பேரரசப் பென்குயின்களில், இரண்டு பெற்றோருமே குஞ்சுகளைப் பேணிக் காக்கின்றன. கடற்குதிரை இனத்திலோ ஆண்குதிரைதான் குஞ்சுகளையே சுமந்து பிரசவிக்கிறது. தன் குட்டிகளையே பசிக்குச் சாப்பிடும் தந்தைகளும் விலங்குகளின் உலகில் உண்டு. இன்னொருபுறம் தாய் விலங்கையும் மீறி சில அப்பா விலங்குகள் கூடுதல் பங்களிப்பு தந்து குழந்தைகளை வளர்க்கின்றன. இது பரிணாம ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த பண்பு என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பேரரசப் பென்குயின்

பொன்னிற டமாரின் (Golden Tamarin) என்ற ஒருவகைக் குரங்கினம், பிரேசில் நாட்டைப் பூர்வீகமாகக்கொண்டது. இந்த விலங்கினத்தில் குட்டிகள் பிறந்து வளரும்போது இரண்டு அல்லது மூன்று மணிநேரத்துக்கு ஒருமுறை பாலூட்ட வேண்டியிருக்குமாம். பிரசவித்த தாய் அயர்ந்துபோய்விடக் கூடாது என்பதற்காக, குட்டிக்குப் பசி எடுக்கும்போதெல்லாம் குட்டியைத் தூக்கிக்கொண்டு அம்மாவிடம் வந்து, தாய்விலங்கு 15 நிமிடங்கள் பாலூட்டும் வரை காத்திருந்து குட்டியை மீண்டும் அப்பாக்கள் தூக்கிச் செல்கின்றன. இது நான்கு வாரங்கள் வரை நீடிக்கிறது. குட்டி திட உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியதும் வாழைப்பழத்தை உரித்து மசித்து குட்டிக்கு ஊட்டுவதும் அப்பா குரங்குதான்!

பொன்னிற டமாரின்

பூநாரைகள் (செங்கால் நாரை / Flamingo) ஆயுள் முழுவதும் ஒரே இணையுடன் வாழும் பண்புகொண்டவை. இனப்பெருக்கத்திற்கு முன்பே பெண்ணுடன் இணக்கமாக இருக்கும் ஆண்பறவைகள், மண்ணால் கூடு கட்டுவதற்கான இடத்தைத் தேடவும் பெண்பறவைக்கு உதவுகின்றன. கூட்டுக்கான இடம் தேடுவது மட்டுமல்லாமல், கூடு கட்டும்போது உதவுவது, முட்டையை அடைகாத்து உதவுவது என குழந்தை வளர்ப்பில் ஆண் பூநாரைகள் சமபங்கு வகிக்கின்றன. பிறக்கப்போகும் பிள்ளைக்காகப் பெரிய வீட்டிற்குக் குடிபோகவேண்டி வீடு தேடி அலையும் தம்பதியினரின் சித்திரம் மனதுக்குள் விரிகிறதா?

பூநாரை
மார்மோசெட்

மார்மோசெட் (Marmoset) என்ற குரங்கினத்தில்தான் தந்தைமை உச்சத்தை எட்டுகிறது எனலாம். பெண்குரங்குகள், சராசரியாகத் தன் உடல் எடையில் கால்பங்கு இருக்கும் குட்டிகளைப் பெற்றெடுக்கின்றன. பெரும்பாலும் மார்மோசெட்டுகள் இரட்டையர்களையே பிரசவிக்கின்றன என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மார்மோசெட்டுகளின் இனப்பெருக்க சுழற்சியின்படி, இனப்பெருக்க காலத்தில் தாய்க்குரங்கு பிரசவித்த சில வாரங்களிலேயே அடுத்த பிரசவத்திற்குத் தயாராக வேண்டும் என்பதால், குட்டியை வளர்க்கும் பொறுப்பு முழுவதுமாக ஆண்குரங்குக்குத்தான். குட்டியை வளர்க்கும் காலத்தில் வேறு பெண்விலங்கை அது நாடிவிடக்கூடாது என்பதற்காக, இணைசேரும் விருப்பத்தைக் குறைக்கும் ஒரு ஹார்மோனும் ஆண்குரங்கின் உடலுக்குள் சுரக்கிறது!

குழந்தையை அங்குமிங்கும் தூக்கிச் செல்வது, உணவளிப்பது, உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை நீக்குவது, குட்டியுடன் விளையாடுவது என்று எல்லாவற்றையும் ஆண்குரங்கு கவனித்துக்கொள்கிறது. ’விளையாடுவது’ என்ற பொறுப்பை சாதாரணமாக எடைபோட்டுவிட முடியாது. குட்டி பிற்காலத்தில் பிழைக்கத் தேவையான எல்லாமே விளையாட்டு மூலமாகத்தான் கற்றுத்தரப்படுகிறது. குழந்தை வளர்ப்பில் கவனமாக இருக்கும் ஆண்குரங்குகளுக்குப் பிறந்த குட்டிகளின் வளர்ச்சி, பிற குட்டிகளை விட 40% அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வளர்ப்புக் காலத்தில் குட்டியின் அழுகுரல் அல்லது அபாயக்குரல் கேட்கும்போது ஆண் மார்மோசெட்டுகளின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அதிகரித்து, அவை உடனே குட்டிகளை நோக்கி ஓடிவந்து அவற்றைப் பாதுகாக்கின்றன என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். மனித ஆண்களுக்கும் குழந்தையின் அழுகுரல் கேட்டால் டெஸ்டாஸ்டிரோன் அதிகரிக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. தன் குட்டி மட்டுமல்லாமல், பொதுவாகக் கூட்டத்தில் இருக்கும் பிற குட்டிகளையும் ஆண் மார்மோசெட்டுகள் கவனித்துக்கொள்கின்றனவாம்.

