பரிணாம வளர்ச்சி என்பது இனப்பெருக்கத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கானது என்ற தர்க்கத்தை மட்டும் வைத்துப் பார்த்தால், பரிணாமப் படிநிலையில் இவைதான் மிகவும் முன்னேறிய இனமாக இருக்கவேண்டும். ஆனால் பூச்சி இனங்களிலேயே மிகவும் பழமையான வரலாறு கொண்டது இந்த இனம் தான்.

இதன் பெயர் இருசிறகி. May fly என்ற இதன் ஆங்கிலப் பெயர், மேஃப்ளவர் என்ற மலரின் பெயரைஅடிப்படையாகக் கொண்டது. இந்த பூ பூத்துக் குலுங்கும் பருவகாலத்தில் இந்தப் பூச்சிகளும் முட்டையிலிருந்து வெளிவருவதால் வந்த காரணப்பெயர் இது. இந்தப் பூச்சிகளின் கிரேக்கப் பெயருக்கு “மிகக்குறைந்த காலம் மட்டுமே வாழும் சிறகுள்ள பூச்சி இனம்” என்று பெயர். 100 மில்லியன் ஆண்டுகள் பழமை கொண்ட இந்தப் பூச்சிகளில் 3000க்கும் மேற்பட்ட தனி இனங்கள் உண்டு. கிட்டத்தட்ட அவை எல்லாமே பண்டைய பூச்சி இனங்களைப் போல நீண்ட வாலும் முழுமையாக மடிக்க முடியாத சிறகுகளும் கொண்டவை.

100 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மே ஃப்ளை புதைபடிமம்

இந்தப் பூச்சி இனத்தின் இன்னொரு சிறப்பம்சம் இதன் வாழ்க்கை சுழற்சி முறை. பொதுவாக, பூச்சி இனங்களில், முட்டையிலிருந்து வரும் லார்வாக்கள் புழுவைப் போல இருப்பதும், வளர்ச்சியடையும்போது உடலில் சிறகு கொண்ட பூச்சிகளாக அவை உருமாறுவதும் வழக்கம். நம் அனைவருக்கும் தெரிந்த பட்டாம்பூச்சி முதல் பல பூச்சி இனங்களில் இதுதான் பொதுவான சுழற்சி முறை. ஆனால் இந்த இருசிறகிகளில், லார்வாவிலிருந்து வரும் பூச்சிக்கு சிறகுகள் இருந்தாலும், அதுவே இறுதி வளர்ச்சி நிலை கிடையாது, அது “அணங்கு” என்று அழைக்கப்படும் ஒரு நிலை. மனிதர்களில் பதின்பருவத்தினர் என்று சொல்வோம் இல்லையா, அதைப் போன்ற டீனேஜ் பருவம் இது.

இந்தப் பூச்சிகளின் முட்டைகள் பொரிந்து லார்வாக்கள் வெளியில் வர, தட்பவெப்ப சூழ்நிலையைப் பொறுத்து சில வாரங்கள் முதல் ஒரு ஆண்டு வரை கூட ஆகலாமாம். அது இனத்துக்கு இனம் மாறுபடுகிறது. வெளிவருகின்ற லார்வாக்களும் அணங்குகளும் இனத்துக்கு ஏற்ப, பாசிகள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றைத் தின்று நல்ல போஷாக்குடன் தங்களை வளர்த்துக்கொள்கின்றன. சில இனங்களில் உடலின் மேற்பகுதி உரிந்து விழுந்து மீண்டும் வளர்ந்து, 50 சுழற்சிகள் முடிந்தபிறகுதான் முழு வளர்ச்சி கிடைக்குமாம்.

அணங்கு

இனப்பெருக்கத்திற்கான கருமுட்டைகளும் உயிரணுக்களும் தயாரானபின்பு, இந்தப் பூச்சிகள் அணங்குப்பருவத்திலிருந்து உருமாறி முழு வளர்ச்சி நிலையை எட்டுகின்றன. இப்போதுதான் சுவாரஸ்யம் கூடுகிறது.

வளர்ந்த நிலையில் இந்தப் பூச்சிகளுக்கு வாய் என்ற அமைப்போ, முழுமையான உணவுப்பாதையோ கிடையாது! சாப்பிடுவது, உடலுக்குப் போஷாக்கு தேடுவது போன்ற “அவசியமில்லாத” வேலைகளில் வளர்ந்த இருசிறகிகள் ஈடுபடுவதில்லை. சாப்பிடாத பூச்சிகளுக்கு வாய் எதற்கு என்று இயற்கையும் அந்த உறுப்புக்களின் வளர்ச்சியைக் குறைத்துவிடுகிறது போல!

சாப்பிடாமலேயே எப்படி ஜீவிப்பது? உயிரைப் பாதுகாத்துக்கொண்டு நீண்டநாள் வாழ உணவு தேவையில்லையா?

“நீண்டநாள் வாழ்ந்தால்தானே, வளர்ந்த மேஃப்ளை பூச்சிகள் ஒரு நாள் மட்டுமே உயிர்வாழ்கின்றன” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சில பூச்சி இனங்கள் அந்த ஒருநாள் பொழுதைக் கூட முழுவதுமாக வாழ்வதில்லை, சில மணிநேரங்களில் வேலை முடிந்துவிட்டால் உடனே இறந்துவிடுகின்றன.

