சொல்லப்படாத வரலாறு – 5

ஃப்ரீடா குளூக் ஷல்ஸ்

“சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவார்ந்த, சுறுசுறுப்பான இளம்பெண் ஒருவர் இத்தாலியிலிருந்து இங்கு வந்தார். அமெரிக்காவின் திரைப்படச் சந்தையை தனதாக்கிக்கொண்டார். ஆர்வத்துடன் இயங்குவது ஒருபுறம், தன்னைச் சுற்றி நடப்பதை கூர்ந்து கவனிப்பதுமாக இருந்தவர், வெகு விரைவில் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள உதவும் ஆற்றலான புத்திக் கூர்மையையும், பொறுமையையும் பெற்றுவிட்டார்”, என்று ஒரு பெண்ணைப் பாராட்டி செப்டம்பர் 25, 1915 அன்று ‘தி மூவிங் பிக்சர் வேர்ல்ட்’ இதழ் செய்தி வெளியிட்டது. அமெரிக்க திரைத்துறையின் பாராட்டைப் பெற்ற இந்த இளம் பெண், அங்கு செல்வதற்கு முன்பே, 1911ம் ஆண்டு தென்னிந்தியாவின் முதல்  திரையரங்கத்தை சென்னையில் தோற்றுவித்தார்!

ஆய்வாளரான ஸ்டீபன் புத்னம் ஹியூ, ‘பெரிய ஸ்டார்கள், பெரும் இயக்குனர்கள், பிளாக்பஸ்டர் படங்கள் போன்றவை குறித்த வரலாறு மட்டுமே இங்கு அதிகம் பதியப்பட்டுள்ளது. ஆனால் சினிமாவை தொடக்க காலத்தில் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் முக்கியப் பங்கு சினிமாக் காட்சிகளை நடத்திய ‘எக்சிபிஷன்களுக்கு’ உண்டு. அதை முழுக்க நம் ஆய்வுகள் மறந்தும் மறைத்தும் வந்துள்ளன’, என்று கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

அவ்வாறு நாம் மறந்து போனவர்களில் மிக முக்கியமானவர் மிசஸ். குளூக் (Mrs. Klug). மதராஸின் முதல் ‘நிரந்தர’ சினிமா அரங்கைத் தோற்றுவித்தவர் என்று குளூகை அறிமுகம் செய்யும் ஸ்டீபன், ஜார்ஜ் டவுன் பாப்பம்ஸ் பிராட்வே பகுதியில் 16ம் எண் கட்டிடத்தின் மாடியில் 1911ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதராஸின் முதல் திரையரங்கம் இயங்கத் தொடங்கியது என்று சொல்கிறார். குளூக் அதற்கு ‘பிராட்வே பயஸ்கோப்’ என்று பெயரிட்டிருந்தார்.

இந்த அரங்கு தற்காலிகமானது என்று சொல்லும் ஆய்வாளர்கள் உண்டு. ஆனால் அதற்கும் பதில் தந்திருக்கிறார் குளூக்.  ஏப்ரல் 17, 1911 தேதியிட்ட ‘மெட்ராஸ் டைம்ஸ்’ நாளிதழில், “மதராஸில் பயஸ்கோப் நிரந்தரமாக செயல்படுகிறது”, என்று விளம்பரம் செய்துள்ளார். மே 30, 1911 அன்று வெளியான அதே நாளிதழில், “மதராஸின் ஒரே நிரந்தர பயஸ்கோப்” என்று தன் திரையரங்கை விளம்பரப்படுத்துகிறார். ‘துரதிர்ஷ்டவசமாக குளூக் எங்கிருந்து வந்தார், யார், இங்கிருந்து எங்கு சென்றார் என்பது தெரியவில்லை’, என்று ஆகஸ்ட் 14, 2010 தேதியிட்ட தன் கட்டுரையில் ஸ்டீபன் குறிப்பிடுகிறார்.

