“பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!”, என அனைவரும் பொங்கலை வரவேற்க,  கூச்சலின் கனம் தாளாமல் வழக்கம்போல  பொங்கல் தெற்கே விழுந்தது.

“இந்த வருஷமுந்தெக்கையா?” என்றார் ராசாத்தியின் அப்புச்சி கருப்பணன்.
” அட எந்தப் பக்கம் விழுந்தாலும் நல்ல வுழுவரதுதா  முக்கியம். பொங்கலை நல்ல உழுவவச்சது பாரு  எஞ்சாமி”, என்று தலைக்கு மேல் கைகளை உயர்த்திக்கூப்பி சூரியனைப் பார்த்துக் கும்பிட்டார் வள்ளியம்மை.

வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, பச்சரிசி சேர்த்த பொங்கலை வாழையிலையில் வைத்து சாப்பிட்டுவிட்டு அதை வழித்துக் கைகளை நக்கிக் கொண்டிருந்ததை ராசாத்தியைப் பார்த்த சித்தப்பா பெரியசாமி, “பாத்து பாத்து கைய மிச்சம் வை ராசாத்தி”, என்றார் சிரித்தவாறே.

நன்றி: premmurugan.wordpress.com

“சித்தப்பா நாம போன வருஷம் தின்னது. இந்த பொங்கலே வருஷத்துல ஒரு தாட்டிதான கிடைக்குது. என்ன பண்றது அம்புட்டு ருசியா இருக்கு!” 

“அதுக்குன்னு  இப்படியா வயிறு முட்டத்திங்கறது?” 

“வயிறு முட்டெல்லாம்  திங்கல சித்தப்பா… இன்னும் பூப்பறிக்க போறப்ப குன்னாங்கல்லுல  கரும்பு, முறுக்கு, சீனிமிட்டாய் எல்லாம் சாப்பிடறதுக்கு வவுத்துல எடம் இருக்கு”, என்றவாறே கைகழுவச் சென்றாள்.

நான்கு மணிக்கு எல்லோரும் பூப்பறிக்கக் கிளம்பினார்கள். ராசாத்தி, அவள் அக்கா மலர் மற்றும்  சித்தியின் பிள்ளைகள் எல்லோரும்  ஓடி ஓடி தலை சீவவும், கோகுல் சேண்டல் பௌடரை உள்ளங்கைகளில் கொட்டி முகத்தில்  அப்பிக் கொள்வதுமாக இருந்தார்கள். அந்த நேரம் அங்கு வந்த பக்கத்து தோட்டத்து  வேலாயி அத்தை, “தே புள்ளைங்களா… என்னதான் வெள்ளப்பவுடரப்  போட்டு அப்பினாலும் இருக்கிற கலர்தானே இருக்கும். மத்தவங்க கூட தேவலை. ராசாத்தி மட்டும் கரேல்னு கருவண்டு மாதிரியே  இருக்காளே. பவுடர் போட்டா மட்டும் நீ செவப்பாயிடுவியா ராசாத்தி”, என்று கூறிவிட்டு நடவையைக் கடந்து சென்றார். அவர் என்னவோ  நடவையைக் கடந்து சென்றுவிட்டார். ஆனால் ராசாத்திக்கு அந்த வார்த்தை மனதைக் குத்தியது. 

காற்று போன சைக்கிள் டயர் போல ராசாத்தியின் குதூகலம், கொண்டாட்டம் அத்தனையும் வற்றிப் போனது. சுற்றியிருந்த அனைவரும் அவளையே பார்க்க ராசாத்தி எதுவும் பேசாமல் பவுடரையும் வழிந்த கண்ணீரையும் தனது பாவாடையில் ஒருசேர துடைத்துவிட்டு, யாரும் அறியாவண்ணம் தொண்டுப்பட்டியை நோக்கி ஓடினாள்.

தொண்டுப்பட்டியில் மாடுகளுக்கு தீவனம் போட்டுக் கொண்டிருந்த பாட்டி சின்னம்மா, “எந்தங்கமே எம்பவுனே… ராசாத்தி ஏன் என்னாச்சு?”, என்று கேட்டுக்கொண்டே ராசாத்தியின் அருகில் வந்தார். சின்னம்மா பாட்டி வள்ளியம்மையின் அம்மா. கணவனை இழந்தவள். வள்ளியம்மையோடு சேர்த்து அந்த வீட்டில் நான்கு பெண்கள்.

பெண்களின் வேண்டுகோளுக்கு இணங்கி தனது பூர்வீக வீடு, தோட்டம், காடு அனைத்தையும்  நான்குப் பெண்களுக்குமாகப் பிரித்து  எழுதிவைத்துவிட்டு, மாதம் ஒரு மகள் வீடு என்று இருந்துவருகிறார். ரவிக்கையின்றி  பின் கொசுவம் வைத்துக் கட்டிய வெள்ளை வெளேர் தும்பைப் பூ நிறச்சேலை. எத்தனை வேலை செய்தாலும் மேலே ஒரு துண்டைக் கட்டிக் கொள்வதால், ஒரு நாளும் தும்பைப்பூ நிறம் மாறியது இல்லை.

