விளையாட்டை மையமாக வைத்து, இறுதிச்சுற்று, எதிர் நீச்சல், வெண்ணிலா கபடி குழு, CHAK DE INDIA, MARY KOM என்று தமிழ் மற்றும் பிற மொழித் திரைப்படங்கள் வந்திருக்கின்றனஸ். அதில் பல வெற்றிப் படங்களாகவும் அமைந்திருக்கின்றன. அந்தத் திரைப்படங்களின் வரிசையில் ஆகர்ஷ் குரானாவின் இயக்கத்தில், தாப்ஸி பன்னுவின் நடிப்பில் இந்தியில் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான், ’ராஷ்மி ராக்கெட்’. பெரும்பாலும் இத்தகைய திரைப்படங்கள் சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பின்னணியிலிருந்து வரும் கதாநாயகன், நாயகியின் திறமை, அவர்கள் எடுக்கும் கடும் பயிற்சி, எதிர்கொள்ளும் சவால்கள், தடைகள் இவற்றை மீறி, அவர்கள் அடையும் வெற்றியோடு படம் முடியும். ஆனால், இதில் சற்று மாறுபட்டு, ஒரு பெண் கடும் முயற்சிக்குப் பின் கிடைத்த வெற்றிக்கு பின்னும் (வெற்றியினால்) எதிர்க்கொண்ட தடைகளை, சவால்களைப் பற்றிப் பேசும் விதத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இதற்கு முன்னும் இந்தியாவின் விளையாட்டுத் துறையில், இந்திய தேசிய விளையாட்டு ஆணையங்களில் நிலவும் சாதிய, வர்க்க அரசியல், அதிகார போக்கு, ஒருதலைபட்சமான செயல்பாடுகள், பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் போன்றவை இறுதிச்சுற்று, ஜீவா திரைப்படங்களில், வெளிப்படையாகவே விமர்சனம் செய்யும் வகையில் திரைக்கதை அமைக்கபட்டிருந்தது. அந்த வகையில், ஆசிய அளவில் பெண்களுக்கான தடகளப் போட்டிகளில் பல வெற்றிகளைக் குவித்து, பின்னர் பாலினச் சோதனையில் ஏற்பட்ட சர்ச்சையில் சிக்கி, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு அமைப்புகள் ஏற்படுத்திய தடைகளைச் சட்ட ரீதியில் எதிர்க்கொண்டு வெற்றி பெற்ற ஒடிசாவைச் சேர்ந்த ’டூட்டி சந்த்’, வாழ்க்கையைத் தழுவி, ராஷ்மி ராக்கெட் எடுக்கபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாலின வேறுபாடுகள் அதிகம் நிலவும் இந்தச் சமூகத்தில் விளையாட்டுத்துறையில் hyperandrogenism எப்படிப் பெண் வீராங்கனைகளுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது என்பதை இந்தப் படம் வெளிப்படையாக விவாதிக்கிறது. இதே பிரச்னையைத் தமிழில் வெளியான ’எதிர்நீச்சல்’, ஓரளவு தொட்டுச் சென்றது என்றாலும், தனக்கு ஏற்பட்ட அநீதியைத் தன் மாணவன் மூலம் சாதித்துகாட்டுவதாக அந்தப் படம் முடிந்தது.
மின்னல் வேக ஓட்டத்தினைப் பார்த்து அவள் தந்தையாலும், ஊர் மக்களாலும் ’ராக்கெட்’ என்று கொண்டாடப்படுகிறாள் சிறுமி ரேஸ்மா. குஜராத்தின், புஜ் நகரத்தில் நடந்த பயங்கற நிலநடுக்கத்தில் தன் தந்தையைப் பறிகொடுக்கும் ரேஸ்மி, தன் விளையாட்டுக் கனவை மறந்த சாதாரண வாழ்க்கையை மேற்கொள்கிறார். அவளிடம் இயல்பாக இருக்கும் அசாத்திய ஓட்டத்திறமையைக் கண்டு அவளை இந்தியத் தடகளப் பயிற்சி மையத்தில் சேர்க்க முயற்சிக்கிறார், அவள் நண்பரும் இந்திய ராணுவ அதிகாரியுமான கேப்டன் சாகா தாக்கூர். ஆரம்பத்தில் தடகளப் பயிற்சிக் கூடத்தின் கட்டுகோப்பான சட்டத்திட்டகளால் மிரளும் ரேஸ்மி, குறுகிய கால பயிற்சிலேயே தனது திறமையால் தனித்து மிளிர்கிறார். அதைத் தொடர்ந்து நடக்கும் ஆசியப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்று, வெற்றிக் களிப்புடன் நாடு திரும்பும் ரேஷ்மாவிற்கு எதிர்பாராத, மோசமான வரவேற்பு காத்திருக்கிறது. நாடு திரும்பியவுடன் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அவள் உடலில் வழக்கமாக பெண்களுக்கு இருக்க வேண்டிய Testosterone அளவைவிட அதிகம் இருப்பதால், அவர் பெண்ணேயல்ல, பெண்களின் பிரிவில் அவள் வென்ற பதக்கங்கள் அனைத்தும் செல்லாது என்று திரும்பப் பெறப்படுகிறது. பொய்யான புகாரால் ஓரிரவு போலிஸ் லாக்கப்பில் ஆண்களுடன் இருக்க வேண்டிவருகிறது. இந்தியத் தடகள அமைப்பாலும் ஊடகங்களாலும் இழிவுக்கு உள்ளாக்கப்படும் ரேஷ்மி மனதளவிலும் உடலளவிலும் பெரியளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார். ஏற்கனவே இது போல் பாதிக்கப்பட்ட பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்காகச் சட்டப் போரட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஈஷித்மேத்தா, விரக்தியும் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் ரேஷ்மிக்கு உதவ முன்வருகிறார்.