ஆண் ஒருவர் பெண் வரலாறை எழுதுவதில் உள்ள உள்ளார்ந்த மனச் சிக்கல் இது. பெண் வரலாறை புறக்கணிப்பது, புறம் தள்ளுவதும் ஆணுக்கு வெகு இயல்பாகவே சுலபமாகிறது. ஸ்டீபனின் விடை தெரியாத கட்டுரைக்கு அதே ஆண்டு விடை தந்துவிட்டார், மோனிகா தல் அஸ்தா என்ற பெண் ஆய்வாளர்! இவரது ‘ஃப்ரீடா குளூக், பேர்ல் ஒயிட் அண்டு விமன் ஃபில்ம் பயனியர்ஸ்’ ஆய்வுக் கட்டுரையில் தான் முதன்முதலில் மிசஸ்.குளூக் என்று அறியப்பட்ட பெண் சினிமா தொழில்முனைவரின் முழுப் பெயரே நமக்குத் தெரியவருகிறது.

இத்தாலியின் சினிமாப் புரட்சியைத் தோற்றுவித்தவரும், இத்தாலிய சினிமாவை உலக அரங்குக்குக் கொண்டு செல்லக் காரணமான ‘ஒற்றைப் பெண்மணி’ என்று நம் முன் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஃப்ரீடா குளூகை நிறுத்துகிறார். கூடவே சினிமா முனைவு மற்றும் விளம்பரப்படுத்தலில் ஃப்ரீடாவின் முக்கியமான பங்கு கண்டுகொள்ளப்படவில்லை என்பதையும் பதிவு செய்கிறார்.

இத்தாலியின் தியூரின் நகரில் வசித்துவந்த ஃப்ரீடா, ‘ஷல்ஸ் விநியோக நிறுவனத்தில்’ தன் பணியைத் தொடங்கினார். 1910ம் ஆண்டு தன் 22வது வயதிலேயே சொந்த சினிமா விநியோக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி இத்தாலியின் மிக முக்கிய சினிமா விநியோகஸ்தரானார்.

மொழியியல் ஆர்வம் கொண்டவரான ஃப்ரீடா, ஆங்கிலம், ஜெர்மன், ரஷ்யமொழி, பிரெஞ்சு, ஹங்கேரிய மொழி, இத்தாலிய மொழி என ஆறு மொழிகளில் சரளமாக எழுதவும் உரையாடவும் கூடியவர். இந்த பன்மொழிப்புலமை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பல முன்னணி சினிமா நிறுவனங்களுடன் அவரது தொழில்சார் நட்பை பலப்படுத்தியது. ஃபிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் படத் தயாரிப்பாளர்களுடன் நேரடித் தொடர்பிலிருந்தார் ஃப்ரீடா.

இந்தச் சூழலில் தான், 1911ம் ஆண்டு, தன் 23வது வயதில் மதராஸ் மக்களுக்கு முதல் பயஸ்கோப் அனுபவத்தைத் தந்தார் ஃப்ரீடா. இத்தாலி தவிர பிற நாடுகளுக்கு, குறிப்பாக கீழை நாடுகளுக்கு சினிமாவை அறிமுகம் செய்வதில் அப்போது பெரும் போட்டியே நிலவியது. ‘பெரும் லாபத்தை அள்ளித்தரும் செழிப்பான மண்’ என்றே ஆசியாவை, குறிப்பாக இந்தியாவைப் பற்றி அன்றைய ஐரோப்பிய தொழில்முனைவோர் குறிப்பிட்டு வந்துள்ளனர். போலவே, ‘அனைத்து சாதியினரும் சினிமாக் கூடங்களுக்கு வரவேண்டும் என்பதற்காக, டிக்கெட் கட்டணத்தை கொல்கொத்தாவின் ஜே.எஃப்.மதன் குறைத்துள்ளார்’, என்று மூவி பிக்சர் வேர்ல்ட் இதழில் வெளியான விமர்சனத்துக்கு தக்க பதில் தந்தார் ஜாம்ஷெட்ஜி ஃப்ராம் மதன் என்ற பார்சி தொழில் முனைவர். ‘மும்பையில் ஒரு திரையரங்கிலும், மதராசிலுள்ள அத்தனை அரங்குகளிலும் நுழைவுக்கட்டணம் 1 ரூபாய்க்குக் குறைவு தான்’, என்று அதில் தெரிவித்துள்ளார்.