அப்படியென்ன வேலை?

இனப்பெருக்கம்தான்.

அணங்கு நிலையிலிருந்து முழுவதுமாக வளர்ந்து பறக்கத்தொடங்கும் பூச்சிகளுக்கு இருக்கும் ஒரே நோக்கம் இனப்பெருக்கம் செய்வது. ஆண் பூச்சிகளும் பெண் பூச்சிகளும் காற்றிலேயே இணை சேர்கின்றன. பெண் பூச்சிகள் நீர்நிலைகளில் முட்டையிட்டுவிட்டு அசதியில் அப்படியே நீரில் விழுந்து மீன்களுக்கு இணையாகின்றன. ஆண்பூச்சிகள் நிலத்தில் விழுந்து இறந்துவிடுகின்றன!

வளர்ந்த நிலையில் ஒரு நாள் மட்டுமே வாழ்ந்து, உணவு கூட உண்ணாமல், இனப்பெருக்கம் செய்துவிட்டு இவை உயிரை விடுகின்றன. இனப்பெருக்கத்திற்குத் தயாராகும்போது அணங்குகளிலிருந்து முழுவளர்ச்சி அடைந்த பூச்சிகள் தோன்றுகின்றன, இனப்பெருக்கம் முடிந்த அடுத்த நொடி இறந்துவிடுகின்றன. ஒரு நாள் அல்லது சில மணி நேரங்கள் மட்டும் வாழ்ந்து தங்கள் மரபணுக்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்திவிடுகின்றன!

மே ஃப்ளையின் ஒரு நாள் வாழ்க்கையை இந்த காணொலிக் காட்சியில் காணலாம்.

சில பெண் மேஃப்ளை பூச்சிகளில், நேரடியாகவே கருமுட்டைகளிலிருந்து கருவுற்ற முட்டைகள் உருவாகும் வசதியும் இருக்கிறது! இவை பண்டைய இனங்கள் என்பதால் இந்த அம்சத்தின் பயன்பாடு என்ன, அதன் தாக்கம் எப்படிப்பட்டது என்பதையெல்லாம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். டீனேஜ் பருவத்தில் இருக்கும் வரை நன்றாக சாப்பிட்டு உடலைத் தேற்றிக்கொண்டு, இனப்பெருக்க வயது வந்தபிறகு உணவு தேடக்கூட தேவையின்றி இனப்பெருக்கத்தில் இறங்கி, அந்த வேலை முடிந்தபின்பு வாழ்நாளையே முடித்துக்கொள்ளும் இந்த சுழற்சி முறையில் பல பயன்கள் இருந்திருக்கலாம், ஆனால் பரிணாமத்தில் அது எங்கேயோ சொதப்பியிருக்கவேண்டும், அதனால் அதன் தொடர்ச்சி இப்போதைய உயிரிகளில் இல்லாமல் இந்த அம்சத்தின் சங்கிலி அப்படியே அறுந்திருக்கிறது. இது ஏன் நிகழ்ந்தது என்பதைப் பற்றியும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். வேறு சில விஞ்ஞானிகளோ, இது ஒரு தற்செயலான, தோல்வியுற்ற நிகழ்வாகக் கூட இருக்கலாம், அதனால்தான் இது அடுத்தடுத்த இனங்களிலும் தொடரவில்லை என்கிறார்கள்.

“தினசரிப் பத்திரிக்கைகளும் இந்தப் பூச்சிகளும் ஒன்று, இவற்றின் முக்கியத்துவமெல்லாம் ஒரு நாளைக்குத்தான்” என்பதுபோல ஒரு ஆங்கிலக்கவிஞர் எழுதினாராம். நொடிக்கொருமுறை புதிய செய்திகளை நுகரும் நம் உலகில் அவர் என்ன எழுதியிருப்பார் என்பதை நினைக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

ஒரு வகையில் பார்த்தால், ஓம்புயிரி (Host) செல்களுக்கு வெளியில், உயிர்வாழவே முடியாத வைரஸ் போன்ற உயிரிகளும் இனப்பெருக்கத்தை நோக்கியே தங்கள் மொத்த வாழ்நாளையும் வடிவமைத்திருக்கின்றன என்று சொல்லலாம். ஆனால் வைரஸ் போன்றவை பரிணாமப் படிநிலையில் கீழே இருக்கின்ற, பிரதியெடுத்து இனப்பெருக்கம் செய்கிற உயிரிகள். ஆனால் ஆண் – பெண் என்ற பால் பகுப்பு கொண்ட, பரிணாம வளர்ச்சி கொண்ட பூச்சிகளிலும் இந்த அம்சம் இருப்பது நிச்சயம் வியப்புக்குரியதுதான்.

“ஒரு ஆண் சிங்கத்தின் தலைமையில் பல பெண் சிங்கங்கள் வசிப்பது” என்பதுபோன்ற சமூக அமைப்புகள் கொண்ட விலங்குகளைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஒரே ஒரு பெண் விலங்கின் இனப்பெருக்கத்திற்காகப் பல ஆண் விலங்குகள் சமூகமாக வாழ்வது இயற்கையில் நடக்குமா? அந்த விலங்குகளின் சமூகம் எப்படிப்பட்டது? அதன் பயன்கள் என்ன?

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதியை வாசிக்க:

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.