மானுடவியலில் தனிமைப்படுத்துதல் (segregation) என்று ஒரு கருத்துண்டு. தனிமைப்படுத்துதல் என்பது இனம், மொழி, சாதி, மதம் போன்ற பல்வேறு அடையாளங்கள் அடிப்படையில் மக்களைப் பிரிப்பதாகும். பொது சமூகத்தில் இருந்து ஒரு நபர் அல்லது ஒரு குழுவைப் பிரிக்கும் நோக்கத்துடன் இது நடக்கிறது. இந்தப் பிரிவினை பண்பாட்டு அடையாளங்கள் அடிப்படையில் மட்டுமின்றி எல்லா வகையான துறைகளிலும் தரவரிசைப்படுத்துகிறோம் என்கிற பெயரிலும் நடக்கிறது. இந்தக் கட்டுரையில், இரண்டு வேறுபட்ட உலகத் திரைப்படத் துறைகளை எடுத்து ஒப்பிட்டுப் பார்த்து, திரைப்பட வகைகள் அடிப்படையில் தனிமைப்படுத்துதல் ஏன், எப்படி ஏற்படுகிறது என்று அறிவோம்.

சர்வதேச அளவில் திரைப்படங்களைத் தணிக்கை செய்யும் போது அவை தரவரிசைப்படுத்தப்படும். அதேபோல், சர்வதேச அளவில் வெவ்வேறு திரைப்படக் கொண்டாட்டங்களும் தங்கள் விழாவில் பங்குபெறும் படங்களைத் தரவரிசைப்படுத்தி திரை இடுவர். பெரும்பான்மையாக, பொதுப் பார்வையாளர்கள் (G), பெற்றோரின் வழிகாட்டுதல் பரிந்துரைக்கப்படுகிறது (PG). 17 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தடைசெய்யப்பட்டது (R) என்று மூன்று வகையாகத் திரைப்படங்களில் தரவரிசைப்படுத்தப்படுகிறது. கூடுதலாக இன்னும் நிறைய மதிப்பீடுகள் புதிதாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இவ்வாறாக, இங்கிலாந்தில் நடைபெறும் பாத் திரைப்பட கொண்டாட்டத்தில் F – Rated என்று ஒரு வகையான தரவரிசை அல்லது மதிப்பீடு வழங்கப்படுகிறது. பெண்களால் இயக்கப்பட்ட அல்லது பெண்களால் எழுதப்பட்ட பெண்ணிய கருத்துகள் உள்ள அனைத்துப் படங்களுக்கும் F – Rating கீழ் வகைப்படுத்தப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதாவது கதையின் முக்கியக் கதாபாத்திரமாக (protagonist) பெண் கதாபாத்திரம் அமையும் வண்ணம் அதிக அளவில் திரைப்படங்கள் வெளியாகும் என்று F – Rating மதிப்பீட்டு முறையைக் கண்டுபிடித்த ஹோலி டர்கினி என்கிற திரைக் கலைஞர் கருதுகிறார்.

ஒருவகையில் பெண்ணியப் பார்வை கொண்ட திரைப்படங்களை ஊக்குவிக்கும் நோக்கம் என்பது சாதகமான ஒன்றாகத் தென்பட்டாலும், உள்ளார்ந்து பார்க்கும்போது இவ்வாறு பெண்ணியத் திரைப்படங்களைத் தனியாக அடையாளப்படுத்தி தரவரிசைப்படுத்துவது, பெண்ணியப் பார்வை கொண்ட திரைப்படங்களைப் பொது நீரோட்டதில் இருந்து ஓரங்கட்டுகிறது. பொதுவில், ஆணை முக்கியக் கதாபாத்திரமாக வைத்து உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு M – Rated என்று தரப்படுத்தப்படுவதில்லை. ஏன் என்றால், ஆணை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்படுவதுதான் இங்கு இயல்பு. ஆண் இன்றி வேறு பாலினத்தை அல்லது குழந்தைகளை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டால் அவை பொது நீரோட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படும். இப்படித் தனிமைப்படுத்தப்படும் போது பொதுநீரோட்ட திரைப்படம் என்பது ஆணை மையமாகக் கொண்டு மட்டுமே தொடர்ந்து உருவாக்கப்படும்.

