சமூகப் போராளி ஜாண்சிலி

30 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் அறிவியல் இயக்க மாநாட்டில் கல்லூரி முடித்த இளம் பெண்ணாக ஜாண்சிலியைச் சந்தித்தேன். இன்றோ கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப் பெரிய ஆளுமையாக வளர்ந்து நிற்கிறார். பெண்களுக்கான ‘மலர்’ அமைப்பின் மாவட்டத் தலைவராக இருந்து, 40,000 பெண்களை வழிநடத்துகிறார்!

குற்றிப்பாறவிளை கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் விவசாயிகள். அறிவொளி இயக்கம் ஆரம்பித்த போது, ஆசிரியர் சி.எஸ். சேவியர்தான் இவரைத் தொண்டராகச் சேர்ந்து, மக்களுக்கு எழுத்தறிவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் தாமஸ் பிராங்கோ அறிவியல் இயக்கத்தில் பணியாற்ற வழிகாட்டினார்.

”அறிவொளி இயக்கம் கிட்டத்தட்ட பெண்கள் இயக்கமாகவே இருந்தது. பெண்களே அதிகமாகப் படிக்கவும் வந்தனர், தொண்டர்களாகவும் இருந்தனர். என் ஈடுபாட்டைப் பார்த்து, பஞ்சாயத்து ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு கொடுத்தனர். பிறகு கிள்ளியூர் ஒன்றிய மகளிர் ஒருங்கிணைப்பாளராகவும் அறிவியல் இயக்க ஒன்றிய ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டேன். ஊதியம் இல்லாமல்தான் இத்தனை பணிகளையும் செய்தேன். மாவட்ட பொறுப்புக்கு வந்தேன். தஞ்சை மாநில மாநாட்டில் மாநிலப் பொதுக்குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்” என்று தான் கடந்து வந்த பாதையை மகிழ்ச்சியோடு விவரிக்கிறார் ஜாண்சிலி.

அறிவொளிக்கு வந்த பெண்களைத் தக்க வைக்கவும் திறன்களை வளர்க்கவும் சமத்துவத்தை நிலைநாட்டவும் ‘சமதா’ என்ற அமைப்பை உருவாக்கினார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் அது ‘மலர்’ அமைப்பாக உருவெடுத்தது. மலர் குழுவின் செயல்பாடுகள் அளப்பரியது. இது பெண்களுக்கு கல்வி, விழிப்புணர்வு, சுகாதாரம், சிக்கனம் , சேமிப்பு, பொருளாதாரப் பாகுபாடு நீக்குதல், ஆரோக்கியம், பெண்களுக்கான தலைமைப் பண்புகள், சமுக நீதி, அரசுத்திட்டங்களைப் பெறுதல், தகுதியானவர்களாக்குதல், அரசியலில் ஈடுபடச் செய்தல், தலைமைப் பொறுப்பை ஏற்கச் செய்தல், வீட்டுக்குள்ளும் சமூக நீதியை நிலைநாட்டுதல், பெண்களைப் பொருளாதார மேம்பாடு அடையச் செய்தல் போன்ற பல பணிகளை மேற்கொண்டது.

“ஒரு கிராமத்தைச் சமூக மாற்றத்திற்கு உள்ளாக்க வேண்டிய அனைத்துப் பணிகளையும் இந்த மலர் அமைப்பு மூலம் செய்வோம். ஜாதி, மதம், மொழி, இனம் தாண்டி வீட்டுக்குள் முடக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பெண்களையும் வெளியே கொண்டு வருவோம். பெண்களை மனம் திறந்து பேச வைக்கும் தளம்தான் மலர் குழு கூட்டங்கள். இங்கே பெண்கள் பாடுவார்கள். பிரச்னைகளை விவாதிப்பார்கள். கூட்டாக முடிவெடுப்பார்கள். தங்களின் வீட்டுப் பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக்கொள்வார்கள். இந்த மலர் இந்தியாவுக்கே முன்னோடியான அமைப்பு. இவ்வளவு அதிகமான பெண்கள் வேறு எங்கும் இல்லை. இங்கு நுண்நிதி நிறுவனம் செயல்படுகிறது ஆண்டுக்கு 18 கோடிக்கு மேல் சேமித்து வருகின்றனர். Annual turn over 180 கோடி. அனைத்துப் பலன்களும் பெண்களுக்குத்தான். முன்பு கையில் பணமில்லாமல் ரேசன் கார்டுகளை அடகு வைத்த பெண்கள், இன்று வீட்டுத் தேவைகளை அழகாகப் பூர்த்தி செய்கிறார்கள்” என்கிறார் ஜாண்சிலி

மோகனாவுடன் ஜாண்சிலி

மலர் அமைப்பு மூலம் ’மலர் மக்கள் அங்காடி’ ஏற்படுத்தியிருக்கிறார்கள். வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை ஆர்டரின் பேரில் வீட்டுக்கே போய்க் கொடுக்கிறார்கள். அச்சகம் ஒன்றும் வைத்திருக்கிறார்கள். மலர் நூலகமும் இயங்கி வருகிறது.

”எங்கள் திருமணம் மதம் கடந்தது. இணையர் கணேசன், ஆண் – பெண் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர். என்னுடைய சமூகப் பணி அதிகமாகும்போது வீட்டுப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வார். புரிதலோடு குடும்பம் இயங்கிவருகிறது” என்கிறார் ஜாண்சிலி.

அறிவொளியில் பணிபுரிந்தபோது, சிறப்பான அறிவொளி தொண்டர் எனப் பாராட்டப்பட்டு ஸ்ரீலங்காவில் நடைபெற்ற பசிபிக் நாடுகள் மாநாட்டுக்குச் சென்று வந்திருக்கிறார். மக்கள் நல்வாழ்வு இயக்கம் அமைப்பின் தென்னிந்திய பிரதிநிதியாக கொல்கொத்தா சென்றுள்ளார். டாக்கா சென்று உலக மாநாட்டில் கலந்துகொண்டிருக்கிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலர், மாநிலத் துணைத் தலைவர் பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

”மலர் குழுவில் இருக்கும் பெண்கள் தைரியமானவர்கள். எந்தப் பிரச்னையையும் சமாளிக்கு விதத்தில் தெளிவாக இருப்பவர்கள். காவல் நிலையம் செல்ல வேண்டிய பிரச்னையாக இருந்தாலும் நாங்கள் வரும் வரை காத்திருக்காமல், தாங்களே சென்று பிரச்னைகளைத் தீர்க்கும் அளவுக்கு உருவாகியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது பெருமிதமாக இருக்கிறது” என்கிறார் ஜாண்சிலி.

உழைக்கும் பெண்கள், ஜனநாயக மாதர் சங்கத்துடன் இணைந்து பல போராட்டங்களையும் நடத்தியுள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தண்ணீர் பிரச்னை, தெருவிளக்கு பிரச்னை போன்றவற்றைத் தீர்த்து வைக்கிறார். பெண்களின் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு நியாயம் கேட்டு காவல் நிலையம் முன் போராட்டங்களைச் செய்து வருகிறார் இந்தச் சமூகப் போராளி.

முகங்கள் தெரியவரும்…

தொடரின் முந்தைய முகம்:

படைப்பு:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.