பெல்மான்ட் முன்பு ராஞ்சோ டி லாஸ் பல்காஸின் (Rancho de las Pulgas) ஒரு பகுதியாக இருந்தது. இன்றும் பெல்மான்ட்டின் சாலைகளில் ஒன்று அலமேடா டி லாஸ் பல்காஸ் (Alameda de las Pulgas) எனப்படுகிறது. (ஸ்பானிஷ் மொழியில் அலமேடா என்றால் மரங்களின் வரிசை; பல்காஸ் என்றால் பகுதி place.)

ஸ்பானிஷ் ஆய்வாளர்கள் பெல்மாண்ட் பள்ளத்தாக்கை ’லா கனாடா டெல் டையப்லோ’ அல்லது ’டெவில்ஸ் கேன்யன்’ (la Cañada del Diablo or the Devil’s Canyon) என்று அழைத்தனர். அப்போது அங்கு வாழ்ந்து வந்த ஓஹ்லோன் (The Ohlone) இன மக்கள் பள்ளத்தாக்கில் ஆவிகள் வசிப்பதாக நம்பியதால் ஸ்பானிஷ் ஆய்வாளர்கள் அவ்வாறு அழைத்தனர்.

பிறகு இத்தாலியர்கள் குடிவந்த பின் பெல்மான்ட் என்ற பெயர் வந்திருக்கிறது. பெல்மான்ட் பெயர், பெல் மான்டே என்ற இத்தாலிய சொல்லிலிருந்து உருவானதாகத் தெரிகிறது. அதன் பொருள் ‘அழகான மலை’. பெயருக்கேற்றார் போல அழகான மலையில் அமைந்துள்ள அழகான ஊர் தான் பெல்மான்ட்.

அழகு என்றால் அப்படி ஓர் அழகு. விசாலமான சாலைகள், சாலைகளின் இருபுறமும் மரங்கள் பூத்துக் குலுங்கும் செடிகள், தூரத்திலே தெரியும் வானுயர்ந்த ரெட்வுட் (redwoods), யூகலிப்டஸ், பைன், மேப்பில் (maple) போன்ற மரங்கள் அடங்கிய சோலைகள், அவற்றின் குறுக்கே ஓடும் சிற்றோடைகள், கடலின் நீட்சியாக உள்ள back water, அதன் ஓரங்களில் நிற்கும் தலை சாய்ந்த வில்லோ மரங்கள், உடற்பயிற்சி செய்தவரின் கைகளில் நரம்பு புடைத்திருப்பது போல வேர்கள் புடைத்திருக்கும் மரங்கள், வீடுகளின் முன், மரம் தாங்காத பழங்களுடன் தலை சரிந்து நிற்கும் ப்ளம்ஸ், ஆரஞ்சு, ஆப்பிள், பேரிக்காய், எலுமிச்சை மரங்கள் எனத் தாவரங்களின் செழிப்பைச் சொல்லி மாளாது.

இந்தப் பூ இலையே இல்லாமல் பூப்பதால் Naked Lilly என்று அழைக்கப்படுகிறது.

Naked Lilly

நாம் இந்தியாவில் இருந்து இங்கு கொண்டுவரும் பொருட்களை சோதனை செய்வது போல, மாநிலம் விட்டு மாநிலம் வந்தாலும் சோதனை செய்கிறார்கள். ஒரு முறை, எங்கள் அருகாமை மாநிலமான நெவாடா மாநிலத்தில் இருந்து எங்கள் மாநிலமான கலிபோர்னியாவிற்குள் நுழையும் போது காரை நிறுத்தி சோதனை செய்தார்கள். ஏதாவது கடத்தி வருகிறோமா என்று சோதிக்கிறார்களா என்றால் அது தான் இல்லை. ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்கு செடிகள் ஏதாவது கொண்டு வருகிறோமா என்று சோதனை செய்கிறார்கள். அவ்வாறு வரும் தாவரங்களால் மண் வளம் பாதிக்கப்படும் என நினைக்கிறார்கள்.

இவ்வாறு பாதுகாப்பதால், பராமரிப்பு இன்றி வளரும் மரங்கள்கூட, மரம் தாங்காத அளவிற்குப் பழுத்துத் தொங்குகின்றன. உலகின் 80% பாதாம் கலிபோர்னியாவில்தான் விளைகிறது. அமெரிக்க பாதாம் வணிகத்தின் 100%யும் கலிபோர்னியா மாநிலம் தான் செய்கிறது. அதேபோல, அமெரிக்காவில் வணிக ரீதியாக வளர்க்கப்படும் 99 சதவீத திராட்சை கலிபோர்னியாவில் தான் விளைகிறது.