ரேசர்பில்

ரேசர்பில் (Razorbill) என்ற ஒருவகை அட்லாண்டிக் கடற்பறவை இனத்தில் குஞ்சுகளுக்கு ஆரம்பகட்டத்தில் உணவூட்டும் பொறுப்பு ஆண்/பெண் இரு பறவைகளுக்கும் உண்டு. ஆனால், தானாக வேட்டையாடும் வயதை எட்டியவுடன், குஞ்சுக்குப் பயிற்சியளிப்பது ஆண் பறவை மட்டுமே. வளர்ந்த குஞ்சுகளைக் கடலுக்குள் கூட்டிச்செல்லும் தந்தைப்பறவை, 100 அடிவரை டைவ் அடித்து எப்படி மூச்சைப் பிடித்து நீந்துவது, மீன்களை எப்படி வேட்டையாடுவது, பிற பெரிய வேட்டையாடிகளிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று எல்லாவற்றையும் குஞ்சுக்குச் சொல்லித்தரும். அது மட்டுமல்ல, தனது குஞ்சுப்பறவையின் குரலைப் பெருங்கூட்டத்திலும் தந்தையால் அடையாளம் காணமுடியும். குஞ்சுப்பறவையும் தந்தையின் குரலைச் சரியாக அடையாளம் கண்டுகொள்ளும். இது எல்லா விலங்குகளிடமும் உள்ள பண்புதானே என்பவர்களுக்கு – இந்தப் பிணைப்பு தந்தைக்கும் குஞ்சுப்பறவைக்கும் மட்டுமே உரித்தானது! தாய்ப்பறவையால் தன் குஞ்சுகளின் குரலை அடையாளம் காண முடியாது!

நெருப்புக்கோழி

நெருப்புக்கோழிகளில் (Ostrich) முட்டைகளை இரவுநேரம் அடைகாப்பது ஆண் பறவைகள்தாம். இனப்பெருக்க காலத்தில் ஆண்பறவைகளின் இறகுகள் கூடுதலான கறுப்பு நிறத்தில் மறைந்துகொள்ள ஏதுவானதாக இருக்கும். ரியா (Rhea) என்று ஒரு பறவை உண்டு. நெருப்புக்கோழியைப் போலவே அதனாலும் பறக்க முடியாது. இந்த இனத்தில் பல பெண்கள் இருக்கும் குடும்பத்தில் ஒரே ஓர் ஆண்பறவைதான் இருக்கும். கிட்டத்தட்ட அத்தனை பறவைகளும் இட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட முட்டைகளை 40 நாட்கள் ஆண்பறவை மட்டுமே அடைகாக்கிறது! அடைகாக்கும்போது பிற வேட்டையாடிகள் மட்டுமல்லாமல் பெண்பறவைகள் அருகில் வந்தாலும் விரட்டிவிடும் ஆண்பறவை, குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றைத் தானே வளர்த்தெடுக்கிறது. பறக்க முடியாத பறவை இனங்களில் குழந்தை வளர்ப்பின்போது ஆண்பறவைகளின் பங்களிப்பு கொஞ்சம் கூடுதலாக இருப்பதால், அதற்கான காரணங்களை அறிந்துகொள்ள ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

ரியா

குழந்தை வளர்ப்பு என்பது தாய்க்கு மட்டுமே உரிய பொறுப்பு அல்ல, இந்தச் சில இனங்களை மட்டும் வைத்து அது தந்தையின் தனிப்பட்ட பொறுப்பு என்றும் சொல்லிவிட முடியாது. அது விலங்குகளின் இனம், இனப்பெருக்க முறை, குட்டிகள்/குஞ்சுகள் வரும்போது எந்த அளவுக்குப் பெற்றோரை சார்ந்து இருக்கின்றன, அந்த விலங்குகளின் சமூக அமைப்பு போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. மனிதர்களின் குழந்தை வளர்ப்பு முறைகளையும் பங்களிப்புகளையும் கட்டமைப்பதில் நமது சமூகம் ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக மற்ற விலங்குகளைப் போலல்லாமல் மனிதக் குழந்தை நடக்க முடியாமல், தானாக உண்ணத் தெரியாமல், பேசத் தெரியாமல் பிறரைச் சார்ந்து இருந்தால் மட்டுமே பிழைக்கமுடியும் என்ற நிலையில்தான் பிறக்கிறது. தாயும் தந்தையும் மட்டுமல்லாமல் எல்லாருமாகச் சேர்ந்துதான் மனிதக்குழந்தையை வளர்த்தெடுக்கவேண்டியிருக்கிறது. ’ஒரு குழந்தையை வளர்க்க ஓர் ஊரே கூடி வரவேண்டும்’ (It takes a village to raise a child) என்ற பழமொழியின் அறிவியல் பின்னணி இதுதான்.

இனப்பெருக்கம் என்பது உயிரினங்களுக்கு முக்கியம் என்பது தெரியும். ஆனால் இனப்பெருக்கத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட உயிரிகள் உண்டா?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.