பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் வெளியிட்ட புதிய பணி நியமன சுற்றறிக்கை சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. மூன்று மாத கர்ப்பத்துக்கு மேற்பட்ட பெண் வங்கிப் பணியில் புதிதாக சேரும் சூழல் ஏற்பட்டால், அவர் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் கழித்தே வங்கிப்பணியில் சேரமுடியும் என வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கை ஆணாதிக்கத்தின் நீட்சியன்றி வேறில்லை.

அடிப்படையில் இது பெண்ணின் பிள்ளைப்பேறு உரிமைக்கு எதிரானது. இந்த சுற்றறிக்கை பணியா, பிள்ளைப்பேறா என வீடும் சமூகமும் பெண்ணை கேள்விக்கு உட்படுத்துவதற்கு சற்றும் சளைத்தது இல்லை. இதை நாட்டின் உயர்ந்த வங்கி ஒன்றே கேட்பதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. பொதுவாகவே பெண்கள் செய்யும் பணி இங்கே தொடர்ச்சியாக கிண்டலுக்கும், கேலிக்கும், கூராய்வுக்கும் உட்படுத்தப்படுகிறது.

“உனக்கென்னம்மா? புள்ளை பொறந்தா ஆறு மாசம் எம்.எல்…அதுக்கப்புறமும் ‘லாஸ் ஆஃப் பே’, எப்போ எவ்வளவு நாள் வேணாலும் வாங்கிக்கிற ‘சைல்டு கேர் லீவ்’..ஒரே ஜாலிதான்”, என்ற கிண்டலை வேலைக்கு செல்லும் எல்லா பெண்களும் எதிர்கொள்கிறார்கள்.

உடலியல் கூறு ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறானது என்ற அடிப்படை தெளிவு கூட அடுத்த வீட்டுப் பெண்களை இவ்வாறு நையாண்டி பேசும்போது ஆணுக்கு இருப்பதில்லை. “ஐயோ இவளுக்கு லீவ் இருக்கிறதே…பிள்ளை பெறப் போனால் அவள் சீட் வேலையையும் நாம் சேர்த்து பார்க்கவேண்டுமே ” என நடைமுறை சிக்கலை முன்வைத்தாலும், ஆணுக்குள் இருக்கும் போட்டியும் பொறாமையும் தான் அவனை இவ்வாறு சிந்திக்கவும், பேசவும் வைக்கிறது என்பதை ஆண்கள் உணரவேண்டும்.

இப்படி சிந்திக்கிற ஆண்தான், அலுவலக நேரத்தில் மணிக்கணக்காக கூட்டு சேர்ந்து டீ குடிக்கச் செல்பவன். பொதுமக்களை சந்திக்கும் ஃப்ரன்ட் ஆஃபிஸ் பணிகளில் உள்ளவர்கள் இவ்வாறு செல்லும்போது, அக்கம்பக்கத்து மேசைகளில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக அப்படி எழுந்து செல்லாத பெண்களுக்கு எவ்வளவு பெரிய சிக்கல் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. யார் எவ்வளவு வேலை செய்கிறார்கள் என்பதை விரும்பியோ விரும்பாமலோ தொடர்ச்சியாக நாம் எடைபோட்டுக்கொண்டே இருக்கிறோம்.

‘Productive work’ – யார் எவ்வளவு செய்கிறார்கள் என கணக்கிட்டுப் பார்த்தால், ஆண்களை விட பெண்களே அதிகம் வேலை செய்வதாக 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஹைவ் ரிப்போர்ட் சொல்கிறது.

ஆண்களை விட பெண்கள் அதிகம் வேலை செய்வதாகவும், ஆணை விட 10% வேலை பெண்ணுக்கு அதிகம் வழங்கப்படுவதாகவும் இந்த அறிக்கை சொல்கிறது. அப்படியெனில் யாரின் இருப்பு இங்கே யாருக்கு சிக்கலாகிறது? எந்த சூழலிலும் பிழைப்பா, பிள்ளையா என்ற கேள்வியை ஒர் பண்பட்ட சமூகம் பெண்ணுக்கு முன்வைக்காது.

சில பெண்கள் பிள்ளையே முக்கியம் எனத் தேர்வு செய்யும் ‘பிரிவிலேஜ்’ பெற்றவர்கள் என்றாலும், பலருக்கு அந்த வசதி வாய்ப்பு அமைவதில்லை. கர்ப்பமாக இருப்பதால் பெண்ணுக்கு சமூகத்தின் ஆணாதிக்க மனப்பாங்கு தரும் நூதன தண்டனையாகத்தான் இந்த சுற்றறிக்கையைப் புரிந்துகொள்ள முடிகிறதே அன்றி, பெண்ணின் மேல் சக உயிர் என்ற கனிவு (compassion) கொண்ட சமூகத்தின் செயலாக்கம் இதுவல்ல.

அப்டேட்: தற்காலிகமாக இந்த ஆணை நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக ஸ்டேட் வங்கி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.