“நான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று என் குடும்பம் நிர்பந்திக்கிறது. வரும் பெண் கன்னியாகத்தான் இருப்பாள் என்று நான் எப்படி உறுதி செய்துகொள்வது?”

“நீங்கள் கல்யாணமே செய்துகொள்ள வேண்டாம் என்று நான் ஆலோசனை கூறுகிறேன். துப்பறிவாளர்களை நியமித்தால் ஒழிய இதனைக் கண்டுபிடிக்க முடியாது. உங்களின் சந்தேகப் புத்திக்கு எந்தப் பெண்ணும் இலக்காகிவிடக் கூடாது. பாவம், அவர்களை விட்டுவிடுங்கள்!”

மும்பை மிரர் நாளிதழில் வெளியான டாக்டர் வாட்ஸாவின் இந்தப் பதிலைப் படிக்கும்போது அவருக்கு ஏன் ஏகப்பட்ட பெண் வாசகர்கள் இருந்தார்கள் என்ற ரகசியம் புரிகிறது. இந்தியாவின் மிக மூத்த செக்ஸாலஜிட் டாக்டர் மஹிந்தர் வாட்ஸா. தனது 96ஆவது வயதில் கடந்த ஆண்டு டிசம்பரில் காலமானார். இவர் 2015இல் ஆரம்பித்து 5 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக, வாரத்தின் ஏழு நாட்களும், மும்பை மிரர் நாளிதழில் ’ஆஸ்க் த செக்ஸ்பர்ட்’ (Ask the Sexpert) பத்தியில், செக்ஸ் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதி வந்தார். இறப்பதற்கு ஒரு வாரம் முன்புவரை எழுதியிருக்கிறார்.

டாக்டர் வாட்ஸா

இவரைப் பற்றி ’ஆஸ்க் த செக்ஸ்பர்ட்’ (Ask the Sexpert) என்ற ஆவணப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்த்தேன். அருமையான ஆளுமை டாக்டர் வாட்ஸா! செக்ஸ் தொடர்பான விஷயங்களை நகைச்சுவை ததும்ப, அறிவியல் ரீதியாக, யதார்த்தமாகப் பதிலளிப்பதாகட்டும், தன்னைச் சந்திக்க வரும் அனைவருடனும் அன்புடன் உரையாடுவதாகட்டும், மனிதர் உயிர்ப்புடன் வாழ்ந்திருக்கிறார். குறிப்பாகப் பெண்களிடமும், பெண் தொடர்பான விஷயங்களிலும் அவர் காட்டும் கரிசனமும் பரிவும் குறிப்பிடத்தக்கது. செக்ஸில் பெண்ணுரிமை, வசதி, இன்பம் என்று எதிலும் அவர் பெண்களை விட்டுக் கொடுக்காதவராக இருந்திருக்கிறார்.

டாக்டர் வாட்ஸா, அடிப்படையில் மகப்பேறு மருத்துவர். தன்னுடன் மருத்துவம் படித்த சகமாணவி புரோமிளாவை நேசித்தார். இருவரும் தத்தமது மதங்களைக் கடந்து வாழ்வில் இணைந்தனர். 1950களில் மகப்பேறு மருத்துவராகப் பணிபுரிந்து வந்த வாட்ஸா, அறுபதுகளில், ஃபெமினா உள்ளிட்ட பல்வேறு மகளிர் இதழ்களில் மருத்துவ ஆலோசனைப் பத்திகளை எழுதினார். டாக்டர் வாட்ஸாவிடம் எழுப்பப்படும் கேள்விகள் வாசகர்களிடமிருந்து வருவதல்ல; பத்திரிகையின் விற்பனையை அதிகரிக்க, ஆசிரியர் குழுவே புனைவாக உருவாக்குவது; ஆபாசமாக இருக்கிறது என்று ஃபெமினா இதழின் வாசகர் அதன் மீது வழக்கு தொடர்ந்தார். சாக்குப் பைகளில் பிரிக்கப்படாமல் இருக்கும், வாட்ஸாவுக்கு வரும் கடிதங்களை, பத்திரிகையாசிரியர் நீதிபதியிடம் காட்ட வழக்கு தள்ளுபடியானதாம்.

