சான் பிரான்சிஸ்கோ 2

கோல்டன் கேட் (San Francisco The Golden Gate) 

சான் பிரான்சிஸ்கோ வளைகுடா, ஏறக்குறைய முதலையின் வாய் போன்ற அமைப்பில் உள்ளது.  வாய் பகுதியில், மேற்குப் பக்கம், சான் பிரான்சிஸ்கோ, ஊர் உள்ளது. அதற்கு வடக்கே சான் பாப்லோ (San Pablo) வளைகுடா உள்ளது. அந்த வளைகுடாவை, மற்றும் சான் பிரான்சிஸ்கோ இடையே உள்ள பகுதி கோல்டன் கேட் எனப்படுகிறது. 

கோல்டன் கேட் ஒரு நீரிணை (strait). நீரிணை என்பது, இரண்டு பெரிய நீர்ப்பரப்புக்களை இணைக்கும் ஒடுக்கமான நீர்ப்பரப்பு ஆகும்.

பனி யுகக் (Ice Age) காலத்தில், ​​கடல் மட்டம் பல நூறு அடி குறைவாக இருந்தபோது, ​​பனிப்பாறை நிறைந்த சாக்ரமென்டோ ஆறு (Sacramento River)  மற்றும் சான் ஜோவாகின் ஆறு (San Joaquin River) ஆகியவற்றின் நீர் கடலுக்குச் செல்லும் வழியில், இந்த ஆழமான கால்வாய் உருவானது என கருதப்படுகிறது. 

வலுவான நீரோட்டங்கள், பாறைகள் மற்றும் மூடுபனி போன்றவற்றால், இங்கு 100 க்கும் மேற்பட்ட கப்பல் விபத்துக்கள் நடந்துள்ளன. 

கோல்டன் கேட் பல நாட்கள், மூடுபனியால் மூடப்பட்டிருக்கும். அதேபோல் காலநிலையில் ஒரே நாளில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும்.

18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே, இப்பகுதியில் மக்கள் வசித்து வந்தனர். இப்போதும், அவர்களின் வழித்தோன்றல்கள் இப்பகுதியில் உள்ளனர்.

1840 கள் வரை, இந்த நீரிணையை சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்தின் வாய் (“Mouth of the Port of San Francisco”) என அழைத்தனர். 

ஜூலை 1, 1846 இல், ஜான் சி. ஃப்ரோமொன்ட் (John C. Frémont), ‘கிரிசோபிலே’ ( பச்சைநிறக்கல்) அல்லது ‘கோல்டன் கேட்’ (Chrysopylae or Golden Gate) என்ற பெயரை கான்ஸ்டான்டினோப்பிளின் சுவர்களில் ஒன்றின் நினைவாக இதற்கு சூட்டினார். 

ஜான் சார்லஸ் ஃப்ரீமாண்ட், படம்: wikipedia

இப்போது  ஜான் சார்லஸ் ஃப்ரீமாண்ட் குறித்து சிறு குறிப்பு. இவர் ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி. அமெரிக்க மேற்கு பகுதியின் வரைபடத்தை உருவாக்கியவர். மெக்சிகன்-அமெரிக்கப் போரின்போது, சான்டா பார்பரா, ப்ரெசிடியோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸின் ஒரு பகுதியைக் ( Santa Barbara, Presidio, and part of Los Angeles) கைப்பற்றுவதற்கு நடந்த போரில் ஃப்ரீமான்ட் கலிபோர்னியா பட்டாலியனை (California Battalion) வழிநடத்தியவர். அடிமைத்தனத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த அவர், 1856ல் அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான முதல் குடியரசுக் கட்சி (Republican) வேட்பாளரானார். கலிபோர்னியா குடியரசுக் கட்சியை (California Republican Party) நிறுவியவரும் இவரே. 

ஃப்ரீமாண்ட் பெயரில் நாடு முழுவதும் 4 கவுண்டிகள் (மாவட்டங்கள்) உள்ளன.