பொது நீரோட்ட திரைத்துறையில் திரைப்படங்கள் Male Gaze என்று சொல்லப்படும் ஆண் பார்வை கொண்டுதான் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் சமூகத்தில் ஆண் ஆதிக்க கருத்துகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. திரைத்துறை இன்றளவும் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் துறையாக இருப்பதினால் இந்த நிலை தொடர்கிறது. எல்லாத் தரப்பு மக்களின் கதைகளையும் பொது நீரோட்ட திரைத்துறையில் காண எல்லாத் தரப்பு மக்களும் திரைத்துறையில் சமமாகப் பங்குபெற வேண்டும். எனவே, அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் சமமான பிரநிதித்துவம் கொடுக்கப்பட்டு, பொது நீரோட்ட திரைத்துறை என்பது ஆண்களை மையமாகக் கொண்டு ஆண்களுக்காக மட்டும் எடுக்கப்படும் திரைப்படங்கள் என்று இல்லாமல், சமூகத்தில் உள்ள அனைவரின் கதைகள் அடங்கிய திரைப்படங்கள் என்று இருப்பதுதான் முற்போக்கான செயலாக இருக்கும்.

சர்வதேச திரைப்படங்கள் F – Rated என்று பெண்ணியக் கருத்துகள் உள்ள திரைப்படங்கள் தனிமைப்படுத்துவது போல், தமிழ்த் திரைத்துறையிலும் முன்னணி கதாநாயகிகள் நடித்து வெளிவரும் திரைப்படங்களை Female Centric திரைப்படங்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. அதேபோல், ‘தலித் சினிமா’ என்று ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கூறும் திரைப்படங்கள் அடையாளப்படுத்தப்பட்டு தனிமைப் படுத்தப்படுகிறது. அது எப்படி நிகழ்கிறது என்று விரிவாகப் பார்ப்பதற்கு முன், தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னணி இயக்குநராக இருக்கும் பா. ரஞ்சித் இது குறித்து என்ன கருதுகிறார் என்று பார்ப்போம்.

‘தலித் சினிமா என்கிற அடையாளம் அத்திரைப்படங்களைப் பொது நீரோட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தும்படி இருக்காதா’ என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, பா. ரஞ்சித் ‘தலித் சினிமா என்கிற அடையாளம் தனிமைப்படுத்துவதாக நான் பார்க்கவில்லை. இங்கு அனைத்தும் பொதுவே. தலித் சினிமா என்கிற அடையாளம் எதிர்ப்பின் அடையாளம். அடக்குமுறை என்பது யாரால் யாருக்கு நிகழ்கிறது என்பது குறித்துப் பேசுவது மிக முக்கியமானது. உலகம் முழுவதும் தங்கள் அடையாளம் மூலம் தங்கள் உரிமைகளைப் பெற்றுள்ளனர். தங்களுக்கு நடக்கும் ஒடுக்குமுறைகளை எதிர்த்துள்ளனர். அமெரிக்காவில் ஆஃப்ரோ அமெரிக்கன் என்கிற அடையாளம் மூலம் கறுப்பின மக்கள் தங்களுக்கு நடக்கும் ஒடுக்குமுறைகளை எதிர்த்தனர். எனவே, தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தி ஒடுக்குமுறைக்கான எதிர்ப்பைக் காட்டுவது தனிமைப்படுத்துதல் ஆகாது’ என்கிறார்.

இந்தக் கருத்தை நான் வரவேற்கிறேன். ஆனால், இந்த அடையாளம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இயக்குநர்கள் எடுக்கும் திரைப்படங்களுக்கு மட்டும்தான் திட்டமிட்டு வழங்கப்படுகிறது. மேல் குறிப்பிட்ட F – Rated என்ற மதிப்பீடு பெண்களால் எடுக்கப்படும் பெண்ணியத் திரைப்படங்களுக்கு மட்டும் வழங்கப்படுவதில்லை. ஆண் இயக்குநர்கள் இயக்கிய பெண்ணியக் கருத்துக் கொண்ட திரைப்படங்களுக்கும் F – Rated மதிப்பீடு வழங்கப்படுகிறது. அதேபோல், அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்களின் பண்பாட்டைப் பற்றிய திரைப்படங்கள் கறுப்பினத்தவர் அல்லாத மற்ற வெள்ளை இனப் பண்பாட்டைச் சேர்ந்த இயக்குநர்களால் உருவாக்கப்படும்போதும் அவை ஆஃப்ரோ அமெரிக்கன் திரைப்படமாகத்தான் வகைப்படுத்தப்படுகிறது. எனவே, திரைப்படங்களைத் தரவரிசைப்படுத்த இயக்குநரின் தனிப்பட்ட அடையாளம் இங்கு முக்கியம் இல்லை. ஆனால், தமிழ்த் திரைத்துறையில் இயக்குநரின் தனிப்பட்ட அடையாளம் வைத்து, அவர் இயக்கும் திரைப்படத்தை வகைப்படுத்தும் வழக்கம் நீண்ட காலமாக நிலவிவருகிறது.

