிடிக்க வைப்பதற்கே பல வருடங்களாயிற்று.

புத்திக்கூர்மையுள்ள ஆனால், விரோத மனப்பான்மையுடைய ஓர் ஆசிரியரின் இந்தச் செயல் ஒரு குழந்தையை எவ்வளவு பாதிக்கிறது என்பதும் முக்கியமானது.

இது அறிவைக் கொண்டாடும் உலகம். பணம் படைத்தவர்களையும் பலம் படைத்தவர்களையும் நாம் கொண்டாடுவதைக் காட்டிலும் அறிவு கொண்ட மனிதர்களை நாம் கொண்டாடித் தீர்க்கிறோம். கல்வி சாலைகளில் அறிவான மாணவருக்கு எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு. அரசியலில் அறிவார்ந்த தலைவர்களுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. உலகின் மிக முக்கிய அறிவார்ந்த கண்டுபிடிப்புகளை, அறிவார்ந்த சித்தாந்தங்களை, தத்துவங்களை நாம் போற்றிக் கொண்டேதான் இருக்கிறோம். அறிவு வியாபாரச் சந்தையில் முக்கியமான ஒன்றாகவும் திகழ்கிறது. தனியார் கல்விச் சாலைகளே பெரும் வியாபாரமென்றால் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மிகப் பெரிய வியாபாரச் சங்கிலியாகும். இங்கு அறிவுள்ள பிள்ளைகள் எல்லாம் ஜெயித்துவிட முடியாது. பயிற்சி, முயற்சி, மொழி, அரசியல் என்று பல்வேறு காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.

ஆக்கப்பூர்வமான சக்திகளுக்கு அறிவு ஒருபுறம் பயன்படுகிறதென்றால் அவ்வறிவைக்கொண்டே அழிவுப்பாதையையும் அமைக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. நம்மைச் சுற்றி தொடர்ந்து நடைபெறும் தீவிரவாதங்களும் குண்டுவெடிப்புகளும் நாசவேலைகளும் இதற்குச் சான்றுகள்தானே. எந்திரன் திரைப்படத்தில் வருவது போல மனிதன் மனிதனை நம்பாமல் முழுமையாக எந்திரங்களை நம்பும் அல்லது சார்ந்து வாழும் நிலை வந்துவிட்டால் மனித குலத்திற்கான துயர் மிக நீளமானதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

’புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ எனும் வரிகள் கொஞ்சம் மாறுபட்ட கருத்துடைய வரிகள்தான். ஆயினும் ஒரு மாற்றுப் பார்வையும் அதிலுள்ள உண்மையும் அதையொட்டிய விமர்சனமும் ஓர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் அல்லவா!

புத்திக்கூர்மையுள்ள பல அரசியல் தலைவர்கள் ஜனநாயகத் தேர்தலில் தோற்றுமிருக்கிறார்கள். மிகுந்த அறிவற்ற பல அரசியல் தலைவர்களும் மன்னர்களும் நம்மை ஆண்டும் இருக்கிறார்கள். புத்திசாலித்தனத்தையும் வெற்றியையும் ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்ப்பதே எல்லா நேரங்களிலும் சரியானப் புரிதலாக இருப்பதில்லை என்றே எனக்குத் தோன்றும்.

எதை எதையெல்லாமோ தெய்வமாக்கும் நம் சமூகத்தில் ‘அறிவொன்றே தெய்வம்’ ‘சுத்த அறிவே சிவம்’ என்றுரைத்த நம் மகாகவி பாரதியை நினைவு கூர்தல் நலம்.

எவரெஸ்ட் ஏறுவதென்பது ஒரு மனிதனுக்கு வெற்றியாக இருக்கலாம். சிறிய குன்றில் ஏறுவது மற்றொரு மனிதனுக்கு வெற்றியாக இருக்கலாம். கேரளத்தில் மேடான சாலைகளில் மூச்சு முட்டாமல் நடப்பதே எனக்கெல்லாம் வெற்றி. வெற்றி என்பது தனிமனித அளவீடு. அவற்றிற்கும் புத்திக்குமான நேர்கோடு பல நேரங்களிலும் இடங்களிலும் அவசியமற்று சமன்படுத்தப்படுகிறது. புத்திசாலித்தனம் என்பது நிரந்தரமான ஒன்று. ஆனால், வெற்றி தோல்விகள் காலத்திற்கு ஏற்ப மாறி வரும் நிலைகள்தானே!