பல ஊர்களுக்கு அவர் பெயரை வைத்துள்ளார்கள். அவற்றுள் சான் பிரான்சிஸ்கோ ஃப்ரீமாண்ட் தான் பெரிய ஊர். பெரும்பாலான ஊர்களில் அவரின் பெயரில் தெரு இருக்கும். அவற்றுள், லாஸ் வேகாஸ் (Las Vegas) நகரில் இருக்கும் தெரு உலகப் புகழ் பெற்றது.

கோல்டன் கேட் என்ற பெயரை ஃப்ரீமாண்ட் சூட்டியது கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு. பைசான்தியன் (இன்றைய இஸ்தான்புல்) கடற்கரை,  சூரியன் மறையும் போது சூரியனின் பிரதிபலிப்பால் தங்க நிறத்துடன் ஒளிரும். அதனால், அது கோல்டன் ஹார்ன் எனப்படுகிறது. அதே போன்று இருப்பதால், கோல்டன் கேட் என பெயர் சூட்டியதாக ஃப்ரீமாண்ட் குறிப்பு எழுதி வைத்துள்ளார்.

பாலம் கட்டப்படுவதற்கு முன்பு, சான் பிரான்சிஸ்கோவிற்கும் மரின் கவுண்டிக்கும் இடையிலான படகு சேவை 1820 ஆம் ஆண்டில்  தொடங்கியது. 

1867 இல் தொடங்கப்பட்ட The Sausalito Land and Ferry Company service (அதுவே அப்போது உலகில் இருந்தவற்றுள் பெரிய படகு சேவை என சொல்கிறார்கள்) . பிற்காலத்தில், இது, தெற்கு பசிபிக் இரயில் பாதை துணை நிறுவனமான கோல்டன் கேட் ஃபெர்ரி கம்பெனியாக மாறியது. இது 1920 களின் பிற்பகுதியில் உலகின் மிகப்பெரிய படகு துறை நிறுவனமாக இருந்தது. 

அமெரிக்கா மே 1, 1923 அன்று வெளியிட்ட அஞ்சல் தலை, கோல்டன் கேட் பாலமில்லாத கோல்டன் கேட் வளைகுடா படத்துடன் உள்ளது.  

பலர் சான் பிரான்சிஸ்கோவை மரின் கவுண்டியுடன் இணைக்க ஒரு பாலம் கட்ட விரும்பினர். ஆனால் வலுவான, கடுமையான காற்று மற்றும் மூடுபனி, சுழல் அலைகள் மற்றும் நீரோட்டங்களைக் கொண்டிருப்பதால், நீரிணைக்கு குறுக்கே ஒரு பாலம் கட்ட முடியாது என வல்லுநர்கள் கருதினர். பின் கட்டுமானம் ஜனவரி 5, 1933 இல் தொடங்கப்பட்டு ஏப்ரல் 19, 1937 முடிவடைந்தது. 

பெரும் மந்தநிலை (Great Depression 1929 – 1933) காலகட்டத்தில், பலருக்கும் நிலையான வேலை வாய்ப்பு கிடைத்தது. 1937 ஆம் ஆண்டு பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட கோல்டன் கேட் பாலம், பொறியியல் அதிசயமாக அப்போது கருதப் பட்டது. அமெரிக்காவின் ஏழு கட்டடப் பொறியியல் அதிசயங்களில் ஒன்றாக கோல்டன் கேட் பாலம் கருதப்படுகிறது.

மக்களாலும் இது அதிசயமாகவே உணரப் படுகிறது. ஊரின் சிறிது உயரமான எந்த இடத்தில் இருந்து பார்த்தலும் பாலம் தெரியும். ஆனாலும் வெளியூர்காரர்கள் மட்டுமல்ல நாங்களும் கூட உடனே அதன் பின்னணியில் புகைப்படம் எடுப்போம். அப்படி ஒரு பிரமிப்பை இது ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்க கடற்படை முதலில் மஞ்சள் நிற கோடுகளுடன் கருப்பு வண்ணம் பூச விரும்பியது. ஆனால், மூடுபனியில் பாலம் தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக  red lead primer பூசப்பட்டுள்ளது. இரவில் விளக்கின் ஒளியில் இந்த நிறம், பாலத்தின் அழகை இன்னமும் அதிகரித்துக் காட்டுகிறது. 

