மனித குலத்தின் வரலாறு பெண்களிடமிருந்தே தொடங்கியது என்பது தான் முற்றிலும் உண்மை. ஆதி மனித இனத்தின் தலைமையாகப் பெண்தான் இருந்து வழிநடத்தினாள். தனக்குரிய ஆணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையும் அவளிடமிருந்தது. காலங்கள் மாற மாற ‘விழித்துக்’ கொண்ட ஆண்களால் தான் அவளது தலைமைப் பொறுப்பு தட்டிப் பறிக்கப்பட்டது.

ஆளுமைத்திறன் என்பது ஒரு சிக்கலான பிரச்னையில் மனம் தடுமாறாது அதைத் தீர்க்க முயற்சிப்பதும், கைமீறிப் போய்விட்ட விஷயங்களைத் தடுமாறாமல் கையாளுவதும் தான். இந்த விஷயத்தில் ஆண்களை விடப் பெண்கள் தான் அதிகம் திறமை

வாய்ந்தவர்கள். இந்த ஆளுமைத்திறன் ஆண்களுக்கு பெரும் சவாலாக இருந்ததில் மெதுவாக பெண்களின் தலைமைப் பொறுப்பைக் கையகப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு நிர்வகிக்கும் திறன் இல்லை, ஆட்சி செய்யும் திறமை இல்லை என்றெல்லாம் தொடர்ந்து அவர்களின் மூளை வழியாக மரபணுக்களில் புகுத்திவிட்டார்கள். பெண்களும் இதை நம்பத் தொடங்கிவிட்டார்கள் என்பதுதான் பெரும் சோகம்.

படிப்புக்கும் ஆளுமைத்திறனுக்கும் சம்பந்தம் இல்லை. அது அவரவர் வளர்ந்த விதத்திலும், எதிர்கொண்ட பிரச்னைகளிலும் தான் மேம்படுகிறது. இந்த ஆளுமை உணர்வு தான் சாதாரண மனிதர்களிலிருந்து தலைவர்களைத் தனித்துக் காட்டுகிறது. மற்றவர்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல ஆளுமை. தன்னைத்தானே முதலில் கட்டுப்படுத்துபவர்களே மற்றவர்களையும் எளிதாகக் கட்டுப்படுத்துகின்றனர். அந்த வகையில் பெண்கள் தன் ஆசைகளையும் விருப்பங்களையும் ஒடுக்குவதில் வல்லவர்கள். ஆனால், ஆண்கள் எளிதில் சலனப்படும் இயல்புடையவர்கள். ஆண்கள் மாங்குமாங்கென்று வேலை செய்தாலும், பெண்தான் அவற்றை ஒழுங்குபடுத்தி நிர்வகித்தாள்.

ஆதியில் ஆண்கள்தான் வேட்டைக்குப் போய் உணவு கொண்டுவந்தார்கள் என்றும், பெண்கள் வீட்டில் இருந்து பயிரிட்டு விவசாயம் கண்டறிந்தார்கள் என்றும் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்ததைச் சற்றே மாற்றிப் போட்டிருக்கிறது கடந்த வருடத்தின் கண்டுபிடிப்பு.

2020ஆம் வருடம் நவம்பர் மாதம் 4ஆம் தேதி தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலையில் ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முந்தைய ஒரு சடலம் கண்டறியப்பட்டது. சோதனைக்கு உட்படுத்தியதில் அது ஒரு பெண்ணின் உடல் என்றும், வேட்டை அவளது தொழில் என்றும் அறிய முடிந்தது. இதன் மூலம் ஆண்கள் மட்டுமே வெளியே சென்று வேட்டையாடினார்கள். பெண்கள் வீட்டோடு இருந்து உணவு சேகரித்தார்கள் என்ற கருத்து மாறியது. இந்த ஆய்வினை டாவீசில் (USA) உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்திருக்கின்றனர். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை, Female Hunters of the Early Americas என்ற தலைப்பில் Nov. 4 தேதியிட்ட in Science Advances ஆய்விதழில் வெளியாகியிருக்கிறது.

பெண் என்றாலே மெல்லியளாள் என்று பொதுப்பார்வை இருக்கிறது. ஆனால், ஆணைவிட வலுவானவள் என்ற விஷயத்தை யுகங்களாக‌ மறைத்ததில் தான் ஆண்களின் சாமர்த்தியம் வெளிப்படுகிறது. மனதையும் எண்ணங்களையும் வலுவிழக்கச் செய்தாலே போதும். இயல்பாகவே உடலும் வலுவிழக்கும் என்ற உளவியல் ரீதியான தாக்குதலைத்தான் ஆண்கள் தொடுத்திருக்கிறார்கள்.

சங்ககாலப் பெண்கள் படிப்பறிவுடன் திகழ்ந்தார்கள். ஓளவையார், வெண்ணிக் குயத்தியார், வெள்ளிவீதியார், இளவெயினி, பாரிமகளிர், காக்கைப்பாடினி, நச்செள்ளை இன்னும் எத்தனையோ மகளிர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர். இலக்கியங்களில் சிறந்திருந்தனர். பெண்களின் பெருமை ஓங்கியிருந்தது. என்றாலும் பிற்காலத்தில் வந்த ஆண்கள், பெண்களை முடக்க முதலில் கையிலெடுத்தது அவர்களது கல்வி பயிலும் உரிமையைப் பறித்ததுதான்.