80களில் பாலுமகேந்திராவின் திரைப்படங்களை Art Flim என்று அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தினர். ஆனால், பாலுமகேந்திரா சாயலைப் பிரதிபலிப்பதாகச் சொல்லப்பட்ட மணிரத்தினத்தின் திரைப்படங்கள் பொதுநீரோட்ட திரைப்படமாகக் கருதப்படுகிறது. அதேபோல், ரஞ்சித், மாரிசெல்வராஜ் திரைப்படங்களை மட்டும் தலித் சினிமா என்று ‘இங்கிலிஷ் பேசும் ப்ளூ சட்டை’ என்று அறியப்படும் எலீட் தமிழ் சினிமா விமர்சகர் தொடர்ந்து அடையாளப்படுத்தி வருகிறார்.

அதே நேரம், ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கூறும் ‘அசுரன்’, ‘ஜெய் பீம்’ போன்ற திரைப்படங்களை ‘தலித் சினிமா’ என்று அடையாளப்படுத்தப்படுவதில்லை. அதாவது, தலித் அல்லாத மற்ற சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர்களால் உருவாக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கூறும் திரைப்படங்கள் பொது நீரோட்ட சினிமா என்றுதான் பார்க்கபடுகின்றன. இதில், இருக்கும் அரசியல் யாதென்றால் ஒடுக்கப்பட்டவர்களால் ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்னைகளைப் பேசி உருவாக்கப்படும் திரைப்படங்கள் மட்டும் தலித் சினிமா என்று அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டு, ‘சாதிய சினிமா’ என்று திரித்து சித்தரிக்கப்படுகிறது.

தலித் சினிமா என்றால் சாதியப் பெருமை பேசும் படம் என்று தவறாகப் பொது புத்தியில் சூழ்ச்சிகரமாகப் பதியவைக்க முயற்சிக்கப்படுகிறது. இவ்வாறாக, ‘தலித் சினிமா’ என்கிற அடையாளம் திரிக்கப்பட்டு இவ்வகை திரைப்படங்களைப் பொது நீரோட்டத்தில் இருந்து தனிமைப்படுத்துகிறது.

இந்தக் கட்டுரை மூலம் நான் சொல்ல வருவது யாதெனில், பெண்ணிய சினிமா, ஆஃப்ரோ அமெரிக்க சினிமா, தலித் சினிமா போன்ற அடையாளங்களைத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவும் தங்களுக்கு நிகழும் ஒடுக்குமுறைகளை உரக்கக் கூறவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைக் குரல்களை கலை மூலம் வெளிப்படுத்துவதை விரும்பாத சமூகத்தின் ஆதிக்க சக்திகள் அதே அடையாளங்களை வைத்து வெவ்வேறு வகைகளில் பொது நீரோட்டத்தில் இருந்து அவற்றைத் தனிமைப்படுத்தி மீண்டும் தங்கள் ஆதிக்கத்தால் ஒடுக்கவே செய்கிறார்கள்.

“கலையை கலையாக மட்டும் பார்க்க வேண்டும்” என்கிற ஆகச்சிறந்த அயோக்கியத்தனமான கருத்து இங்கு வெகு காலமாகச் சிலரால் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், கலை கலைக்காக மட்டும் இல்லை, அது எளிய மக்கள் தங்கள் அரசியலைப் பேசவும்தான் என்பதை நாமும் தொடர்ந்து சொல்லிவருகிறோம். எனவே, தமிழ்த் திரைப்படத்துறையில், தலித் சினிமா என்கிற அடையாளம் குறிப்பிட்ட சில இயக்குநர்களின் திரைப்படங்களுக்கு மட்டும் வழங்கப்படாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கூறும் அனைத்து இயக்குநர்களின் திரைப்படங்களுக்கும் தலித் சினிமா என்கிற அடையாளம் பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ‘தலித் சினிமா’ என்பது ‘சாதிய சினிமா’ என்று பொதுபுத்தியில் பதியவைக்க நடக்கும் ஆதிக்க சக்தியின் சூழ்ச்சிகரமான முயற்சியைத் தடுக்கலாம்.


(தொடரும்)

படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