பாலம் எந்த இடைநிலை ஆதரவும் இல்லாமல் நீண்ட தூரம் கோபுரங்கள், கேபிள்கள் மற்றும் இணைக்கும் சாதனங்களால் (suspenders) இணைக்கப் பட்டுள்ளது. அதனால் இது suspension bridge எனப்படுகிறது. 

தாவர நார்களால் செய்யப்பட்ட இணைப்பு கேபிள்களுக்குப் பதிலாக இரும்புச் சங்கிலிகள் நியூயார்க் புரூக்ளின் பாலத்தில் முதன் முதலில் (1883) அறிமுகப் படுத்தப் பட்டன. அதே மாதிரி இரும்பு கம்பிகள் இங்கும் இணைக்கின்றன. இவ்வாறாக ஒரே பக்கத்தில் இருக்கும் இரு தூண்களை இணைக்கும் கம்பி பார்ப்பதற்கு சிறிதாக தெரிகிறது. ஆனால் அதன் விட்டம் 36 இன்ச். 

இரண்டு பக்கமும் மலைகள் பாலத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன.

இவ்வாறு கட்டப்பட்ட கோல்டன் கேட் பாலம் சான் பிரான்சிஸ்கோ தீபகற்பத்தின் வடக்கு முனையில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரத்தை, சான் பாப்லோ வளைகுடாவின் தெற்கு முனையையும் இணைக்கிறது. 4,200 அடி (1,280 மீ) மற்றும் உயரம் 746 அடி (227 மீ) கொண்ட இந்த பாலம் 1937 இல் கட்டி முடிக்கப் பட்டபோது, இந்த மாதிரியான உலகின் மிக நீளமான பாலமாக இருந்தது. 1964 நியூயார்க் நகரில் வெர்ராசானோ-நரோஸ் பாலம் (The Verrazano- Narrows Bridge) காட்டப்படும் வரை, கோல்டன் கேட் பாலம் உலகின் மிக நீளமான பாலமாக இருந்தது. இப்போது அமெரிக்காவில் இரண்டாவது மிக நீண்ட பாலமாகவும் உலக அளவில் பதினேழாவது நீண்ட பாலமாகவும் உள்ளது.  

மே 27, 1937 அன்று திறக்கப்பட்ட அந்த நாளில் சுமார் 200,000 பேர் நடந்து சென்றிருக்கிறார்கள். அடுத்த நாள், அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட், பாலத்தை சம்பிரதாயமாக நண்பகல் வேளையில் போக்குவரத்திற்காக காணொளி மூலம் திறந்து வைத்திருக்கிறார். திறப்பு விழா ஒரு வாரம் நடைபெற்றுள்ளது. 

டிசம்பர் 1, 1951 இல், ஒரு புயல் பாலத்தை சேதப்படுத்தியது. இதன் விளைவாக அது மூடப்பட்டது. 1953 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில், மறுசீரமைக்கப்பட்டது. பாலம் கான்கிரீட் அடித்தளத்தைக் கொண்டதாகவே இருந்தது. கான்கிரீட்டில் அரிப்பு ஏற்பட்டதால், 1982 முதல் 1986 வரை, எஃகு அடித்தளம் போடப்பட்டது. போக்குவரத்தை முழுமையாக நிறுத்தாமல், இந்த பணி நடைபெற்றது. 

2007 ஆம் ஆண்டில், அமெரிக்க கட்டிடக்கலை நிறுவனத்தால் அமெரிக்காவின் பிடித்த கட்டிடக்கலை பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.

தற்கொலைகள் அதிகம் நடக்கும் இடமாக இருப்பதால், இப்போது நடைபாதைக்கு வெளியே கடல் படுத்தியில் இரும்பு வலை அமைத்துள்ளார்கள். ஆங்காங்கே மனநல மருத்துவருடன் கலந்து உரையாடுவதற்கான தொலைபேசி இணைப்புகளை வைத்துள்ளார்கள்.

தனித்துவமான சங்கு சப்தம் (ringtone), கப்பல் பணியாளர்கள் பாலத்தைப் பார்க்க முடியாத அளவுக்கு பனிமூட்டமாக இருக்கும்போது செயல்படுத்தப்படுகிறது. அதை இயக்க தானியங்கி அமைப்புகளைப் பயன்படுத்த முயன்றனர், ஆனால் உப்புக் காற்று சேதப்படுத்தியதால் ஊழியர்களே இந்த பணியை செய்கின்றனர். இந்த சப்தத்தை நாம் அடிக்கடி கேட்கலாம்.