தனது பத்திகளுக்கு வரும் கேள்விகள் வாயிலாக எவ்வளவு அறியாமையில் மக்கள் இருக்கிறார்கள் என்று அறிந்த வாட்ஸா, இந்த நாட்டில் செக்ஸ் கல்வி அளிக்கவும் ஆலோசனை வழங்குவதற்குமான ஒரு திட்டம் வேண்டும் என்று இந்தியக் குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்திடம் (FPAI) 1974இல் பரிந்துரைத்தார். பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே, அவரது ஆலோசனையை ஏற்ற சங்கம் இந்தியாவின் முதல் செக்ஸ் கல்வி, கவுன்சலிங் மற்றும் தெரபி மையத்தைத் துவக்கியது. மனிதனின் பாலியியல் மற்றும் குடும்ப நலத்திற்கான முதல் கருந்தரங்கை 1976இல் டாக்டர் வாட்ஸா நடத்தினார். 1980களின் துவக்கத்தில் மருத்துவப் பணியை விட்டுவிட்டு முழுக்க முழுக்க செக்ஸ் கல்வி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபட்டார். நம் நாட்டில் செக்ஸ் கல்விக்கான விதையை ஊன்றிய பெருமை அவரையே சாரும்.

இந்தியாவில் செக்ஸ் பற்றி வெளிப்படையாகப் பேசுவதும் ஆரோக்கியமாக விவாதிப்பதும் மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. கல்யாணமாகும் வரை பெண்ணுக்கும் ஆணுக்கும் செக்ஸ் பற்றி எதுவும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் சமூகம், கல்யாணமான அன்று இரவே அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்னவொரு முட்டாள்தனம். வீட்டில் பெற்றோரும் உறவினர்களும் குழந்தைகளிடம் செக்ஸ் பற்றி பேச மாட்டார்கள், வழிகாட்ட மாட்டார்கள். இது ஒருபுறம் என்றால், பள்ளிகளில் செக்ஸ் கல்வி கூடாது என்ற கூப்பாடு மறுபுறம். பிறகு எப்படித்தான் அடுத்த தலைமுறை ஆரோக்கியமான செக்ஸ் கல்வியைப் பெற முடியும்? இன்றைய நிலையில், தன்னுடைய தோழமைகளிடம் அரைகுறையாகப் பேசித் தெரிந்துகொள்வதும் இணையத்தில் பார்த்து அறிந்துகொள்வதுமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அடுத்த தலைமுறையினர் தமக்கு இயல்பாக எழும் கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்கவும் தெளிவுபெறவும், வெளிப்படையான, ஆரோக்கியமான வழிமுறை இங்கே இல்லை. இதனால், இளம்தலைமுறையினர், குறிப்பாகப் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

பெண்களுக்குத் தன்னுடைய உடலைப் பற்றி இந்த ஆணாதிக்கச் சமுதாயம் சொல்லித் தருவதில்லை. அதே நேரத்தில், எதிர்மறையாக உடலைப் பற்றிய குற்றவுணர்வை அவர்களிடம் உருவாக்குகிறது. “உடம்பு தெரியற மாதிரி ட்ரெஸ் போடாதே”, “சத்தமா சிரிக்காதே”, “துப்பட்டா போடு”, “ஷார்ட்ஸ் போடாதே” என்றெல்லாம் வரும் கட்டளைகளாலும், அவர்களது உடல் பாதுகாப்பைக் காரணம் காட்டி சுதந்திரத்தைத் தடைசெய்வதாலும், அவர்களுக்குத் தன் உடல் மீதே வெறுப்பும் கோபமும் ஏற்படுகிறது. மாதவிடாய், மகப்பேறு, பிரசவம் என்று மேலோட்டமான புரிதல் பெண்களுக்கு இருந்தாலும், செக்ஸ் தொடர்பான விஷயங்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெளிவு இல்லை; சரியான வழிகாட்டுதல் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கல்யாணத்திற்கு முன்பு ஒரு பெண் இதனைத் தெரிந்து வைத்திருப்பதையே, கணவனும் குடும்பமும் சமுதாயமும் ’குற்றமாகவும்’, ’தகுதிக்குறைவாகவும்’ கருதுகின்றன. ’அவளுக்கு ஒன்றும் தெரியாது’ என்பது தான் ’நல்ல பெண்’ணுக்கான அடையாளமாகக் கருதப்படுகிறது.

இத்தகைய சூழலில் தான் டாக்டர் மஹிந்தர் வாட்சா போன்ற, பெண் உடலை அறிந்த, இன்பம் துய்ப்பதில் அவளுக்குள்ள உரிமையை உணர்ந்த, அதனைப் பெண்ணுக்கும் ஆணுக்கும் சொல்லித் தந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் மூத்த மருத்துவர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. ’ஆஸ்க் த செக்ஸ்பர்ட்’ ஆவணப்படத்தில், பல இளம்பெண்கள், டாக்டர் வாட்ஸா மும்பை மிரர் நாளிதழில் எழுதும் பத்தியைத் தினமும் படிப்பதாகவும், அதன் மூலம் செக்ஸ் குறித்த பல விஷயங்களைத் தெரிந்துகொண்டு தெளிவு பெற்றதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள். படத்தில், தன்னிடம் ஆலோசனைக்கு வரும் தம்பதிகளில், மனைவியை மகிழ்ச்சிப்படுத்த ’ஃபோர்ப்ளே’ செய்வது முக்கியம் என்றும், செக்ஸில் மனைவி சந்தோஷப்படுகிறாரா என்று கேட்டறியுமாறும், கணவனிடம் வாட்ஸா அறிவுறுத்துகிறார்.