ஒரு திரைப்பட இயக்குநர் கூறியது நினைவிற்கு வருகிறது. அவருக்குக் கடந்த ஆண்டு ஒரு முக்கியமான விருது வழங்கப்பட்டது. அவர் அவ்விருதை இன்முகத்துடன் பெற்றுக்கொண்டார். இந்த ஆண்டு அவருக்கு விருது கிடைக்கவில்லை. இப்போதும் அதே இன்முகத்துடன் விழாவில் கலந்துகொள்கிறார். அவரிடம் செய்த ஒரு நேர்காணலில், ‘சென்றமுறை கிடைத்த வெற்றியைப் போலவே இம்முறை கிடைத்த தோல்வியும் ஒரு நிகழ்வு அவ்வளவே. இரண்டையும் ஒன்று போல பாவிக்கும் கடந்து செல்லும் மனநிலைதானே வாய்க்கப்பெற வேண்டும்’ என்கிறார்.

வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவிக்கும் ஞானியின் மனநிலையை அடையாவிட்டாலும் அந்தந்த நேரத்து மகிழ்ச்சியோ துயரோ வெற்றியோ தோல்வியோ அதை இயல்பாகக் கடந்து செல்லும் மனநிலையையாவது கைவரப் பெறுதல் வேண்டும்.

நம் சமுகம் நம்மிடையே உலாவும் புத்திசாலிகளை எப்போதும் கொண்டாடித் தீர்ப்பதுமில்லை என்கிற உண்மையையும் புரிந்துகொள்ளல் வேண்டும்.

மெத்தப் படித்தவர்களை, ‘படித்துப் படித்தே லூசாகிவிட்டான் என்ற பதமும், பைத்தியம், கிராக்கு, புத்தகப் புழு, அம்மாஞ்சி என்ற பல சொல்லாடல்களிலும் அவர்களை நாம் பின்னுக்குத் தள்ளுவதுமுண்டு.

குழந்தைகளுக்கு முதல் ஐந்து வயதில் பெரும்பகுதி மூளை வளர்ச்சி பெறுகிறதாம். அப்படியாயின் அந்தக் குழந்தைகளை நாம் எப்படி வளர்க்கிறோம் என்பது எவ்வளவு அவசியமானது என்பதை நாம் உணர வேண்டும். உயரம், நிறம் என்பதெல்லாம் எப்படி வெறும் ஒப்பீடுகளால் ஆனதோ அதைப் போலவே புத்திசாலித்தனமும் ஒப்பீடுகளால் ஆனதுதானே! ஆகவே குறைந்த புத்திசாலித்தனம் இருப்பதாக நாம் நம்பும் ஒரு பிள்ளையை மக்கு என்று ஒதுக்குவதும் ஓர் அடக்குமுறைதான்.

இவ்வுலகம் எல்லா வகையான மனிதர்களாலும் நிறைந்தது. எல்லோரையும் அரவணைத்து செல்வதுதானே மனிதப் பண்பு. வெற்றி, தோல்விகள் என்பது வெறும் அளவீடு. புத்தியுள்ள மனிதர்கள் அனைவரும் வெற்றி பெற்றதுமில்லை. ’வெற்றி பெற்ற அனைவரும் புத்திசாலிகளுமில்லை’ என்ற கவிஞர் கண்ணதாசனின் கூற்றை ஆமோதித்துச் செல்வோம்.

கோணங்களை மாற்றிச் சிந்திப்போம். உரக்கச் சிந்திப்போம். சிந்தித்ததை உரக்க உரைப்போம்.

கதைப்போமா?

படைப்பாளர்

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.