பழந்தமிழகத்தில்கூட அரசாட்சியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது. சோழ இளவரசி குந்தவை, நூர்ஜஹான், ஜஹானாரா என்று நிறைய உதாரணங்கள் இருக்கின்றனர்.

இன்னும் எத்தனையோ குடும்பங்களில் பெண்தான் முடிவெடுப்பவளாகத் திகழ்கிறாள். அவள் தொலைநோக்குப் பார்வையுடன் தான் சிந்திக்கிறாள். பெண்ணைக் கலந்து எடுக்காத எந்த முடிவும் வெற்றி பெறுவதில்லை. ஆனால், இதை ஏற்றுக்கொள்ள ஆண்களுக்கு வறட்டு கௌரவம் தடுக்கிறது.

ஆணைக் கையாளும் பக்குவமும் பெண்ணுக்கு நிறைய உண்டு. தன்னைவிட ‘இளைய’ வயதுப் பெண்ணை ஓர் ஆண் மணமுடிக்க என்னென்னவோ காரணங்கள் சொல்லலாம். ஆனால், வயது அதிகமான ஆணைக் குறைந்த வயதுப் பெண் சுலபமாக ‘ஹேண்டில்’ செய்வாள் என்பதுதான் உண்மை.

பெண்ணின் ஆளுமைத்திறனுக்குச் சரியான எடுத்துக்காட்டாக அவளது ‘மல்ட்டி டாஸ்கிங்’ வேலைகளைச் செய்வதைச் சொல்லலாம். அவள் சமைத்துக் கொண்டே வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டு விட்டு, குழந்தைக்கு பால்புட்டியைக் கொடுத்து, வயதானவர்கள் இருந்தால் காபி போட்டுக் கொடுத்துவிட்டு, வரும் தொலைபேசி அழைப்பையும் கவனித்துக் கொள்ள முடியும். ஆனால், ஆணால் ஒரு நேரத்தில் ஒரு வேலைதான் செய்ய முடியும். சமையல்கூட நிறைய ஆண்கள் ஒவ்வொன்றாகத் தான் சமைப்பார்கள். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வகை சமைக்க முடியாமல் திணறுவார்கள். அவ்வளவு ஏன் பெண்ணால் வீட்டுவேலை, அலுவலக வேலை இரண்டையும் அசால்ட்டாகச் சமாளிக்க முடியும். ஆணால் நிச்சயமாக முடியாது.

இயற்கையாகவே ஆண்களின் மூளையைவிடப் பெண்களின் மூளை 8 சதவீதம் சிறியதாக இருந்தாலும் அவர்களின் மூளைக்கு அதிக திறன் உள்ளதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆளுமை என்பது மூளையின் அளவில் இல்லை, செயலில் தான் இருக்கிறது என்பது புரிகிறது. படித்தவர்களைவிடப் படிப்பறிவு இல்லாத, அனுபவ அறிவு மிகுந்த கிராமப்புற மகளிர் எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளையும் லகுவாகச் சமாளித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலோர மீனவக் குடும்பங்களில் ஆண்கள் மீன்பிடித்து வருவதோடு அவர்களது வேலை முடிந்துவிடும். அந்த மீன்களைச் சுத்தப்படுத்தி, வியாபாரம் செய்து, மீதமான மீன்களைக் கருவாடாக்கி, காசு பார்ப்பது எல்லாம் பெண்கள் வேலைதான். சிக்கல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் தான் அவற்றைச் சமாளித்துக் கடக்கிறார்கள்.

எனக்குத் தூரத்து உறவுப் பெண் ஒருவர் காதல் மணம் புரிந்தவர். ஒரு மகன் பிறந்த பிறகு கணவருக்கு நாள்பட்ட புற்றுநோய் என்று தெரியவந்தது. எவ்வளவோ மருத்துவச் செலவுகள் செய்தும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை. கணவர் இறந்தபின் உறவினர்கள் வற்புறுத்தியும் மறுமணத்தைத் தவிர்த்து விட்டு, வேலைக்குச் செல்லத் தொடங்கினார். வயதான தாயார், திருமணத்திற்குக் காத்திருந்த இரண்டு தங்கைகளைக் கவனித்துக் கொண்டு, வீடு ஒன்றையும் சிறியதாகக் கட்டி, மகனையும் நன்கு படிக்க வைத்தார். தங்கைகளுக்குத் திருமணத்தையும் முடித்து வைத்தார். இப்போது மகன்‌ வேலைக்குச் செல்கிறார். இருந்தும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார். கணவர் இறந்ததும் சோகம் கொண்டாடிக் கொண்டு மூலையில் முடங்கிவிடாமல் இயங்கத் தூண்டிய அவரது ஆளுமைதான் அந்தக் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

கணவன் இறந்த பின்னும் வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் பெண்கள் ஏராளமாக இருக்கின்றனர். ஆனால், மனைவி இறந்தபின் மனதளவில் முடங்கிவிடும் ஆண்கள் மீதி வாழ்வை அச்சத்துடன்தான் எதிர்கொள்கின்றனர். அல்லது இன்னொரு பெண்ணை மணம்புரிந்து தங்கள் இருப்பைக் காப்பாற்றிக் கொள்கின்றனர் என்பது மறுக்கவியலா நிதர்சனம். இத்தகைய ஆளுமை மிக்கப் பெண்களை மட்டம் தட்டி வைத்திருக்கும் ஆண்கள் இனியாவது தங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களின் ஆளுமைத் திறனைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.