விலங்குகளின் உலகில் ‘தந்தைமை’ என்பது ஒற்றைப்படைத்தன்மை கொண்ட பண்பு அல்ல. ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பதாக அறிவுரைகளைச் சொல்லி, வாழ்க்கைப் பண்புகளைக் கற்றுத் தருபவராகவும் குடும்பத்திற்காகச் செல்வத்தை ஈட்டி வீட்டைப் பாதுகாப்பவராகவும் ஒரு தந்தை இருக்கவேண்டும் என்பது மனிதர்களின் எதிர்பார்ப்பு மட்டுமே. அதை விலங்குகளிடம் திணிக்க முடியாது. விலங்குகளின் உலகத்தில் தேடிப் போய்ப் பார்த்தால் ஐஸ்க்ரீம் ஃப்ளேவர்களைப் போல எல்லா விதங்களிலும் இயங்கும் தந்தையரைக் கவனிக்கலாம். குழந்தை வளர்ப்பில் பங்கெடுக்காத தந்தையர், தாயைவிடக் கூடுதலாக நேரம் செலவழித்து குழந்தைகளைப் பாதுகாக்கும் தந்தையர், தாயின் வளர்ப்பே இல்லாத இனங்களில் குட்டிகளை முழுவதுமாகத் தாமே கவனிக்கும் தந்தையர்…

இவை எல்லாம் கொஞ்சம் நமக்கு முன்பே தெரிந்திருக்கலாம். ஆனால், மனிதர்களான நமக்குக் கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கக் கூடிய சில தந்தையரை முதலில் பார்த்துவிடலாம்.

சிங்கங்கள் கூட்டு வாழ்க்கை வாழும் சமூக விலங்குகள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு கூட்டத்தில் ஆண் சிங்கம்தான் தலைமை வகிக்கிறது. சில நேரம் வெளியிலிருந்து வரும் ஒரு வலுவான ஆண் சிங்கம், இந்தத் தலைமை சிங்கத்துடன் சண்டையிட்டு வெற்றி பெற்றுவிட்டால், கூட்டத் தலைவன் பதவி அதற்குப் போய்விடும். தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டவுடன் புதிய சிங்கம் செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா? முந்தைய தலைவரின் குட்டிகளை எல்லாம் மிச்சம் வைக்காமல் கொல்வது! ’அப்பாவைக் கொன்றதற்கு உன்னைப் பழிவாங்கப் போகிறேன்’ என்ற வசனத்தோடு ஒரு புது கதாநாயகன் முளைத்து வந்துவிடக் கூடாது என்பதற்கான ஏற்பாடு இது. ’த லயன் கிங்’ திரைப்படத்தில், முபாஸாவைக் கொன்றபிறகு “தப்பிச்சு ஓடிடு சிம்பா” எனக் குட்டியை விரட்டிவிடும் ஸ்கார், உண்மையில் சிங்கங்களின் பண்புக்கு எதிராக, கொஞ்சம் மென்மையாகக் காட்டப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

வேறு ஓர் ஆணின் குட்டிகளை வளர்க்கவும் பாதுகாக்கவும் பொறுப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதால், இயற்கை வைத்திருக்கும் ஓர் ஏற்பாடு இது. இதைப் படிக்கும்போது கொஞ்சம் நியாயமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், தன்னுடைய குட்டிகளையே கொன்று தின்னும் விலங்குகளும் உண்டு!

இது ஒரு பெரிய முரண். இனப்பெருக்கம் செய்வதும் குட்டிகளை வேட்டையாடிகளிடமிருந்து காப்பாற்றி தலைமுறையைத் தழைக்க வைப்பதுமே மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படும் பரிணாம வளர்ச்சியில், தன் குட்டிகளைத் தானே தின்பதும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது பெரிய ஆச்சரியம்தான். க்ரிஸ்லி கரடி, சில வண்டு இனங்கள், சில வகை சிலந்திகள், பனிக்கரடி கொடுவா மீன் வகைகள், கோபி மீன் இனங்கள் என்று பல இனங்களில் இந்த வழக்கம் உண்டு. அதிலும் கோபி மீன்கள் முட்டையிலிருந்து வரும் குஞ்சுகளில் மூன்றில் ஒரு பங்கை அப்படியே தின்றுவிடுகின்றன! ஆணோ பெண்ணோ, தனது குட்டிகளை இவ்வாறு உண்பது Filial Cannibalism என்று அழைக்கப்படுகிறது.