பிராட்வே பயஸ்கோப் அரங்கு, இன்று

மதனின் கூற்றை உறுதிசெய்கிறது 1911ம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று வெளியான ‘பயஸ்கோப்’ விளம்பரம். 1 ரூபாய், 8 அணா மற்றும் 4 அணா என மூன்று விதமாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. மின்சார விளக்குகள், மின்சார காற்றாடிகள் கொண்ட காற்றோட்டமான, பெரிய அரங்கு என்று பிராட்வே பயஸ்கோப் அரங்கு சுட்டப்படுகிறது. வியாபார நுணுக்கங்களை சிறு வயதிலேயே நன்கு அறிந்த ஃப்ரீடா, தனிக் காட்சிகளாக இல்லாமல், தினமும் மாலை 6 மணி முதல் 11 மணி வரை தொடர்ச்சியாக அரங்கை நடத்தினார். இத்தாலியின் பிரபல மேஜிக் வித்தைக்காரரான ‘கேக்லியோஸ்திரோ’ (Cagliostro) வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட வண்ணத் திரைப்படம் பயஸ்கோப்பில் காட்டப்பட்டுள்ளது. இது தவிர ‘ஜுவல் ராபர்ஸ் மிஸ்டிஃபைட்’ (Jewel robbers mystified), ‘சேம்பியன் வெய்ட் லிஃப்டர்’ (Champion weightlifter) உள்ளிட்ட ‘காமிக்’ வகை திரைப்படங்களும் மதராஸில் திரையிடப்பட்டன.

ஏப்ரல் 19, 1911 அன்று பயஸ்கோப் அரங்கைப் பற்றி மதராஸ் டைம்ஸ் இதழில் வெளியான விமர்சனத்தில், ‘மக்களுக்கு ஏற்புடைய பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் இல்லாத மதராஸ் நகரில், பயஸ்கோப் என்ற நிரந்தர அமைப்பு வரவேற்கப்படும்’ என்றும், ‘ மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு மற்றும் கற்றலுக்கான ஒரு வாய்ப்பாக இது அமையும்’ என்றும் எழுதப்பட்டுள்ளது. ‘அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பெரும் பொழுதுபோக்காக மக்களுக்கு அமைந்துள்ள ஆயிரக்கணக்கான சினிமா அரங்குகள் இருப்பது போல இந்தியாவில் எதுவும் இல்லை’, என்றும் அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது. என்ன மாதிரியான சூழலில் ஃப்ரீடா இந்தியாவில் பணியாற்றினார் என்பதை நாம் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இதில் இன்னொரு முக்கியக் குறிப்பையும் ஸ்டீபன் தருகிறார். ‘மிசஸ்’ என்று தன்னை ஃப்ரீடா அழைத்துக் கொண்டது, ஒரு வேளை திருமணமான பெண் என்ற மதிப்பை தனக்கு வழங்கக்கூடும் என்ற எண்ணத்தினால் இருக்கலாம் என்று கூறுகிறார். இதை உண்மை என்று நிரூபிக்கிறது ஃப்ரீடா குறித்து 1915ம் ஆண்டு வெளியான தி மூவி பிக்சர் வேர்ல்ட் கட்டுரை. அதில், ‘சமீபத்தில் பொறியாளர் ஷல்ஸ் என்பவரின் மனைவியான ஃப்ரீடா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, இந்தியா, குறிப்பாக மதராஸ் போன்ற பழைமைவாத நகரில் 23 வயதேயான மணமாகாத இளம்பெண் ஒருவர் சினிமா விநியோகத் தொழில் செய்து, நகரின் முதல் சினிமா அரங்கை ஏற்படுத்தியது எவ்வளவு பெரும் சாதனை என்பதையும், ‘மிசஸ்’ என்ற பெயரொட்டை அவர் பயன்படுத்தியதன் காரணத்தையும் பார்க்கும்போது, ஃப்ரீடா நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்! என்ன காரணத்தாலோ, ஆறு மாதங்களுக்கு மேல் ஃப்ரீடாவால் மதராஸில் நிலைத்திருக்கமுடியவில்லை.