காரை நிறுத்தி விட்டு பாலத்தில் நடக்கலாம். சைக்கிளில் செல்லலாம். ஆயிரக் கணக்கானோர் எப்போதும் போய்கொண்டு இருப்பார்கள். நடக்கும் போது, பாலத்தில் வாகனங்கள் செல்வதால் ஏற்படும் அதிர்வை நாம் உணரலாம். கேட்கலாம். சப்தம், ரயிலின் அருகில் ஏற்படும் சப்தத்தை விட அதிகமாக இருக்கும். இது உலக அளவில், பெரும்பான்மையானோரால், சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிபோர்னியாவின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக உள்ளது. 

ஃபிரோமர் தனது  The Frommer’s travel guide நூலில் கோல்டன் கேட் பாலம் உலகில் மிக அதிகமாக மக்கள் புகைப்படம்  எடுத்த பாலம் என்கிறார்.  

பாலத்தில் பயணிக்க வாகனங்களுக்கு கட்டணம் உண்டு. இந்த பாலம் வழியாக ஒரு நாளைக்கு சுமார் 1,12,000 வாகனங்கள் செல்கின்றன. 

பாலத்தின் குறுக்கே பஸ் சேவையை சான் பிரான்சிஸ்கோ முனி மற்றும் கோல்டன் கேட் டிரான்சிட் (San Francisco Muni and Golden Gate Transit) போக்குவரத்து நிறுவனங்கள் வழங்குகின்றன:

பாலத்தின் நீளம் 1.7 மைல் நீளம். கோல்டன் கேட் பாலத்தின் இரண்டு பக்கமும் வாகன நிறுத்தங்கள் உண்டு. தெற்கே சான் பிரான்சிஸ்கோ பகுதியில் சிலர் வாகனத்தை நிறுத்தி விட்டு, பாலத்தின் வழியாக மறுகரைக்கு நடந்தோ, சைக்கிளிலோ செல்வார்கள். அதனால் டோல் பணம் மிச்சமாகும். இந்த பகுதியில் இருக்கும் தகவல் மையத்தில், 1933 இல் பயன்படுத்தப்பட்ட 12-அடி சோதனை கோபுரம் உள்ளது. இங்கு நினைவுப் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.

பெரிய பராமரிப்பு செலவுகள் ஏற்படுவதால், சிலர் கோல்டன் கேட் பாலத்தை புனரமைக்க பரிந்துரைத்துள்ளனர். கோல்டன் கேட் பாலம் இன்னும் நன்றாக இருக்கிறது அது தேவையில்லை என்பது பலரின் கருத்தாக உள்ளது.

பாலத்தின் Toll Gate இற்கு முன்பு வரும் பாதையே விசாலமாக மிகவும் அழகாக இருக்கும். குறிப்பாக வழியில் இருக்கும் tunnel கள் மஞ்சள் நிற விளக்குகளில் தங்கம் போல மின்னுவது, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இவ்வாறான tunnel கள் பாலம் தாண்டியும் சில உள்ளன. பாலத்தைக் கடந்த வடக்குப் பகுதியில், Battery Spencer View Point போன்று பல இடங்களில் வாகன நிறுத்தகங்கள் உள்ளன. நமக்கு விருப்பமான இடங்களில் நின்ற இயற்கை அழகை ரசிக்கலாம். பாலத்தில் நடக்கலாம். அங்கு இருக்கும் பூங்கா மற்றும் சிலைகளைக் கண்டு களிக்கலாம்.

ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு விதமான பாறைகளாக இருக்கும். சில பாறைகள், மரங்கள் நிறைந்த கற்பாறைகளாக உள்ளன. சில பாறைகள், மரங்களே இல்லாத பாறைகளாக உள்ளன. சில பாறைகள், மணல், சாரல்கள் கொண்ட பாறைகளாக  உள்ளன. அதே போல நமது கண் முன்னே பறந்து விரிந்து இருக்கும் கடல், நிலப்பரப்பில், சில இடங்கள் தெளிவாகத் தெரியும். சில இடங்கள் மேகமூட்டத்துடன் தெரியும்; சில இடங்கள் முழுவதுமாக பனி மறைத்து, ஏதோ பஞ்சு பொதி போல தெரியும்.