இதற்கிடையில் தன் நண்பன் சாகா தாக்கூரைத் திருமணம் செய்யும் ரேஸ்மி, கணவர், வழக்கறிஞர் உதவியுடன் சட்டப் போரட்டத்தில் ஈடுபடுகிறார். போரட்டத்தில் வென்றாரா, மீண்டும் தடகளப் பயிற்சியில் இணைந்தாரா என்பதே மீதிக்கதை.
பொதுவாக இதுபோன்ற படங்களின் திரைக்கதை, கதையோட்டம் எப்படிப் போகும் என்று ஓரளவு யூகிக்க முடிந்தாலும், திரைகதை, வசனம் இந்தப் படத்தை வேறு தளத்துக்குக் கொண்டு செல்கிறது. தாப்சியின் உழைப்பு மகத்தானது. ஒரு தடகள வீராங்கனையாக அவர் எடுத்துக் கொண்ட முயற்சி, பயிற்சி ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. பிங்க், தப்பட், வரிசையில் ராஷ்மி ராக்கெட்டும் தாப்சிக்கு முக்கியமான, தவிர்க்க முடியாத படமாக அமைந்துள்ளது. தாப்சியும் அதை உணர்ந்து முழுமையாகத் தன் திறமையை வெளிபடுத்திருக்கிறார். ரேஷ்மியின் நண்பனாகவும் பிறகு கணவனாகவும் நடித்திருக்கும் பிரியான்ஷு பெயினுலி, ரேஷ்மியைத் தடகளப் பயிற்சியில் ஈடுபடுத்தும்போதும், பலதரப்பட்ட தாக்குதலால் அவள் துவண்டுபோகும்போதும், அநீதிக்கு எதிராகச் சட்டப் போரட்டத்தில் ஈடுபடும்போதும், காதல் மொழிப் பேசும்போதும் நிதானமான நடிப்பில் ஈர்க்கிறார். ராணுவ உடையில் மிடுக்குடன் மிளிர்கிறார். வழக்கறிஞராக வரும் அபிஷேக் பேனர்ஜி சிறப்பாக நடித்திருக்கிறார். ரேஸ்மியின் தந்தை, தாய், தடகளப் பயிற்சியாளர் என அனைத்து கதாபாத்திரங்களும் தங்களின் பங்களிப்பைச் சரியாகச் செய்திருக்கின்றனர். இந்தப் படத்தின் கதையை எழுதியவர் இயக்குநர் நந்தா பெரியசாமி என்பது குறிப்பிட வேண்டிய விஷயம் .
படைப்பாளர்
ஒரு தனியார் கல்லூரியில் புள்ளியியல் துறையில் துணைப் பேராசிரியராக பணிபுரியும் முனைவர் அ.வெண்மணி, 20 ஆண்டுகாலமாக கல்விப்பணியில் தொடர்கிறார். கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளைத் தாண்டி, கலை, இலக்கியச் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர். மாணவர் பருவத்திலிருந்தே சமூகச்செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டுவரும் இவர் தற்காப்புக்கலை, நடனம் முதலியவற்றில் முறையான தேர்ச்சிப்பெற்றவர். சமூக ஊடகங்கள், புத்தகம், குறும்படம், சினிமா, அரசியல், தோட்டக்கலை, பயணம் போன்ற விஷயங்களில் ஆர்வத்துடன் செயல்படும் இவர் ஒரு புதுமை விரும்பி!
நல்ல விமர்சனம்