#WithTheNuns #AvalKoppam என்ற ஹேஷ் டேகுகளுடன் நாடு முழுவதுமுள்ள பெண்களும், பெண்ணிய செயற்பாட்டாளர்களும் தங்கள் சமூக வலைதளக் கணக்குகளில் பதிவுகளிட்டு வருகின்றனர்.

பிஷப் பிராங்கோ முலக்கல் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், சில ஆண்டுகள் கழித்து செஷன்ஸ் நீதிமன்றம் அவர் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது. கேரள மாநிலத்தில் மட்டுமல்லாது, நாடு முழுக்க பெண்களிடையே இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது. குற்றத்துக்கு ஆளான அருட்சகோதரி, அவருடன் போராட்டட்தில் களமிறங்கித் துணைநின்ற ஐந்து அருட்சகோதரிகளுக்கு பெண்களிடையே ஆதரவு பெருகிவருகிறது.

இந்நிலையில் மலையாள முன்னணி நடிகைகளான கீது மோகன்தாஸ், ரீமா கள்ளிங்கல், பார்வதி ஆகியோர் தங்கள் சமூக வலைதளக் கணக்குகளில் அருட்சகோதரிகளுக்கு ஆதரவாகக் கைப்படக் கடிதங்கள் எழுதி அதைப் பதிவிட்டுள்ளனர்.

இந்த இருண்ட காலத்தின் தனிமையை வெறும் சொற்களாலோ, சத்தியங்களாலோ இட்டு நிரப்ப முடியாது எனச் சொல்லும் பார்வதி, பெண்களை எளிதில் ஒதுக்கக்கூடியவர்கள் என நினைக்கும் உலகில், தன்னிடத்தில் வலுவாக நின்று, உயிர்ப்புடன் வாழ்வதே புரட்சி என அருட்சகோதரிகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

போலவே, இதழியலாளர் கே.ஏ.ஷாஜி தன் பதிவில், ‘அநீதிக்கும் வன்முறைக்கும் எதிராக தொடர்ந்து போராடும் துறவிகளுடன் துணை நிற்பதாகக்’ கூறியுள்ளார். இதழியலாளர்கள் அன்னா வெட்டிகாட், சவுமியா ராஜேந்திரன், தன்யா ராஜேந்திரன், மேகா காவேரி, கீதிகா, இயக்குனர் லீனா மணிமேகலை, பாடகி சின்மயி போன்றோரும் கடிதங்கள் எழுதிப் பகிர்ந்துள்ளனர்.

வழக்கின் தீர்ப்பு நியாயமற்றது என்ற குரல்கள் சமூக வலைதளங்களில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. பெண்களுக்கு எதிரானக் குற்றங்களைப் பதிவு செய்தாலும், சட்டம் அவற்றுக்குத் தண்டனை எளிதாகத் தந்துவிடுவதில்லை என்பது மீண்டும் ஒருமுறை வெட்டவெளிச்சமாக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும், சாதாரணப் பெண்கள் தொடங்கி, இதழியலாளர்கள், நடிகர்கள் என பலரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பது பாராட்டுக்குரியது.

‘சோஷியல் மீடியா’வில் ஹேஷ்டேக் போட்டால் புரட்சி மலர்ந்துவிடுமா எனக் கேட்கத் தோன்றுகிறதா?

ஆம். மலர்ந்துள்ளது!

எகிப்திலும், வளைகுடாப் பகுதியிலும் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் கொடுங்கோலாட்சிகள் முடிவுக்கு வந்துள்ளன. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட ஒக்சனா மகர் என்ற இளம்பெண்ணின் கடைசி நிமிடங்களை அவரது தாய் காணொளிக் காட்சியாக சமூக வலைதளங்களில் பதிவேற்ற, உக்ரைன் நாட்டில் பெண்கள் முன்னெடுத்த புரட்சி வெடித்தது.

இந்தியாவிலும், நிர்பயா வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு, சிறுமி ஆசிஃபா வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு, உன்னாவ் வழக்கு என பல வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவே சமூக வலைதளப் போராட்டங்கள் உதவியுள்ளன. சமீபத்தில் சென்னை பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண் குழந்தைகள் தங்கள் சமூக வலைதலக் கணக்குகளில் தான் வெளிப்படையாக தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சொல்ல முன்வந்தனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மேல் அரசு நடவடிக்கை எடுக்கவும் இதுவே காரணமாக அமைந்தது.

குரலற்ற பெண்களின் குரலாக சமூக வலைதளங்கள் தொடர்ந்து இயங்கிவருவதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். சமூக வலைதளங்கள் மிக வலுவான ஆயுதம். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும், அதே சமயம் பெண்களுக்குள்ளான ஒற்றுமையையும் இவற்றின் மூலம் மீட்டெடுக்க வேண்டும். சேர்ந்து சண்டை செய்தாலே இங்கு பெண்களுக்கு எதிரான அநீதியை தட்டிக்கேட்க முடியும்.

நீங்கள் செய்யவேண்டியது:

  1. பாதிக்கப்பட்ட அருட்சகோதரிக்கோ, அவருடன் நிற்கும் சகோதரிகள் அனைவருக்குமோ, உங்கள் கைப்பட ஆதரவுக் கடிதம் எழுதலாம்
  2. உங்கள் சமூக வலைதளக் கணக்குகளில் #WithTheNuns #Avalkoppam என்ற ஹேஷ்டேகுகளுடன் அந்தக் கடிததின் புகைப்படத்தைப் பகிரலாம்
  3. இதற்கென தொடங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியான solidarity2sisters@gmail.com க்கு இந்தக் கடிதத்தை மின்னஞ்சல் செய்யலாம்
இதழியலாளர் சவுமியா ராஜேந்திரனின் கடிதம்

வாங்க பெண்களே, சண்டை செய்யலாம்!