பள்ளி விட்டு வரும் வழியில்தான் ராசாத்தியின் தோழி சுபாவின் வீடு. சுபா வீட்டின் முன் இருக்கும் கொய்யா மரம்தான் ராசாத்திக்குப் பிடித்தமான இடம்.

அந்தக் கொய்யாமரம் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை. அந்தச் சிறிய மரமே நான்கு கிளைகள் விட்டுப் பார்ப்பதற்கு ஒரு சிறிய பச்சைக்குடை போல் விரிந்திருக்கும்.

தினமும் மாலையில் ராசாத்தி, சுபா, ஆனந்த், சேகர் ஆகிய நால்வரும் அந்த மரத்தில் ஆளுக்கு ஒரு கிளையில்தான் தொங்கிக் கொண்டிருப்பார்கள். சில நேரத்தில் ஒரு கிளையில் இரண்டு பேர்கூடத் தொங்கிக் கொண்டிருப்பார்கள். மரத்தில் இருக்கும் அந்தக் கொய்யா பழமாகத் தேவையில்லை. பிஞ்சே அவர்களுக்கு அமிர்தம் போல இருக்கும். பழமாகும் வரை விட்டு வைத்ததும் இல்லை. வழக்கம் போல அன்றும் கிளைகளில் தொங்கி, கொய்யாக்களை வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள்.

சுபா அப்பா சுப்பிரமணியம், “வானரங்களா, இப்படி மரத்தில் தொங்கிக்கிட்டு இருக்கீங்க, கீழ இறங்குங்க. கைகாலை உடைச்சுக்காதீங்க” என்று அதட்டலாகக் கூறினார்.

சேகர், ஆனந்த், சுபா மூவரும் இறங்கிவிட ராசாத்தி மட்டும் மும்முரமாகக் காய்களைத் தேடிக்கொண்டிருந்தாள். சுப்பிரமணியம் பக்கத்தில் கிடந்த குச்சியை எடுத்துக் கொண்டு, “ஆம்பளப் பசங்க சொன்னா கேட்கறாங்க. இந்தப் பொட்டப் புள்ளைய பாரு” என்றார்.

குச்சியை ஓங்கி மிரட்டுவதைத் தவிர, அடிக்க மாட்டார் என்று ராசாத்திக்குத் தெரியும்.

”ஆம்பள பசங்கன்னா ரெண்டு கொம்பா முளைச்சிருக்கு? இருங்க மாமா, ஒரே ஒரு காய் மட்டும் எட்ட மாட்டேங்குது. பறிச்சுட்டு இறங்கிடறேன்” என்று கூறிவிட்டு, காயைப் பறிப்பதில் மும்முரமாக இருந்தாள் ராசாத்தி.

“ஆமா, கொம்புதான் முளைச்சிருக்கு. பொட்டக் கழுதைகளுக்கு வாய் அதிகமா போயிருச்சு. பொட்டப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அவுத்து விட்ட கழுதை மாதிரி இருக்கக் கூடாது. இந்த ராசாத்தியோட சேர்ந்து சுபாவும் போடற ஆட்டமும் பேசுற பேச்சும் சரியில்லை” என்று உள்ளிருந்து கத்திக்கொண்டே வந்தார் சுபாவின் பாட்டி.

மரத்திலிருந்து காய்களைப் பறித்துக்கொண்டு குதித்து வந்த ராசாத்தி, “பாட்டி அடக்க ஒடுக்கமா இருக்கிறதெல்லாம் உங்க காலம். இப்பெல்லாம் அப்படி இல்ல” என்றாள்.

“எந்தக் காலமா இருந்த என்ன, பொம்பள புள்ளைனா அடக்கமா தான் இருக்கணும். அடுத்த வீட்டுக்குப் போற புள்ள, போற இடத்தில என்ன சொல்லுவாங்க? ஆம்பள பசங்களுக்குச் சமமா மரத்துல ஏறிக்கிட்டு?” என்றார் பாட்டி.

“என்ன பாட்டி, இப்படிச் சொல்லிட்டீங்க… இப்போ பொம்பள பிள்ளைக ஏரோபிளேன்கூட ஓட்டுறாங்க தெரியுமா?” என்று கேட்டாள் ராசாத்தி.

“அது எங்காச்சும் வெளிநாட்டில் இருக்கும். நம்ம நாட்டில் எல்லாம் பொட்டப் புள்ளைங்க சோறாக்கணும், துணி துவைக்கணும், வூடு கூட்டணும், குழந்தைகளைப் பார்த்துக்கணும்… இதுதான் பொம்பளைக்கு வேலை” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற பாட்டியின் பின்னாலேயே ஓடிய ராசாத்தி, “நம்ம ஊர்லயும்தான் ஓட்டுறாங்க பாட்டி. நான்கூடப் படிச்சு முடிச்சு அதான் ஓட்டப் போறேன்” என்றாள்.

