”11ஆம் வகுப்பில் அரசுத் தேர்வு எழுத இருக்கும் நேரத்தில் எனக்கு அம்மை போட்டுவிட்டது. ஒரு மாதம் படிக்கவில்லை. பொதுத் தேர்வுக்கு முன் ஒரு மாதிரி முன்தேர்வு நடத்தி, அதில் நல்ல மதிப்பெண் பெற்றவர்களைத்தான் பொதுத் தேர்வுக்கு அனுப்புவார்கள். தலைமை ஆசிரியர் தேவசகாயம் எனக்குச் சிறப்பு அனுமதி தந்து, நேரடியாகத் பொதுத்தேர்வு எழுத அனுமதித்தார். தேர்வையும் எழுதி முடித்தேன். என் படிப்பை நிறுத்துவதில் ஆர்வமாக இருந்த என் குடும்பம், அம்மையால் நான் தோல்வியடைந்துவிடுவேன் என்று எதிர்பார்த்திருந்தது. அப்போது நான் பூப்பெய்தியவுடன் படிப்பை நிறுத்த சரியான காரணம் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்தது. சொத்து அதிகம் இருந்த மாமா மகனுக்குத் திருமணம் செய்துவைக்கத் திட்டமும் போட்டது. குடும்பம் ஒரு பக்கமாகவும் நான் ஒரு பக்கமாகவும் நின்று யுத்தம் செய்துகொண்டிருந்தோம்.

அன்று தேர்வு முடிவு வந்தது. நான் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுவிட்டேன்! என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், என் வீட்டில் ஒருவர் முகத்திலும் அந்த மகிழ்ச்சி இல்லை. அதிலும் முதல் பத்து இடங்களுக்குள் வந்துவிட்டேன் என்பதில் தலைமை ஆசியருக்கு மகிழ்ச்சி.

தேர்வு முடிவு வந்ததும் வீட்டில் துக்கம் கொண்டாடினார்கள். சாப்பிட மாட்டேன் என்று உண்ணாவிரதப் போராட்டத்தைக் கையில் எடுத்தேன். ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் என் போராட்டம் தொடர்ந்தது. லட்சுமி ஆத்தா என்னைப் பார்த்து இரக்கப்பட்டார். `தம்பி, இவ பட்டினி கெடந்தே செத்துடுவா போல. படிப்புதானே கேக்குறா? போவட்டும் உடு’ என்றார். அப்பாவும் வேறு வழியின்றிச் சம்மதித்தார்… ”

படிப்பதற்காக ஆரம்பித்த அந்தப் பெண் குழந்தையின் போராட்டம், வாழ்க்கை முழுக்க வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்தது. இன்றும் அறிவியல் இயக்கத் தலைவராக, தொழிற்சங்கத் தலைவராக, நட்புகளின் இனிய உறவாக, பயணங்களின் காதலராக, உணவின் ரசிகராக இயங்கிக் கொண்டிருக்கிறார் அன்பிற்கினிய தோழர் மோகனா சோமசுந்தரம்.

பத்து வருடங்களுக்கு முன்பு, முகநூலில் தோழர் மோகனாவின் அறிமுகம் கிடைத்தது. மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்த தனது அனுபவங்களையும், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிகழ்ச்சிகளையும், தொழிற்சங்க கூட்டங்களைப் பற்றியும், தனது பயணங்களையும் பற்றியும் பதிவுகள் எழுதுவார். சமையல் குறித்தும் சிலாகித்து விவரிப்பார். அப்போது இணைய இதழ் ஒன்றில் அவரது பேட்டியைப் படித்து அரண்டு விட்டேன். என்ன ஒரு துடிப்பான ஆளுமை! வாழ்க்கை விசிறியடித்த கடினமான சவால்களை எதிர்கொண்டு, காத்திரமான சமுதாயப் பணிகளுடன் கம்பீரமாகப் பயணிக்கும் அவரது துணிவும், வாழ்வின் மீதான நேசமும், ரசனையும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அவரது அசாத்தியமான ஆளுமையையும், போராட்ட வாழ்க்கையையும் முழுமையாக தெரிந்துகொண்டது, இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான ’மோகனா: ஓர் இரும்புப் பெண்மணியின் கதை’ என்ற அவரது சுயசரிதை நூலை வாசித்த பிறகுதான் (நூல் வெளியீடு: பாரதி புத்தகாலயம்). கரோனா பொதுமுடக்கக் காலத்தில் இந்த நூலை எழுதியிருக்கிறார் மோகனா தோழர்.