மும்பை மிரர் பத்தியில் இடம்பெற்ற கேள்விகள் மற்றும் அவர் எழுதிய பதில்களைத் தொகுத்து `இட்ஸ் நார்மல்’ (It`s Normal) என்ற நூலை டாக்டர் வாட்ஸா வெளியிட்டிருக்கிறார். மாஸ்ட்ருபேசன், ஜி-ஸ்பாட், டீனேஜ் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு எளிமையாகவும் நகைச்சுவையுடனும் அவர் அளித்திருக்கும் பதில்கள், செக்ஸ் மற்றும் பாலியல் பற்றிய விழிப்புணர்வை, வாசகர்களுக்கு ஏற்படுத்துகின்றன.

டாக்டர் வாட்ஸாவைப் பற்றிய ஆவணப்படத்தை, ஒரு தனிமனிதர், மருத்துவரைப் பற்றிய படமாக நான் கருதவில்லை. இந்தியாவில் செக்ஸ் கல்வி, அதற்கு வரும் எதிர்ப்புகள், பத்திரிகை பத்திகளை எதிர்த்து வழக்குகள், கலாச்சாரம் என்ற பெயரிலான மனத்தடைகள், மக்களிடம் (நகர்ப்புற மக்களிடம்கூட) அறிவியலும் அடிப்படையான வாழ்க்கைக் கல்வியும் சென்று சேராததால் இன்றும் இருக்கும் அறியாமை என்று பலவற்றையும் படம் பதிவு செய்துள்ளது.

அடுத்த தலைமுறையினருக்கு, தம் உடல், பாலியல், செக்ஸ் பற்றிய சரியான புரிதலைத் தரும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. வீட்டிலிருந்து இதைத் துவக்கலாம். பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ’When Girls grow up’, ’When Boys grow up’, ’Menstrupedia’ போன்ற எளிய நூல்களை வாங்கித் தாருங்கள். பெண்குழந்தைகளுக்கான நூல்களை அவர்களுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் வாங்கித் தரவேண்டும். அதேபோல், ஆண் குழந்தைகளுக்கான நூல்களை, அவர்களுக்கு மட்டுமல்ல பெண் குழந்தைகளுக்கும் வாங்கித் தரவேண்டும். இருபாலரும், தன்னைப் பற்றிய புரிதலோடு, எதிர்பாலரின் உடலையும் பாலியலையும் புரிந்துகொள்வது அவசியம். பதின்ம வயதினருக்கு அதற்கேற்ற நூல்களையும் இளம்பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் டாக்டர் வாட்ஸாவின் நூல் போன்றவற்றையும் வாங்கிப் பரிசளிக்கலாம்.

அன்புத் தோழர்களே, இனியும் செக்ஸ் பற்றிய ஆரோக்கியமான விவாதங்களை மறைமுகமாக வைத்திருப்பது, நாகரிக சமுதாயத்திற்கு அழகல்ல. வயது வந்த மனிதர்களின் நியாயமான உடல்தேவை நிறைவேறாமல், அவர்கள் மகிழ்ச்சியுடன், சிறந்த உடல்நலத்துடன் வாழ்வதோ, சமுதாயம் வளர்ச்சியை நோக்கி நகர்வதோ சாத்தியமில்லை. அதற்கான விழிப்புணர்வையும் அறிவையும் தருவது மிக முக்கியம். புத்தகங்களின் உதவியுடன், குறைந்தபட்சம் வீட்டிலிருந்து உரையாட ஆரம்பிக்கலாம். பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் தன் பெற்றோரிடம் தயக்கமின்றி எதையும் பேசலாம் என்ற நம்பிக்கையை வளர்த்தெடுப்பது பெற்றோர் கையில்தான் உள்ளது. அதேபோல, கணவனிடம் தனது செக்ஸ் தேவைகளைப் பற்றி தயக்கமின்றி பேசலாம் என்று மனைவிக்கு நம்பிக்கை அளிப்பதும் கணவனிடம் தான் உள்ளது. ஆரம்பிப்போம்!

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.