செடி வாங்கி வைத்து, முட்டை ஓடு, டீத் தூள், சாணி எல்லாம் உரமாகப் போட்டு, நல்ல தண்ணீர் ஊற்றி வளர்த்து ஒரு பூ, இரண்டு பூக்களை ஒரு செடியில் பார்த்துவிட்டு, காட்டுச்செடி போல வளர்ந்து நிற்கும் ரோஜா செடிகளைப் பார்க்கும்போது, எப்படி இருக்கும்? வந்த புதிதில், சாலை ஓரங்களில், சாலை நடுவில் இருக்கும் இடைவெளிகளில் கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும் ரோஜா செடிகளைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். சில வீடுகளில் வீட்டு மதில் சுவர் மாதிரி 7-8 அடி உயரத்திற்குக்கூட ரோஜா செடிகள் நிற்கும். ஆண்டின் ஒரு சில மாதங்கள் அந்தச் செடி முழுவதும் பூவாக இருக்கும்.

நம் ஊர்ப் பகுதியில் பார்க்கக்கூடிய செடிகள் என்று பார்த்தால், கேந்தி (Marigold), ஜினியா வகைப் பூக்கள், மாம்பழ கேந்தி, பிச்சி, (இங்கு அதை Arabian Jasmine என்கிறார்கள்), அரளி, பல வண்ணங்களில் துத்தி போன்ற பூக்கள், பல வண்ணங்களில் செம்பருத்தி, அந்திமந்தாரை, கற்றாழை போன்ற செடிகளைப் பார்க்கலாம். நம் ஊரில் கேந்தி செடிகள் இரண்டு அடி உயரமாவது வளர்ந்த பின்தான் பூக்கும். ஆனால், இங்கு அரை அடி வளர்வதற்கு முன்பே பூத்து விடுகின்றன.

Dahlia

டாலியா (Dahlia) சான் பிரான்சிஸ்கோவின் அதிகாரப்பூர்வ மலர். ஏனெனில் டாலியா சான் பிரான்சிஸ்கோவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது.

கலிபோர்னியாவின் மாநில மலரான கலிபோர்னியா பாப்பி (California poppy), பசிபிக் சரிவான மேற்கு ஓரிகான் (Western Oregon) முதல் பாஜா கலிபோர்னியா (Baja California) வரையிலான இடங்களைப் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. பாஜா கலிபோர்னியா, பாஜா கலிபோர்னியா தீபகற்பத்தில் உள்ள ஒரு மெக்சிகோ நாட்டின் மாநிலம்.

California poppy

இவையெல்லாம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஆனால், எனக்கு மிகவும் வியப்பைக் கொடுத்தது, சோம்பு எனப்படும் பெருஞ்சீரகச் செடி தான். சாலை ஓரங்களில் மிகப் பரவலாக இவை காணப்படுகின்றன. ஓரிரு மாதங்கள் முழுக்க முழுக்க இலைகளாகவும், ஓரிரு மாதங்கள் முழுக்க முழுக்க மஞ்சள் நிறப் பூக்களாலும், ஓரிரு மாதங்கள் முழுக்க முழுக்க விதைகளாகவும், ஓரிரு மாதங்கள் முழுக்க முழுக்கக் காய்ந்த கம்புகளாகவும் இருக்கும் பெருஞ்சீரகத்தை இவர்கள் பெரிய அளவில் சமையலில் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. இந்தச் செடியில் பாதி பூக்கள் உதிர்ந்து காய் பிடிக்கத் தொடங்கிவிட்டது. முழுவதும் பூவாக இருக்கும் போது இன்னும் அழகாக இருக்கும்.

பெருஞ்சீரகச் செடி

அதே போல இங்கு கவனிப்பாரில்லாத இடங்களில் மணத்தக்காளி செடியும் நிற்கிறது. அதையும் இவர்கள் சமையலில் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. கேரளா கடை ஒன்று இங்கு இருக்கிறது. அங்கு மணத்தக்காளி கீரை விலை உயர்ந்த பொருட்களுல் ஒன்று. நமது ஊர் புதினாவில் பொதுவாகப் பூக்கள் இருக்காது. ஆனால், இங்குள்ள புதினா பூக்கிறது. மிக அதிகமாகத் தேன் இருக்கும் என நினைக்கிறேன். எப்போதும் தேனீக்களைப் புதினா பூக்களின் மீது பார்க்கலாம்.

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.