2011ம் ஆண்டு கருணைக்கொலை பற்றிய வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, அந்தத் தீர்ப்பை பிரபல உருதுக் கவிஞர் மிர்சா காலிபின் கவிதையுடன் தொடங்கினார்.

Marte hain aarzoo mein marne ki, maut aati hai par nahin aati” (சாவுக்காக ஏங்கியே ஒருவன் இறந்தாலும், மரணம் அவனைத் தீண்டலாம், தீண்டாமலும் போகலாம்) என்று காலிபை குறிப்பிட்டு எழுதினார். பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, அதன் காரணமாக சுயநினைவை இழந்து சில பத்தாண்டுகள் வாழ்ந்த அருணா ஷன்பக் என்ற செவிலியரை கருணைக் கொலை செய்யக் கோரிய வழக்கு அது. அவர் பணியாற்றிய மருத்துவமனையின் துப்புறவுத் தொழிலாளி ஒருவன், அருணாவை நாய் கட்டும் சங்கிலியால் கழுத்தை இறுக்கி, இயல்புமீறிய வல்லுறவு கொண்டதன் விளைவாக, அருணாவின் மூளை செயலிழந்துபோனது.

1973ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்குப் பிறகு, சுயநினைவே இல்லாத அருணாவை அவர் பணியாற்றிய கிங் எட்வர்டு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் பராமரித்துவந்தனர். 37 ஆண்டுகள் சுயநினைவற்றவரை, 2010ம் ஆண்டு கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி சமூக செயற்பாட்டாளர் பிங்கி விரானி தொடுத்த வழக்கில்தான் கட்ஜு இந்தப் பாடலை சுட்டி தீர்ப்பு வழங்கினார். அருணாவுக்கு கவுரவமான மரணம் மறுக்கப்பட்டது; 2015ம் ஆண்டு அவர் இறந்துபோனார்.

இப்படி பாடல்களை, கவிதைகளை சுட்டி வழக்குகளில் தீர்ப்பு வழங்குவது நமக்குப் புதிதல்ல. “பல வழக்குகளில் இலக்கியமும், வேதமும் சுட்டப்பட்டுள்ளன”, என சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜோதிலட்சுமி குறிப்பிடுகிறார். அதன் நீட்சியாக சமீப காலமாக வெளிவரும் தீர்ப்புகளில் திரைப்படங்களும், செய்தி சானல்களின் தாக்கமும் நீதிமன்ற ஆணைகளிலும், தீர்ப்புகளிலும் அதிகம் தென்படுகின்றன எனவும் அவர் குறிப்பிடுகிறார். அவரது கூற்று முக்கியமானது.

ஆயர் பிராங்கோ முலக்கல் பாலியல் வன்புணர்வு வழக்கில் தீர்ப்பளித்த கேரள செஷன்ஸ் நீதிமன்றம், மலையாள ரிப்போர்ட்டர் டிவி சானலின் ‘Close Encounter’ தொடரை நடத்திய செய்தியாளர் அபிலாஷ் மோகனனுக்கு 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தந்த பேட்டியின் ஒற்றை வரியை எடுத்துக்கொண்டு ஒரு சாட்சியை ‘குழப்பமான சாட்சி’ என்றது. ஊடகத்தின் தாக்கத்தை இந்தத் தீர்ப்பு உணர்த்தியது.

மிக்கேல்பட்டி மாணவி சந்தேக மரண வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை மாநில அரசின் காவல்துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்றியுள்ளது. அவ்வாறு மாற்றும்போது நவாசுதின் சிதிக்கி நடித்த ‘சீரியஸ் மென்’ திரைப்படத்தையும், கே.பாலச்சந்தரின் ‘கல்யாண அகதிகள்’ திரைப்படத்தையும் சுட்டியுள்ளது.

சீரியஸ் மென் படத்தில் அய்யன் மணி என்ற தலித் கதாபாத்திரத்துக்கும், பள்ளி முதல்வருக்கும் நடக்கும் உரையாடலை குறிப்பிடும் ஆணை, கிறிஸ்தவப் பள்ளியில் தலித் மாணவன் சேரவேண்டும் என்றால் அவன் மதம் மாறவேண்டும் என வலியுறுத்துவதைக் கோடிட்டுக் காட்டுகிறது. போலவே, கல்யாண அகதிகள் படத்தில், அம்முலு கதாபாத்திரம் மதம் மாறாத காரணத்தால் மணவாழ்க்கை தடைபட, ராபர்ட் என்ற காதலனை விட்டு விலகும் கதையையும் ஆணை சுட்டுகிறது.

இதற்கு வலுசேர்க்க, சோனலிகா கவுல் என்ற வரலாற்றாளர் தொலைக்காட்சியில் வந்த ‘சாணக்யா’ தொடர் தன்னை வரலாறு பக்கம் ஈர்த்ததாகக் குறிப்பிடுவதையும் சுட்டுகிறது. வரலாற்றாளருக்கு ‘இன்ஸ்பிரேஷனாக’ தொலைக்காட்சித் தொடர் இருக்கும்போது, ஏன் நீதிமன்றத் தீர்ப்பில் ‘பாப்புலர் கல்ச்சர்’ இடம்பெறக்கூடாது எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கு தீர்ப்புகள் புரியும்படி எழுத முயலுவதால் இவ்வாறு சினிமாக்கள், நாடகங்கள் சுட்டப்படுகின்றன எனவும் குறிப்பிடப்படுகிறது.

இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. நீதிமன்றத் தீர்ப்புகள் தொலைக்காட்சி வழக்காடுமன்றங்களின் தீர்ப்புகள் அல்ல. இவை பலரின் வாழ்க்கையை புரட்டிப்போடும் இயல்புடையவை. இங்கே உண்மை பேசவேண்டுமேயன்றி கதைகள் அல்ல.

இது இந்தியாவில் மட்டுமே நடக்கிறதா என்ன? அமெரிக்காவில் இவ்வாறு வழக்குகளில் தொலைக்காட்சி கலாச்சாரத்தை மேற்கோள் காட்டுவது 1980களில் தலையெடுக்கத் தொடங்கியது. இது குறித்து 2016ம் ஆண்டு வெளியாகியுள்ள டக்ளஸ் ஆப்ரம்ஸின் ஆய்வேடு ஒன்று, தீர்ப்புகள் ‘உண்மை எது, கதை எது’ ( Similar license and suspension enable viewers to enjoy television, yet enable judges to use television dramas and sitcoms to distinguish fiction from reality in the cases they decide) என்பதை பிரித்து மக்களுக்குப் புரியவைக்க தொலைக்காட்சி கலாச்சாரத்தை பயன்படுத்தலாம் எனச் சொல்கிறது.

சினிமா, தொலைக்காட்சி ஊடகங்களில் இயங்குபவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதை மீண்டும் இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது. கதையே ஆனாலும் வெறுப்பை விதைப்பது, அதையே அறுவடை செய்ய உதவும். இந்தத் தீர்ப்பு உண்மை எது, கதை எது என பிரித்தறியச் சொல்கிறதா என்ற கேள்வியும் இங்கே முன்வைக்கிறோம். பொறுப்புணர்ச்சி பொது சமூகத்துக்கு மட்டுமே உரித்தானதல்ல. இங்கே நாம் எல்லோரும் சமூகத்தின் ‘ஏஜெண்டுகள்’. அந்தப் பொறுப்புணர்வு நம் எல்லோருக்கும் இருத்தல் அவசியம்.