இந்த நாட்டில் எளிய குடும்பத்தில் பிறக்கும் சராசரி பெண் குழந்தை எதிர்கொள்ளும் அத்தனை சவால்களையும் தோழர் மோகனா எதிர்கொண்டிருக்கிறார். குடும்ப வறுமைக்கிடையில் பள்ளிக்கல்வியை முடித்து, இந்தக் கட்டுரையின் முதல் பாராவில் குறிப்பிட்ட, பட்டினிப் போராட்டம் நடத்தி கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். இரண்டாமாண்டு படிக்கையில், நண்பரொருவர் கல்வி தொடர்பாக எழுதிய ஆங்கிலக் கடிதத்தை, காதல் கடிதம் என்று தவறாகப் புரிந்து கொண்ட குடும்பம் அல்வாவில் விஷத்தை வைத்து தன்னைக் கொல்ல முடிவெடுத்தது என்று மோகனா தோழர் குறிப்பிடுவது அதிர வைக்கிறது. கொடூரமான ஜாதிய சமுதாயக் கட்டமைப்பில், அடிப்படை உரிமையான கல்வியைப் பெற, ஒரு பெண் குழந்தை உயிரையே பணயம் வைக்க வேண்டியிருக்கிறது.

தோழிகளுடன் மோகனா (வலது ஓரம்)

முதுநிலைப் படிப்புக்குக் குடும்பத்தினர் உதவாததால், வீட்டினரின் எதிர்ப்பை மீறி, தோழிகளிடம் கடன் வாங்கிப் படிக்கிறார். “நான் யாரையும் காதலிக்க மாட்டேன் என்று அப்பாவிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டே படிக்கப் போனேன்” என்ற அவரின் வரிகள், என் பதின்பருவ தோழிகள் சிலரின் அனுபவங்களை நினைவுபடுத்துகின்றன. தோழர் சத்தியம் செய்தது 60களின் இறுதியில். இன்றும்கூட, பல பெண்குழந்தைகளுக்கு இந்த நிலை தொடர்கிறது.

படிப்பு முடிந்ததும், தானே முயற்சி செய்து பேராசிரியர் பணியில் சேர்கிறார். குடும்பத்தினர் கட்டாயத்தின் பேரில் கல்யாணம். “இந்த மாப்பிள்ளையை வேண்டாம் என்று உறுதியாக மறுக்க என்னிடம் தைரியம் இருந்தது. ஆனால், படிப்புக்குச் சண்டை போட்டதற்கே இதுவரை ஒருவரும் என்னிடம் பேசுவதில்லை. இவர்களை எல்லாம் பகைத்துக் கொண்டு எப்படி நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும்?” – இந்த வரிகள் பெரும்பான்மைப் பெண்களின் கையறு நிலையைப் பிரதிபலிக்கின்றன.