1911ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் தன் பணியை பயஸ்கோப் நிறுவனம் நிறுத்திக்கொண்டது. ஃப்ரீடா இத்தாலி திரும்பினார்.

1915ம் ஆண்டு வெளியான தகவல்களின்படி, ஷல்ஸ் மற்றும் அவர் மனைவி ஃப்ரீடாவின் நிறுவனமான ‘அம்ப்ரோசியோ’ (Ambrosio) அமெரிக்க சந்தையில் பல இத்தாலிய படங்களை விநியோகம் செய்துள்ளது. இந்த ஷல்ஸ், ஃப்ரீடா முதலில் பணியாற்றிய ஷல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கக்கூடும் என்றே நான் கணிக்கிறேன். செப்டம்பர் 9, 1915 அன்று கப்பல் மூலம் அமெரிக்காவிலிருந்து ஃப்ரீடா தன் கணவருடன் இத்தாலி திரும்பியதாகவும், அமெரிக்காவில் இருந்த சிறிது காலத்தில் நிறைய நட்புகளையும், தொழில்முறை உறவுகளையும் பெற்றார் என்று மூவி பிக்சர் வேர்ல்ட் இதழ் குறிப்பிடுகிறது.

அதே சமயம், இத்தாலியைச் சேர்ந்த ஹீலியோஸ், ரோட்டோ, ரோமா, பாஸ்கலி உள்ளிட்ட பல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களை ஃப்ரீடாவின் நிறுவனம் லண்டன், பாரிஸ், புதபெஸ்ட் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களில் விநியோகித்தது என்றும் அந்த இதழ் தெரிவிக்கிறது. ‘ஆகஸ்ட் ஷல்ஸ்’ நிறுவனத்தின் பங்குதாரராக அமெரிக்காவின் நியூயார்க், ஃபிலடெஃபியா, பிட்ஸ்பர்க் நகரங்களில் தொழில்முனைவு கூடங்களை நடத்திய ஃப்ரீடா, அமெரிக்கத் திரைப்படங்கள் மற்றும் திரையரங்குகள் தன்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றும் அந்த இதழில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மூவி பிக்சர் வேர்ல்ட் இதழோ, ‘அமெரிக்க அசையும் திரைப்பட உலகைக் கைப்பற்றிய பெண்’ என்று ஃப்ரீடா பற்றி தலையங்கம் எழுதியது!

இவ்வளவு வெற்றிகரமான தொழில் முனைவராக வலம் வந்த ஃப்ரீடாவுக்கு இத்தாலியில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியவர் என அவரது போட்டியாளரான கஸ்தாவோ லொம்பர்தோவை சுட்டுகிறார் ஆய்வாளர் மோனிகா தல் அஸ்தா. இன்றளவும் நமக்கு காணக்கிடைக்கும் உலகின் மிகத் தொன்மையான சினிமாப் படமான 1911ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘தாந்தேஸ் இன்ஃபெர்னோ’ (Dante’s Inferno) படத்தை லொம்பர்தோவின் ‘மிலானோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வந்தது. அதே வேளையில் ஃப்ரீடாவுடன் ஒப்பந்தம் செய்திருந்த ‘ஹீலியோஸ்’ நிறுவனமும் அதே தாந்தேயின் இன்ஃபெர்னோவை திரைப்படமாக்கியது. அதன் விளம்பரங்களுக்கான பணியை ஃப்ரீடா கவனித்துவந்தார்.

