திருமணம் என்ற சடங்கையும், குடும்பம் என்ற அமைப்பையும் இந்திய சமூகம் தூக்கிப்பிடித்தபடியே இருக்கிறது. அதன் மேலுள்ள தன் பிடியை இறுக்கிக் கொள்வதன் மூலம், பெண்ணை அடிமைப்படுத்துகிறது; விருப்பமில்லாத ஆணையும் பெண்ணையும் காலத்துக்கும் ஒரு அமைப்புக்குள் பூட்டியும் வைக்கிறது.

கணவன் வன்புணர்வு செய்ததால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வழக்கை தில்லி நீதிமன்றம் சமீபத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. கூடவே இவ்வழக்குடன் சம்பந்தப்பட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) உள்ளிட்ட அமைப்புகளின் மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. திருமண உறவில் வன்புணர்வை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் உத்தேசம் மத்திய அரசுக்கு உள்ளதா என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலாக, மத்திய அரசு இன்று புதிய அஃபிடவிட் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது சம்பந்தமாக 2017ம் ஆண்டு அஃபிடவிட் ஒன்றை மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அப்போது, இதை தண்டனைக்குரிய குற்றமாக்கினால் குடும்ப அமைப்பு சிதைந்து போகும் என்றும் அவ்வாறு அறிவிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் 478-ஏ (குடும்ப வன்முறையில் ஈடுபடுபவர்கள் பிணையில் வெளிவர முடியாத பிரிவின்கீழ் கைதுசெய்யப்படுதல்) ஆண்களுக்கு எதிரான ஆயுதமாக மாறியிருக்கிறது என அரசின் அஃபிடவிட் சுட்டுகிறது.

2012ம் ஆண்டு நடந்த நிர்பயா கொலைக்குப்பின் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஆலோசனைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட ஜே.எஸ். வர்மா கமிட்டி, திருமண உறவில் வன்புணர்வை தண்டைக்குரிய குற்றமாக அறிவிக்கவேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்தது. மத்திய அரசின் எதிர் நிலைப்பாட்டை சமீபத்தில் வெளிவந்துள்ள தனிநபர் உரிமைக்கு ஆதரவான தீர்ப்புகள் கேள்விக்கு உட்படுத்துகின்றன என சட்ட ஆலோசகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்திய தண்டனை சட்டம் 375, 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியை, கணவன் பாலியல் வன்புணர்வு செய்வது சட்டப்படி தண்டைக்குரியதல்ல எனச்சொல்கிறது. இந்தப் பிரிவுதான் தற்போது விவாதப்பொருளாகியுள்ளது. இதனை முன்னிட்டு ஆண்கள் #Marriagestrike என்ற ஹேஷ்டேகுடன், இனி திருமண உறவில் ஆண்களுக்கு பாதுகாப்பே இல்லை எனச் சொல்லி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பெண்ணின் மீது கட்டுப்பாடற்ற பாலியல் ஆதிக்கத்தை திருமண உறவு தருகிறது என்ற ஆணாதிக்க எண்ணமே இந்த எண்ணப்போக்குக்குக் காரணமாக அமைகிறது.

பெண் உடல் என்பது பெண்ணுடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டது, அதில் முழு உரிமையும் அவளுக்கே உண்டு என்பதை இன்னமும் நம் சமூகம் ஒப்புக்கொள்ள தயாராக இல்லை. திருமணம் என்ற லைசன்ஸ், வாழ்க்கை முழுக்க ஒரு பெண்ணுடன் பாலியல் உறவு கொள்ளத் தரப்படும் லைஃப் டைம் ஆஃபர் என்றே ஆண்கள் கருதுகின்றனர். அதில் பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதா என்ற அடிப்படை கேள்வியை என்றாவது ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களிடம் கேட்டது உண்டா?

2015-2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய குடும்ப நலன் சர்வேயில், 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பாலியல் வன்புணர்வுக்கு ஆளான மணமான பெண்கள் 83% பேர், தங்களை வன்புணர்வு செய்தது கணவன் எனவும் இன்னொரு 9% பேர் முன்னாள் கணவன் என்றும் பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில் ஆண்கள், ‘திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை’ என அறிவிப்பது பெண்களுக்கு பெரும் மகிழ்ச்சியே!

பெண்ணின் உடல் மேலான உரிமையை அவளிடமே தருவது திருமண அமைப்பு சீர்குலைந்து போகக் காரணமாக அமையும் என்றால், இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இங்கே திருமணங்கள் வெறும் பாலியல் இணக்கத்தால் மட்டுமே நிலைத்து நிற்கின்றனவா என்ற கேள்விக்கு சமூகம் பதில் சொல்லவேண்டும்.

மேரேஜ் ஸ்ட்ரைக் ஹேஷ்டேக் அன்பர்கள் தங்கள் போராட்டத்தை இனிதே தொடரலாம். பெண்களின் வாழ்க்கையாவது நிம்மதியாக இருக்கும்…