மகனுடன் மோகனா

தோழரின் கல்யாண வாழ்க்கை கொடுமையான ஓர் அத்தியாயம். சந்தேகப்படும் கணவனின் அடியும் உதையுமான வாழ்வில் மகன் பிறந்ததுதான் ஒரே நம்பிக்கையும் சந்தோஷமும் என்கிறார். கணவனின் சண்டைகளோடும், அடிகளோடும் போர்க்களமாகத் தொடர்ந்தது அவரது வாழ்க்கை. இதற்கிடையில் நண்பர்களோடு ஆசிரியர் சங்கப் பணிகள். கணவனின் அடிஉதையால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை, தற்கொலை முயற்சிகள், மோசமான உடல்நிலை… “இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் நான் ஏன் வெளியே வரவில்லை என்றால், இந்தச் சமூக அமைப்பைக் கண்டு பயந்தேன், பெண்கள் வேலைக்குச் சென்று வருவதையே தவறாகப் பேசிய காலம், ஆண் துணையின்றி தனியாக வாழ்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று நினைத்தேன். அத்துடன் தனியாக வரும் என்னை அரவணைக்க என் குடும்பம் ஒரு நாளும் தயாராக இல்லை என்பதும் என்னை எந்த ஒரு முடிவையும் எடுக்கவிடாமல் தடுத்தது. ஒருவேளை அப்போதே நான் இடதுசாரி இயக்கத்தில் இருந்திருந்தால் இவ்வளவு மோசமான வாழ்க்கையில் உழன்று கொண்டிருந்திருக்க மாட்டேன்” என்ற தோழர் மோகனாவின் வார்த்தைகள், பெண்ணுக்கெதிரான ஆணாதிக்கச் சமூக அமைப்பையும், வன்முறையான குடும்ப அமைப்பையும், இடதுசாரி இயக்கம் போன்ற முற்போக்கு இயக்கங்கள் பெண்ணுக்கு அளிக்கும் துணிவையையும், நம்பிக்கையையும் கோடிட்டு காட்டுகின்றன.

நண்பர் அருணந்தியுடன் மோகனா

மகன் நம்பிக்கையளிக்க, நண்பர்கள் உதவி செய்ய, கணவனை விவாகரத்து செய்துவிட்டு நிம்மதியாக வாழ்க்கையைத் தொடர்கிறார். மகனுடன் சேர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க நிகழ்ச்சிகளுக்குப் போகிறார், பங்களிக்கிறார். மகனைச் சமூக செயல்பாடுகளுடன், அரசியல் புரிதலுடன், அறிவியல் திறத்துடன் வளர்க்கிறார். “வழக்கமான அம்மா மகனாக நாங்கள் இருக்க மாட்டோம் என்று இருவருமே சொல்லிக் கொள்வோம்” என்று மோகனா தோழர் மகிழ்வுடன் சொல்கிறார்.

அன்பான நண்பர்கள் சூழ்ந்தது தோழரின் வாழ்க்கை. “பாலினம் கடந்த நட்பை நானும் அருணந்தியும் கொண்டிருந்தோம்” என்று தன் ஆசானும், நெருங்கிய நண்பருமான அருணந்தியைப் பற்றிக் கூறுகிறார். தோழர் மோகனாவிற்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். பழனியில் அவர் இல்லம் நண்பர்களுக்கான இல்லம் மட்டுமல்ல, உதவி தேவைப்படும் யாரும் வந்து தங்கிச் செல்வதற்கான இடமாக இருக்கிறது என்பதை தோழர் இயல்பாகக் குறிப்பிடுகிறார்.

போராட்டத்தில் மோகனா

அறிவொளி இயக்கம், மூட்டா, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்று பல தளங்களில் மோகனா தோழர் மிக முக்கியப் பணிகளைச் செய்துள்ளார். “சம்பள உயர்வு, மருத்துவ விடுப்பு, 3 மாத மகப்பேறு விடுப்பு என்று இன்றைக்கு கல்லூரி ஆசிரியர்கள் அனுபவிக்கும் சலுகைகள் ஒவ்வொன்றுக்கும் அன்று மூட்டா தோழர்களின் ஒப்பற்ற போராட்டங்களும் தியாகங்களுமேதான் காரணம்” என்று போராட்ட வரலாற்றை நினைவுகூர்க்கிறார்.

“என் அறிவை விசாலப்படுத்தியதிலும், என்னை ஓர் ஆளுமையாகச் செதுக்கியதிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துக்குப் பெரும் பங்கு இருக்கிறது” என்று நன்றியுடன் கூறும் மோகனா தோழர், கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாக இந்த இயக்கத்தில் பல காத்திரமான பணிகளை முன்னெடுத்து, முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்தியா முழுக்கப் பயணித்துள்ளார். “தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துணைத்தலைவராக 3 முறையும், சமம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டேன், ஆனாலும், ஒரு பெண், அறிவியல் இயக்கத்தின் தலைவராக வருவதற்கு கால் நூற்றாண்டு காலம் ஆகியிருக்கிறது. (தொடர்ந்து இரு முறை அறிவியல் இயக்கத்தின் தலைவராக இருந்திருக்கிறார்.) இயக்கத்துக்கான என்னுடைய உழைப்பையும், அர்ப்பணிப்பையும் வைத்து மட்டுமே இந்தக் கேள்வியை எழுப்புகிறேன். பெண் என்ற காரணத்துக்காக மட்டுமே எனக்கு இத்தனை காலம் இந்தப் பொறுப்பு வழங்கப்படவில்லை என்ற முடிவுக்கு வருகிறேன்” என்ற தோழரின் ஆதங்கம், பெண்ணுக்கு தலைமைப் பொறுப்பது அளிப்பதில் முற்போக்கு இயக்கங்களுக்குகூட மனத்தடை இருப்பதை சுட்டிக் காட்டுகிறது.