இதனால் கடும் கோபம் கொண்ட லொம்பார்தோ, ‘ஏமாற்றுப் பேர்வழி’ என்று ஃப்ரீடா குறித்தும், ‘மோசமான நகல்’ என்று ஹீலியோஸின் தாந்தே படம் குறித்தும் தொடர்ந்து ஊடகங்களில் பேசிவந்தார். இதன் காரணமாக ஃப்ரீடா 1913ம் ஆண்டு தன் நிறுவனத்தை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது என்று மோனிகா குறிப்பிடுகிறார். ஹீலியோஸ் நிறுவனம் தயாரித்த இன்ஃபெர்னோ (1910), பர்கேட்டரி (1911), சைக்கி நிறுவனத்தின் ‘பாரடைஸ்’ (1912) ஆகிய படங்களை உலகம் முழுக்க விநியோகம் செய்யும் உரிமையை ஃப்ரீடா பெற்றிருந்தார்.

தூரின் நகரின் பிரபல தேசிய காட்சிக்கூடத்தின் இடைமாடியில் ஃப்ரீடாவின் அலுவலகம் இயங்கிவந்ததாகத் தெரிகிறது. தன் மக்கள் தொடர்புத் திறன் காரணமாகவும், உலகெங்கும் இருந்த வியாபாரத் தொடர்புகள் காரணமாகவும் லொம்பர்தோவுக்கு அந்தக் காலத்தில் பெரும் சவாலாக ஃப்ரீடா இருந்துள்ளார் என்று விட்டோயியா காலனீஸ் பென்னி (Vittoria Colonnese Benny) என்ற எழுத்தாளர் குறிப்பிடுகிறார்.

1910ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான லா வீடா சினிமாடோகிராஃபிகா (La Vita Cinematografica) இதழ், 22 வயதான குளூக் ‘ஹீலியோஸ் ஸ்டுடியோவின் உலக ஏஜன்ட்’ என்று குறிப்பிடுகிறது. இத்தனை புகழுடன் வாழ்ந்த ஃப்ரீடா, தன் உழைப்பின் பலன்களை சரியாக ருசிக்காமலே, ரத்தப் புற்றுநோய் காரணமாக தன் 38வது வயதில், 1926ம் ஆண்டு காலமானார்.

மதராஸின் முதல் டூரிங் சினிமா திரையரங்கம் இயங்கிய கட்டடம், படம்: நிவேதிதா லூயிஸ்

மிக இளம் வயதில் உலகம் முழுக்க தன் காலடி தடத்தைப் பதித்த ஃப்ரீடா குளூக் ஷல்ஸ், நாம் நினைவில் கொள்ள வேண்டிய மிகமுக்கியமானப் பெண் என்பதில் ஐயமில்லை. அவர் திரையரங்கம் நடத்திய எண் 16, பாப்பம்ஸ் பிராட்வே கட்டிடம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. 1944ம் ஆண்டு முதல் அந்தக் கட்டிடத்தில் 1900ம் ஆண்டு தொடங்கப்பட்ட சுக்ருத லட்சுமி விலாச சபா இயங்கிவருகிறது. ஃப்ரீடா குளூக் என்ற பெண்மணியின் கைவண்ணத்தில் உருவான மதராஸின் முதல் திரையரங்கை அரசு கையகப்படுத்தி, அருங்காட்சியகமாக மாற்றவேண்டும், ஃப்ரீடாவின் புகைப்படத்தையாவது குறைந்தபட்சம் அங்கு வைக்கவேண்டும் என்பதை வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

***

(ஃப்ரீடாவின் இரண்டு புகைப்படங்கள் கிடைத்துள்ளன. ஒன்று, மூவி பிக்சர் வேர்ல்ட் இதழ் 1915ம் ஆண்டு வெளியிட்ட அவரது கையெழுத்து கொண்ட படம் ஒன்றும், பிப்ரவரி 1910ம் மாதம் வெளிவந்த ‘லா வீடா சினிமாட்டோகிராஃபிகா’ இதழில் மற்றொரு படமும் இருக்கின்றன. மதராஸில் திரையரங்கு அமைத்த காலத்தில் அவர் எப்படி இருந்திருப்பார் என்று அந்தப் படங்கள் கொண்டு நாம் ஊகிக்கலாம்.)

தொடரின் முந்தைய பகுதியை இங்கே வாசிக்கலாம்:

கட்டுரையாளர்:

நிவேதிதா லூயிஸ்

எழுத்தாளர், வரலாற்றாளர்.