சான் பிரான்சிஸ்கோவின் பருவநிலை ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொருவிதமாக இருக்கும். ஒரு தெருவில் வெய்யில் அடிக்கும். அடுத்த தெருவில், மூடுபனியால் எதிரில் வருபவரைக் கூட பார்க்க முடியாது. இடத்திற்கு இடம் மட்டுமல்ல; நேரத்திற்கு நேரம், நொடிக்கு நொடி மாறக்கூடியது. சான் பிரான்சிஸ்கோவின் மூடுபனி கார்ல் (Karl) எனப்படுகிறது. 70 டிகிரி வெப்பநிலையை விட மிக அரிதாகவே உயரும். அதனால் எப்போதும் குளிர் தாங்கும் உடைகள் போட்டு செல்வது நல்லது.

சட்டென்று மாறுது வானிலை என்ற வரி இந்த ஊருக்கு மிகவும் பொருத்தம். சொல்லப் பொன்னால், அந்த பாடல் சான் பிரான்சிஸ்கோவில் தான் படமாக்கப் பட்டுள்ளது. ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தின் இடைவேளை பகுதியும் கோல்டன் கேட்டில் தான் படமாக்கப் பட்டுள்ளது. 

இவை ஒரே நாளில் அரை மணிநேரத்திற்குள் எடுத்த புகைப்படங்கள். இவற்றின் மூலம்  வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றில் தெரிகின்றன. 

போர்ட் பேக்கர் பகுதியில், பொழுதுபோக்காக மீன் பிடிப்பவர்கள் பலரைப் பார்க்கலாம். கடைகளில் இருந்து கோழி கறி வாங்கி வந்து அதை தூண்டிலில் வைத்து மீன் பிடிக்கிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் இறைச்சியைப் பார்த்தால், அதுவே பெரிய தொகைக்கு வாங்கியது போல இருக்கும். அதில் எவ்வளவு மீன் பிடிப்பார்கள் என தெரியாது. ஆனால்,நாற்காலி, உணவு என அனைத்தும் கொண்டு வந்து காலை முதல் மாலை வரை அங்கு தங்கள் பொழுதைப் போக்குகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் நண்டு பிடித்து தான் நான் பார்த்திருக்கிறேன். சிலர் அதை அங்கேயே உடைத்து சாப்பிடவும் செய்கிறார்கள். வேகவைப்பதற்கு வெந்நீர் எதுவும் கொண்டு வருகிறார்களா அல்லது பச்சையாக சாப்பிடுகிறீர்களா என தெரியவில்லை. 

அருகில் கப்பற்படை படகுகள் எப்போதும் நிற்கின்றன. தங்களது கார், வேன்களில் சிறு படகுகளை வைத்து, இழுத்து வருபவர்கள் தங்கள் படகுகளை தங்கள் வாகனங்களில் இருந்து கடலினுள் விடுவதற்கு, சாய்வு மேடை ஒன்றும் உள்ளது. அதனால் பலர், படகுகளை கடலினுள் கொண்டு வந்து விடுவதைப் பார்க்கலாம். கடல் சிங்கங்களைக் காணலாம்.

பொதுவாகவே லவ் லாக் என்னும் வழக்கம் நீர்நிலைகளின் அருகில் உண்டு. இங்கும் அது உள்ளது. மக்கள், குறிப்பாக ஜோடிகள், தண்ணீர் அருகில் இருக்கும் வேலி போன்ற இடங்களில், பெயர்களின் முதலெழுத்து, தேதி போன்றவை பொறிக்கப்பட்ட பூட்டை வாங்கி அந்த வேலி கம்பியில் பூட்டி விட்டு சாவியை நீர்நிலைக்குள் தூக்கி எறியும் வழக்கம் லவ் லாக் எனப்படுகிறது. 

================================

சுற்றுவோம்…

தொடரின் முந்தைய பகுதியை இங்கு வாசிக்கலாம்:

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.