கரும்பலகை முழுக்க எழுதிய பின்னும் ஆங்காங்கே இருக்கும் கருப்பு வண்ணம் போன்றத் தலைமுடி; ஒரு பல் கூட விழாத வாய்; தெளிவான கண் பார்வை. 85 வயதிலும் கோழி, ஆட்டுக்கறி  எலும்புகளைக் கடக் மடக் என்று கடித்து விட்டு, “அடடா இந்த எலும்புலதா எத்தனை ஊனு”, என்று ரசித்து சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்.

இரண்டு கெண்டைக்  கால்களிலும் கைகளின் தோள்பட்டையில் இருந்து உள்ளங்கை வரையிலும் பச்சை குத்தி இருப்பார். “தேஞ்சாமி என்ன ஆச்சு? மூஞ்சி இத்தனையா சுருங்கிப் போச்சு தாரு  என்ன சொன்னாங்க?”, என்று பரிவோடு ராசாத்தியை வாரி அணைத்துக்கொண்டு கேட்டார்.
“பாட்டி நானு எப்படி இருக்கறே?”
“உனக்கு என்ன  நீ ராசாத்தி. சீமையவே ஆளப்பிறந்த மகராசி நீ”   
“போ பாட்டி நீ தான் இப்படிங்கிற. ஆனா தாருமே என்ன.. என்ன..”, என்று அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் பாட்டியின் மடியில்  விழுந்து தேம்பித் தேம்பி அழுதாள் ராசாத்தி.

“எம்பட அம்முக் குட்டி அழுவாத செல்லக்குட்டி” 
“பாட்டி நானு ஒண்ணு கேட்டா கோச்சுக்காம தருவியா?” என்றாள் ராசாத்தி வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே. 
“என்ன கேளு எம்பட ராசாத்திக்குக் கொடுக்காம யாருக்குக் கொடுக்கப் போறேன்?” 

“பாட்டி நீ வயசாகி செத்துப் போன பின்னாடி உன்னோட நெறத்த தாருக்காவது தரலாமுனு  சாமி சொன்னா, நீ எனக்குக் கொடுக்கோணும் என்ன சரியா?”

“அட எந்தங்கமே இப்பவே தர மாதிரி இருந்தாக்கூட தந்துடுவேனே  எம்பட வைரமே” என்று வாரி அணைத்துக்கொண்டார்.

“ஆனா ஒண்ணு, நெறமெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல. எல்லார் மேலயும் அன்பா இருக்கோணும். யார் வந்து எப்போ ஒதவி கேட்டாலும் தரோணும். நம்மகூட இருக்கிறவங்களுக்கு உண்மையா இருக்கோணும். சங்காம உழைக்கோணும். எந்த வேலையா இருந்தாலும் செஞ்சு பாத்தடோணும். வேலை செய்யாம பின்வாங்கப்படாது. எல்லாத்தையுமே சாமி உனக்கு தர்ற ஒரு வாய்ப்பாத்தாம் பார்க்கோணும். அறிவா பேசோணும். தெகிரியமா இருக்கோணும். கேள்வி கேட்க வேண்டிய எடத்தில கேள்வி கேட்கோணும். நேர்மையா இருக்கோணும்.”

“நீ வேணா பாரு ராசாத்தி நீ ஒரு நாளு ஒலகமே புகழுற அளவுக்கு பெரிய பேர் வாங்க போறே. அப்போ நான் உங்கூட இருப்பேனோ இல்லையோ…ஆனா, இந்தக் கெழவிய அப்ப நினைச்சுக்கோ. நெறமாமா நெறம்… எம்பட நெறத்த வச்சு எம் புருசனக்கூட முந்தானைல முடிஞ்சுக்க முடியலையே”, என்றார்  சிந்திய கண்ணீரை முந்தானையில் துடைத்தவாறே.

பாட்டியிடம் பேசினாலே தனக்கு ஏதோ உந்து சக்தியை வந்ததுபோல் உணரும் ராசாத்தி, அன்றும் தனது நிறம் குறித்த கவலையை மறந்து, பூப்பறிக்க பாட்டியின் கைகளைப் பற்றிக்  கிளம்பினாள். அம்மத்தா  வீட்டிலிருந்து மூன்று மைல் தூரம் அனைவரும் நடந்து பேசிக் கொண்டே செல்வார்கள். சின்னம்மா, வள்ளியம்மை, கருப்பண்ணன், வள்ளியம்மையின் 4 மகள்கள், மருமகன்கள் மூன்று பேர், பேரன் பேத்திகள் ஏழு பேர்,  மகன் மற்றும் வள்ளியம்மையின் தங்கை  சின்னக்காவின் மகன், மகள், பேரன் பேத்தி என்று 20க்கும் மேற்பட்டோர் பேசியபடியே குன்னாங்கல்லை நோக்கி நடந்தார்கள். வழியில்….

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்

சரிதா

கதைசொல்லி, சிறார் எழுத்தாளர், பண்பலைத் தொகுப்பாளர் Scan foundation India animal welfare அமைப்பின் தூதுவர். Skillware Founder இதன் வழியாக கதைசொல்லல் பயிற்சிகளும் வழங்கி வருகிறார். கருவுடன் கதையாடல் இந்த தலைப்பில் கர்ப்பிணி பெண்களுக்கு இணைய வழியாகக் கதைகளைக் கூறி வருகிறார்.