குட்டிகளை வளர்க்கும்போது பெரும்பாலான விலங்குகளின் உணவு குறைந்துவிடுகிறது. ஆகவே பசி காரணமாக இது நடக்கலாம் என்று ஒரு கருத்து உண்டு. இருப்பதிலேயே பலவீனமான குட்டிகளையே இவை உண்கின்றன என்றும், அடுத்த தலைமுறையின் பொதுவான வலிமையை இது அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இவை எல்லாம் ஆரம்பகட்ட கருதுகோள்கள் மட்டுமே. தன் குட்டியைத் தானே தின்பது என்ற வழக்கம், இப்போது பரிணாம ரீதியாக எந்தப் பலனையும் தருவதில்லை. முன்பு ஒரு காலகட்டத்தில் இந்த விலங்குகளின் குட்டிகளை உண்ணும் பண்பு ஏதோ ஒரு வகையில் நன்மை அளித்திருக்கவேண்டும், அதனால் அந்தப் பண்பு நீடிக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இது ஏன் நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் தேடிக்கொண்டே இருக்கட்டும். நாம் அடுத்த வகைமையில் உள்ள தந்தையரைச் சந்திக்கலாம். இந்த வளர்ப்பு முறை நமக்குக் கொஞ்சம் பரிச்சயமானது. ’பிள்ளை பெற்ற பெண்ணையும் குழந்தையையும் பாதுகாப்பாக வீட்டிலேயே விட்டுவிட்டு, வெளி உலகத்திற்குச் சென்று உணவு ஈட்டித் தருவது’ என்ற ரீதியில் பங்களிக்கும் தந்தையர்கள் இவை. சிவப்பு நரி இனத்தில், குட்டியைச் சீரான வெப்பநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், வேண்டியபோதெல்லாம் குட்டிக்குப் பால் தரவேண்டும் என்பதற்காகவும் பெண் விலங்கு குட்டியோடு வளைக்குள்ளேயே தங்கிவிடும். மூன்று வாரங்கள் வரை குட்டிகளுக்குத் தாயின் அரவணைப்பு தேவைப்படும். குட்டிகள் கண் திறக்கவே 15 நாட்கள் ஆகும் என்பதால், இந்தக் காலகட்டம் முடியும்வரை, ஆறு மணிநேரத்துக்கு ஒருமுறை வேட்டையாடி உணவு கொண்டுவருவது ஆண் விலங்கின் வேலை.

இருவாட்சி (Hornbill) பறவைகளில் ஆண்களின் பங்களிப்பு இன்னும் அதிகம். இணைசேருதல் நடந்த பிறகு, பெண் பறவை தனக்கு ஏதுவான ஒரு மரப்பொந்தைத் தேடிக் கண்டுபிடிக்கும். இந்த மரப்பொந்துக்குள் நுழைந்துகொண்டு, பொந்தின் வாயிலை சாணத்தாலும் களிமண்ணாலும் அடைத்துவிடும்! இந்த வாயில் அடைப்பு வேலைக்கு ஆண் பறவையும் மண் உருண்டைகளையும் அதை ஒட்டுவதற்கு எச்சிலையும் தந்து உதவுகிறது. ஒரு சிறு துளை மட்டுமே மீதமிருக்குபடி பொந்து அடைக்கப்பட்ட பிறகு, பெண்பறவை முட்டையிடுவதற்குத் தயாராகும். இந்தக் காலகட்டத்தில் பெண்பறவையின் இறகுகள் உதிர்ந்துவிடும் என்பதால், பெண்ணால் பறக்கவும் முடியாது.

அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு, இந்தச் சிறு துளை வழியாகப் பெண் பறவைக்கும் பிறக்கும் குஞ்சுகளுக்கும் ஆண் பறவை உணவூட்டுகிறது. இந்தப் பறவைகள் பழங்களை விரும்பி உண்ணக்கூடியவை என்பதால், ஒருவேளைக்கு 100 பழங்கள் வரை சேகரித்து வாயில் அடைத்துக்கொண்டுவந்து ஆண் பறவை கொடுக்கிறது. முட்டையிலிருந்து குஞ்சு பொரிந்து, தாய்க்கும் குஞ்சுகளுக்கும் இறகு முளைக்கும் வரை இந்த வேலை தொடர்கிறது. ’வந்திருப்பது வேட்டையாடி அல்ல, நான் தான்’ என்று பெண் பறவைக்குத் தெரிவிப்பதற்காக, ஒவ்வொரு முறை உணவு அளிக்கும்போதும் ஆண் பறவை பொந்தின் வாயிலை இறகால் அடித்து சமிக்ஞை செய்கிறது. இது அந்த இணைப் பறவைகளுக்கு உண்டான சங்கேத மொழி!

இதில் ஒரு கலக்கமான கேள்வி எழுகிறது. பெண் பறவை பொந்துக்குள் இருக்கும்போது வெளியில் ஏதாவது ஆபத்து வந்து ஆண் பறவை இறந்துவிட்டால்?

பெண் பறவையும் குஞ்சுகளும் உணவின்றி இறந்துவிட வேண்டியதுதான்!

அதிர்ஷ்டவசமாக, பெண் பறவைக்கு முழுவதுமாக இறகு முளைத்த பின்பு ஆண் பறவை இறந்தால், பெண் பறவை தானாகவே பொந்தை விட்டு வெளியேற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இது இயற்கையில் குறைவாகவே நடக்கிறது.

தொடர்ந்து இரைதேடி பறந்துகொண்டே இருப்பதாலும் இந்தப் பொறுப்புகளாலும் ஆண் இருவாட்சிகள் சோர்ந்துவிடுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. சில ஆண் இருவாட்சிகள் இனப்பெருக்கக் காலம் முடிந்தவுடன் இறந்துவிடுகின்றனவாம்!

இதெல்லாம் ரொம்ப அதீதமாக இருக்கிறதே, குழந்தை வளர்ப்பில் சரிசமமாகப் பங்கெடுக்கும் ஆண் விலங்குகள் உண்டா? அங்கு வேலைப் பங்கீடு எப்படி இருக்கிறது? பெண் விலங்குகளின் பங்களிப்பே இன்றி குழந்தைகளை வளர்க்கும் ஆண் விலங்குகள் உண்டா? பரிணாம ரீதியாக இதன் நன்மைகள் என்ன?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.