நேற்று காலை சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சேகர் என்பவர், பக்கத்து வீட்டுப் பெண்களை ஆபாச வீடியோக்கள் எடுத்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். தன் ஸ்மார்ட் போன் மூலமாக அக்கம்பக்கத்து பெண்கள் கோலமிடும்போதும், குளித்து உடைமாற்றும்போதும் அதை வீடியோ எடுக்கும் வழக்கம் அவரிடம் இருந்துள்ளது. இதைக் கண்டுபிடித்துவிட்ட பக்கத்துவீட்டுப் பெண் ஒருவர் சேகரின் மனைவியிடம் முறையிட, கணவரின் செல்போனை சோதித்த மனைவிக்கு அதிர்ச்சி. பல பெண்களின் வீடியோக்கள் அதில் இருந்தன.

மற்ற பெண்களாக இருந்தால், இதை மூடிமறைத்திருக்கக் கூடும். ஆனால் இந்தப் பெண்மணியோ நெஞ்சுரம் கொண்டவர். தன் கணவரை காவல்நிலையத்தில் அவரே ஒப்படைத்தார்.

சம்பத்ராஜ், படம் நன்றி: bbc.com

இதே போல 2018ம் ஆண்டு ரகசிய காமிராக்கள் பொருத்தி பெண்கள் விடுதி ஒன்றில் வசித்த இளம்பெண்களைப் படமெடுத்த காரணத்துக்காக சம்பத்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். ரகசிய காமிராக்கள் பொருத்துமளவுக்கு வசதி இல்லை என்றாலும், கையிலிருக்கும் ஸ்மார்ட் போனிலாவது அன்றாடம் சந்திக்கும் பெண்களைப் படமெடுக்கும் வக்கிரம் ஆண் மனதில் குடிகொண்டிருக்கிறது.

ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளை படமெடுப்பதோ, வீடியோ எடுப்பதோ சட்டப்படி குற்றம் என்ற புரிதல் இங்கு பலருக்கு இல்லை. குறைந்தபட்சம் அது அறமல்ல என்ற அறிவையாவது ஆண்களுக்குத் தரவேண்டிய சூழலில் இருக்கிறோம். அந்த வகையில் சேகரின் மனைவியின் செய்கை பாராட்டுக்குரியது. சம்பத்ராஜ் விஷயத்தில் விடுதியில் ரகசிய காமிராக்கள் இருந்ததைக் கண்டுபிடித்த கல்லூரி விரிவுரையாளர் ஒருவர், சம்பத் அவரை ரகசியமாக எடுத்த வீடியோக்களை வெளியிடுவேன் என்று மிரட்டியதையும் புறந்தள்ளி, காவல்துறையில் புகார் அளித்தார்.

சேகரின் மனைவி, விரிவுரையாளர் போன்றோர் கொண்டுள்ள மன உறுதியைப் பாராட்டும் அதே வேளையில், ஆண்களின் இந்த வக்கிரத்துக்குக் காரணம் என்ன என்பதையும் நாம் ஆராய வேண்டும். பாலியல் வக்கிரங்களைத் தீர்த்துக்கொள்ள ஆயிரக்கணக்கான வலைதளங்கள் இருக்கும்போது, அன்றாடம் காணும் பெண்களிடம் இவ்வாறு செய்யத் துணிவதற்கு என்ன காரணங்கள் இருக்கமுடியும்?

இந்திய ஆண்களை வாட்டும் பாலியல் வறட்சியை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றில், பெண்களைவிட ஆண்களுக்கே இந்த ‘வாயரிசம்’ (அயலாரை பாலியல் இச்சையுடன் படமெடுப்பது, பார்ப்பது) அதிகமாக உள்ளது நிரூபணமாகியுள்ளது. இதற்குத் தக்க சீர்திருத்த நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவேண்டும். ‘வாயரிசம்’ ஒருவித மனப்பிறழ்வே. அதற்கு தகுந்த சிகிச்சை, ஆலோசனை வழங்கப்படவேண்டும். இவ்வாறான செய்கைகளை சிறாரிடம் காண நேர்ந்தால், அங்கேயே அப்போதே அழைத்துப் பேசுவது நல்லது. சம்பந்தப்பட்ட குடும்பங்களிடம் பேசி அவர்களுக்கு மனநல உதவி தேவைப்படுவதைப் புரியவைப்பதும் அவசியம்.

18 வயதுக்கு மேல் இவ்வாறான செய்கைகளில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் என்பதை சிறுவயது முதலே சொல்லித்தருதல் அவசியம். எல்லாவற்றையும் விட முக்கியம், பாலியல் கல்வியை இளம் சிறாருக்கு குடும்பம் தருவதே. அரசு அதை பள்ளிகள் மூலம் முன்னெடுக்காத நிலையில், இரு பாலினருக்கும் எதிர் பாலினத்தின் உடல் ‘நார்மலானது’, அதில் எட்டிப் பார்க்கவோ, படம் எடுக்கவோ, குதூகலிக்கவோ ஏதுமில்லை என்பதை குடும்பங்கள் குழந்தைகளுக்குப் புரியவைப்பது அவசியமாகிறது.

இது போன்ற ‘ஆவல்’- urge ஏற்பட்டால், பெரியோர் தகுந்த மனநல உதவி, ஆலோசனை பெறுவதில் தவறில்லை, அது அவசியம். பெரியோர் இவ்வாறான தவறிழைக்கும் பட்சத்தில், கணவர் என்றோ, தந்தை என்றோ பாராமல், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துதல் பெண்ணின் அறம், சமூகப் பொறுப்பும் கூட…