“அறிவொளி இயக்கம் என்பது பெண்களின் இயக்கம். படித்தோரும் கற்பித்தோரும் பெரும்பாலும் பெண்களே. வீதியில் உட்கார்ந்து பலரும் பார்க்கப் படிப்பது ஆண்களுக்கு கவுரப் பிரச்னையாக இருந்தது.” “சிவகங்கையில் அறிவொளி மூலம் இஸ்லாமியப் பெண்கள் கற்பிக்கவும் கற்றுக் கொள்ளவும் வீதிக்கு வந்ததை முக்கியமான மாற்றமாகக் கருதுகிறேன்” என்ற தோழரின் கூற்றுகள் வரலாற்றுப் பதிவுகள்.

தொழிலாளர்களுடன் மோகனா

தன்னுடைய பல்வேறு தொழிற்சங்கப் பணிகளை விவரிக்கும் தோழர், “தற்போது துப்புரவுத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருவதைத்தான் முக்கியமான, திருப்தியான பணியாகக் கருதுகிறேன். தமிழ்நாட்டில் கையால் மலம் அள்ளுவதை முற்றிலும் ஒழிக்கும்வரை என் போராட்டம் தொடரும்” என்று அறிவிக்கிறார்.

தாய்ச்சி பயிற்சியில் மோகனா

2011இல் வந்த மார்பகப் புற்றுநோயைத் தீரத்துடனும் தன் அறிவியல் அறிவுடனும் எதிர்கொண்டு, அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ரேடியேசன் மூலம் குணமாக்கி, புதிதாக ’தாய்ச்சி’ தற்காப்புக்கலையைக் கற்றுக் கொண்டு உடலை வலுவாக மீட்டெடுத்தது பிரமிக்க வைக்கிறது. வெளிநாட்டிலில் இருக்கும் அவர் மகன் உடனே வர இயலாத சூழலில், சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில் அவருக்குத் துணையாக இருந்து உதவியது தோழமைகள் தான் என்று அன்போடு கூறுகிறார்.

பயணங்களின் காதலியான தோழர் மோகனா, 2017-19இல் அறிவியல் இயக்கப் பணிகளுக்காகப் பயணித்த தூரம் 1,42,000 கி.மீ; ஒவ்வொரு மாதமும் சுமார் 10,000 -14,000 கி.மீ தூரம் வரை பயணித்திருக்கிறார். புற்று நோய் சிகிச்சைப் பிறகும் அவரின் இந்த அயராத உழைப்பு அசர வைக்கிறது. இன்றும் பயணித்துக் கொண்டே இருக்கிறார்.

“கிராமத்தில் பிறந்து, கல்விக்காகப் போராடி, கல்லூரியில் வேலை செய்தாலும் என்னுடைய வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றவை சமூகத்துக்கான இயக்கங்கள்தாம்” என்று தெரிவிக்கும் தோழர் மோகனாவின் வார்த்தைகளில் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. சமூக செயல்பாடுகளுடன் ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், சொந்த வாழ்க்கை சவால்களையும், உடல் சார்ந்த சவால்களையும் துணிவுடன் வென்றெடுக்கலாம் என்பதற்கு இவரது பெருவாழ்வே சாட்சி. நம்மிடையே இயங்கிக் கொண்டிருக்கும் மோகனா தோழர் உள்ளிட்ட சக தோழிகளை அன்போடு கொண்டாடுவோம். அவர்களிடமிருந்து உத்வேகத்தை பெற்றுக்கொள்வோம் தோழர்களே!

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.