Cartoon character boy and girl playing seesaw on white background illustration

“வெளக்குமாத்துக்குப் பட்டுக்குஞ்சமா? சட்டிப் பானை கழுவுற கையில ஏரோபிளேன் ஓட்டறாலாம்ல… நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குது. என் பேராண்டி ஆனந்த் ராசாவாட்ட வருவான். அவன் ஆம்பளை சிங்கம். அவனைச் சொன்னா ஒரு நியாயம் இருக்கு. பொட்டக் கழுதை” என்று சொல்லிக்கொண்டே கட்டிலில் அமர்ந்தார் பாட்டி.

அப்போது சுபாவின் சித்தப்பா வீட்டிற்குள் வர, “மிலிட்ரி மாமா வந்துட்டாங்க! மிலிட்ரி மாமா வந்துட்டாங்க!” என்று கத்திக்கொண்டே ராசாத்தி ஓடிச்சென்று அவர் கையை இறுகப் பற்றிக்கொண்டாள்.

மிலிட்ரி மாமா என்றால் ராசாத்திக்குக் கொள்ளைப் பிரியம்.

மிலிட்ரி மாமாவைப் போன்ற கம்பீரத் தோற்றத்துடன் ராசாத்தி இதுவரை யாரையும் பார்த்ததில்லை.

கதை சொல்வார், ஆங்கிலம் கற்றுத் தருவார், அவர்களோடு விளையாடுவார், புதுப்புது விளையாட்டுகளைக் கற்றுக் கொடுப்பார்.

தன் கையில் இருக்கும் தழும்பைப் பற்றிய கதையைப் பல முறை சொல்லியிருக்கிறார். எப்போது கேட்டாலும் புதிதாகக் கேட்பது போல் வியப்பாக இருக்கும். அவரின் விவரிப்பு அவ்வளவு சுவாரசியமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கும்.

அப்போதெல்லாம் ராசாத்தி நான் ஏன் ஒரு பையனாகப் பிறந்திருக்கக் கூடாது என்று ஏங்குவாள். ஏன் எல்லோரும் ’பொட்டப் புள்ள… பொட்டப் புள்ள…’ என்று திட்டுகிறார்கள்? அப்படி என்னதான் அந்த ஆண்களிடம் இருக்கிறது என்று யோசிப்பாள்.

மிலிட்ரி மாமாவை ராசாத்திக்குப் பிடிப்பதற்குக் காரணமே மாமா ஒரு நாளும் அவளைப் ’பொட்ட புள்ள’ என்று பிரித்துப் பார்த்தது இல்லை. “செல்ல மருமக தைரியமான பொண்ணு. நீ நாலு ஆம்பள பசங்களுக்குச் சமம்” என்று சொல்வார்.

“மாமா, நான் மிலிட்ரிக்குப் போக முடியாதா? பொம்பளைங்களுக்கு அங்க வேலை இல்லையா?” என்று ஒரு நாள் மாமாவிடம் கேட்டாள் ராசாத்தி.

“ஏன் போக முடியாது? போகலாமே! நீ உடம்பு வலுவா வெச்சுக்கோ. அதுக்கான எக்சர்சைஸ் சொல்லித் தர்றேன், கத்துக்கோ. நல்லா சாப்பிடு, உன்னை மிலிட்ரில மாமாவே சேர்த்துவிடறேன்” என்றார். அன்றிலிருந்து உடம்பை வழுவாக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்தாள். அந்த நேரத்தில்தான் அவள் கனவை நிறைவேற்றும் விதமாக அவர்கள் வீட்டிற்கு அருகில் தற்காப்புக் கலையான குங்ஃபூ வகுப்பு தொடங்கியது.

ராசாத்தி குங்ஃபூ வகுப்பில் சேர்ந்தாளா?

(தொடரும்)

படைப்பாளர்

சரிதா

கதைசொல்லி, சிறார் எழுத்தாளர், பண்பலைத் தொகுப்பாளர் Scan foundation India animal welfare அமைப்பின் தூதுவர். Skillware Founder இதன் வழியாக கதைசொல்லல் பயிற்சிகளும் வழங்கி வருகிறார். கருவுடன் கதையாடல் இந்த தலைப்பில் கர்ப்பிணி பெண்களுக்கு இணைய வழியாகக் கதைகளைக் கூறி வருகிறார்.